கட்டுரை, கலாச்சாரம், வாழ்வியல், இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

ஏறுகோள் என்னும் ஜல்லிக்கட்டு

பெருமாள்முருகன்
16 Jan 2023, 5:00 am
4

ஒவியம்: மருது

தைப் பொங்கலை ஒட்டித் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு என்னும் ஏறு தழுவுதலுக்கு நீண்ட வரலாறு உண்டு. சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ‘கலித்தொகை’தான் இதை விரிவாகப் பதிவுசெய்துள்ள முதல் நூல். காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய நில அமைப்பைக் கொண்ட முல்லை நிலத்தில் ஏறு தழுவுதல் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

முல்லை நிலத்தில் வாழ்வோர் ஆயர்கள். ஆடு மாடு வளர்த்தலே அவர்களது முதன்மைத் தொழில். ஆகவே கலித்தொகையின் ‘முல்லைக்கலி’ பகுதியில் ஏறு தழுவுதல் காட்சிகள் காணப்படுகின்றன. சோழன் நல்லுருத்திரன் பாடிய முல்லைக்கலியில் பதினேழு பாடல்கள் உள்ளன. அவற்றில் முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவுதலை விவரிக்கின்றன. இப்பாடல்கள் மூலம் பல்வேறு செய்திகள் நமக்குத் தெரியவருகின்றன. 

முல்லைக்கலியின் குறிப்புகள்

இன்று ‘ஜல்லிக்கட்டு’ என்று பரவலாகவும் ‘மாடுபிடி’, ‘எருதுக்கட்டு’, ‘காளை அணைதல்’ உள்ளிட்ட பல பெயர்களிலும் அழைக்கப்படும் இவ்விளையாட்டை முல்லைக்கலி ‘ஏறுகோள்’, ‘ஏறு கோடல்’ என்று குறிப்பிடுகின்றது. ‘ஏறு தழுவுதல்’ பிற்கால வழக்கு. ‘நல்லேறு கொள்பவர்’, ‘ஏறுகோள் சாற்றுவார்’, ‘பொதுவரும் ஏறு கொண்டு’, ‘கொலையேறு கொள்பவர்’, ‘கொலையேறு கொள்வான்’, ‘கொண்ட ஏறு எல்லாம்’, ‘கொலையேறு கொண்டேன் யான்’, ‘நல்லேறு கொண்ட பொதுவன்’, ‘கொல்லேறு கோடல்’ என இவ்விளையாட்டைக் குறிப்பிடும் தொடர்கள் முல்லைக்கலியில் காணப்படுகின்றன. 

தம்மைப் பிடிக்கவிடாமல் ஏறுகள் போராடியதை ‘நீள் மருப்புறச் சாடிக் கொள இடம் கொடவிடா நிறுத்தன ஏறு’ என்கிறது ஐந்தாம் பாடல். அதிலே இப்படி ஒரு விவரிப்பும் வருகிறது: 

கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்திக்
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா.

இப்பாடல்களில் எங்குமே ‘ஏறு தழுவுதல்’ இல்லை. ஏறு கொள்ளுதல்தான்.  இவற்றில் ‘ஏறு கோடல்’ என்பதும் ‘ஏறு கோள்’ என்பதும் சிறந்த வழக்காகத் தோன்றுகிறது. புறப்பொருள் வெண்பா மாலை நூலில் வெட்சித் திணைக்குரிய துறைகளுள் ஒன்றாக ‘ஆகோள்’ உள்ளது. அந்நூலின் ஒழிபுப் பகுதியில் ஏறு தழுவுதல் பற்றி வரும் பாடலுக்கு ‘ஏறுகொள் வென்றி’ என உரையாசிரியர்கள் தலைப்பு தந்துள்ளனர். பாடலில் ‘கோவலனே கொண்டான்’ என்று வருகிறது. 

முல்லைக்கலிப் பாடல்களுக்கு வகுக்கப்பட்ட துறைக் குறிப்புகளில் ‘ஏறு தழுவுகின்றமை’, ‘ஏறு தழுவி’, ‘ஏறு தழுவினமை’ முதலிய தொடர்கள் கையாளப்பட்டுள்ளன. அவற்றையொட்டி உரையாசிரியராகிய நச்சினார்க்கினியரும் ‘ஏறு தழுவுதல்’ என்றே எழுதியுள்ளார். துறை, உரை ஆகியவையே இயல்பாகி ‘ஏறு தழுவுதல்’ என்பது இலக்கிய வழக்காக நிலைபெற்றுவிட்டது. ஏறுகோள், ஏறு கோடல் ஆகியவை மிகப் பழைய வழக்கு. அடுத்த கால வழக்கு ‘ஏறு தழுவுதல்.’

