வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
இந்திய ஜனநாயகம் என்பது அடிப்படையில் பெரும்பான்மையிய வெளிப்பாடுதான். சம பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டாட்சிக்கான பயணம் இங்கே மிக நெடியது.
கீழே உள்ள படம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பை விவரிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய ஓட்டின் மதிப்பு - அது ஸ்ரீநகர் சேர்ந்தவராக இருந்தாலும் சரி; குமரியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி; 700. சமமானது.
சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்புகளைக் கவனியுங்கள். உத்தர பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஓட்டு மதிப்பு 208. சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஓட்டு மதிப்பு 7.
உத்தர பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 403. சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 32. அதாவது ஒட்டுமொத்த சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பையும் உத்தர பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரது ஓட்டுகள் தோற்கடித்துவிடும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், குடியரசுத் தலைவர் தேர்தலில் உத்தர பிரதேசம் வைத்திருக்கும் ஓட்டு மதிப்பு 1,39,824. சிக்கிமின் ஓட்டு மதிப்பு 924.
எவ்வளவு பாரபட்சம்!

குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது ஒட்டுமொத்த தேசத்தின் பிரதிநிதித்துவ வெளிப்பாடு இல்லையா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுகளுக்கு எப்படி சமமான மதிப்பு வழங்கப்பட்டிருக்கிறதோ அப்படி சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டுகளுக்கும் சமமான ஓட்டு மதிப்பு வழங்கப்படுவதுதானே முறையாக இருக்க முடியும்?
அப்போதும்கூட மக்கள்தொகை மிகுந்த பெரிய சட்டமன்றங்களைக் கொண்ட பெரிய மாநிலங்களின் கையே மேலோங்கியிருக்கும் என்றாலும், அவற்றின் மேலாதிக்கம் கொஞ்சம் குறையும். இந்தியப் பின்னணியில் மொழிவாரி மாநிலங்கள் இடையிலான ஏற்றத்தாழ்வு கொஞ்சம்போலக் குறையும்.
எப்போது இதுபற்றியெல்லாம் நம்முடைய அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பேசுவார்கள்?
இந்தியாவில் கூட்டாட்சி தொடர்பில் பேசுவதானது மாநிலங்களின் உரிமை அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பிலானது மட்டும் இல்லை. அடிப்படையில் இந்தி பெரும்பான்மையியத்துக்கு ஆதரவாக மிக சாதுரியமாகக் கட்டமைக்கப்பட்ட பாகுபாடுகள் மிக்க இந்த அமைப்பை நியாயத்தை நோக்கி இழுக்கும் தார்மிகச் செயல்பாடு!
- ஆசிரியர் சமஸ் முகநூல் பதிவிலிருந்து...

2

2

1




பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.

ஆசிரியர்
சமஸ் | Samas
கே.சந்துரு
பி.ஆர்.அம்பேத்கர்
சி.என்.அண்ணாதுரை
ஞான. அலாய்சியஸ்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
FARVEZ BASHA.D 4 years ago
சமஸ் ஐயா அவர்களுக்கு வணக்கம், நான் மாநிலக்கல்லூரி (Presidency College) அரசியல் அறிவியல் துறை மாணவர் பர்வேஜ் பாஷா. தங்களுடைய கட்டுரையை தொடர்ச்சியாக அருஞ்சொல் இணையதளம் வாயிலாக, எங்கள் துறை பேராசிரியர் முனைவர்.சிவக்குமார் ஐயா அவர்களின் வழிகாட்டுதல்களோடு வாசித்து வருகிறேன். குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்த தங்கள் ஆதங்கம், சமநீதி மற்றும் சம உரிமையை பிரதிபலிப்பதாக உள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழகத்தின் பங்கு குறித்து நீங்கள் விரிவான ஆய்வு கட்டுரையை வெளியிட்டால், குடியரசு தலைவர் தேர்தல் போக்கை அறிந்துகொள்ள எங்களை போன்ற மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும். தினமும் காலை எழுந்தவுடன் அருஞ்சொல் இணையதளத்தில் உங்கள் கட்டுரையை வாசித்துவிட்டு கல்லூரி செல்வதுதான் என்னுடைய வழக்கம். என்னை போன்று பல மாணவர்களின் மனதில் நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். எங்களை போன்ற இளைய தலைமுறைக்கும் புரியும் வகையில் கட்டுரை அமைவதே உங்களின் தனிச்சிறப்பாகும். நீங்கள் தொடர்ந்து எழுத நன்றி கலந்த வாழ்த்துகள் ஐயா....
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.