கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

விரும்பப்படுகின்றன விலை உயர்வும் வேலையின்மையும்!

ப.சிதம்பரம்
12 Sep 2022, 5:00 am
2

வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இம்மாத முதல் வாரத்தில் (04.09.2022) ‘உரத்துக் குரல் கொடு’ போராட்டத்தை நடத்தியது. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்ற இரண்டும் அனைவரையுமே பாதிக்கிறது என்றே நம்பப்படுகிறது. இவ்விரண்டையும் குறைக்கவே எல்லோரும் உறுதியுடன் செயல்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

பரவலாக நம்பப்படும் இக்கருத்துகள் உண்மையில் அப்படியில்லை என்று இக்கட்டுரையில் எடுத்துக்காட்டுவதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்! மக்களில் ஒரு பிரிவினரும் – கொஞ்சம் மூச்சைக் கட்டுப்படுத்தி சுதாரியுங்கள் – அரசாங்கத்தின் ஒரு பகுதியினரும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பது விலை உயர்வது ஆகியவை குறித்து மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்; இந்த இரண்டும் தொடர்ந்து இப்படியே உயரக் கள்ளத்தனமாகக்கூட எதையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம் இப்படியே அதிகரிப்பதை யாரெல்லாம் விரும்புகிறார்கள் என்று முதலில் பார்ப்போம்:

தொழில் துறை, அரசு

வேலையில்லாத் திண்டாட்டம் நீடிப்பதைத் தொழில் துறை விரும்புகிறது. காரணம், கிடைக்கும் மிகச் சில வேலைவாய்ப்புகளுக்கு ஏராளமானோர் போட்டி போடுகின்றனர். ஊதியத்தைக் குறைத்துப் பேரம் பேச தொழில் துறையினருக்கு இது வசதியாக இருக்கிறது. இதனால் ஊதியத்தையும் தொடர்ந்து குறைவாகவே வைத்திருக்க முடிகிறது. அப்படியே ஊதியத்தை உயர்த்த வேண்டியிருந்தாலும் அந்தத் தொகை அற்பமாகவே இருந்தால்கூட போதும். உதாரணத்துக்கு, வேளாண் துறையில் ஊதியம் 2021-22இல் 3%க்கும் குறைவாகத்தான் உயர்ந்தது, பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தபோதிலும்! 2019இல் விவசாயக் குடும்பத்தின் சராசரி வருவாய் ரூ.10,213 என்று 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.

இந்த ஊதியம் நான்கு அல்லது ஐந்து பேருள்ள குடும்பத்தின் உணவு, இருப்பிடம், உடைகள், கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்குச் செலவுகளுக்குப் போதவே போதாது. வேலைக்குச் செல்வோருக்கும், சுயமாகத் தொழில் செய்வோருக்கும் தங்களுடைய ஊதியத்தை உயர்த்திக்கொள்வதற்கான - பேரம் பேசும் - வலிமை குறைவாக இருப்பதால் குடும்பங்களின் சராசரி வருமானம் ஓரளவுக்குத்தான் உயர்கிறது. குறைவான பொருளாதார வளர்ச்சி இருக்கும்போதும் தொழில் துறையில் தேக்கம் ஏற்படும்போதும் சராசரியான ஏழைக் குடும்பங்களின் நிலைமை மேலும் மோசமாகிவிடுகிறது.

அரசாங்க வேலைக்கு ஆள் எடுக்கும் முகமைகளும் அரசுத் துறை நிறுவனங்களும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்வதை விரும்புகின்றன. நூற்றுக்கணக்கில் காலியாக உள்ள கீழ்நிலை எழுத்தர் வேலை போன்ற பணியிடங்களுக்கு, பட்டதாரிகள் -  முதுகலைப் பட்டதாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் மனு செய்யும்போது அவர்களுக்கு நியமன ஆணை வழங்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு ‘ஏராளமான அதிகாரமும்’, ‘விருப்பப்படி செயல்படும் வாய்ப்பும்’ ஏற்பட்டுவிடுகிறது. இந்த இடைவெளியில்தான் இடைத்தரகர்கள் செழிக்கிறார்கள், பணம் கைமாறுகிறது, ஊழல்கள் அரங்கேறுகின்றன.

