கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 10 நிமிட வாசிப்பு

உண்மைக்கு முகம் கொடுக்காத நிதி அமைச்சகம்

ப.சிதம்பரம்
31 Oct 2022, 5:00 am
1

ந்தியாவின் நடப்புப் பொருளாதார நிலைமையைப் பற்றி கட்டுரை எழுத வேண்டும் என்று சொன்னால், எந்த இரண்டு முக்கிய அம்சங்களைத் தேர்ந்தெடுப்பீர்கள்? மக்களை வெகுவாகப் பாதித்துக்கொண்டிருக்கும் இரண்டு முக்கியப் பிரச்சினைகளைத்தான் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவை வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் (உயர்ந்துகொண்டே வரும் விலைவாசி). 

ஒன்றிய அரசின் நிதியமைச்சகம் மாதாந்திரப் பொருளாதார ஆய்வறிக்கையைத் தொடர்ந்து வெளியிடுகிறது. இந்த அறிக்கையைத் தயார் செய்ய நிதி அமைச்சகத்தால் பணிக்கப்பட்ட ஆறு இளம், உற்சாகமிக்க பொருளாதார வல்லுநர்கள் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தோ ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, ஏழ்மை குறித்தோ எதையும் குறிப்பிட வேண்டாம் என்று உளப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. (‘இந்த அறிக்கையைப் பிரதமர் ஒருவேளை படிக்கக்கூடும்’ என்று அவர்களுடைய காதுகளில் எவரேனும் கிசுகிசுத்திருப்பார்களோ என்று வியக்கிறேன்).

வேலையில்லாத் திண்டாட்டம், ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமை ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடாமல் மாதாந்திரப் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயாரிப்பது கடமையிலிருந்து தவறும் செயல் என்று அந்த அறிஞர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

ஆய்வு எதற்காக?

மாதாந்திரப் பொருளாதார ஆய்வறிக்கை என்பது அது சொல்லவரும் தகவல்களுக்காக மிகவும் மதிப்பு வாய்ந்த ஆவணமாகும். 2022 செப்டம்பர் மாதப் பொருளாதார நிலை குறித்து 2022 அக்டோபர் 22இல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, இந்தியப் பொருளாதாரம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது, அதன் வலிமை எதில்  இருக்கிறது, அதன் வலுவற்ற தன்மை எவற்றில் இருக்கிறது என்பதை நிதியாண்டின் நடுவில் அனைவரும் அறியும் வகையில் தெரிவிக்கும் என்றே எதிர்பார்த்தேன்; அடுத்த 6 அல்லது 12 மாதங்களில் பொருளாதாரத்தின் திசைவழி எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற குறிப்பு அதில் இடம்பெறும் என்றும் கருதினேன்; பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் என்றும் நினைத்தேன்; உலகப் பொருளாதாரத்தின் போக்கு எப்படி இருக்கும் என்ற படப்பிடிப்பு அதில் இருக்கும், உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீது செலுத்தவிருக்கும் விளைவுகள் பற்றிய எதிர்பார்ப்புகள் அவற்றில் வெளிப்படும் என்று ஆவல் பொங்க வாசித்தேன்.

செப்டம்பர் மாதத்துக்கான பொருளாதார ஆய்வறிக்கை என்பது 33 பக்கங்களில் அடங்கிவிட்ட மெலிதான ஆவணம். அதில் ஏராளமான வரைபடங்களும் அட்டவணைகளும் மூன்று பக்கங்களுக்கு தரவுகளுமாக நிரம்பியிருந்தன. அதில் உள்ள உரைநடை ஆறு பகுதிகளாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. அதில் முடிவுரையும் - அரசின் கண்ணோட்டமும் இடம்பெற்றுள்ளன.

