கட்டுரை, அரசியல், சர்வதேசம் 8 நிமிட வாசிப்பு

பயங்கரமான இந்தப் போர் ஓய வேண்டும்

ப.சிதம்பரம்
28 Mar 2022, 5:00 am
1

உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் இந்தப் போரால் மனதளவில் மிகவும் துயரம் அடைந்திருக்கிறேன். நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது போர் தொடங்கி முப்பது நாள்களைக் கடந்திருக்கும். உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என கவனிக்கத் தொடங்கியபோது, போப்பாண்டவர் இருபத்து மூன்றாவது ஜான் (நல்ல போப்பாண்டவர்) கூறிய ஆறு வார்த்தைகள் எனக்குள் ஆழமாக எதிரொலித்தன: ‘இனி போரே கூடாது - வேண்டாம் இனி போர்!’

அவர் அப்படிச் சொன்ன பிறகும்கூட உலகில் போர்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன – பெரியது, சிறியது; குறுகிய காலத்தது, நீண்ட காலத்தது; சொந்த மண்ணில் நிகழ்ந்தது, எல்லைகளில் நிகழ்ந்தது, தொலைதூர நாட்டில் நிகழ்ந்தது, வேறொருவருக்காக நடத்தப்பட்டது என அவை பலதரப்பட்டவை.

இருபதாவது, இருபத்தொன்றாவது நூற்றாண்டுகளில் நிகழ்ந்த போர்களில் இருந்து அறியப்படும் நிரந்தரமான உண்மை என்னவென்றால் - இந்தப் போர்களுக்குப் பிறகு வாகை சூடியவர் என எவரையுமே கூற முடிவதில்லை. நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு போர்கள் எந்த தீர்வையும் அளிப்பதில்லை.

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட 1971 போரில் இந்தியா திட்டவட்டமான வெற்றியைப் பெற்றிருந்தபோதிலும், பிரதேசம் தொடர்பான பூசல்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிரந்தரமாக நீடிக்கின்றன. இரண்டு பெரிய வல்லரசுகள் ஆப்கானிஸ்தானை விடுவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் தங்களுடைய மாபெரும் படைகளுடன் போரிட்டபோதும், தாலிபான்களின் வலுவான கட்டுப்பாட்டிலேயே ஆப்கானிஸ்தான் தொடர்கிறது.

கரிச்சட்டியும் கரி பிடித்த அண்டாவும்

கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த ஆட்சியை முப்பதாண்டுகளுக்கு முன்னால் ரஷ்யா தூக்கி எறிந்துவிட்டது எனக் கருதப்படும் நிலையிலும், சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் உலக நாடுகளால் மிகவும் அஞ்சப்பட்ட கேஜிபி என்கிற ரஷ்ய உளவு அமைப்பில் மூத்த அதிகாரியாக இருந்த விளாதிமீர் புடின்தான் இப்போது ரஷ்ய அதிபராகப் பதவி வகிக்கிறார்.

2000-வது ஆண்டு மே மாதம் அதிபராகப் பதவிக்கு வந்த புடின் இப்போதுவரை முழு அதிகாரத்துடன் நாட்டை நிர்வகிக்கிறார். புடினின் ஆட்சிக் காலத்தில்தான் கிரைமியாவைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டது ரஷ்யா. உக்ரைனின் டோன்பாஸ் பிரதேசத்தில் ரஷ்ய இன மக்கள் பெரும்பான்மையினராக (அதிக எண்ணிக்கையில்) வசிக்கும் டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் பகுதிகளைத் ‘தன்னாட்சி பெற்ற குடியரசுகள்’ ஆக அங்கீகரித்திருக்கிறார். ஜார்ஜியா நாட்டிலிருந்து அப்காசியா, தெற்கு ஆசேஷியா பிரதேசங்களையும் இப்படி ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவு நிகழ்ந்தும் உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உலகம் தயாராக இருக்கவில்லை.

கடந்த இருபதாண்டுகளில் ரஷ்யா செய்துவரும் இது போன்ற ஆக்கிரமிப்பு யுத்தங்களை மேற்கத்திய நாடுகள் – அதிலும் குறிப்பாக அமெரிக்கா – இருபதாவது நூற்றாண்டில் செய்துள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

பிற நாடுகளின் ஆட்சியாளர்களை மாற்றுவது என்பது அமெரிக்க அதிபர்களுக்கு பொழுபோக்காகவே இருந்தன. ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டுவது, திடீர் ராணுவப் புரட்சிகளுக்குத் தூபம்போடுவது, அரசியல் படுகொலைகளுக்கு சதித் திட்டமிடுவது, தங்களுடைய கைப்பாவைகளைத் தலைவர்களாக, பிற நாடுகளின் தலைமைப் பதவிக்கு நியமிப்பது, பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் என்கிற தண்டனைகளை விதிப்பது என இவை எதையுமே அமெரிக்கா விட்டுவைத்ததில்லை. மிகவும் கண்டிக்கத்தக்க – எந்த விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாத – போரை வியட்நாமில் நடத்தியது அமெரிக்கா. மக்களைப் பெரும் எண்ணிக்கையில் கொல்லக்கூடிய பயங்கர ஆயுதங்களைத் தயாரித்து மறைத்து வைத்திருக்கிறார் அதிபர் சதாம் உசைன் என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில், இராக் மீது 2003இல் படையெடுத்தது.

