கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி இப்படிப் பேசியிருந்தால்…

ப.சிதம்பரம்
22 Aug 2022, 5:00 am
2

கோதர, சகோதரிகளே!

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தியா சுதந்திரம் பெற்று விழித்தெழுந்தது. நாட்டின் முதலாவது பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வார்த்தைகளில் சொல்வதானால், “விதியுடன் நாம் ஓர் ஒப்பந்தம்” செய்துகொண்டு சுதந்திர நாட்டின் பயணத்தைத் தொடங்கினோம்.

நம்முடைய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அடுத்தடுத்து வந்த அரசுகள் தங்களால் இயன்றதைச் செய்தன; நம்முடைய இறையாண்மையையும் பிரதேச ஒற்றுமையையும் தற்காத்துக்கொள்ள அவை இயன்றதைச் செய்தன; நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடவும் நடவடிக்கைகள் எடுத்தன; நம் நாட்டு மக்களுக்கு மருத்துவ சுகாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மேம்படுவதற்கான உதவிகள் என்று அனைத்தையும் வழங்கின. அந்த நடவடிக்கைகளில் தோல்விகளும் லட்சியத்தை விட்டு விலகிய செயல்களும்கூட உண்டு; அப்படி எப்போதெல்லாம் தடுமாறி வீழ்ந்தோமோ அப்போதே சுதாரித்து எழுந்து பயணத்தைத் தொடர்ந்து வந்திருக்கிறோம். 

தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் தோல்விகளிலிருந்து மீளவும் நமக்கு ஜனநாயகமே உதவியது. அதனால்தான் ஜனநாயகப் பாதையை விட்டு விலகாமல் தொடர்ந்து நடைபோடுவோம் என்று ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில் (ஆகஸ்ட் 15) நம்முடைய உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொள்கிறோம்.

உண்மையைச் சொல்வதற்கான நேரம்

தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து எட்டு முறை (ஆண்டுகள்) இதுவரை உரையாற்றியிருக்கிறேன். நாட்டின் பிரதம மந்திரியாகவும் ஆளுங்கட்சியின் தலைவனாகவும் பேசியிருக்கிறேன். இந்த முறை, வேறு வகையில் பேச விரும்புகிறேன். நாட்டின் தலைவன் என்ற உரிமையில் பேசும் அதேவேளையில், உங்களுடைய துயரங்களைப் புரிந்துகொண்ட, கவலைகளில் பங்கெடுத்துக்கொண்ட, நம்பிக்கைகளையும் லட்சியங்களையும் நிறைவேற்ற விரும்பும் - சக குடிமகனாகவும் பேச விரும்புகிறேன். நான் உண்மைகளைப் பேசப்போகிறேன், சில வகைகளில் அவை மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதால் சகித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த எட்டு ஆண்டுகளில் என்னுடைய அரசு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பல தவறுகளைச் செய்திருக்கிறது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளைப் பணமதிப்பிழப்புக்கு உள்படுத்தினால் கறுப்புப் பணம் ஒழிந்துவிடும், ஊழல் குறையும், பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிடும் என்று எனக்கு ஆலோசனைகள் கூறப்பட்டன. அப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர், இப்படிச் செய்ய வேண்டாம் என்று விடுத்த எச்சரிக்கையை நான் கேட்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நடைபெறும் என்று எதிர்பார்த்த ஒரு நோக்கமும் நிறைவேறவேயில்லை. அதற்கு மாறாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது, ஆயிரக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர், சிறு – குறு - நடுத்தரத் தொழில் பிரிவுகள் லட்சக்கணக்கில் மூடப்பட்டன.

