கட்டுரை, அரசியல், சட்டம் 8 நிமிட வாசிப்பு

தனியுரிமையின் இதயத்தில் பாய்ந்த வாள்!

ப.சிதம்பரம்
11 Apr 2022, 5:00 am
0

ஒரு தனிநபரின் விருப்பத்துக்கு மாறாக, குற்றத்தை அறிய நடத்தப்படும் மூன்று வித அறிவியல்பூர்வமான விசாரணைகள் சரியா என்று ‘செல்வி எதிர் கர்நாடக அரசு’ வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 2010 மே 5இல் பரிசீலித்தது. அந்த மூன்று சோதனைகள் ‘நார்கோ அனாலிசிஸ்’ (போதைப்பொருள் பகுப்பாய்வு), ‘பாலிகிராப்’ (பொய் சொல்கிறாரா என்று உடலியக்கங்களைக் கண்காணித்து அறிதல்), ‘பீப்’ (மூளையில் ஏற்படும் மின்னியல் செயல்பாடுகளின் மாறுதல்களைக்கொண்டு பேசுவது உண்மையா என்று அறிதல்) ஆகியவை. 

நீதிமன்றம் பின்வரும் முடிவுகளுக்கு வந்தது:

  1. “சுய விருப்பத்தின்படி அல்லாமல், பேசுவது உண்மையா இல்லையா என்பதை அறிய நடத்தும் சோதனைகள் அனைத்தும் கட்டாயப்படுத்திப் பெறப்படும் ஆதாரங்களாகவே கருதப்பட வேண்டும். எனவே, அந்தரங்க உரிமையைக் காக்க அரசமைப்புச் சட்டம் அளிக்கும் கூறு 20(3)படியான பாதுகாப்பு இங்கே பரிசீலிக்கப்பட வேண்டியதாகிறது.
  2. “சுய விருப்பமில்லாமல் ஒருவரிடம் கட்டாயப்படுத்தி இந்த வகைகளில் பெறப்படும் சாட்சியங்கள் அல்லது ஆதாரங்கள், அந்தரங்க உரிமையைக் காக்க அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமையை மீறும் செயல் என்றே நாங்கள் கருதுகிறோம்.
  3. “குற்ற வழக்குகளில் உண்மையைக் கண்டறியவோ, ஆதாரங்களைத் திரட்டவோ எந்த ஒரு தனிநபரும் மேலே கூறப்பட்ட எந்தவொரு நடைமுறைகளுக்கும் உள்ளாக்கப்படக் கூடாது என்றே நாங்கள் கருதுகிறோம்.”

இன்னொரு தருணம்

‘கே.எஸ்.புட்டசாமி எதிர் ஒன்றிய அரசு’ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கூறியது: “ஒரு தனிநபரின் வாழ்க்கையில் அல்லது தனிப்பட்ட உரிமையில் குறுக்கிடுவதாக இருந்தால், அது அடிப்படையில் மூன்று விஷயங்களுக்காக இருப்பது அவசியம். (I) சட்டப்பூர்வமாக அதைச் செய்ய வேண்டியிருக்கிறது - சட்டத்தை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது என்றால் (II) தேவை - அரசின் சட்டப்பூர்வ நோக்கத்தை நிறைவேற்ற அவசியப்படுகிறது என்றால் (III) மிகவும் அவசியம் என்றால் - சோதனைகளைச் செய்ய வேண்டிய நோக்கமும், அதற்கான வழிமுறைகளும் பகுத்தறிவோடு ஏற்கும் விதத்தில் இருக்கும் நிலையில் - அனுமதிக்கலாம்.”

