கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 6 நிமிட வாசிப்பு

தங்கள் நல்வாழ்வுக்குத் தாங்களே பணம் தரும் ஏழைகள்

ப.சிதம்பரம்
04 Apr 2022, 5:00 am
1

வரிகள், நல்வாழ்வு, தேர்தல் வெற்றி ஆகிய மூன்றையும் ஒரே புள்ளியில் இணைக்க வழி கண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சூழ்ச்சித் திறனை நாம் பாராட்டியே தீர வேண்டும். தேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம், சலுகைசார் முதலாளித்துவம், ஊழல் ஆகிய மூன்றையும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான புதிய முறை என்கிற திட்டத்தின் மூலம் இணைத்து, இதில் எந்தச் சட்ட விரோதமும் இல்லை எனும் மாயை உருவாக்கியதைப் போலவேதான் முன்னதிலும் செய்திருக்கிறது.

முதல் மூன்று அம்சங்களுக்கு மீண்டும் வருவோம். வரிகள், நல்வாழ்வு, வாக்குகள் பற்றியது அது.

2019 மக்களவை பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள், பொருளாதார அடித்தளக் கட்டமைப்பில் மாறுதல்கள், ஜிடிபி வளர்ச்சிக்குத் தனியார் முதலீட்டை அதிகம் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், வேலைவாய்ப்பைப் புதிதாக லட்சக்கணக்கில் உருவாக்கும் செயல்கள், ஏழ்மையை ஒழிப்பதற்கான முயற்சிகள் ஆகிய அனைத்தையும் கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டது மோடி அரசு. வலுவான பொருளாதார நிர்வாகம் மூலம்தான் அவற்றையெல்லாம் மேற்கொள்ள முடியும்; அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தலில் மக்களுடைய வாக்குகளைக் கவர எளிதான மாற்று வழியொன்றை மோடி அரசு கண்டுபிடித்துவிட்டது. அதுதான் புதிய நல்வாழ்வு திட்டங்கள்!

‘கோவிட்-19’ பெருந்தொற்று என்கிற நோய் வந்ததால், அரசு தன்னுடைய புதிய நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் முடிந்தது  (அரசின் நல்வாழ்வு நடவடிக்கைகள் பரம ஏழைகள், புலம்பெயர்ந்து சென்ற பாட்டாளிகள், தொற்றுநோய்க்குப் பிறகு அரசு அறிவித்த பொது முடக்கத்தால் வேலையிழந்தவர்கள், கட்டாயப்படுத்தி மூட வைக்கப்பட்ட குறு – சிறு – நடுத்தரத் தொழில் பிரிவைச் சேர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் ஆகியோரை எட்டவே இல்லை என்பது தனிக் கதை – அதுவே அரசின் தோல்வியாகவும் பார்க்கப்படுகிறது).

நியாயமற்ற வரிக் கொள்கை

விரிவான நல்வாழ்வு நடவடிக்கைகள் மூலம் கிடைக்கக்கூடிய அரசியல் – தேர்தல் ஆதாயங்களைக் கணக்கிட்டு, மோடி அரசு அதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. அப்போது ஒரு கேள்வி எழுந்தது, 'இந்த நல்வாழ்வு திட்டங்களுக்கான நிதியை யாரிடமிருந்து பெறுவது?'

புதிய நல்வாழ்வு நடவடிக்கைகளால் பயனடையப்போகும் ஏழைகளிடமிருந்தே அதற்கான பணத்தை வரியாகப் பெற்றுவிடலாம், இதை அவர்கள்தான் செலுத்த வேண்டும் என்று சிந்தித்ததும் அதைச் செயல்படுத்தியதும்தான் இந்த அரசின் அறிவுக் கூர்மையுள்ள செயல்!