நிறமும் ஏறுகளும்

நிறத்தைக் கொண்டு ஏறுகளுக்குப் பெயர் வழங்கும் மரபு இருந்துள்ளதை முல்லைக்கலிப் பாடல்கள் சுட்டுகின்றன. கரிய நிறமுடைய ஏறு ‘காரி’; வெண்ணிறமுடையது ‘வெள்ளை’; கழுத்துப் பகுதியில் கருமை கொண்டது ‘குரால்’; உடலில் ஆங்காங்கே புள்ளிகள் நிறைந்தது ‘புகர்’; சிவந்த நிறமுடையது ‘சேய்.’ இவ்வாறு ஐந்து வண்ணக் காளைகளை முல்லைக்கலி குறிப்பிடுகிறது. இந்தக் காளைகளின் தோற்றமும் செயலும் விரிவாக வருணிக்கப்பட்டுள்ளன. நெற்றியில் சுழி உள்ளதைச் ‘சுரிநெற்றி’ என்றும் உயர்ந்த திமிலை ‘ஏந்து இமில்’ என்றும் சொல்கின்றன. வெண்கால், செம்மரு, பல்பொறிக் கடுஞ்சினம் என்றெல்லாம் காளைகளின் இயல்பை இப்பாடல்கள் காட்டுகின்றன. 

ஏறுகள் தம் கால்களால் நிலத்தைப் பறித்துப் புழுதி கிளப்பும். கொம்புகளால் மேடுகளைக் குத்தித் தகர்க்க முயலும். தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளும். மண்டியிட்டுப் போரிடும். இத்தன்மைகளையும் பாடல்கள் காட்டுகின்றன. அவற்றைப் பிடிக்கவரும் வீரர்களைக் குத்திச் சிதைக்கும் காட்சிகளும் உள்ளன. குத்தி வயிற்றைக் கிழித்துக் குடலைக் கொம்பில் சூடிக்கொண்டு ஓடும் ஏறுகளைக் காண்கிறோம்.

துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்த வீமன், கூற்றுவனைக் கொல்லும் சிவபெருமான், சிகண்டியின் தலையைத் திருகிக் கொன்ற அசுவத்தாமன் உள்ளிட்ட புராணப் பாத்திரங்கள் ஏறுகளுக்கு உவமையாகப் பல இடங்களில் சொல்லப்படுகின்றன. ஏறுகளும் போர் அறத்தைக் கடைபிடிக்கும் பண்பு கொண்டவை. எதிர்க்க இயலாமல் கீழே விழுந்துவிட்ட இளைஞனை அவை தாக்குவதில்லை. ‘தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது மீளும் புகர்’ என்று அதன் போர் அறத்தைப் பாடல் காட்டுகிறது.  

ஏறுகளை அடக்கும் இளைஞர்களையும் இப்பாடல்கள் விரிவாக வருணிக்கின்றன. ‘பொதுவன்’ என்பது முல்லை நில இளைஞனுக்குப் பெயர். நோக்கு அஞ்சான், கதன் அஞ்சான் என அவனது அஞ்சாமை சொல்லப்படுகிறது. பகல் இடக் கண்ணியன், பைதல் குழலன், சுவல் மிசைக் கோல் அசைத்த கையன் என முல்லை நில இளைஞனின் தோற்றம் காட்டப்படுகிறது.

ஏற்றின் கழுத்தைத் தம் கைகளால் வளைத்துப் பிடித்து அடக்க முயல்பவனை ‘காளையின் கழுத்தில் சூட்டிய மாலை போல் தோன்றுகிறான்’ என்கிறது ஒருபாடல். ஏற்றைத் தழுவிய தம் பிடியை விடாமல் நீண்ட தூரம் செல்பவனைத் ‘தெப்பத்தில் அமர்ந்து அதைச் செலுத்திச் செல்பவன் போலத் தோன்றுகிறான்’ என்கிறது அதே பாடல். எமனைக் கொன்ற சிவபெருமான், மதியிடை தோன்றும் மரு என்றெல்லாம் பல உவமைகள் ஏறு கொள்ளும் இளைஞர்களைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு எனும் திருவிழா

பெருமாள்முருகன் 15 Jan 2022

முல்லை நில மக்களின் ஏறுகோள்!