தனியுரிமையும் அந்தரங்கமும்

அரசமைப்புச் சட்டம் தனிநபர்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளை விழிப்புடன் காவல் காக்கும் சட்டக் காவலன் என்ற வகையில் நீதிமன்றங்கள் இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

செல்வி மற்றும் கே.எஸ்.புட்டசாமி வழக்குத்  தீர்ப்புகள் மிகச் சிறந்த சட்ட விளக்கங்களாக இன்றளவும் திகழ்கின்றன. ஆனால், இப்போது ஆளும் ஒன்றிய அரசுக்கு அவை அப்படித் தோன்றவில்லை. கட்டுப்படுத்தவோ – நிறுத்திவைக்கவோ கூடாத அடிப்படைச் சட்ட உரிமைகள் (அரசமைப்புச் சட்டக் கூறு 20 மற்றும் 21) தொடர்பானவை இவை என்பதை அரசு உணர்ந்திருந்தால் ‘குற்றவியல் நடைமுறை (அடையாளம் காணல்) மசோதா-2022’ என்பதை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியிருக்காது. இந்த மசோதாவானது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மிஞ்சும் அப்பட்டமான முயற்சியாகும், தனி நபர்களின் அந்தரங்கம் – தனிப்பட்ட உரிமைகளை மறுக்கும் செயலாகும். தனியுரிமைகளும் அந்தரங்கத்தைக் காக்கும் உரிமையும், ஜனநாயகம் தனது மக்களுக்கு அளிக்கும் மிகவும் மதிப்புமிக்க உரிமைகளாகும்.

இந்த மசோதாவின் நோக்கம், இச்சட்டப்படி விசாரணைக்கு உள்படும் நபர்கள் தொடர்பான விசாரணை எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியாகும். நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி – குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்பான உடல்ரீதியிலான அடையாளங்களை நிரந்தரமாகப் பதிவுசெய்துகொள்ளும் நடவடிக்கை என்பதுடன் அதற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை அளிப்பதாகும். இதன் நோக்கம் விதிவிலக்கானது எனக் கருதிவிட முடியாது.

இச்சட்டத்தின் விஷமம் அதன் உட்பிரிவுகளில் பொதிந்துள்ளது. இந்த மசோதா பல்வேறு சட்டக் குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட உரிமைகள், அந்தரங்கம் எனும் இரண்டு விலைமதிப்பற்ற தன்மைகளை மீறும் நான்கு பிரிவுகள் குறித்து மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கேள்விக்குரிய நான்கு பிரிவுகள்

பிரிவு 2: இங்கே ‘நடவடிக்கைகள்’ (Measures) என்றொரு வார்த்தை இருக்கிறது. உயிரியல் மாதிரிகள் அவற்றின் பகுப்பாய்வுகள், நடத்தைப் பண்புகள் அல்லது அவை போன்ற புறவயமான பண்புகளைப் பற்றிய பதிவுகள், சோதனைகள் ஆகியவற்றை ‘நடவடிக்கைகள்’ என்கிற வார்த்தையில் அடக்கியிருக்கிறார்கள் (இவை தண்டனையியல் நடைமுறைச் சட்டத்தின் 53, 53ஏ, 54 ஆகியவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளன). இவற்றில் எதுவும் விதிவிலக்காக விட்டுவைக்கப்படவில்லை.

கேள்வி: ‘நடவடிக்கைகள்’ என்பது ‘நார்க்கோ அனாலிசிஸ்’, ‘பாலிகிராப்’ சோதனை, ‘பீப்’ மற்றும் உளவியல் விசாரணைகளையும் கொண்டதா?