அடுத்து நான் செய்த தவறு பொது சரக்கு – சேவை வரிச் சட்டங்களை மிக மோசமாக தயாரித்து, அவசர கோலத்தில் நிறைவேற்றியது. அப்போதைய முதன்மைப் பொருளாதார ஆலோசகர், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர் - மிதமான, ஒரே விகித சரக்கு சேவை வரியை விதியுங்கள் என்று கூறிய ஆலோசனையைக் கேட்டிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

ஒன்றிய அரசிடம் யதேச்சாதிகாரமான அதிகாரங்களைக் குவித்து, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, தொழில் – வர்த்தக சமூகங்களிடையே மிகப்பெரிய எதிர்ப்புணர்வை உண்டாக்கி, விலைவாசி உயர்வையும் கடுமையாக உயர்த்திவிட்ட ஜிஎஸ்டி சட்டத்தால் இப்போது பொறியில் சிக்கிக்கொண்டுவிட்டோம். இனி இறங்கினாலும் ஆபத்து என்ற வகையில் புலி மீது சவாரி செய்கிறேன் என்பதை உணர்கிறேன். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஆலோசனை கலந்து ஜிஎஸ்டி வரிச் சட்டத்தின் அடுத்த தலைமுறையைக் கொண்டுவந்து, இப்போதுள்ள சட்டத்துக்கு விடை கொடுக்க விரும்புகிறேன்.

தவறுகளை விலக்கிக்கொள்வேன்

வேறு சில தவறுகளையும் செய்தேன், ஆனால் எதிர்ப்புகளுக்குப் பிறகு என்னுடைய நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்றேன். நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய மேற்கொண்ட முயற்சியை உரிய காலத்தில் கைவிட்டுவிட்டேன். வேளாண் துறை தொடர்பாக கொண்டுவந்த மூன்று சட்டங்களும் அடிப்படையிலேயே தவறானவை என்பதை உணர்ந்தேன், அவற்றைத் திரும்பப் பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறடிக்கக்கூடிய வெடிமருந்து கிடங்கைப் போல வேறு சில தவறுகளும் உள்ளன. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), சமீபத்தில் அறிவித்த – ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது தொடர்பான – அக்னிபத் திட்டம் ஆகியவையே அவை. மக்களை மதரீதியாக பிளவுபடுத்தக்கூடிய, மோதல்களை வளர்க்கக்கூடிய இவற்றையும் வெகு விரைவிலேயே விலக்கிக்கொண்டுவிடுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

சகோதர குடிமக்களே, நான் இப்போது மேலும் ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன், சில வட்டாரங்களில் தரும் அழுத்தங்களுக்கு இரையாகி வழிபாட்டு இடங்கள் தொடர்பான சட்டத்தின் வரம்பைக் குறுக்கிவிட மாட்டேன், அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சிவில் சட்டங்களைக் கொண்டுவர மாட்டேன். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை மீண்டும் கொண்டுவருவேன். ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைக்க உத்தரவிடுவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாத பெட்ரோல் – டீசல் கூடுதல் வரிவிதிப்பை (செஸ்) கைவிடுவேன், சமையல் எரிவாயு விலையைக் குறைப்பேன் என்றும் உறுதியளிக்க விரும்புகிறேன்.

உறவுக்குப் பாலம் அமைப்பேன்

கடந்த காலங்களில் நானும் என்னுடைய அமைச்சரவை சகாக்களும் என்னுடைய அரசால் தொடங்கப்பட்ட பல முன் முயற்சிகளுக்கு உரிமை கொண்டாடியிருக்கிறோம். வெளிநாடுகளில் பதுக்கிவிட்ட கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து இந்தியா கொண்டுவந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயைப் போடுவேன் என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்தேன். ஆண்டுதோறும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றேன்.

இவையெல்லாம் தேர்தல் காலத்தில் வாக்குகளைக் கவர்வதற்காகக் கூறப்படும் வாக்குறுதிகள். இதே இடத்தில் நின்றுகொண்டு, 2022 முதல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகிவிடும் என்று பேசியிருக்கிறேன்; வீடில்லாத ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஒரு வீட்டு கட்டித் தருவோம் என்றேன்; ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்றேன். இவையெல்லாம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறேன். திறந்தவெளி மலம் கழிப்பிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டது என்றும் எல்லா வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது என்றும்கூட பேசியிருக்கிறேன்.

