கட்டுரை, அரசியல், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

கோர்பசெவ்: கலைந்த கனவா, விழித்தெழுதலின் அவசியமா?

ராஜன் குறை கிருஷ்ணன்
07 Sep 2022, 5:00 am
1

ரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் மானுடம் சந்தித்த மிகப் பெரிய முரண் பனிப்போர். அது என்னவென்றால், உலகின் மீதான தங்கள் கருத்தியல் சார் மேலாதிக்கத்தை நிறுவும் பொருட்டு அமெரிக்கா, சோவியத் யூனியன் (Union of Soviet Socialist Republics) ஆகிய இரு வல்லரசு துருவங்களிடையே நிலவிய முரண்.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அணிசாரா நாடுகள் என்று தங்களை கூறிக்கொண்டாலும், பனிப் போரின் தாக்கத்தினை அனுபவிக்காத நாடுகளே இருக்கவில்லை எனலாம். அந்தப் பனிப் போரின் முடிவுக்கு ஒரு பெயர் உண்டு என்றால் அதுதான் மிகைல் கோர்பசெவ். அவர் பெயர் உலக வரலாற்றில் நிலைபெறப்போவது அதன் காரணமாகத்தான் என்றால் மிகையாகாது.

சோவியத் ஒன்றியத்தைச் சீரமைக்க கோர்பசெவ் தலைப்பட்டு அது பல்வேறு நாடுகளாகப் பிரிவுற்றதுடன், அது பொதுவுடைமைச் சமூகம் என்ற லட்சியத்தையும் கைவிட்டது. எழுபத்தோராண்டு காலமாக, 1920 முதல் 1991 வரை மானுடத்தின் ஒரு முக்கியமான சாத்தியமாக இருந்த பொதுவுடமைச் சமூகம் என்ற பெருங்கனவு கலைந்தது. தமிழின் மகாகவி பாரதியால், ஆஹாவென்றெழுந்ததாகக் கூறப்பட்ட யுகப்புரட்சி ஒரு வகையில் முழுமையான எதிர்ப்புரட்சியைச் சந்தித்தது.

எந்த ஒரு வரலாற்று நிகழ்விற்கும் தனி நபர்கள் மட்டுமே காரணமல்ல என்பது மார்க்ஸிய நோக்கின் முக்கியப் பகுதி. வரலாற்று ஆன்மாவின் இயங்கியல் போக்கே நிகழ்வுகளைத் தீர்மானிக்கிறது என்றே மார்க்ஸியர்கள் கூறுவர். ஃபூக்கோ உள்ளிட்ட குறியியக்கச் சிந்தனையாளர்களைப் பின்தொடர்பவர்கள் வேறோரு தத்துவார்த்தப் பின்புலத்தில் சாத்தியங்களின் சூழல் (conditions of possibility) என்பார்கள். ஆகையால், கோர்பசெவ் தருணம் என்பதை அந்த ஒரு தனிநபரின் வாழ்வு, வளர்ப்பு, சிந்தனை, நோக்கம் என்பதாகக் காண்பதைவிட எத்தைகைய சூழல் கோர்பசெவ் தருணத்தைச் சாத்தியமாக்கியது என்பதையே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கு முக்கியமான திறவுகோல் கோர்பசெவ் முன்னெடுத்த ‘பிரஸ்தொரெய்கா’, ‘கிளாஸ்நாஸ்ட்’ ஆகிய இரண்டு முக்கியமான சீர்திருத்தங்கள். இவை பொருளாதார மறுசீரமைப்பையும், வெளிப்படையான நிர்வாகத்தையும் குறிப்பவை என்று சுருக்கிப் புரிந்துகொள்ளலாம்.

சோவியத் யூனியனில் இதற்கான தேவையைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்கு இரு விதமான வழிமுறைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 1930களிலிருந்தே சோவியத் யூனியன் குறித்த புனைவிலக்கியம், திரைப்படங்கள் ஆகியவற்றில் வெளிப்பட்டுவந்த விமர்சனங்கள் ஆகியவற்றைப் பரிசீலிப்பது ஒன்று. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறித்த ஒப்பீடுகள், வாழ்வியல் அனுபவங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றைப் பரிசீலிப்பது மற்றொன்று.  

