கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 7 நிமிட வாசிப்பு

பிளவுபட்ட இரண்டு ஜனநாயகங்கள்

ப.சிதம்பரம்
04 Jul 2022, 5:00 am
1

மெரிக்காவில் ‘பியூ’ ஆய்வு மையம் வயது வந்த மக்களிடம் இந்த ஆண்டு மார்ச் 7 முதல் மார்ச் 13 வரையில், கருக்கலைப்பு குறித்து கருத்தறியும் ஆய்வு நடத்தியது; கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று 61% பேரும், கருக்கலைப்பை அனுமதிக்கவே கூடாது என்று 37% பேரும் கருத்து தெரிவித்தனர். இந்தக் கருத்து வேறுபாடு அரசியல்ரீதியாகவும் காணப்படுகிறது. ஜனநாயகக் கட்சியினரும் அவர்களுடைய ஆதரவாளர்களுமாக 80% பேர் கருக்கலைப்பை ஆதரிக்கின்றனர். குடியரசுக் கட்சியினர் அவர்களுடைய ஆதரவாளர்கள் 38% பேர் கருக்கலைப்பை அனுமதிக்கக் கூடாது என்கின்றனர். 2016ஆம் ஆண்டு இவர்களுக்கிடையிலான வேறுபாடு 33 புள்ளிகளாக இருந்தது; இப்போது 42ஆக உயர்ந்திருக்கிறது.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் - அமெரிக்க உச்ச நீதிமன்றம், ‘அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதுதான் சரி’ என்ற நிலையில் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீண்ட காலமாகப் பதவி வகிக்கும் ஜான் மார்ஷல், ‘சட்டம் என்னவோ அதை அப்படியே சொல்வதுதான் உச்ச நீதிமன்றத்தின் கடமை, இந்தக் கருத்துதான் அமெரிக்காவைப் பொருத்தவரை புனிதமானது’ என்று கூறியிருக்கிறார்.

அரசமைப்புச் சட்ட ஏற்பின்போதான புரிதல் அடிப்படையில் விளக்கம்

‘ரோ எதிர் வேட் 1973’ வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை, குடிமக்களுக்கு வழங்கிய அடிப்படை சுதந்திர உரிமைகளின் பகுதியே, 14வது சட்டத் திருத்தத்தில் இடம்பெற்றுள்ள ‘உரிய நடைமுறை’ உள்பட பலவும் இந்த உரிமையை அளிக்கிறது என்று தீர்ப்பளித்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு வழக்கிலும் ‘ரோ எதிர் வேட்’ வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்தியே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புகளால் பெற்ற கருக்கலைப்பு உரிமையுடன் மூன்று தலைமுறை அமெரிக்கப் பெண்கள் வாழ்ந்துவருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூன் 24இல் ‘தோப்ஸ் எதிர் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு’ வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகளில் பெரும்பான்மையினர் (ட்ரம்ப் நியமித்த மூன்று நீதிபதிகளும் சேர்ந்து), ‘கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதியில்லை’ என்று தீர்ப்பளித்தனர். ஐந்து பேர் கூடாது என்றும் மூன்று பேர் அனுமதிக்கலாம் என்றும் இதில் தீர்ப்பு எழுதினர். ‘ரோ எதிர் வேட்’ வழக்கில், அரசமைப்புச் சட்டம் அளிக்கும் தனிப்பட்ட உரிமைக்கு, அதிர்ச்சியளிக்கும் வகையில் விளக்கம் தந்து முன்னர் தீர்ப்பளித்துள்ளனர் என்றும் இந்த அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அமெரிக்க அரசமைப்புச் சட்டம் அளிக்கவில்லை என்று அமர்வு தீர்ப்பளித்தது. கருக்கலைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ‘மக்களுக்கும்’ ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும்’ திருப்பி வழங்கப்படுகிறது என்றும் தீர்ப்பு மேலும் கூறுகிறது.

இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மக்களிடத்திலேயே விடப்படுவது சரிதான் என்றே முதல் நோக்கில் தோன்றும். ஆனால், இங்கே ‘மக்கள்’ என்பது நாம் நினைப்பதைப் போல பெருவாரியான மக்களைக் குறிக்கவில்லை. வயதுவந்த அமெரிக்க வாக்காளர்களையும் இது குறிக்கவில்லை. அப்படியாக இருந்தால் ரோ, கேசி ஆகியோருக்கு ஆதரவாகவே பெருவாரியான மக்கள் ஆதரவைத் தெரிவித்திருப்பார்கள்.

