கட்டுரை, அரசியல், ஆசிரியரிடமிருந்து... 3 நிமிட வாசிப்பு

ரிஷி சுனக் தேர்வு: மாலனுக்கு ஒரு பதில்

ஆசிரியர்
25 Oct 2022, 5:00 am
1

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி மூத்த பத்திரிக்கையாளர் மாலன் உள்ளிட்ட சிலர் இது ஏதோ இந்தியாவுக்கான வெற்றி என்பதுபோல கொண்டாட்டத் தொனியில் குறிப்புகளை எழுதி இருந்தனர். 

வெளிநாட்டு பூர்விகம் கொண்டவரை பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுப்பது அந்நாட்டு மக்களின் ஜனநாயக பண்பைக் காட்டுகிறது. இதில் இந்தியர்கள் குதிக்க என்ன இருக்கிறது? சொந்த நாட்டிலேயே ஒரு முஸ்லிம் தலித் அல்லது இந்தி பேசாதவர்களை நம் நாடு எந்த இடத்தில் வைத்திருக்கிறது? அவர்களால் இந்திய பிரதமராவதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சோனியா பிரதமர் ஆகக் கூடாது என்ற சொன்ன வாய்கள்தான் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் ஆனதைக் கொண்டாடுகின்றன. இது நம்முடைய இரட்டைத்தனம் இல்லையா என்று கேட்டிருந்தேன்.

பல நூற்றுக்கணக்கானவரால் நேற்று பகிரப்பட்டு அந்தப் பதிவு பெரிய வைரலானது. அது சம்பந்தமாக எழுந்த ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், "என் வாரிசு என்று காந்தியால் அறிவிக்கப்பட்ட ராஜாஜி காங்கிரஸ் தலைவராகவோ பிரதமராகவோ ஆக முடியாததற்கு அவருக்கு இந்தி பேச தெரியாது என்பதும் முக்கியமான ஒரு காரணம்" என்று சொல்லி இருந்தேன். 

மாலன் இதற்கு இன்று எதிர்வினையாற்றி இருக்கிறார். சோனியாவை வழக்கம்போல தாக்கியிருக்கும் அவர், தலித்துகள் முஸ்லிம்கள் சம்பந்தமான என்னுடைய கேள்வியைத் தவிர்த்திருக்கிறார். இந்தி சம்பந்தமான என்  குற்றச்சாட்டுக்கு, "இந்தி பேசாத எத்தனையோ பேர் காங்கிரஸ் தலைவர்களாக ஆகியிருக்கின்றனர்" என்று அன்னிபெசன்டையும் காமராஜரையும் உதாரணமாகச் சொல்லி வழக்கை முடித்திருக்கிறார்.

என்னுடைய அடிப்படைக் கேள்வி சுதந்திர இந்தியாவின் பிரதமர் பதவி தொடர்பானது. காங்கிரஸ் தலைவர் பதவி ராஜாஜி விவகாரத்தில் ஒரு கூடுதல் உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வளவுதான். அதிலுமேகூட மாலன் சுட்டும் அன்னிபெசன்ட், காமராஜர் உதாரணங்கள் சரியானவை அல்ல.

அன்னிபெசன்ட் காங்கிரஸ் தலைவராக இருந்தது 1917இல். காந்தி 1920இல் இந்திய அரசியலின் மையத்துக்கு வந்து காங்கிரஸ் ஒரு பெரும் வெகுஜன அமைப்பு ஆவதற்கு முன்பு; அதாவது, மேட்டுக்குடிகளின்  கட்சியாக மட்டுமே அது இருந்த நாட்களில். மேலும், அன்றைய இந்தியாவானது இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருந்தது என்பதையும், ஒப்பீட்டளவில் இந்துக்கள், இந்தி பேசுவோர் பிரதிநிதித்துவம் அன்று குறைவு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ராஜாஜியின் காங்கிரஸ் காலகட்டம் 1950களுக்கு முற்பட்டது. இருந்தும் ராஜாஜியால் ஏன் காங்கிரஸ் தலைவராகக்கூட முடியவில்லை என்றால், வெளிப்படையாகத் தெற்குக்கான  நியாயத்தை முதன்மைப்படுத்தியவர் அவர். சித்தாந்த ரீதியான அவருடைய எல்லா பார்வைகளிலும் இது பிரதிபலித்தது. "பாகிஸ்தான் போகட்டும்" என்பதோ "காஷ்மீரைப் பிரித்துக் கொடுத்திடலாம்" என்பதோ செல்வாக்கு மிக்க வட இந்திய தலைவர்களிடம் இருந்து அவ்வளவு வெளிப்படையாக வரக்கூடிய வார்த்தைகள் அல்ல. 