ஏறுகோள் எப்போது நடைபெறும்? குறிப்பான நாளையோ மாதத்தையோ இப்பாடல்கள் சொல்லவில்லை. எப்போதெல்லாம் அவர்களுக்குத் தேவையோ அப்போது உடனே ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு உரிய மணமகனைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்ததும் ஏறுகோள் நடக்கிறது. பல ஏறுகள் விடப்படுவதாகப் பாடல்கள் தெரிவிக்கின்றன. அதற்குரிய இடத்திற்குத் ‘தொழு’ என்று பெயர். ‘தொழூஉ’ என அளபெடையாக வருகிறது. ஓரிடத்தில் ‘தொழுவம்’ என்றும் உள்ளது. ஆடுமாடுகள் கட்டப்பட்டுள்ள இடத்தைத் ‘தொழுவம்’ என்பது இன்றும் உள்ள வழக்குத்தான். 

ஏறுகளைத் தொழுவத்துக்குக் கொண்டுவரும் முன் கடவுளை வணங்கி வழிபட்டுள்ளனர். தண்ணீர்த் துறையில் உள்ள கடவுள், ஆலமரத்தின் அடியிலும் மராமரத்தின் அடியிலும் உள்ள கடவுள் ஆகியவற்றை உரிய முறைப்படி வழிபட்ட பிறகு தொழுவத்தில் ஏறுகளை விட்டுள்ளனர். விடும்போது இசை முழங்கியுள்ளது. ‘அவ்வழிப் பறை எழுந்து இசைப்ப’ எனப் பறை இசைக்கருவி குறிப்பிடப்பட்டுள்ளது. இடி போலவும் முரசு போலவும் மக்கள் ஆரவாரம் செய்துள்ளனர். ‘எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்’ என ஏறுகோள் காட்சி சிறுதொடர்களால் வருணிக்கப்பட்டுள்ளது. ‘தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்துடன் எதிரெதிர் சென்றார் பலர், கொலைமலி சிலைசெறி செயிரயர் சினம்சிறந்து உருத்தெழுந்து ஓடின்று மேல்’ என முடுகிய ஓசையுடனான காட்சிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. 

ஏறுகோள் நடக்கும் தொழுவில் பார்வையாளர்கள் இருந்தனரா? ஆம், முல்லை நில மக்கள் ஆண்களும் பெண்களுமாகக் கூடிக் கண்டுகளித்தனர். ஏறுகளால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அமர்ந்து காண ‘மாடங்கள்’ கட்டப்பட்டிருந்தன. தன் மனதுக்கு உகந்த காதலன் ஏற்றைத் தழுவும் காட்சியைக் காண வராமல் கவலை கொண்டிருந்த தலைவியருக்குத் தோழிகள் ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர்.

தலைவன் ஏற்றை வென்ற தகவலே அது. தான் மனதில் நினைத்திருந்தவனே வெல்ல வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்த்திருந்தனர். தன் விருப்பத்துக்குரியவன் எப்போது ஏறுகொண்டு தன்னைத் திருமணம் செய்துகொள்வான் எனக் கவலைப்பட்ட தலைவியரையும் ஏறுகோளில் ஈடுபடாமல் தள்ளிப்போடும் தலைவர்களையும் காண முடிகிறது. 

வெற்றியாளருக்கான பரிசு என்ன?

ஏறு கொண்டவனைத் தவிர வேறொருவனைத் திருமணம் செய்து கொள்வதில்லை என்னும் வழக்கம் முல்லை நில மக்களிடம் நிலவியுள்ளது. ஏறு கொள்ள அஞ்சுபவனை அடுத்த பிறவியிலும் மணம் செய்துகொள்ள ஆயமகள் விரும்ப மாட்டாள் என வன்மையாக ஒருபாடல் தெரிவிக்கிறது. திருமணமும் ஏறுகோளும் இணைந்த விழுமியம் கொண்டவர்கள் முல்லை நில மக்கள். முல்லைக்கலியும் ஏழு பாடல்களும் இவையிரண்டையும் இணைத்தே பேசுகின்றன.

இன்று ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுபவர்களுக்குக் கார், இருசக்கர வாகனம், பாத்திரங்கள், தங்கக் காசுகள் எனப் பல பொருட்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. ஆனால், முல்லைக்கலி காட்டும் ஏறுகோளில் திருமணமே பரிசு. தன் காதலன் ஏற்றை வெற்றிகொண்டு தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் எதிர்பார்ப்புடைய பெண்களின் கூற்றாகவே இப்பாடல்கள் புனையப்பட்டுள்ளன. தலைவி கூற்று, தோழி கூற்று ஆகியவை பாடல்களின் சொல்முறை. 