பிரிவு 3: அடையாளங்கள் எந்த நபர்களிடமிருந்தும் பெறப்படலாம். எந்தச் சட்டப்படியும் தண்டிக்கப்பட்டவரிடமும், அமைதியை நிலைநாட்டுவேன் என்று உறுதிமொழி அளிக்குமாறு கூறப்பட்டவரிடமும், எந்த சட்டப்படி கைது செய்யப்பட்டவரிடமும், தடுப்புக்காவல் சட்டப்படி கைது செய்யப்பட்டவரிடமும் பெறப்படலாம். எல்லாவித சட்டங்களின்படியும் கைது செய்யப்படுவோரை இந்தவித விசாரணைகளுக்கு உள்படுத்தலாம் என்று கூறியிருப்பதும் விசாரணை முடிந்து தண்டிக்கப்பட்டவர் மட்டுமின்றி, விசாரணைக்கு உள்படுத்தப்படுவர், முன் எச்சரிக்கையாகக் கைதுசெய்யப்படுகிறவர் என்று அனைவரிடமும் கருவிழிப்படலம், விரல் ரேகை உள்ளிட்ட அடையாளங்களைத் திரட்ட இந்தச் சட்டம் வகைசெய்கிறது. பொது இடங்களில் நான்கு பேருக்கும் மேல் கூடக் கூடாது என்று 144-வது பிரிவின் கீழ் விதிக்கப்படும் தடையை மீறிச் செல்லும்போது பிடிபடுகிறவரிடம்கூட இத்தகைய அடையாளங்களைத் திரட்டவும் விசாரிக்கவும் இச்சட்டம் வழிசெய்கிறது.

கேள்விகள்: நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அரசியல் தொண்டர், தொழிற்சங்கச் செயல்பாட்டாளர், மாணவர் தலைவர்கள், சமூக சேவகர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படாவிட்டாலும் எதிர்காலத்திலும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று உத்தரவாதமாகக் கூறிவிட முடியுமா? (இளைஞர் காங்கிரஸ் உறுப்பினராகச் சேர்ந்த அன்று சென்னையில் மன்றோ சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது இதர தொண்டர்களுடன் நானும் கைதுசெய்யப்பட்டேன்).

பிரிவு 4: இப்படிக் கைதானவர்களிடம் எடுக்கப்படும் அடையாளங்கள் 75 ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும், சட்டத்தை அமல்படுத்தும் அரசு முகமைகள் அனைத்துடனும் பகிர்ந்துகொள்ளப்படும். இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள், குற்றத்தை விசாரிக்கும் அமைப்புடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்றில்லை! ஊராட்சி அல்லது நகராட்சி அதிகாரி, சுகாதார ஆய்வாளர், போக்குவரத்துப் பிரிவு காவலர், வரி வசூலிப்பவர் - இன்னும் சட்டத்தைப் பராமரிப்பவர் அல்லது அதுபோன்ற கடமைகளைச் செய்கிறவர்கள் – அனைவருமே இந்த அடையாளங்களைத் தருமாறு கோரவும் பெறவும் உரிமை படைத்தவர்களாகிறார்கள்!

கேள்வி: சட்டத்தை அமலாக்குபவர் என்பதற்கு இந்தப் பிரிவில் விளக்கம் இல்லாதபட்சத்தில், அப்படி அமலாக்குபவர்களாக யாரையெல்லாம் கருத வேண்டும்?

பிரிவு ஐந்தையும் பிரிவு இரண்டையும் இணைத்துப் படியுங்கள். இந்த மசோதா நிறைவேறி சட்டமானால், கைதுசெய்யப்படுகிறவர் தன்னுடைய அந்தரங்க அடையாளங்களைத் தர கடமைப்பட்டவர் ஆகிறார். குற்றவியல் வழக்கை விசாரிக்கும் நீதிபதி அல்லது நடுவர் அடையாளங்களைத் தருமாறு உத்தரவிடலாம், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஏற்று நடந்தாக வேண்டும். அதை அவர் ஏற்க மறுத்தால் காவல் துறை அதிகாரி (தலைமைக் காவலர் தொடங்கி அவருக்கும் மேல் உள்ள அனைவரும்) அடையாளங்களைப் பெற்று பதிவுசெய்யும் அதிகாரம் படைத்தவர்கள். அதற்கு அந்த தனிநபர் மறுத்தால் ஐ.பி.சி. 186-இன் கீழ் அவர் தண்டனைக்குரியவர் ஆவார்.

கேள்வி: தனிநபரின் விருப்பத்துக்கு மாறாக, அவருடைய ஒப்புதலின்றி அவரிடமிருந்து அடையாளங்கள் பெறப்படுமா?