இங்கே ‘மக்கள்’ என்பது அமெரிக்காவின் வெவ்வேறு மாநிலங்களைச் (மாகாணங்கள்) சேர்ந்தவர்கள், அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்றால், வெவ்வேறு வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்ட சிறியதும் பெரியதுமான தொகுதிகளைச் சேர்ந்தவர்களைக் குறிப்பதாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் தொகுதிகளை மறு சீரமைப்புச் செய்தாலும் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு இதில் உரிமை உண்டு என்பதே தீர்ப்பு.

பல உரிமைகளுக்கு ஆபத்து

உள்நாட்டுப் போருக்கு (12.04.1861 - 09.04.1865) பிறகு அமெரிக்கா இந்த அளவுக்கு எந்த ஒரு விஷயத்திலும் இப்படி பிளவுபட்டதே இல்லை. கருக்கலைப்பு செல்லாது என்று தடை விதிக்கும் சட்டத்தை அமெரிக்காவின் 50 மாநிலங்களில் சரி பாதி மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய மாநிலங்கள், கருத்தரித்து ஆறு மாத காலம் வரையில் கருவைக் கலைக்கலாம் என்பதை அனுமதிக்கக்கூடும். உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பால் லட்சக்கணக்கான அமெரிக்கப் பெண்கள் - திட்டமிடாத சமயத்திலோ, வேண்டாத நிலையிலோ கருத்தரித்தால் அதைக் கலைக்கும் உரிமையை இழப்பார்கள்.

வல்லுறவு கொண்ட காமுகனின் குழந்தையை, முறையற்ற – நெருங்கிய உறவினரால் ஏற்பட்ட கருவை, குழந்தையைப் பெற்றுக்கொள்ளவும் வளர்க்கவும் போதிய பொருளாதார வசதிகளற்ற தாயின் குழந்தையை, எவரிடமிருந்தும் அன்பையும் அரவணைப்பையும் பெற முடியாத குழந்தையையும் கருவிலேயே கலைக்கக்கூடிய வாய்ப்புகள் இனி மறுக்கப்பட்டுவிடும்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டம் கருக்கலைப்பு குறித்து நேரடியாக எதையும் கூறவில்லை என்கிற வாதத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மோசமான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. சட்ட அறிஞர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியையும் அளித்துள்ளது. கருக்கலைக்கும் உரிமை இந்த நாட்டின் வரலாற்றிலும் மரபிலும் ஆழ்ந்து ஊறியதும் அல்ல என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அரசமைப்புச் சட்டப்படி செல்லக்கூடியவற்றுக்கு இதுதான் உரைகல் என்றால், அமெரிக்கர்களுக்கு இருபத்தோராவது நூற்றாண்டு அளித்துள்ள பல உரிமைகள் இனி மறுக்கப்பட்டுவிடும். உதாரணத்துக்கு, ‘அந்தரங்க உரிமை’ பற்றி அமெரிக்க அரசமைப்புச் சட்டம் எதையும் நேரடியாகக் கூறவில்லை. கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவது குறித்தும் ஏதும் கூறப்படவில்லை. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வது இனி தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். இப்படிப் பல உதாரணங்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

தோப்ஸ் வழக்கின் தீர்ப்பை நான் படித்தவரையில், கருக்கலைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களிடமே விடுவது என்பதற்கு, குழந்தை பிறக்கட்டும் - கலைக்காதே என்று எந்தத் தாயையும் கட்டாயப்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கு அது வழங்கியிருப்பதாகக் கருதவில்லை. அந்தந்த மாநில எல்லைக்குள் வாழும் மக்களுக்கு மட்டுமே கருக்கலைப்புச் சட்டம் பொருந்தும். இந்தச் சட்டத்துக்கு எல்லை கடந்து பிற மாநிலங்களிலும் தடை செய்யும் அதிகாரமில்லை. கருவைக் கலைக்க விரும்பும் பெண், அதை அனுமதிக்கும் பிற அமெரிக்க மாநிலங்களுக்குச் சென்று கருவைக் கலைத்துக்கொள்ளலாம்.