இருக்கும் வேலையிடங்களைவிட வேலை தேடுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதால் தனியார் துறை, அரசுத் துறை, அரசுப் பணியிடங்களில் ஆள்களை வேலைக்கு எடுப்பதில் தாற்காலிக நியமன முறைகளும், தொகுப்பூதிய முறைகளும் பரவலாகின்றன. தொழிற்சங்க இயக்கம் - பேரம் பேசும் வலிமையைக் கணிசமாக இழந்துவிடுகிறது.

குற்றச்செயல்களில் திட்டமிட்டு ஈடுபடும் கும்பல்களுமே வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்வதையே விரும்புகின்றன. போதை மருந்து கடத்தலுக்கும், கள்ளக் கடத்தல்களுக்கும், கள்ளச் சாராய வியாபாரத்துக்கும், சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்டவற்றுக்கும், விபச்சாரத்துக்காகப் பெண்களைக் கடத்துவோர்க்கும், கொத்தடிமைகளாக்க ஏழைகளைக் கடத்துவோர்க்கும், இவை போன்ற பிற சட்ட விரோதச் செயல்களுக்கும் எளிதாக ஆள்கள் கிடைத்துவிடுகிறார்கள்.

சரி, விலையுயர்வை யார் விரும்புகிறார்கள் என்று பார்ப்போம்:

வரி வசூலிப்போர், வியாபாரிகள்

அரசுகளின் வருவாய்த் துறையினரும் வரி வசூலில் ஈடுபடுவோரும் விலைவாசி உயர்வை (அல்லது பணவீக்க அதிகரிப்பு) அதிகம் விரும்புகின்றனர். ஒவ்வொரு மாதமும் கடந்த மாதத்தைவிட அதிகத் தொகையை வசூலித்ததாக கணக்கு காட்டி, ஆட்சியாளர்களிடம் நல்ல பெயரையும் பதவி உயர்வையும் சம்பாதிக்க முடியும். உதாரணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலையே எடுத்துக்கொள்வோம். வரி வசூல் உயர்வைக் கூறுகிறவர்கள், விலைவாசி உயர்வால் வருவாய் உயர்வு உண்மையான மதிப்பில் எவ்வளவு என்று கணக்கிட்டுக் கூறுவதேயில்லை.

ஆகஸ்ட் 2022இல் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,43,612 கோடி. ஆகஸ்ட் 2021இல் இது ரூ.1,12,020 கோடி. கடந்த 12 மாதங்களில் அதிகரித்த விலைவாசி உயர்வுக்கேற்ப கணக்கிட்டால், உண்மையில் அதிகமாக கிடைத்த வரி வருவாய் ரூ.1,33,559 கோடி மட்டுமே! பொருளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு சதவீதக் கணக்கில் விதிக்கப்படும் வரிகளிலும், வரி விகிதம் அதிகமாகாவிட்டாலும் வருவாய் உபரியாக அதிகரித்துவிடுகிறது.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பவர்களும் விலைவாசி உயர்வை மிகவும் விரும்புகிறார்கள். நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் எண்கள் அனைத்துமே ‘நடப்பு விலை’ அடிப்படையில் இடம்பெற்றவை. நிதி ஒதுக்கீடும் ‘நடப்பு விலை’ அடிப்படையில்தான் இருக்கும். எனவே, நிதி அமைச்சர் இந்த எண்களை வாசிக்கும்போது, கடந்த ஆண்டைவிட அதிகம் ஒதுக்கியிருப்பதாகப் பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும்.

சிலருக்குத்தான் தெரிகிறது உண்மை

மிகச் சிலர்தான் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட்டு இந்தத் தொகை அதிகமில்லை என்பதைத் தெரிந்துகொள்வார்கள். உதாரணத்துக்கு, 2022-23 நிதியாண்டுக்கு ராணுவம், உரம், உணவு தானியங்கள், வேளாண்மை, மின்சாரம், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை 2021-22 நிதியாண்டின் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு மதிப்பைவிடக் குறைவு!