ஏறுகோள் நடக்கும்போது சண்டைகள், தகராறுகள் உண்டா? அவையில்லாமல் எந்த விளையாட்டும் இல்லை. பலவகையான விதிகளுக்கு உட்பட்ட இன்றைய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலேயே சச்சரவுகள் இருக்கின்றன என்னும்போது அக்காலத்தில் இல்லாமல் இருந்திருக்குமா? ஓரே ஒரு சச்சரவை மட்டும் முல்லைக்கலி காட்டியுள்ளது. ஒரு பெண்ணுக்குரிய ஏற்றை இளைஞன் ஒருவன் அடக்கி வெற்றி கொண்டான். ஆனால், அப்பெண்ணின் வீட்டார் அவ்வெற்றியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனோடு சண்டையிட்டனர்.

வென்றவனைப் பாராட்டுவதை விட்டுவிட்டு அவனை ஏன் பகைத்துக்கொள்கின்றனர் என அப்பெண் கேட்கிறாள். அவ்வீரன் ஏறு கொண்டதை வீறு மிக்க சொற்களால் ‘மலர்மலி புகலெழ அலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ, எருத்தோடு இமிலிடைத் தோன்றினன், தோன்றி வருத்தினான் மன்ற அவ்வேறு’ என அப்பெண் சொல்கிறாள். அவன் அடக்கியபோது அந்த ஏற்றுக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று.

ஒருவேளை விதிமுறைகளை மீறி அவன் அச்செயலில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அவனை அவர்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். ஆகவே பிரச்சினை உண்டாக்கினர். அவனை ‘நல்லவன்’ என்று அப்பெண் சொல்கிறாள். தன்னை அவன் திருமணம் செய்துகொள்ள ஏதேனும் தடை ஏற்படுமோ எனவும் அஞ்சுகிறாள். ‘எவன்கொலோ ஏறுடை நல்லார் பகை?’ என்று வெகுளியாகக் கேட்கிறாள். 

வாசிப்புக்கேற்ற முல்லைக்கலி

முல்லைக்கலிப் பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன். ஆனால், பாடல்களில் பாண்டிய மன்னனே குறிப்பிடப்படுகிறான். பாண்டியனை வாழ்த்துவதும் நடக்கிறது. மதுரை, மதுரை சார்ந்த ஊர்களில் இன்றும் ஜல்லிக்கட்டு பிரபலமாக இருக்கிறது. பிற பகுதிகளில் நடைபெற்றாலும் மதுரைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அக்காலத்திலிருந்தே பாண்டிய நாட்டுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என முல்லைக்கலிப் பாடல்களால் தெரியவருகிறது. ‘புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’ எனவும் ‘ஒல்கா உரும் உறழ் முரசின் தென்னவன்’ எனவும் பாண்டிய மன்னன் குறிக்கப்படுகிறான். அவன் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துவதும் ஒருபாடலில் இருக்கிறது. 

இவ்வாறு ஏறுகோள் எனப்படும் ஜல்லிக்கட்டு தொடர்பான பல செய்திகளையும் காட்சிகளையும் வருணனைகளையும் உட்கொண்ட முல்லைக்கலியின் ஏழு பாடல்களும் தொன்மையான பண்பாட்டு வரலாற்றுக்கு முக்கியமான சான்றுகளாகத் திகழ்கின்றன. உரையாடலுக்கு ஏற்ற கலிப்பாவில் இப்பாடல்கள் பாடப்பட்டிருப்பது விரிவான பதிவுகளைச் செய்ய வாகாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இப்பாடல்கள் கொண்டிருக்கும் விழுமியங்களையும் பண்பாட்டையும் அறிவதற்கு மட்டுமல்ல, செறிவான சொற்களால் படைக்கப்பட்டுள்ள அவற்றைச் சுவைத்து மகிழ்வதற்கும் ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். 