காரணம் உண்மையான காரணமல்ல

உக்ரைனில் நிகழ்ந்துகொண்டிருப்பது இதயங்களைப் பிழிந்தெடுக்கக்கூடிய சோகம். ரஷ்யா – உக்ரைன் போருக்கு மூல காரணம் எது என ஆராய்ந்தால், ஓரளவுக்கு அது அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகளின் ராணுவக் கூட்டை இடைவிடாமல் விரிவுபடுத்தும் நிகழ்வுதான் என்பது புலனாகும்.

அமெரிக்க, ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான ‘பனிப் போர்’ ஓய்ந்த பிறகு, மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்ட ஜெர்மனியானது, மேற்கு ஜெர்மனி நேட்டோவில் முன்னர் வகித்த இடத்தைப் பெற்றது. அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜேம்ஸ் பேக்கர், நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு இனி ஜெர்மனியைத் தாண்டி ஓர் அங்குலம்கூட நகராது (மேற்கொண்டு நாடுகள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது) என்று ரஷ்யாவுக்கு வாக்குறுதி தந்தார். ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி 5,439 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால், 1999 முதல் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பானது 14 நாடுகளைப் புதிய உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொண்டுள்ளது. ஜார்ஜியாவும் உக்ரைனும் - 30 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட - நேட்டோ அமைப்பின் பக்கம் சாயத் தயாரானபோது, அந்த அமைப்பும் சேர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தது. இதை அடுத்தே ரஷ்யா சிவப்புக் கோடுகளைக் கிழித்தது.

ஜார்ஜியாவும் உக்ரைனும் நேட்டோவில் சேர்ந்துவிட்டால், ரஷ்யா தன்னுடைய எல்லையில் இருந்து நேராக நேட்டோ முகத்தில்தான் விழிக்க வேண்டியிருக்கும். ஜெர்மனிக்கு அப்பால் ஓர் அங்குலம்கூட நகர மாட்டோம் என வாக்குறுதி தந்த நேட்டோ, இதற்குப் பிறகு ரஷ்யாவுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு அங்குல இடைவெளிதான் என்ற அளவுக்கு அண்மையில் வந்துவிடும்.

தன்னுடைய நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து நெருங்குகிறது எனும் ரஷ்யாவின் அச்சம் நியாயமானது. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் நம்பகமான வாக்குறுதிகளை அமெரிக்காவோ பிற நேட்டோ நாடுகளோ அளிக்கவில்லை. அதேவேளையில், ரஷ்யா உடனடியாக அச்சப்படுகிற வகையில் எந்த நாடும் ரஷ்யா கிழித்த சிவப்பு எல்லைக் கோட்டைத் தாண்டவும் இல்லை.

உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரைமியாவையும், ஜார்ஜியாவின் இரு பிரதேசங்களையும் ரஷ்யா தன்னுடைய நாட்டுடன் இணைத்துக்கொண்டதை அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும், வாய் திறந்து ஏதும் பேசாமல் மவுனமாக ஏற்றுக்கொண்டன. இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக திடீரென போர்க்கோலம் பூண்டு நாசகரமான தாக்குதலைத் தொடங்க ரஷ்யாவுக்கு வலுவான காரணம் ஏதும் இல்லை.

உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்தும் தாக்குதல்களால் இதுவரை ஏற்பட்டுள்ள சேதங்களும் உயிரிழப்புகளும் மிகவும் மோசமானவை. 440 லட்சம் (4.4 கோடி) மக்கள்தொகைக் கொண்ட உக்ரைனிலிருந்து இதுவரை 350 லட்சம் மக்கள் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறிவிட்டனர். 65 லட்சம் பேர் (இவர்களில் சரிபாதி குழந்தைகள்) தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறி நாட்டுக்குள்ளேயே பிற இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நகரங்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன. மரியபோல் என்கிற துறைமுக நகரம் ஏவுகணைகளாலும் பீரங்கி குண்டுகளாலும் விமானங்கள் மூலமான குண்டுவீச்சுகளாலும் வெறும் கட்டிட இடிபாடுகளாலான குவியலாக்கப்பட்டுவிட்டது.