அரசாங்கத்தின் கடன் திரட்டு நிர்வாகிகளும் பணவீக்க அதிகரிப்பை விரும்புவார்கள். கடன் எப்போதுமே நடப்பு விலைகள் அடிப்படையில் வாங்கப்பட்டு, அதே அடிப்படையில் திருப்பிச் செலுத்தப்படும். பணவீக்கம் அதிகமாகிக்கொண்டே போனால், கடன் வாங்குகிறவர் தான் வாங்கிய தொகையின் உண்மையான மதிப்பைவிடக் குறைவாகவே திருப்பித் தருவார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டோ என்னவோ, விலைவாசி உயர்வை ‘கவலைப்பட வேண்டிய முன்னுரிமை அம்சமாக’ தான் கருதவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் சமீபத்தில் குறிப்பிட்டிருக்கிறார்!

விலைவாசி உயர்வை விற்பனையாளர்களும் விரும்புகின்றனர். குறைந்தபட்ச சில்லறை விலையை கணிசமாக உயர்த்துகின்றனர். அந்தப் பொருளைத் தயாரிப்பதற்கான இடுபொருள் செலவு மிகவும் குறைவாகத்தான் உயர்ந்திருக்கும் என்றாலும் விற்பனை விலையை உயர்த்துவது எளிதாகிவிடுகிறது. அவசியப்பண்டங்கள் விஷயத்தில் இது அதிகம். உதாரணத்துக்கு, பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களின் விலையை அரசு பால்பண்ணை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சமீபத்தில் உயர்த்தின. விலைவாசி உயர்வுதான் அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது.

ஏற்றுமதியாளர்களும் விலைவாசி உயர்வை விரும்புகின்றனர். ஏற்றுமதிக்குப் பிறகு கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும் நிகரான ரூபாய் அதிகமாக அவர்களுடைய கைகளுக்குக் கிடைக்கும். இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும் தொழில்களுக்கு இப்படி அபரிமிதமாக வருவாய் உயராது என்பதும் உண்மையே.

வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களும் விலைவாசி உயர்வை மிகவும் விரும்புகிறார்கள். இதையே காரணமாக வைத்து வட்டி வீதத்தை உயர்த்திவிட முடியும். விலைவாசி உயர்வுக்கேற்ப, பணத்தைப் பெறுவதற்கான செலவு அவர்களுக்கு உயர்வதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்.

தொழில் துறையினர் அதிலும் குறிப்பாக சந்தையில் இரண்டே இரண்டு நிறுவனங்கள் அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான சில நிறுவனங்கள் மட்டுமே இருந்தால், விலையை உயர்த்தி அதிக லாபம் பெற அவர்களுக்கு வசதியாகிவிடுகிறது. சில வகை பொருள்களுக்கும் சேவைக்கும் விலை எவ்வளவு உயர்ந்தாலும் கேட்பு குறையாது. உதாரணத்துக்கு வேலைவாய்ப்புக்காகவோ, சிகிச்சைக்காகவோ, தொழில் தொடர்பாகவோ நாளையே தில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றாக வேண்டும் என்றால், கட்டணம் ரூ.50,000 என்று வசூலிக்கப்பட்டாலும் பல்லைக் கடித்துக்கொண்டு கொடுத்தால்தான் முடியும்.

முகூர்த்த நாள் – விடுமுறை நாள்கள் போன்ற தருணங்களில் கட்டணங்களைத் தேவைக்கேற்ப உயர்த்தும் விலை நிர்ணய முறையால் விமான நிறுவனங்களாலும், உபேர் - ஓலா போன்ற போக்குவரத்து சேவை நிறுவனங்களாலும் ரயில் துறையாலும் கட்டணத்தை உயர்த்தி அதிக வருவாய் ஈட்டிவிட முடிகிறது.

நான் சொல்வதில் உங்களுக்கு ஐயம் இருந்தால் 2021-22ம் நிதியாண்டுக்கான தனியார் நிறுவனங்களின் லாபம் பற்றிய காலாண்டு வருமான அறிக்கைகளில், நடப்பாண்டுக்கு எவ்வளவு லாபம் என்று படித்துப் பாருங்கள்.