மேற்குலகம் பெரிதும் கவனப்படுத்திய சோவியத் யூனியன் குறித்த விமர்சனங்களின் மைய அச்சு தனிநபரின் சுயாதீனமான வெளிப்பாட்டுக்கு எதிரான அரசின், அரசு இயந்திரத்தின் கண்காணிப்பு, கட்டுப்பாடு, காயடித்தல். மொத்ததுவ அரசு (Totalitarian State) என்பதன் உறைநிலை ஆதிக்கம்.

ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’ (Animal Farm), ‘1984’ ஆகிய படைப்புகள் நான் படித்த சிறந்த உதாரணங்கள். இதற்கு எதிர்த்திசையில் சோவியத் யூனியனின் சோசலிஸ அரசு மக்கள் நல அரசாக சிறந்து விளங்கியதைக் குறித்த எண்ணற்ற பயணக்கட்டுரைகளும், புகழுரைகளும் எனக்குத் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்தன.

ஒரு சிறிய உதாரணமாக, உருவகமாக ஒன்றைக் கூறலாம். ஐந்து கோபெக் கொடுத்தால் மாஸ்கோவில் எவ்வளவு தூரம் வேண்டுமானால் பேருந்தில் பயணம் செய்யலாம் என்பதைக் குறிப்பிட்டு வியக்காத பயணக் கட்டுரைகளே கிடையாது. 1970களில் தமிழக நகரங்களில் பேருந்தில் நிறுத்தம் (ஸ்டாப்) என்றும் நிலை (ஸ்டேஜ்) என்றும் இருக்கும்.  ஒரு நிலையைத் தாண்டி செல்ல வேண்டும் என்றால் அதிகக் கட்டணம் தர வேண்டும். அதனால் தன் நிறுத்தத்திற்கு முன்பான நிலையில் இறங்கி வெயிலில் ஓரிரு கிமீ நடந்து செல்லும் கட்டாயத்திலிருந்த என் போன்ற சிறுவர்களுக்கு ஐந்து கோபெக்கின் எல்லையற்ற பயணம் இன்பக் கனவாகவே இருந்ததில் அதிசயம் இல்லை.

இதற்கு எதிர்முனையில் அமெரிக்கா வேறொரு கற்பனையைச் சாத்தியமாக்கியது. அது தனிநபரைப் பெரும் ஆற்றல்களின் ஊற்றுக்கண்ணாகவும், தனிநபர்களுடைய திறன்களின் தடைகளைற்ற விகசிப்பே மானுடத்தின் உயர்விற்குக் காரணம் என்றும் பல கதையாடல்களை உருவாக்கியது. முதலீட்டியம் (capitalism) என்பதை அது சுதந்திரவாத மக்களாட்சி, தனி நபர் இறையாண்மையின் செயல் வடிவம் என்றே வர்ணிக்க முனைந்தது.

அமெரிக்கக் கனவு என்றழைக்கப்பட்ட இந்தக் கனவை விமர்சித்தும் கணிசமான இலக்கியப் பிரதிகள் உருவாயின. மனிதத்தன்மையற்ற, சமூக உறவுகளை நம்பாத, தனிநபர் வெற்றியை, பொருளாதார வளம் பெறுவதை, எல்லையற்ற நுகர்வை மட்டுமே லட்சியமாகக் கொண்ட முதலீட்டிய சமூகத்தின் ஆன்மிக வெறுமையைப் பல்வேறு எழுத்தாளர்களும், கலைஞர்களும் வெளிப்படுத்தவே, கண்டிக்கவே செய்தார்கள். ஆர்தர் மில்லரின் விற்பனையாளனின் மரணம் (Death of a Salesman) என்ற நாடகத்தை யார்தான் மறக்க முடியும்!

வியட்நாமிலும், சிலேயிலும், உலகின் பல பகுதிகளிலும் பொதுவுடமையிலிருந்து முதலீட்டிய நலன்களை சுதந்திரவாதம் என்ற பெயரில் காப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்ட பகிரங்கமான, ரகசியமான நடவடிக்கைகள் பல மானுட விரோதத் தீச்செயல்கள். உங்களால் ஒரே ஒரு படம்தான் பார்க்க முடியும் என்றால், டென்னிஸ் ஓ ரூர்க்கின் ‘அரை வாழ்க்கை’ (Half Life) ஆவணப் படத்தை பார்த்தால் போதும். நரகத்தின் பாதை நல் நோக்கங்களால் சமைக்கப்பட்டது என்பது விவிலிய வசனம்.  

