கட்டுரை, அரசியல், நிர்வாகம் 7 நிமிட வாசிப்பு

நான் முஹம்மது ஸுபைர்

ப.சிதம்பரம்
18 Jul 2022, 5:00 am
0

கவல்களையும் தரவுகளையும் சரிபார்ப்பது மிகவும் கடினமான வேலை. நடுநிலையான மனமும், பரந்த வாசிப்பும், இடைவிடாத ஆய்வும், அறிவுப்புலத்தின் நம்பகத்தன்மையும் அப்படி ஆராய்கிறவருக்கு இருக்க வேண்டும். உண்மைகளை சரிபார்ப்பது என்பது கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதும் அல்ல, நியாயமான சில விடுபடல்களைப் பெரிதாக்கி, தன்னை அறிஞன் என்று காட்ட முயல்வதும் அல்ல. மிகப் பெரிய தரவுகளில் அற்பமான சிறு தவறுகளைப் பெரிதாக்குவதும் அல்ல, தங்களைத் தாங்களே மிகையாகப் புகழ்ந்துகொள்வதும் உண்டு என்பதை ஏற்பதுமாகும். உண்மைகளை அறிவதென்பது சாக்கடைகளைக் கிளறிப் பார்க்கும் சுகாதார ஆய்வாளரின் வேலையல்ல; கல் குவியல்களுக்கிடையே மறைந்துகிடக்கும் வைரங்களையும் நவரத்தினக் கற்களையும் அடையாளம் கண்டு ரகம் பிரிப்பது ஆகும்.

எனக்கு முன்னே கவர்ச்சிகரமான இரண்டு நூல் தொகுப்புகளும் சில கைப்பிரதிகளும் இருக்கின்றன. அனைத்துமே, ‘எட்டாண்டுகள்: சேவா, சுஷாசன், கரீப் கல்யாண்’ என்று தலைப்பிடப்பட்டவை. இதை மொழிபெயர்த்தால் ‘சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நல்வாழ்வு’ என்ற பொருள்தரும். ஒன்றிய அரசு இந்தக் கவர்ச்சிகரமான சாதனைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறது. 2014 தொடங்கி 31 மே 2022 வரையில் ஒன்றிய அரசின் ஆட்சியில் நிகழ்ந்த சாதனைகள் இவை.

சாதனைகள் என்றால் என்னைப் பொருத்தவரையில், உண்மையான தரவுகள். இந்த அரசு அப்படி என்னென்ன சாதித்திருக்கிறது. எட்டாண்டுகளில் எதுவுமே நடந்துவிடவில்லை என்று வாதிடுவது முட்டாள்தனம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான காலம் ஆட்சியில் இருக்கும் எந்த அரசும், பொது மக்களின் பணத்தைக் கோடிக்கணக்கில் செலவிடும்பட்சத்தில், சில சாதனைகளையாவது நிகழ்த்தியிருக்கும்.

எந்த ஒரு அரசும் தன்னுடைய நிர்வாக நடவடிக்கைகள் மூலமாக - இருப்பது எதையும் சேதப்படுத்தாமல் இருந்தாலே - நம் நாட்டின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி வீதம் 5% ஆக இருக்கும் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. இதற்குக் காரணம், தனியார் துறையில்தான் வேளாண்மை இருக்கிறது, சேவைத் துறையில் பெரும்பான்மையானவையும் தனியாரால்தான் மேற்கொள்ளப்படுகிறது, தொழில் துறை உற்பத்தியிலும் கணிசமான பங்கு தனியார் துறை மூலம் கிடைக்கிறது. அரசு ஓரளவுக்குச் செயல்பட்டாலும் அல்லது செயல்படாவிட்டாலும் கெடுதல் எதையும் செய்யாமல் இருந்தாலே இந்த உற்பத்தி நிகழ்ந்துவிடும். பணமதிப்புநீக்கம் போன்ற சேதம் விளைவிக்கும் செயல்களை அரசு மேற்கொள்ளும்போதுதான் இந்த குறைந்தபட்ச வளர்ச்சிகூட பெரிதும் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் கடுமையாக நலிவடையும்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்துக்கொண்டிருக்கும் மோடி அரசின் தீவிரமான பிற நடவடிக்கைகளும் உண்டு. நான் அரசின் உள்நோக்கங்களைக் கேள்வி கேட்கவில்லை; பார்க்கும்போதே சரியில்லை என்று தெரியும் தவறான கொள்கைகளைச் செயல்படுத்துவதையும், அவ்வாறு தாங்கள் செய்யும் செயல் சரிதான் என்று பிடிவாதமாக வாதிடுவதையும், தொடர்ந்து அவற்றை மேற்கொள்வதையும்தான், சரியா என்று கேட்கிறேன்.