அரசுக்குள்ள கவலைகள் இந்தப் பகுதிகளில் வெளிப்படுகின்றன. அவை 1. அரசின் உண்மையான வரவு – செலவு நிலை, 2. தொழில் துறை நிலைமை, 3. சேவைத் துறை நிலைமை, 4. தொழில் – வர்த்தகத் துறைகளில் கடனுக்கான கேட்புகள், 5. பணவீக்க அளவு (விலைவாசி உயர்வு), 6. அன்னியத் துறை ஆகியவை குறித்த தகவல்கள் அதில் உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம், ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமை ஆகியவை குறித்து இந்த அரசு கவலைப்படவே இல்லை என்பதை அவற்றைப் பற்றி ஏதும் குறிப்பிடாமல் விட்டுவிட்டதிலிருந்து அனுமானிக்க முடிகிறது.

சுய தம்பட்டம்

அறிக்கையின் தொனி, சுய தம்பட்டமாகவே இருக்கிறது. அமைச்சகத்தின் சிந்தனையையும் அணுகுமுறையையும் கடைசி வாக்கியம் வெளிப்படுத்துகிறது: “கிரிக்கெட் ஆட்ட களத்தில் காற்று வீசும்போது அதற்கேற்ப அசைந்தாடி வரும் பந்துகளை எதிர்கொள்வதில் பேட்ஸ்மனின் வெற்றி, எந்தப் பந்துகளையெல்லாம் தொட்டு ‘கேட்ச்’ தராமல் நிலைத்து நிற்கிறார் என்பதையும், எந்தப் பந்துகளை அடித்து ஆடி ‘ரன்’ குவிக்கிறார் என்பதையும் பொருத்தது; தவறான கொள்கை முடிவுகளை எடுக்காமலும், நல்ல கொள்கை முடிவுகளை எடுத்தும் செயல்பட வேண்டும்” என்கிறது.

அறிக்கை தயாரித்தவர்கள் எதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள் தெரியுமா? ரன்னே எடுக்கப்படாத பந்துகள் குறித்தும், ஆட முற்பட்டதால் விக்கெட்டையே பறிகொடுத்த பந்துகள் பற்றியும் அவர்கள் குறிப்பிடவில்லை. அதாவது, அன்னியமான இடங்களிலிருந்து நம்முடைய பொருளாதாரத்துக்கு வந்த அச்சுறுத்தல்கள் குறித்தும், பணமதிப்பு நீக்கம் போன்ற பொருளாதாரச் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை எதையும் பேசவில்லை.

முடிவுரை என்றாலே அது வாசிப்பவர்களைக் கவர்ந்து, தன்நிலை மறப்புக்கு இட்டுச் செல்ல வேண்டும். ஆய்வறிக்கையின்படி - அரசுக்கு வருவாய் எல்லா இனங்களிலும் உயர்ந்துகொண்டே வருகிறது, அரசு செய்யும் மூலதனச் செலவுகளும் உயர்கின்றன. அரசு தரமான இனங்களில் மட்டுமே அதிகம் செலவிடுகிறது, ஆகஸ்ட் மாதம் வரையிலும் அரசின் வருவாயும் – செலவும் வளமான நிலையிலேயே இருந்தன. அதேசமயம், ஒன்றிய நிதியமைச்சகம் வாங்கும் கடன்களால் பொதுக்கடன் சுமை அதிகரித்துவிடும் என்று முனகலோடு ஒப்புக்கொள்கிறது அறிக்கை.

தொழில் துறை பற்றிப் பேசும்போது உற்பத்தியாளர் குறியீட்டு அட்டவணை, ‘எஸ் அண்ட் பி’ (ஸ்டேண்டர்ட் அண்ட் புவர்), ‘ஜிஎஸ்சிஐ’ (கோல்ட்மேன் சாக் கமாடிட்டி இன்டக்ஸ்), தொழில் துறை உலோக குறியீட்டெண், தொழில் துறையின் மதிப்பீட்டு குறியீட்டெண், தொழில் துறை உற்பத்திக் குறியீட்டெண் ஆகியவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிவிட்டு ‘ஒட்டுமொத்தமாக நாட்டின் தொழில் – வர்த்தகச் சூழல் மேம்பட்டுவருகிறது’ என்று முடிவுரை வழங்குகிறது.