இருபதாம் நூற்றாண்டின் இரண்டு விதமான கனவுகள், அவை குறித்த விமர்சனங்கள், ஏமாற்றங்கள், கசப்புகள். சுருக்கமாகச் சொன்னால் பனிப்போரின் பின்னாலிருந்த உலகளாவிய கருத்தியல் (ideological), கருத்தாக்க (conceptual), கருத்துருவாக்க (ideational) சட்டகத்தை சோவியத் யூனியனின் பொதுவுடமைக் கனவும், சுதந்திரவாதத்தின் அமெரிக்கக் கனவும் கட்டமைத்தன எனலாம். இரண்டுமே குறைகளற்றவை அல்ல. மானுட விடுதலைக்கான நிச்சயமான பாதையை வகுத்தவை அல்ல. ஆனால், இதில் பொதுவுடமைக் கனவு முதலில் கலைய நேரிட்டதை நாம் எப்படி புரிந்துகொள்வது என்பதே நம்முன் இருக்கும் முக்கிய கேள்வி.

அதிகாரத்தின் வடிவங்கள்  

மானுட சமூக இருப்பின் வளிமண்டலம் அதிகாரமே ஆகும். அதில்லாமல் மானுடக் கூட்டுறவு சாத்தியம் இல்லை. எப்படி இயல் உலகம் ஆற்றல், ஜடப்பொருள் என்ற இரண்டாகவும், இரண்டின் இணைவாகவும் இருக்கிறதோ, அதேபோல அதிகாரமும் ஆற்றல், ஆதிகாரம் ஆகிய இரண்டின் கலவையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் ஆற்றல், அதிகாரம் இரண்டுமே பவர் (power) என்ற சொல்லால்தான் அறியப்படுகிறது. இயல் உலகில் ஆற்றல் ஜடப்பொருளாகும் வினையைச் சாத்தியமாக்கும் ஹிக்ஸ் போஸானின் பண்புகளைக் கண்டறிய ஒரு பிரம்மாண்ட ஆராய்ச்சி நடைபெறுவதை அறிந்திருப்பீர்கள். அதைவிட கடினமான வேலை எப்படி சமூகவெளியில் ஆற்றல் அதிகாரமாக வடிவெடுக்கிறது என்பதை அறிவது.

செயலாற்றலை முன் தீர்மானிக்கப்பட்ட இலக்கினை நோக்கிச் செலுத்துவது அதிகாரம் என்று இப்போதைக்கு வைத்துக்கொள்ளலாம். மனிதர்கள் கூட்டியக்கம் சாத்தியமென உணரும்போது அதிகார மையங்களை தங்களுக்குள் உருவாக்கிக்கொள்கிறார்கள்.

இவ்வாறு மானுடக் கூட்டியக்கத்திற்கு ஆற்றலைக் கொடுக்கும் அதிகாரம், வாயு நிலையிலோ, திரவ நிலையிலோ இருக்கும்போது பிரச்சினை குறைவாக இருக்கிறது. அதுவே திட நிலையில் உறையும்போது அது ஆதிக்கமாக மாறி கூட்டியக்கத்திற்கே சுமையாக மாறிவிடுகிறது.

அதிகாரத்தை நெகிழ்வாகவும், சுழற்சி முறையிலும், பரவலாகவும் வைத்துக்கொண்டு இயங்கும்போது ஆற்றல்களை இணைத்துப் பேராற்றலாக மாற்றுவதில் சவால் இருக்கிறது. அப்படிப் பேராற்றலாக மாற்ற வேண்டும் என்றால் அதிகாரத்தை ஆதிக்கமாக உறையச்செய்ய வேண்டியுள்ளது. இதுவே ராணுவத்தில் நடக்கிறது. ஒவ்வொரு சர்வாதிகார, எதேச்சதிகார வல்லரசுக் கனவுக்கும் இதுவே அடிப்படையாக இருக்கிறது. இதற்கு மாற்றாக அன்பினை, அகிம்சையை ஆற்றலாக மாற்ற முடியுமா என்று சிந்தித்தார் காந்தி. அது சுலபத்தில் நடக்காது என்று காட்டவே அவர் கொல்லப்பட்டார்.  