சமத்துவமும் நீதியும் நிலவும் சமூகமாக இருந்தால், பெரும் பணக்காரர்களும், பெரிய தொழில் நிறுவனங்களும்தான் அதிக வரிகளைச் செலுத்த வேண்டும் – அந்தத் தொகையிலிருந்து ஏழைகளுக்கான நல்வாழ்வு நடவடிக்கைகளுக்குச் செலவுசெய்ய வேண்டும் என்பதே நியதியாக இருக்கும். மோடி அரசு இதற்கு நேர் எதிரான நடவடிக்கைகளையே மேற்கொண்டது: பெருநிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரி விகிதத்தை 22% - 25% ஆகக் குறைத்தது. புதிய முதலீடுகள் மீது - மிகவும் தாராள மனதுடன் - அதிகபட்சம் 15%தான் வரி என அறிவித்தது. தனி நபர்கள் செலுத்த வேண்டிய அதிகபட்ச வருமான வரியே 30%தான் எனக் குறைத்தது. அந்த வருமான வரி மீது கல்வி – சுகாதாரத்துக்கான மேல் வரியையும் அந்தத் தொகையில் 4% என்றே மிதமாக விதித்தது. செல்வ வரி ரத்துசெய்யப்பட்டுவிட்டது. சொத்துகளை பிதுரார்ஜிதமாகப் பெறுவதன் மீது வரி விதிப்பது குறித்து அரசு சிந்திக்காமலேயே இருக்கிறது.

இப்போது அரசுக்கு வருவாயை அள்ளித் தரும் இரண்டு பெரிய இனங்கள் ‘சரக்கு- சேவை வரி’ (ஜிஎஸ்டி) மற்றும் பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான வரி ஆகியவையே. எரிபொருள்கள் மீதான மத்திய அரசின் உற்பத்தி வரியை, தங்கச் சுரங்கத்துக்கே ஒப்பிடலாம். இங்கே சுரங்கத்தைத் தோண்டும் வேலைகூட அரசுக்கு இல்லை; மக்களே தங்கள் வருமானத்திலிருந்து எரிபொருள்களுக்கான வரியை அன்றாடம் கோடிக்கணக்கில் நிமிடத்துக்கு நிமிடம் கொண்டுவந்து அரசின் காலடியிலேயே கொட்டிவிட்டுப் போகிறார்கள்!

பகல் கொள்ளையாக வரிவிதிப்பு

மோடி அரசு பதவியேற்ற 2014 மே மாதம் நாட்டில் நிலவிய உற்பத்தி வரி விகிதத்தை, இன்றைக்கு நிலவும் வரி விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது புரியும். அத்தியாவசிய எரிபொருள்கள் மீதான உற்பத்தி வரி மாற்றம் இங்கே தரப்படுகிறது:

உற்பத்தி வரி (கலால்) ரூபாய் கணக்கில்:

மே 2014: பெட்ரோல் (லிட்டருக்கு) ரூ.9.20, டீசல் (லிட்டருக்கு) ரூ.3.46. விலை: பெட்ரோல் (லிட்டர்) ரூ.71.41, டீசல் (லிட்டர்) ரூ.55.49, எல்பிஜி (சிலிண்டர்) ரூ.410, பிஎன்ஜி ரூ.25.50, சிஎன்ஜி  ரூ.35.20.             

இன்றைய நிலவரம்: பெட்ரோல் (லிட்டருக்கு) ரூ.26.90, டீசல் (லிட்டருக்கு) ரூ.21.80. விலை: பெட்ரோல் (லிட்டர்) ரூ.101.81-116.72,  டீசல் (லிட்டர்) ரூ.96.07-100.10,  எல்பிஜி (சிலிண்டர்) ரூ.949.50-1,000, பிஎன்ஜி ரூ.36.61, சிஎன்ஜி ரூ.67.37-79.49.

2014 மே மாதம் ஒரு பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய் 108 அமெரிக்க டாலர்களாக சர்வதேசச் சந்தையில் விற்றபோதிருந்தே உற்பத்தி வரி விகிதத்தை ஏகமாக ஏற்றிவிட்டது மோடி அரசு. கடந்த மூன்று ஆண்டுகளில் (2019-2021) பீப்பாய் எண்ணெய் விலை சராசரியாக 60 டாலர்கள்தான் இருந்தது.

பெட்ரோலியத் துறையானது உற்பத்தி வரியாக கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசுக்குப் பெற்றுத் தந்திருக்கும் தொகையானது கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

ஆண்டு                ரூபாய் கோடியில்

2014-15                        1,72,065

2015-16                        2,54,297

2016-17                        3,35,175

2017-18                        3,36,163

2018-19                        3,48,041

2019-20                        3,34,315

2020-21                        4,55,069

2021-22 (மதிப்பீடு)        4,16,794

மொத்தம்                   26,51,919

இந்தத் தொகையில் பெரும் பகுதியை டீசல் பம்புசெட்டுகள் – டிராக்டர்கள் வைத்திருக்கும் விவசாயிகளும், இரண்டு சக்கர – நான்கு சக்கர மோட்டார் வாகன உரிமையாளர்களும், ஆட்டோ – டாக்ஸி டிரைவர்களும், அன்றாடம் வேலைக்குச் செல்வோரும், இல்லத்தரசிகளும்தான் வழங்கியுள்ளனர்.