சேவைத் துறை பற்றிய ஆய்வில் உற்சாகம் பொங்க பல அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தக அதிகரிப்பு, சுற்றுலாத் துறை வளர்ச்சி, ஹோட்டல் தொழிலில் அதிகரித்துவரும் வர்த்தகம், விமானப் பயணிகள் எண்ணிக்கை உயர்வு, போக்குவரத்துத் துறை - மனை வணிகத் துறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மீட்சி காரணமாக வளர்ச்சிக்கு இவ்விரு துறைகளும் உந்துமேடையாகும் என்கிறது.

வங்கிகளிடமும் நிதி நிறுவனங்களிடமும் கடன் கோரி அணுகுவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.4% அதிகரித்துள்ளது. பண சப்ளையைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளும் (வட்டி அதிகரிப்பு), பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவதும் இந்த வளர்ச்சியை கட்டுப்படுத்திவிடக்கூடும். விலைவாசி உயர்வைப் பொருத்தவரை, தயாரித்தவர்களின் உளச்சாய்வை ஆய்வறிக்கை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. ‘புவி-அரசியல் நடவடிக்கைகளால்தான் விலைவாசி உயர்கிறது’ என்று கூறி, அரசுக்கு அதில் எந்தப் பழியும் வந்துவிடாதபடிக்குக் காப்பாற்ற முயல்கிறது.

சுய தம்பட்டமும், கையறுநிலையும் கலந்த கலவையாகவும் ஆய்வறிக்கை திகழ்கிறது. ஏற்றுமதி ஸ்திரப்பட்டுவிட்டதாக சுயமாகப் பாராட்டிக்கொள்ளும் அதேவேளையில், இறக்குமதியும் அதிகரித்துவருவது குறித்துக் குறிப்பிடும்போது, அரசால் இதைக் குறைக்க முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகமாக இருப்பது) பெரிதாகிக்கொண்டே வருவதைக் கூறிவிட்டு, இதுவும் சில மாதங்களில் சரியாகி, மொத்த உற்பத்தி மதிப்பில் 3% என்ற அளவுக்குள் கட்டுப்பட்டுவிடும் என்கிறது. ஆனால், உண்மையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவு, மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 3.4% என்று அதிகரித்து அறிக்கையின் முகத்திலேயே அறைகிறது.

வலுத்துவரும் சிக்கல்கள்

ஆய்வறிக்கையில் உளச்சார்போடு எழுதப்பட்டவற்றையும், சுய தம்பட்ட வாசகங்களையும் மன்னித்துவிடலாம், ஏனென்றால் சில வாரங்களில் இதுவே பழைய வரலாறாகிவிடலாம்! 

ஆனால், எரிச்சலையும் கோபத்தையும் ஒருங்கே கிளப்புவது எதுவென்றால் கோடிக்கணக்கான மக்களை அன்றாடம் பாதித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளை வெகு அலட்சியமாக அறிக்கை ஒதுக்கியிருப்பதுதான். பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்ற அன்று ரிஷி சுனக் பேசுகையில், ‘பொருளாதார நெருக்கடி மிக ஆழமாக இருப்பதாக’ நாட்டு மக்களை எச்சரித்திருக்கிறார். ஆதிக்க உணர்வுள்ள சீனத் தலைவரான ஜி ஜின்பிங்கூட, ‘சீனப் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கிறது - இதிலிருந்து மீண்டு வந்துவிடும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு (யுஎன்டிபி), ஆக்ஸ்ஃபோர்டு மனிதவள குறியீட்டெண் அமைப்பு ஆகியவை இந்த ஆண்டு அக்டோபர் 17இல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020இல் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள பரம ஏழைகளின் எண்ணிக்கை 22.8 கோடி என்கிறது. பெருந்தொற்றுக்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகிவிட்டது. உணவைச் சம்பாதித்து சாப்பிட முடியாமல் பட்டினி கிடக்கும் மக்கள் அதிகமுள்ள 121 நாடுகள் பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா இதில் வீழ்ச்சி அடைந்துவருகிறது.

இந்தியர்களில் 16.3% பேர், போதிய ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர். இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 19.3% வயதுக்கேற்ற எடையில்லாமல் மெலிந்து இளைத்து காட்சி தருகின்றனர். 35.5% குழந்தைகள் தங்களுடைய வயதுக்கேற்ற உயரமும் எடையும் இல்லாமல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறார்கள்.