சோவியத் யூனியன் ஒரு பிரம்மாண்டமான சமூக இசைவை லட்சியமாக கைக்கொண்டது. அனைத்து இயற்கை வளங்களையும் பொதுவுடமையாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதனால் மனித ஆற்றலைத் தொகுத்து அதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கி அனைவருக்கும் பகிர்ந்தளித்து ஒரு இலட்சிய சமூகத்தை உருவாக்க நினைத்தது. இதில் இரண்டு விதமான பிரச்சினைகள் உடனே தோன்றின. முதலாவது, அரசு திடப்பட்ட வன்மையான அரசாக இருந்தால்தான் சமூக முரண்களையும், தனி நபர் பிறழ்வுகளையும் சமாளித்து பெரும் சமூக ஒத்திசைவை உடனடியாக கட்டமைக்க முடியும் என்பது. இரண்டாவது, தனது கருத்தியலுக்கு எதிரான அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளுக்கு இணையான ராணுவ பலம் இருந்தால்தான் அவர்களது தாக்குதலை, ஊடுறுவலை தவிர்க்க முடியும் என்பது. அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், விண்வெளி ஆராய்ச்சி என அனைத்திலும் அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம்.

இவை இரண்டும் சேர்ந்து ஒரு மொத்தத்துவ அரசை, அதன் இறுகிப்போன அதிகார வர்க்க உளவியலை உருவாக்கிவிட்டன. அந்த நீண்ட கால பாரத்தின் அழுத்ததிலிருந்து விடுபடத்தான் பெரெஸ்தொரெய்கா, கிளாஸ்நாஸ்ட் ஆகிய கோர்ப்பசேவ் தருண திட்டங்கள்.

கல்வி, செல்வம், வீரம்

ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘சரஸ்வதி சபதம்’ (1966) திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். “கல்வியா, செல்வமா, வீரமா?” என்ற கேள்வியுடன் அந்தப் பாடல் துவங்கும். இவை மூன்றும் அதிகாரத்தின் முக்கிய வடிவங்கள் என்று சொன்னால் மிகையாகாது. கல்வி அதிகாரத்தின் முக்கியமான அடிப்படைதான் என்றாலும், நடைமுறையில் செல்வமும், வீரமுமே அதிக அளவு தூலமான வடிவம் கொள்கின்றன எனலாம்.

சுதந்திரவாத மக்களாட்சி என்ற பெயரில் முதலீட்டியச் சமூகங்கள் பெறும் தனியார் செல்வக் குவிப்புகளை உருவாக்குகின்றன. இந்தக் குவிப்புகளை நிர்வகிக்கும் பெரும் தனவந்தர்களால் சுலபமாக அரசினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. தங்கள் நலனுக்கு ஏற்றாற்போல அரசை செயல்பட வைக்க முடிகிறது. அரசானது போலீஸ், ராணுவம் என்ற ஆயுதம் தாங்கிய வன்முறை அமைப்புகளால் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை வைத்திருக்கிறது. பல சிறிய நாடுகளில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகள் கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி நடப்பதை நாம் இந்த நோக்கில் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியும்.   

சோவியத் யூனியன் தனியார் செல்வக்குவிப்புகளை அரசுடமையாக்கியது. எல்லா நலன்களையும் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதாக சொன்னது. அவ்விதம் செயல்படும்போது பெரியதொரு அதிகாரக் குவிப்பை உருவாக்கிவிட்டது. செல்வக்குவிப்பு மட்டுமல்ல, அதிகாரக் குவிப்பும் தவிர்க்கப்பட்டு மக்கள் இடையே செல்வம், அதிகாரம், கல்வி எல்லாமே பகிர்ந்தளிக்கப்பட்டால்தான் உண்மையில் மானுட விடுதலை சாத்தியமாகும். ஆனால், தேசிய அரசுகளெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல பொருளாதார போட்டியிலும், அதிகாரப் போட்டியிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் மேலும் மேலும் ஆதிக்க சக்திகள் உருப்பெற்று பெரும்பாலான மக்களை நுகத்தடிகளில் பூட்டுவதுதான் நடைபெறும். மொத்ததுவ அரசு இரும்பு விலங்குகளை போட்டால், சுதந்திரவாத மக்களாட்சி அரசுகள் அருவமான போதை பொருட்களை மக்கள் உடலுக்குள் செலுத்திவிடுகின்றன. ஊடகங்களின் பெருக்கம் போதையின் வடிவங்களை அதிகரித்துள்ளது.  