ஒப்பந்ததாரர்களும் விலைவாசி உயர்வை மிகவும் விரும்புகிறார்கள். பழைய மதிப்புகளைத் திருத்தி, கணிசமாக லாபத்தை உயர்த்திக்கொள்ள முடியும். இடுபொருள்களின் விலை உயர்வுக்கேற்ப இதைச் செய்துதான் தீர வேண்டியிருக்கிறது என்று நியாயப்படுத்திவிட முடியும். புதிய ஒப்பந்தங்களுக்கான விலைகளையும் புதிதாக உயர்த்திக்கொண்டுவிட முடியும்.

அனைத்து அரசியல் கட்சிகளும்

பத்திரிகைகளுக்குத் தலையங்கம் எழுதுவோரும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்வதையும் விலைவாசி அதிகரிப்பதையும் மிகவும் விரும்புவார்கள். தலையங்கத்துக்குப் புதிதாக பிரச்சினைகளைத் தேடி அலையாமல், ஏற்கெனவே பழக்கமாகிவிட்ட இவ்விரு அம்சங்கள் குறித்து விரைவாகவும் தெளிவாகவும் எழுதி முடித்துவிடலாம். புதிதாக எண்ணிக்கையைக் கூட்டியும் ஏற்கெனவே எழுதிய தலையங்கக் கட்டமைப்பில் சில பத்திகளை அப்படியும் இப்படியும் மாற்றி எழுதியும் வேலையை எளிதாக முடித்துக்கொள்ளலாம். இந்த மாறுதல்களைப் பெரும்பாலானவர்கள் கண்டுபிடிக்கவே மாட்டார்கள் – காரணம், பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்ட தலையங்கங்களைப் படிப்பதே இல்லை!

இறுதியாக, ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும்கூட விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றை விரும்புகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் கட்சியைச் சாட நல்லதொரு ஆயுதங்களாக இவை நிரந்தரமாகப் பயன்படுகின்றன. ‘மோடி ஒழிக -விலையுயர்வு ஒழிக’ என்றோ, ‘மோடி ஒழிக – வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக’ என்றோ கோஷமிட முடியும். ஆளும் கட்சியும், ‘உங்களுடைய ஆட்சியை ஒப்பிடும்போது எங்கள் ஆட்சியில் விலைவாசி உயர்ந்த வேகமும், வேலையில்லாத் திண்டாட்ட விகிதமும் குறைவுதான்’ என்று பதிலுக்கு வாதிட முடியும். 

ஒவ்வொருவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் விலைவாசி உயர்வையும் ரசிக்கும் ஒரு நாள்கூட வரலாம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

3

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

ஆனால் யார் வந்தாலும் இந்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படாது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   2 years ago

என்ன Sir! அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில், இப்படி உண்மையை பொசுக்குன்னு எழுதிட்டீங்க! Whatsoever இன்றைய கட்டுரை Simply Superb!!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இம்ரான் கான்கொங்குலால்துஹுமாபோலியோபன்னி சோபிடிஆர் - சமஸ் அருஞ்சொல்பொறியாளர்கள்சுற்றுச்சூழலியல்கறியாணம்மகேஸ் பொய்யாமொழிபஞ்சவர்ணத்தின் பருக்கைகள்பொது சிவில் சட்ட எதிர்ப்பு தவறானதுஜெயமோகன் பேட்டிஅரசதிகாரம்பட்டாபிராமன் கட்டுரைமகா விஹாஸ் கூட்டணிதணிக்கைச் சட்டம்சிந்து சமவெளிசாதி – மத அடையாளம்அதிகாரப் பரவலாக்கல்சர்வாதிகார அரசுகற்க வேண்டிய கல்வியா?இந்திய தேசியம்டெபிட் கார்டுமடாதிபதிபயன்பாடு மொழிவீடு கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ.அறம் – உண்மை மனிதர்களின் கதைஒன்று திரண்ட மாணவர்கள்இந்திய தண்டனைச் சட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!