இப்படிக் கருக்கலைப்புச் செய்ய விரும்பும் பெண்ணின் போக்குவரத்து மற்றும் இதரச் செலவுகளுக்கு ஃபெடரல் அரசு அல்லது ஏதேனும் அறக்கட்டளை அமைப்பு பண உதவி செய்யலாம். தோப்ஸ் வழக்கின் தீர்ப்பில் உள்ள பெரிய குறைபாடு என்னவென்றால் குடிமக்களின் உரிமையைவிட, மாநிலத்தின் உரிமையே பெரிது என்று அதற்கு முன்னுரிமை தருகிறது; தனிப்பட்ட முறையில் வயிற்றில் வளரும் வேண்டாத கரு என்பது தனிப்பட்ட நபருக்கு மிகவும் கவலையளிப்பது மனதுக்கு மிகவும் நெருக்கமானது – அரசாங்கத்துக்கோ சமூகத்துக்கோ அது கவலையளிப்பதும் அல்ல – மனதுக்கு மிகவும் நெருக்கமானதும் அல்ல.

பிளவுபட்ட நாடுகள்

நல்ல வேளையாக இந்திய உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை - அந்தரங்க உரிமை, தனிப்பட்ட வாழ்க்கையுரிமை, சுதந்திரம் என்றே கருதி சரியாக தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் கர்ப்ப கால வயதுள்ள பெண்ணுக்கு கரு வளர்ந்து 24 வாரங்கள் வரையில் அதைக் கலைத்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு அவசியம் என்ற நிலை ஏற்பட்டால், இரண்டு மருத்துவர்களின் கருத்துகளைப் பெற்றதற்குப் பிறகு முடிவெடுக்க வேண்டும். இனியும் கரு வளர்ந்தால் அது கருவைச் சுமக்கும் பெண்ணுடைய உடல் அல்லது மன நலனை மிகவும் பாதித்துவிடும் என்பது சந்தேகமறத் தெரிந்த பிறகே கருக்கலைப்பை அனுமதிக்கலாம் என்ற நிலை இருக்கிறது.

கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக அனுமதித்த பிறகே அமெரிக்க இளம் பெண்கள் படிப்பைத் தொடரவும் வேலையில் கவனம் செலுத்தவும் முடிந்திருப்பது அனேக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. தோப் வழக்கின் தீர்ப்பானது அமெரிக்காவில் பிளவை ஏற்படுத்திவிட்டது.

இந்தியாவும் பிளவுபட்டுத்தான் இருக்கிறது. சாதி, மதம், மொழி, பாலினம் ஆகியவற்றால் பிரிந்துள்ள இந்திய சமூகம் - பாரதிய ஜனதாவின் பெரும்பான்மையினவாதக் கொள்கைகளாலும் மையவாதக் கொள்கைகளாலும் மேலும் பிளவுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இதைப் பற்றி தனிக் கட்டுரைதான் எழுத வேண்டும்.

உலகின் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகள் இப்படிப் பிளவுபடும் என்று நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   2 years ago

முழுமையான பார்வை கொண்ட கட்டுரை. அருமையான மொழியாக்கம். நன்றி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

துணைவேந்தர்எலும்பு மூட்டுமனித குலம்சம்பாபோடா போடாதேசிய மாநாட்டுக் கட்சிசூப்பர் டீலக்ஸ்மோசடிஅருஞ்சொல் பாலசுப்ரமணியம் முத்துசாமிமிஸோ தேசிய முன்னணிசித்ரா ராமகிருஷ்ணாமுழுப் பழம்பால் உற்பத்திபிடிஆர் அருஞ்சொல்அதானு பிஸ்வாஸ் கட்டுரைஆன்மிகம்வர்ண தர்ம சிந்தனைசோழ தூதர் மு.கருணாநிதிஆருஷாசமஸ் - ட்ராட்ஸ்கி மருதுசென்னையை நாசப்படுத்திவிட்டோம்: ஜனகராஜன் பேட்டிபோன் பே2019 ஆகஸ்ட் 5உச்ச நீதிமன்ற நீதிபதிகணினி அறிவியல் என் பள்ளி எனக்குக் கொடுத்த கொடைதந்தைமைப் பிம்பம்கா.ராஜன் பேட்டிமீன்பிடி கிராமம்மொழிப் போர் தியாகங்களை மறக்க முடியுமா?வான் கடிகாரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!