கோர்ப்பசேவ் தருணத்திற்குப் பின்  

சோவியத் யூனியன் கலைவதற்கு முன்னமே, இன்னொரு பெரிய பொதுவுடமை நாடான சீனா, இறுக்கமான மொத்தத்துவ அரசு, ஆனால் தனியார்துறை முதலீட்டிய சந்தை பொருளாதாரம் என்ற புதிய கலவைக்கு மாறிவிட்டது. அமெரிக்க முதலீட்டினை அனுமதித்து, தொழில்களைப் பெருக்கி, அமெரிக்காவிற்கே பொருள்களை ஏற்றுமதி செய்து அமெரிக்காவின் பிரம்மாண்டமான வர்த்தக பங்குதாரராகிவிட்டது.

இந்த நிலையில் ஒரு துருவ உலகம் உருவாகிவிட்டது எனவும், இனி உலகெங்கும் சுதந்திரவாத மக்களாட்சியும், சந்தைப் பொருளாதாரமும் வலுப்பெற்று மக்களெல்லாம் பூலோக சுவர்க்கத்தில் வாழ்வார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், நடந்தது என்னவென்றால் கடந்த முப்பதாண்டுகளில் உலகின் பெரும்பாலான சமூகங்களில் ஏற்றத்தாழ்வு கடுமையாக அதிகரித்துவருகிறது என்பதுதான். ஃபிரெஞ்சு பொருளாதார வல்லுனர் தாமஸ் பிக்கெட்டி மிக விரிவான தரவுகளுடன் இந்த விபரீதப் போக்கினை ஆவணப்படுத்திவருகிறார். இந்த நிலை தொடர்ந்தால் புதிய ஆண்டான்-அடிமை சமூகத்திற்கு, பெரும்பாலான மக்கள் கொத்தடிமைகளாகும் நிலைக்குத்தான் உலகம் திரும்பிச்செல்லும்.

இருப்பினும் சோவியத் யூனியன் என்ற ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசுகள் (USSR), தன் ஆற்றலைப் பெருக்க அரசினைக் கொடும் ஆதிக்க சக்தியாக மாற்றியதும், அதன் கனத்திலிருந்து மீள முடியாமல் துவண்டு தகர்ந்ததும் முக்கிய படிப்பினைதான்.

இந்தப் பிரச்சினையை லூபிட்ஷ் என்ற இயக்குனர் 1939ஆம் ஆண்டே நினோட்ச்கா என்ற படத்தில் சுவைபட கூறியிருந்தார். புகழ்பெற்ற கிரேட்டா கார்போதான் நினோட்ச்கா ஏன்ற ரஷ்ய அரசின் பிரதிநிதியாக அதில் நடித்தது. ஒரு வேலை நிமித்தமாக பாரீஸ் வரும் அவர் ஒருகட்டத்தில் கூறுவார்: “நம்மிடம் உயர்ந்த இலட்சியங்கள் உள்ளன; இங்கே நல்ல நடைமுறை உள்ளது.” அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் மாஸ்கோவில் நடைபெறும் விசாரணைகள் பற்றி கூறும்போது ரஷ்யாவில் தீய ரஷ்யர்கள் எண்ணிக்கை குறைந்து நல்ல ரஷ்யர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது என்று இயந்திர மொழியில் கூறுவார். ‘மாஸ்கோ விசாரணைகள்’ புகழ்பெற்றவை. பல உலகத் திரைப்படங்களில் அவற்றின் நிகழ்கலை உருவகங்களை பார்த்துள்ளேன் (எ-கா: ஹங்கேரிய இயக்குனர் மிக்லோஸ் யான்க்சோ). அந்த விசாரணைகளில் ‘களையெடுக்கப்பட்ட தலைவர்’களில் ஒருவர் புகாரின்.