மறுக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாத உரிமைகள்

செல்வி வழக்கில் தடை செய்யப்பட்ட வழிமுறைகள், இம்மசோதாவின்படி விசாரணைக்கு உள்படுவோரிடம் கையாளப்பட மாட்டாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் வாய்மொழியாக உத்தரவாதம் அளித்தார். இந்த உறுதிமொழியை மசோதாவில் எழுத்துப்பூர்வமாக சேர்க்க மறுத்தார். இதர மூன்று கேள்விகளுக்குப் பதில் இல்லை. அரசாங்கம் இந்த விவாதத்துக்குப் பதில் அளிக்கையில் வழக்கம்போல, வாதங்களுக்குப் பிரதிவாதங்களை முன்வைத்தது. கைதுசெய்யப்படுகிறவர்களின் மனித உரிமைகள் என்னாவது என்று கேட்டபோது, பாதிக்கப்படுவோருக்கும் மனித உரிமைகள் உள்ளன என்று பதில் தரப்பட்டது. இந்த மசோதாவானது பாதிக்கப்பட்டோருக்கானது அல்ல, கைதுசெய்யப்படுவோர் பற்றியது. குற்றம் செய்தார் என்று தெரிந்த பிறகு கைது செய்யப்படுவோர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோர், முன் எச்சரிக்கையாக கைது செய்யப்படுவோர் என்று அனைவருமே ஒரே விதமாக இதில் கருதப்படுகின்றனர்.

இவ்வளவு கடுமையானச் சட்டம் எதற்கு எனக் கேட்டபோது, குற்ற வழக்குகளில் விசாரணை முடிந்து தண்டனை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் சட்டம் கடுமையாக்கப்படுவதாகப் பதில் அளிக்கப்பட்டது. இது உண்மைதான். ஆனால், வழக்கில் தண்டிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. விசாரணை அதிகாரிகளின் கவனக் குறைவு, வழக்கை எடுத்துரைக்கும் அரசுத்தரப்பு வழக்குரைஞர்களின் திறமைக் குறைவான வாதம், மிக மோசமான ஆவணப் பராமரிப்பு, பணிச்சுமையால் அவதிப்படும் நீதிபதிகள் என்று காரணங்கள் பல. கைது செய்யப்படுவோரின் மனித உரிமைகளை மீறும் மசோதாக்களால் இந்த நிலைமைகள் மாறிவிடாது.

தனியுரிமை – அந்தரங்க உரிமை என்பது எந்த வகையிலும் கட்டுப்படுத்தலுக்கும் நிராகரிப்புக்கும் உள்ளாகக்கூடாத அடிப்படை உரிமைகளாகும். மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் முயற்சிகள்தான் மனித உரிமைகளை நசுக்குவதற்கான தொடக்கப் புள்ளி. தனியுரிமை – அந்தரங்க உரிமை என்ற இதயத்தில் பாய்ச்சப்பட்ட கொடுவாள்தான் இந்த மசோதா!

  

 

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இந்திய ரயில்வேஇந்தியக் குழந்தைகளின் இன்றைய நிலைசமாஜ்வாதி கட்சிமன்னார்குடி தேசிய பள்ளி இது சாதி ஒதுக்கீடு!உழவர் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம்டி.வி.பரத்வாஜ்கார்கில் போர்பெரிய கோயில்துணைவேந்தர்சமஸ் ஜெயலலிதாகே.சந்துரு கட்டுரைகள்உள்ளூர் மொழிகள்மதமும் மத வெறியும்ராஜஸ்தான்பொதுத் துறை நிர்வாகிசசிகலாசிதம்பரம் நடராஜர் கோயிலும் தீட்சிதர்களும்எல்.ஆர்.சங்கர் கட்டுரைமொரொக்கோநாடாளுமன்ற உரைஆதிநாதன்ஜனநாயகப் பண்புமயிர்தான் பிரச்சினையா?சர்க்கரை நோய்தி பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட்திராவிடர் கழகம்நியாயமற்ற வரிக் கொள்கைவிசுவபாரதிபாரதிய ஜனதா கட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!