மா.இராசமாணிக்கனார் எழுதிய எளிய உரையை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

நூல்: மா.இராசமாணிக்கனார் (உரையாசிரியர்), கலித்தொகை, 2011, சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

 

தொடர்புடைய கட்டுரை

ஜல்லிக்கட்டு எனும் திருவிழா

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3

2

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

பி.ஏ.கிருஷ்ணன்   2 years ago

மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை. வாழ்த்துகள். கோடல் என்பதற்கு முறித்தல் என்ற பொருள் உண்டு என திவாகரம் சொல்கிறது. எனவே மாட்டின் கொம்பை முறித்தல் என்றும் ஏறு கோடல் என்ற சொற்றொடருக்குப் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் ஏறு கோடலைப் பற்றியோ ஏறு தழுவுதலைப் பற்றியோ கலித்தொகைக்குப் பின் எந்தக் குறிப்பும் இல்லை என்று நினைக்கிறேன். நண்பர் பெருமாள் முருகன் புறப்பொருள் வெண்பா மாலையில்(?) ஒரு குறிப்பு இருக்கிறது என்று சொல்கிறார். இருந்தாலும் கலித்தொகைக்கு பிறகு தமிழ் இலக்கியம் ஏறு தழுவுதலைப் பற்றிப் பெரிதாகப் பேசவில்லை என்ற செய்தியே வியப்பை அளிக்கிறது

Reply 3 0

VIJAYAKUMAR   2 years ago

//கோடல் என்பதற்கு முறித்தல் என்ற பொருள் உண்டு என திவாகரம் சொல்கிறது. எனவே மாட்டின் கொம்பை முறித்தல் என்றும் ஏறு கோடல் என்ற சொற்றொடருக்குப் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.// அப்படிப் பொருள் கொள்வது அபத்தம் என்பதற்கான சான்றையும் இக்கட்டுரை கொண்டுள்ளது. மகளை மனம் முடிக்கச் சம்மதிக்கா வீட்டார் அவனால் ஏறுக்குத் துன்பம் உண்டாயிற்று என்கின்றனர். //"மலர்மலி புகலெழ அலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ, எருத்தோடு இமிலிடைத் தோன்றினன், தோன்றி வருத்தினான் மன்ற அவ்வேறு’ என அப்பெண் சொல்கிறாள். அவன் அடக்கியபோது அந்த ஏற்றுக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று.// எவ்வகையிலும் துன்பம் விளைவிப்பதே அனுமதியாதபொழுது கொம்பை முறிப்பது எங்கனம் அவ்விடத்தில் பொருளாக அமையும்? அப்படிக் கொம்பை ஆயுதமின்றி ஓராள் முறிக்க இயலுமா? என்றால் அவ்வாயுதமோ அங்கனம் முறித்ததோ பதிவாகியிருக்கும்தானே?

Reply 1 0

தர்மராஜன் முத்துசாமி    2 years ago

கோடல் என்பதற்குக் கொள்ளுதல் என்றே பொருள் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் கூடப் பெரியாரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதைப் பெரியாரைத் துணைக்கோடல் என்றே கூறியுள்ளார்.

Reply 2 0

தர்மராஜன் முத்துசாமி    2 years ago

சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் ஏறு தழுவுதலைப் பற்றிப் பின்வருமாறு வருகிறது. ‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ் வேரி மலர்க் கோதையாள்; சுட்டு, நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப் பொன் தொடி மாதராள் தோள். மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம் முல்லை அம் பூங் குழல்-தான். நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப் பெண் கொடி மாதர்-தன் தோள். பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்: இந் நன் கொடி மென்முலை-தான். வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக் கொன்றை அம் பூங் குழலாள். தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப் பூவைப் புது மலராள்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

நண்பரின் தந்தைதாழ்ச் சர்க்கரை மயக்கம்நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?யாரும் மன்னிப்பும் கேட்கவில்லைகோவிட்தலைநகரம்மாறிவரும் உணவுமுறைபாண்டியர்கள்அருவிமுற்பட்ட சாதிகள்சமஸ் - கல்கிகாந்தி பேச்சுகள் தொகுப்பு மாபெரும் பொறுப்பு2024 மக்களவைத் தேர்தல்குழந்தைப்பேறுநார்சிஸம்சர்வதேச வர்த்தகம்தமிழகப் பள்ளிக்கல்வித் துறைஉருவாக்கம்பட்டாபிராமன்திருநாவுக்கரசர் பேட்டிமாதவ் காட்கில்கும்பல்பிரிட்டன் ராணிவர்ணமற்றவர்களும்வருமான வரித் துறைவர்ண கோட்பாடுமூச்சுத்திணறல்புகழ்ச்சிக்குரியவர் இயான் ஜேக்மாநிலவியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!