லட்சக்கணக்கானவர்கள் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, காயங்களுக்கும் நோய்களுக்கும் தகுந்த மருந்து – மாத்திரைகள் இன்றி நிர்கதியாக விடப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான உக்ரைன்கள் இதுவரை கொல்லப்பட்டுவிட்டனர். அப்படியிருந்தும் உக்ரைனிய அதிபர் விளாடிமீர் செலன்ஸ்கியும், குடிமக்களும் ரஷ்யா விரும்புகிறபடி அதன் ராணுவத்திடம் சரண் அடையத் தயாராக இல்லை. இந்தப் போர் என்றைக்கு முடிவடைந்தாலும் அதில் யாரும் வெற்றியாளராக இருக்கப்போவதில்லை.

வெற்றி பெற்ற நாடாக ரஷ்யா நிச்சயம் இருக்கப்போவதில்லை. உக்ரைனை அதனால் தன்னுடன் சேர்த்துக்கொண்டுவிட முடியாது. அதற்கு மாறாக, தனது எல்லைக்குப் பக்கத்திலேயே நிரந்தரமான ஒரு பகை நாட்டை அது பெற்றுவிடும். ஆயிரக்கணக்கான இளம் ரஷ்ய வீரர்கள், கோடிக்கணக்கான ரூபிள்கள் மதிப்புள்ள ராணுவ சாதனங்களையும் ஆயுதங்களையும் அது இழந்துவிடும். திறமையுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் ரஷ்யாவிலிருந்து பிழைப்பு தேடி வேறு நாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். அதனுடைய பொருளாதாரம் முடங்கிவிடும். உலக அரங்கில் இனி ரஷ்யாவுக்குப் பாதுகாப்போ மரியாதையோ இருக்காது.

குன்றிவிட்ட இந்தியா

ஓர் இந்தியனாக கையறு நிலையில் இருக்கிறேன். இந்திய அரசின் கொள்கை இந்தப் போர் தொடர்பாக எப்படிப்பட்டது என்று ஏதும் தெளிவுபடாமல் இருக்கிறது. இந்தப் போரை யாரும் எந்த விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இது தொடர்பாக ஆறு கொள்கைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இருந்தாலும் இந்தப் போரை நியாயப்படுத்தவே முடியாது என்று ஏன் வெளிப்படையாக இந்தியா அறிவிக்கவில்லை?

உக்ரைன் மக்கள் மீதும், வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி தாக்காதீர்கள் என்று இந்தியா ஏன் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுக்கக் கூடாது? இஸ்ரேலியப் பிரதமர் துணிச்சலாக மேற்கொண்டதைப் போல - இந்திய பிரதமரும் ஏன் மாஸ்கோவுக்கும் கீவ் நகருக்கும் நேரில் பயணித்து போரை நிறுத்த சமரச முயற்சிகளில் ஈடுபடக் கூடாது? எந்தவித சமாதான முயற்சியும் மேற்கொள்ள முடியாமல் இந்தியாவை மலடாக்கிவிட்டது எது?

இந்திய வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்கிற ஆய்வுக்கான கட்டுரை அல்ல இது. தெளிவு மிக்க சில அரசியல் பார்வையாளர்களுடன் பேசிய பிறகு எனக்குத் தோன்றிய சிந்தனையே இது. தார்மிகரீதியில் நியாயப்படுத்தவே முடியாத ஒரு நிகழ்வின்போது மவுனம் சாதிப்பதும், சர்வதேச அரங்கில் போரை நிறுத்தக் கோரும் அல்லது கண்டிக்கும் தீர்மானங்களில் பங்கேற்று வாக்களிக்கப் போகாமலேயே இருப்பதும் இந்தியாவின் மதிப்பை சர்வதேச அரங்கில் சரித்துவிட்டது.

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

ஐநா சபையின் அதிகாரங்களை அதிகரித்தால் மட்டுமே இந்த மாதிரி பிரச்சினைகளை குறைக்கமுடியும். இல்லையென்றால் மிக்சர் சாப்பிடும் புருசனை போல்தான், ஐநாவும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இலவச பயணம்எலக்ட்ரான்நீதிபதி நியமனம்ட்விட்டர் சிஇஓ பரக் அகர்வால்ராஜன் குறை கேள்விக்குப் பதில்மூலம் நோய்க்கு முடிவு கட்டலாம்!காலவெளியில் காந்திகோட்பாடுபோபால்தன்னம்பிக்கை விதைசுவைமிகு தொப்புள்கொடிஆபாசம்ராஜமன்னார் குழுஒரே இந்துத்துவம்தான்கோர்பசெவ்: வரலாற்றில் ஓர் அவல நாயகர்ஜல்லிக்கட்டு எனும் திருவிழாமயிர்தான் பிரச்சினையா?மூளை வேலைஇந்துத்துவாமத்திய மாநில உறவுதகவல் தொடர்புத் துறைஉயர்சாதி ஏழைகள்மஹாஸ்வேதா தேவிஆறு அம்சங்கள்மயிலாடுதுறைஆப்பிரிக்காகால் வீக்கம்100 கோடி தடுப்பூசி சாதனைடி.ஆர்.நாகராஜ்சரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!