காமராஜர் 1963இல் தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். அடிப்படையில் அது நேருவைக் காப்பதற்கான திட்டம் - கே பிளான். பெரியார் குறிப்பிட்டபடி காமராஜர் மேற்கொண்ட அரசியல் தற்கொலை அது. 

இயல்பான தலைவர் தேர்வு அல்ல. பதிலீடு.  காமராஜர் பிரதமர்களை உருவாக்கினார் என்று நமக்கு நாமே ஆறுதல் அடைந்துகொள்வதற்குப் பதிலாக 'காமராஜரால் ஏன் பிரதமராக முடியவில்லை?' என்று கேள்வி எழுப்பிக்கொண்டால் இந்தி ஆதிக்கத்தின் முகம் வெளிப்படும்.

மாலன் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் தம்முடைய நம்பிக்கைகளுக்கு ஏற்ப வரலாற்றை வளைப்பதற்குப் பதிலாக சமகால உண்மைகளுக்கு முகம் கொடுப்பது பத்திரிகையாளர்களிடம் ஒரு சமூகம் எதிர்பார்க்கக்கூடிய அடிப்படை விழுமியம் ஆகும்.

என் கேள்வி எளிமையானது. ஒரு தலித் அல்லது ஒரு முஸ்லிம் அல்லது இந்தி தெரியாத ஒரு சிக்கிமியர் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் நம் நாட்டின் பிரதமராகும் சாத்தியம் அவருக்கு வெகுஜன அரசியலில் இருக்கிறதா? அப்படி இல்லை என்பதுதான் நிதர்சனம் என்றால், இவ்வளவு பெரும்பான்மைவாதத்தில் ஊறியிருக்கும் நாம் பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ மிகச் சிறுபான்மையினரான ரிஷி, கமலாவின் தேர்வை முன்வைத்து இந்திய பெருமை பேச என்ன இருக்கிறது?

 

தொடர்புடைய கட்டுரை
நாம் கொண்டாட ஏதும் உண்டா?


5

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 months ago

வெற்றி பெற்றவர்களுடன் ஏதோ ஒரு காரணத்தை வைத்து ஒட்டிக் கொள்வதும், தோற்றவர்கள் சொந்த இரத்தமாக இருந்தாலும் ஒதுக்கி வைப்பது வலதுசாரிகளின் பிறவிக்குணம். பி.கு.ஆனால் இந்த உலகத்தின் பெரும்பான்மை வலதுசாரிகளே.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

அமுல் 75இரு தலைவர்கள் மரபுமோசமான மேலாளர்இந்திய சுதந்திரம்மாநகர போக்குவரத்துபெரும் கவனர்சுகிர்தராணிஃபேஸ்புக்aruncholசமஸ் கல்யாணி அருஞ்சொல் பேட்டிதுயரப் பிராந்தியம்‘முதல்வரைப் போல’ அதிகாரம் செய்ய ஆசை!பீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் தமிழ்நாடு நவ்டொனால்ட் டிரம்ப்தமிழர் மருத்துவம்இலக்கியவாதிசட்டம்ஜெய்பீம்வலையில் சிக்கும் பெற்றோர்கள்உள்ளூர் மொழிகள்கனல் கண்ணன்சமஸ் கட்டுரைசுந்தர் சருக்கைகோர்பசேவ்: கலைந்த கனவாகாந்தாராரிஷி சுனக் கதையும் சவாலும்புளியந்தோப்புயி ஷெங் லியான் கட்டுரைதனியார் பள்ளிடி.எம்.கிருஷ்ணா சமஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!