2020-21இல் கோடிக்கணக்கான நுகர்வோர் மத்திய அரசுக்கு எரிபொருள் உற்பத்தி வரியாக ரூ.4,55,069 கோடியை அளித்தபோது (மாநில அரசுகளுக்கு விற்பனை வரியாகத் தரப்பட்டது ரூ.2,17,650 கோடி), இந்தியாவின் 142 பெருங்கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.23,14,000 கோடியிலிருந்து ரூ.53,16,000 கோடியாக உயர்ந்தது. கிட்டத்தட்ட ரூ.30,00,000 கோடி உயர்வு!

ஏழைகளையும் நடுத்தர மக்களையும் இப்படி எரிபொருள் வரியாக விதித்து கசக்கிப்பிழிந்து பெரும் தொகையைப் பெற்ற பிறகு அந்தத் தொகையிலிருந்தே மக்களுக்குக் கூடுதல் நல்வாழ்வு திட்டங்களை அமல்படுத்த செலவிட்டது!

2020இல் கூடுதல் நேரடி உதவியாக வழங்கப்பட்டது என்பதை இனவாரியாக நாம் கணக்கிடலாம். விலையில்லா உணவு தானியங்களுக்காக வழங்கப்பட்டது இரண்டு ஆண்டுகளில் ரூ.2,68,349 கோடி, மகளிருக்கு ஒரே தவணைத் தொகையாக அளித்தது ரூ.30,000 கோடி, ஆண்டுக்கு விவசாயிகளுக்கு ரூ.6,000 என்ற வீதத்தில் ஆண்டுக்கு அளித்தது ரூ.50,000 கோடி. இவை போக வேறு சில நேரடி ரொக்க உதவித் திட்டங்களும் சிறு அளவில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றையெல்லாம் கூட்டினால் ஆண்டுக்கு ரூ.2,25,000 கோடிக்கு அதிகமில்லை. மத்திய அரசு மட்டுமே வசூலித்த எரிபொருள் வரி வருவாயைவிட இது மிகவும் குறைவு.

அதனால்தான் சொல்கிறேன், ஏழைகளுக்கான நல்வாழ்வுத் திட்டச் செலவுகள் என்றால் அதற்கான நிதியை ஏழைகளிடமே வசூலித்ததுதான் இந்த அரசின் சாமர்த்தியம். அதேவேளையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அவர்களுடைய வருமானமும் சொத்து மதிப்பும் கணக்கில் அடங்காமல் பல மடங்காகப் பெருகிக்கொண்டிருக்கிறது!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

பிஜேபி என்பது பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக நடத்தப்படும் கட்சி. பணக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள்தான் பிஜேபி செய்த மிகப்பெரிய ஊழல்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மாயக் குடமுருட்டி: கர்த்தநாதபுரம்நகர்மயமாக்கல்சென்னைமாநகர்மஹாஸ்வேதா தேவிகடின உழைப்புபிரார்த்தனைடாக்டர் ஆர்.மகாலிங்கம்அருஞ்சொல் அன்வர் ராஜா பேட்டிஇறுதியில் நீதியே வெல்லும்சிகிச்சைகே.அசோக் வர்தன் ஷெட்டி கட்டுரைசெல்வந்தர்களின் இந்தியாகாவல் துறைஜிஎஸ்டிக்கு முற்றுப்புள்ளி எப்போது?கடல் செல்வாக்குமங்கை வரிசைச் சிற்பங்கள்சமச்சீரின்மைஇளம் வயது மாரடைப்புவின்னி அண்ட் நெல்சன்சுயசரிதைதொழில் வளர்ச்சிராஜஸ்தானில் காற்று இரண்டு பக்கமும் வீசுகிறது!சமூகப் பிரதிநித்துவம்ஆய்வாளன்சுய தம்பட்டம்சிபிஎம்ரஜினிசித்தாந்தர் பிம்பம்கவுட் மூட்டுவலி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!