படித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர் எண்ணிக்கை 8.02% ஆக இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் ‘சி’ பிரிவு பணியிடங்களில் சில நூறுகள் காலியாக இருப்பதை நிரப்ப நடத்திய தேர்வில் பங்குகொள்ள, 37 லட்சம் பேர் பேருந்துகளிலும் ரயில்களிலும் முட்டிமோதி இடம்பிடித்து பயணம் செய்து வெளியூர்களில் தேர்வெழுதியுள்ளனர். இது நாட்டின் ஒரு மாநிலத்தில் மட்டும் உள்ள நிலவரம். ஏழைகள் பட்டினியில் வாடாமல் சாப்பிட பாதுகாப்பான ஒரே ஏற்பாடு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’தான். 2020-21இல் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை கோரி விண்ணப்பித்தவர்களில் 40% பேருக்கு அரசால் வேலை கொடுக்க முடியவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டம், ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமை ஆகியவற்றால் அவதிப்படும் கோடிக்கணக்கான மக்கள் குறித்து, அவர்கள் ஆறுதல் அடையும் வகையில் ஒருசில வார்த்தைகள்கூட அறிக்கையில் இடம்பெறவில்லை. உலக அளவில் மந்தப்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி, உலகமயமாக்கலுக்கு எதிராக பல நாடுகளில் வளர்ந்துவரும் தேசிய உணர்வு, வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியிலிருந்து உள்நாட்டுத் தொழில்களைக் காக்கும் காப்புக் கொள்கை உணர்வு, உயர் வட்டிவீதம், விலைவாசி உயர்வு, இந்திய ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பில் ஏற்பட்டுவரும் சரிவு ஆகியவற்றை இந்த அறிக்கையில்  குறிப்புகள் இல்லை.

அக்டோபர் 22இல்தான் நிதியமைச்சகம் ஓர் அறிக்கை மூலம், ‘நாட்டின் பொருளாதார நிலைமை சரியில்லை – கொண்டாட்டத்துக்கோ, மெத்தனமான செயல்களுக்கோ இது உகந்த சமயம் அல்ல’ என்று எச்சரித்தது; ஆனால், அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையோ அதற்கு நேர் மாறாக இருக்கிறது. அக்டோபர் 22இன் காலைப் பொழுதில் தொடங்கி மாலைக்குள் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று வியப்போடு சிந்தித்துப் பார்க்கிறேன்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Abdul majeeth   2 years ago

சிதம்பரம் அவர்களின் அறிவார்ந்த இன்றைய கட்டுரை வீச்சு நாட்டை ஆள்பவர்களுக்கு ஒரு சவுக்கடி போலாகும் இனிமேலாவது வறிய மக்கள் மீது பார்வை செல்லட்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தமிழ் எழுத்தாளர்கள்விடைஅடையாளங்கள்எம்.எஸ்.சுவாமிநாதன்: பசுமைப் புரட்சியின் முகம்தொழிலாளர் சட்டங்கள்உரையாடு உலகாளுநான்தான் ஔரங்கஸேப்தலித்எருமை மாட்டைக் குறிப்பிட்டு மோடி பேசியது ஏன்? சமஸ் அனைவரும் பொறுப்புதான்: ஆசிரியரின் எதிர்வினைஆப்பிள்பிரதிநிதித்துவம்பேருந்துகள்இதய வெளியுறைஇந்துத்துவ ஸ்வாமிஜியா விவேகானந்தர்?அதிபர்இந்திய ஜனநாயகம்விவசாயக் குடும்பங்கள்சைபர் குற்றவாளிகள்தைவானில் நெருப்பு அலைகள்கவிதைதத்தளிக்கும் சென்னை: அரசின் தவறு என்ன?ஆவின் நிறுவனம்ஏற்றத்தாழ்வுகே.அண்ணாமலைதர்ம சாஸ்திரம்தனுஷ்கா நம் குழந்தை இல்லையா?சர்வதேச உறவுகுடிநீர்த் தொட்டிபோடா போடா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!