இவையெல்லாமும் உண்மையல்ல. கிராமப்புறங்களில் 25.9%, நகர்ப்புறங்களில் 6% வீடுகளுக்கு கழிப்பறைகளே கிடையாது என்று ‘தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை-5’ தெரிவிக்கிறது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 30 மாநிலங்களில் ஒன்றுகூட, திறந்தவெளி மலம் கழிப்புப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை. ‘ஸ்மார்ட் பவர் இந்தியா’ நிறுவனமும் ‘நிதி ஆயோக்’ அமைப்பும் 2020இல் நடத்திய ஆய்வில், மக்கள்தொகையில் 13% பேரின் வீடுகளுக்கு மின்சார இணைப்பே இல்லை அல்லது மின்சாரத் தொகுப்பு மூலம் அவர்கள் பயனாளிகளாக இல்லை என்று தெரியவருகிறது. முதல்வர்களுடன் ஆலோசனை கலந்துவிட்டு, அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பை வழங்குவதற்கான புதிய இலக்கை அறிவிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். 

இப்போது என்னுடைய மிகப் பெரிய கவலை எதுவென்றால் மதரீதியாக மக்கள் பிரிந்துகிடப்பதுதான். அனைத்து மக்களும் - அதிலும் குறிப்பாக மகளிர், பட்டியல் இனத்தவர், முஸ்லிம்கள், பழங்குடிகள் தாங்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக நினைக்காவிட்டால் – எந்த நாடாக இருந்தாலும் முன்னுக்கு வர முடியாது, வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கவும் முடியாது. என்னுடைய கட்சியும் அரசும் பாரபட்சமான போக்கைக் கைவிட வேண்டும் என்பதை ஏற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்தும் மேடைப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், வெறுப்பை ஊக்குவிப்போர் தண்டிக்கப்பட வேண்டும், இந்தியாவின் அனைத்துப் பிரிவு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறுபட்ட கலாச்சாரங்களும் பன்மைத்துவமும் கொண்டாடப்பட வேண்டும்.

சகோதர, சகோதரிகளே! நம்முடைய பயணம் மிகவும் நீண்டது. இந்த மாபெரும் நாட்டுக்கும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வேன் என்ற உறுதிமொழியை எனக்கு நானே வழங்கிக்கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பயணத்தில் என்னுடன் இணைந்துகொள்ளுமாறு உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஜெய்ஹிந்த்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


2






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

.....ஒரே விகித சரக்கு, சேவை வரியை.... ------------------------------------------------------------ Playing to the gallery என்பதற்கு சரியான உதாரணம். பென்ஸ் காருக்கும், பென்சிலுக்கும் ஒரே வரி என்பது மிக மிக தவறான கருத்து. பி.கு. நீங்கள் கூறியது communication error ஆக இருந்தால் என் கருத்தை கண்டுகொள்ளவேண்டாம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

rajasekaranthirumalaisamy   2 years ago

தங்களைப் போன்ற காங்கிரஸ்காரராய் இருந்திருந்தால் இப்படி பெருந்தன்மையாய் பேசக்கூடயவராய் இருந்திருப்பார்..இந்திய மக்களின் நேரம் கானல்நீரை நம்பி ஏக்கத்துடன் தாகத்துடன் கையறு நிலையில் உள்ளார்கள்...முன்னின்று கேள்விகள் கேட்கும் காங்கிரஸ்ஸே தயக்கத்தில் உள்ள போது எதை யாரிடம் எப்படி கேட்க முடியும் தலைவர் அவர்களே...

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சுய தொழில்குகிராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொடைதஞ்சாவூர் பெரிய கோயில்அசிஷ் ஜாபழங்குடி இனங்கள்பொய் நினைவுகளின் வரலாறுஅரசியல் பழகுதன்னிலைஆசை கட்டுரைதிராவிட மாடல்டாக்டர் கு.கணேசன் கட்டுரைபொதுமுடக்கம்ஹெர்மிட்கே.ஆர்.விமோகன் யாதவ்ஜொமெட்டோ writer samasவிவேகானந்தரின் சிந்தனைகளில் வர்ணமும்ஆளுநர்கள்கூட்டுப் பாலியல் வன்புணர்வுஹர்ஷ் மரிவாலாசுந்தர் சருக்கைஏர் இந்தியா கதைசதைகள்சீர்மைகாஷ்மீர் 370மத அரசியல்சமஸ் - மு.க.ஸ்டாலின்மதச்சார்பற்ற மாணவரை உருவாக்காது பாடப் புத்தகங்கள்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!