கட்டுரை, தலையங்கம், அரசியல், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு

மூடர்கள் இல்லை மக்கள்

ஆசிரியர்
02 May 2022, 5:00 am
1

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் - டீசல் விலைக் குறைப்பை வலியுறுத்தி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டின் அருகே பாஜகவினர் நடத்தியிருக்கும் ஆக்ரோஷமான போராட்டம் எவரையும் அதிர்ச்சியிலும் நகைப்பில் ஆழ்த்தும். மக்களை எந்த அளவுக்கு முட்டாள் ஆக ஒரு கட்சி பார்க்க முடியும் என்பதற்கு உலகளாவிய வரலாற்று உதாரணங்களில் ஒன்றாக இதை வரிசைப்படுத்த முடியும்.

பாஜக ஆட்சிக்கு வந்த 2014 மே மாதத்தில், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 108 டாலர். அன்றைக்கு இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.71 ஆக இருந்தது. பல நாடுகளுடன் ஒப்பிட அப்போதே பெட்ரோலிய பொருட்களுக்கான வரிகள் இந்தியாவில் அதிகமாகவே இருந்தன. இந்தத் தலையங்கம் எழுதப்படும் 2022 ஏப்ரல் மாதத்தில், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 103 டாலர். அன்றைக்கு இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.110.

மோடி பொறுப்பேற்ற பிறகான இந்த எட்டாண்டு காலத்தில் அவர் பொறுப்பேற்பதற்கு முன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்ற விலையைக் காட்டிலும் குறைவான விலையில் விற்ற காலமே அதிகம். ஒருகட்டத்தில் வெறும் 16.90 டாலர் விலைக்கெல்லாம் சரிந்திருக்கிறது. 2015 - 2017 மூன்றாண்டுகளை எடுத்துக்கொண்டால் 60 டாலருக்குக் குறைவாகவே கச்சா எண்ணெய் விலை இருந்தது. 2018 - 2021 காலகட்டத்திலும் பெருமளவில் 80 டாலருக்குக் குறைவாகவே கச்சா எண்ணெய் விலை இருந்தது.

மேற்கண்ட காலகட்டங்களில் நடந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் அனுகூலங்களை மக்களுக்கு மோடி அரசு தரவில்லை; பலன்கள் பெரும்பான்மையையும் கூடுதல் வரிகள் வழியாக தானே சுருட்டிக்கொண்டது. தொழில், வேலை வாய்ப்பின்றி, வருமானம் குறைந்து மக்கள் அல்லல்பட்ட காலகட்டத்திலும் பெரிய விலைக்குறைப்பு எதுவும் இந்தியாவில் நடந்துவிடவில்லை. சென்ற மாதத்தில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியபடி, “இந்த எட்டாண்டுகளில் ரூ.26.51 லட்சம் கோடிகளை பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியாக மோடி அரசு வசூலித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை தோராயமாக 26 கோடி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் ரூ.1 லட்சம் பெட்ரோலிய வரியாக மட்டும் இந்த அரசுக்குத் தந்திருக்கிறது.” 

பெட்ரோலியப் பொருட்களுக்குப் பெருமளவில் இறக்குமதியை நம்பியிருக்கும் ஒரு நாடாக எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான திட்டங்கள் நமக்கு வேண்டும். பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான முனைப்புகள் வேண்டும். அப்படியான எண்ணமோ, முயற்சியோ எதுவும் இந்த அரசிடம் கிடையாது. பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டேபோகும் நிலையில் சாமானிய மக்களின் மூச்சு திணறுகிறது. மக்களின் கோபம் ஒன்றிய அரசு நோக்கித் திரும்பும் இத்தருணத்தில்தான் மாநில அரசுகள் மீது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கான பழியைத் தூக்கிப்போடும் மோசமான வேலையில் பிரதமர் மோடியும், அவரது கட்சியினரும் இறங்கியிருக்கின்றனர். 

முன்னதாக, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிப்பதற்காக நடந்த மாநில முதல்வர்களின் மாநாட்டில் பிரதமர் மோடி இதுகுறித்துப் பேசியதே அபாண்டமானது. “பாஜக ஆளாத மாநிலங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது. மக்களுக்காக மத்திய அரசு மேற்கொண்ட வரிக் குறைப்பை இந்த மாநிலங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த அநீதி உடனே நிறுத்தப்பட வேண்டும். பல மாதங்கள் முன்பே வாட் வரியைக் குறைக்குமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டோம். ஆனால், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை” என்றார். 

பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி விதிப்பில் மாநிலங்களின் பங்கும் இருக்கிறது. ஆனால், மாநிலங்கள் தங்களுடைய பிரதான வருவாயில் ஒன்றாக இந்த வரி வருமானத்தைக் கொண்டிருக்கின்றன. மாநிலங்களிடமிருந்து பெறும் வரி வருமானத்தின் பெரும் பகுதியை ஒன்றிய அரசு தன் வசம் வைத்துக்கொள்வதோடு, மாநிலங்களின் வரி விதிப்பு அதிகாரத்தையும் ‘ஜிஎஸ்டி’ மூலம் பறித்துவிட்ட நிலையில், மாநிலங்களை நோக்கி கை நீட்ட யாருக்கும் மனம் வருவதில்லை. ஏனென்றால், ஒட்டுமொத்த வரிவிதிப்பு, வரிப் பகிர்வு விஷயங்களில் மட்டும் இன்றி, பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி விதிப்பிலும் ஒன்றிய அரசே பெரும் பங்கை ஈட்டுகிறது. பெட்ரோலுக்கான வரி வருவாயை மட்டும் கணக்கிட்டாலே ஒரு லிட்டருக்கு 2012இல் ரூ.9 ஆக இருந்த ஒன்றிய அரசின் வருவாய் 2021இல் ரூ.33 ஆக இருந்தது. இப்போது இதை ரூ.28 ஆகக் குறைத்துக்கொண்டிருக்கிறது. இந்தக் குறைப்பைத்தான் தன்னுடைய பெரும் காரியம்போலப் பேசுகிறது மோடி அரசு. 

வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவும் இந்த விஷயத்தைச் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளனர். “நாங்கள் வாட் வரியில் 1 ரூபாய் குறைத்தால், எங்களுக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்படுகிறது. நாங்கள் எப்படிக் குறைக்க முடியும்?” என்று கேட்டிருக்கிறார் மம்தா. நாட்டின் நேரடி வரி வருவாயில் மகராஷ்டிராவின் பங்களிப்பு 38.3%. ஜிஎஸ்டியில் அதன் பங்கு 15%. ஆனால், எங்களுக்கு மத்திய அரசிடமிருந்து திரும்ப வருவது என்ன?” என்று கேட்டிருக்கிறார் உத்தவ்.

உண்மையானது வெட்ட வெளிச்சத்தில் இவ்வளவு துல்லியமாக தரவுகளாக இருக்கிறது. அப்படி இருக்கும்போதும், தன் மீதான பழியை எதிர்த் தரப்பின் மீது அப்படியே போட பாஜகவால் முடிவதோடு, தலைநகரில் இந்த விஷயத்துக்காக டெல்லியை ஆளும் முதல்வரின் வீட்டின் முன் பெரும் ஆவேசத்துடன் ஒரு போராட்டத்தையும் நடத்த முடிகிறது என்றால், துடிப்பான எதிர்க்கட்சியின் இன்மையே அதற்கான காரணம். 

டெல்லியில் நடந்த போராட்டம்போல நாடு முழுக்க பாஜகவுக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுத்திருக்க வேண்டும்; இதுவே காங்கிரஸ் ஆட்சிக் காலமாக இருந்தால், பாஜக அப்படித்தான் நடத்தியிருக்கும். மாறாக, காங்கிரஸின் கையாலாகாதத்தனம் பாஜகவின் தடித்தனமாக வெளிப்படுகிறது. ஆனால், மூடர்கள் இல்லை மக்கள்.


8

5

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Pandiyarasi    2 months ago

மக்களை திசை திருப்ப எந்த அளவுக்கும் செல்லும் கட்சி பாஜக. அது பெறும் வெற்றியும் பலவீனமான எதிர்கட்சியும் எதிர்காலத்தை கேள்விக்குறியதாக்குகிறது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வங்கித் துறைஅரசுக் கல்லூரிகள்சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்மால்கம் ஆதிசேஷையாஆந்திர தலைநகரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டதின் பினரஜினிகாந்த்பாலு மகேந்திராபொதுவுடைமைதமிழ்ப் புத்தாண்டு அண்ணாtherkilirundhu oru suriyanக்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்துர்நாற்றம்செக்ஸ்டார்சன்எக்ஸ் வீடியோஸ்ஜூலியன் அசாஞ்சேஇந்திய தேசியவாதிதொழில்நிதிமாநிலவியம்உணவுக் கட்டுப்பாடுதமிழகம்தைஎழுத்தாளர் சமஸ்அறந்தை அபுதாகிர்விக்கிப்பீடியாநீங்கள் சாப்பிடுவது சரியா?கல்விக் கொள்கைமூர்க்குமா செ கட்டுரைsub nationalism in tamilஆண்கள் ஏன் 'அலைஞ்சான்'களாகவே இருக்கிறார்கள்?!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!