கோர்பசெவ் தருணத்தின்போது நான் தமிழகத்தில் பல அமைப்புகளைச் சேர்ந்த இடதுசாரிகளுடன் நெருங்கிய தொடர்பில்தான் இருந்தேன். ஒரு சிறு நகரத்தில் சிறிய பள்ளியறையில் கூடியிருந்த கூட்டத்திற்கு போயிருந்தேன். மைய நீரோட்ட இடதுசாரியான ஒரு தொழிற்சங்கத் தலைவர் சோவியத் யூனியனில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை விளக்கிக்கொண்டிருந்தார். பேச்சின் நடுவே மாஸ்கோ விசாரணைகளைக் குறிப்பிட்ட அவர் “பாவங்க தோழர் புகாரின்” என்று கூறினார். நான் உள்ளேயிருக்க முடியாமல் நகர்ந்து வெளியே வந்தேன். மழை தூறிக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் புகைபிடிப்பேன். தூறும் மழையில் புகையை உள்ளே இழுத்து வெளியேவிட்டது ஆறுதலாக இருந்தது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


2

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   1 year ago

//ஆனால், நடந்தது என்னவென்றால் கடந்த முப்பதாண்டுகளில் உலகின் பெரும்பாலான சமூகங்களில் ஏற்றத்தாழ்வு கடுமையாக அதிகரித்துவருகிறது என்பதுதான். ஃபிரெஞ்சு பொருளாதார வல்லுனர் தாமஸ் பிக்கெட்டி மிக விரிவான தரவுகளுடன் இந்த விபரீதப் போக்கினை ஆவணப்படுத்திவருகிறார். இந்த நிலை தொடர்ந்தால் புதிய ஆண்டான்-அடிமை சமூகத்திற்கு, பெரும்பாலான மக்கள் கொத்தடிமைகளாகும் நிலைக்குத்தான் உலகம் திரும்பிச்செல்லும்.// இது மோசடியான வாதம். ஏற்றத்தாழ்வு பற்றி பேசுபவர்கள், வறுமை குறைப்பைப் பற்றி பேசாமல் தவிர்க்கும் மோசடி. கடந்த 30 வருடங்களில் 'நவ தாராளவாத' கொள்கைகளை அமல்படுத்தி, உலகெங்கும் சுமார் 150 கோடி மக்கள் வறுமையில் இருந்து மேலே எழுப்பப்பட்டுள்ளனர். இந்தியா, சீனா, ஆப்பரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த process இன்றும் தொடர்கிறது. மானிட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வறுமை குறைப்பு 1990களுக்கு பின் தான் சாத்தியமாகியுள்ளது. ஐ.நாவின் SDG இலக்குகள் எந்த அளவிற்கு உலகெங்கும் எட்டப்பட்டு வருகின்றன என்பதை ஆராய்ந்தாலே போதும். ஐ.நா தரவுகளை கூகுள் செய்தால் உடனே கண்டறியலாம். ஆனால் கிளிப்பிள்ளையைப் போல 'சமத்துவமின்மை' பற்றி மட்டும் பேசுவது அறிவு நாணயம் அற்ற செயல்.

Reply 2 3

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மணிப்பூர்பிறகு…ஓ.பன்னீர்செல்வம்நடராசன்சர்வாதிகாரம்அனுஷாபாஜகவின் அச்சம்இருமுனைப் போட்டிக் கருத்தாக்கம்ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்ஸ்மார்ட்போன்அம்பேத்கர் ஓர் எளிய அறிமுகம்: ஏகே பேட்டிநிலவுஉங்கள் சம்பளம்தமிழ்நாட்டு உயர்கல்வித் துறைஇரவுத் தூக்கம்வடிவேலுமோனு மனோசர்தியாகராஜ சுவாமிகள்காங்கிரஸ் மடிந்துவிட வேண்டும்மீண்டும் மீட்சிபொதுக்கூட்டம்படையெடுப்புகோட்டையிலேயே ஓட்டைகலை விமர்சகர்விழுமியங்களும் நடைமுறைகளும்நிதி மேலாண்மைஅருஞ்சொல் புத்தகம்மாதையன்டாக்டர் கு கணேசன்கொமேனி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!