பொது சரக்கு-சேவை வரிச் சட்டம் (ஜி.எஸ்.டி.) அப்படிப்பட்ட ஒன்று. அது இயற்றப்பட்டதிலிருந்தே குறைபாடுகளுடன்தான் இருக்கிறது. அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நன்கொடை அளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட நன்கொடை பத்திரங்கள் திட்டம் அடுத்தது. அரசியல் கட்சியுடன் பெருந்தொழில் நிறுவனங்கள் கைகோத்துச் செயல்படவும், ஒரு மாநிலத்தில் ஆட்சி ஏற்பட – தேர்தலுக்கு முன்னால் அல்லது பின்னால் – வழிவகை செய்யவும், அரசின் மீது செல்வாக்கு செலுத்தவும் தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டம் உதவுகிறது.

ராணுவத்துக்கு ஆள் எடுக்க சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ‘அக்னிபத்’ திட்டம் மற்றொரு உதாரணம். இந்தப் புதிய திட்டமானது ஒப்பந்த அடிப்படையிலான இந்திய சேனைக்கே வழிவகுத்தது என்பதைக் காலம் செல்லச் செல்ல நாம் உணர்வோம். இந்திய தரைப்படையில் மட்டுமல்ல; கடற்படை, விமானப் படையிலும் ஒப்பந்த வீரர்களே பணியாற்றவிருக்கிறார்கள். நாட்டுக்காகத் தங்களுடைய இன்னுயிரைத் துறக்க வேண்டும் என்ற தியாக உணர்வோ, எதிரியை எதிர்த்துத் தீவிரமாகப் போர் புரிய வேண்டும் என்ற போரிடும் உணர்வோ அவர்களிடம் குறைவாகவே இருக்கவும் கூடும். 

இந்தக் கட்டுரையில் நாம் விவாதிக்க எடுத்துக்கொண்ட அம்சம், அன்றாட வாழ்க்கை  தொடர்பானது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள சாதனைப் பட்டியல்களில் எத்தனை உண்மை, எந்த அளவுக்கு உண்மை? மிகைப் புகழ்ச்சிக்கும் சற்று இடமளித்துவிட்டு தரவுகளை ஆராய்வோம். வேண்டுமென்றே தவறாகவும் திசைதிருப்பும் வகையிலும் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளனவா? வெவ்வேறு மூலங்களிலிருந்து தரவுகளைத் திரட்டி ஒப்பிட்டுப் பார்த்த பிறகு கிடைத்த சில முடிவுகளை இணைத்துப் பார்ப்போம்.

மிகைப்புகழ்ச்சிக்கும் அப்பால்…

அரசின் கூற்று: நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்குள் குடியிருக்க வீடு கட்ட 2016இல் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ தொடங்கப்பட்டது. தேவைகள் எவ்வளவு என்று ஆராய்ந்த பிறகு 1.15 கோடி வீடுகளைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 70 லட்சம் வீடுகளைக் கட்ட அடித்தளமிடப்பட்டது. 46 லட்சம் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

உண்மை: 58.59 லட்சம் வீடுகள்தான் முழுமை பெற்றுள்ளன. 2022 மார்ச் 31க்குப் பிறகு இந்தத் திட்டம் மேற்கொண்டு விரிவுபடுத்தப்படவில்லை. எனவே லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து வீடற்றவர்களாகவே, இந்தியாவின் பெருநகரங்களிலும் நகரங்களிலும் வீதிகளிலேயே வசிக்கப் போகிறார்கள்.

வீடுகளுக்கு மின் இணைப்பு

அரசின் கூற்று: இந்தியாவில் 99.99% வீடுகளுக்கு மின்சார இணைப்பு தரப்பட்டுவிட்டது.

உண்மை: ‘நிதி ஆயோக்’ அமைப்புடன் இணைந்து ‘ஸ்மார்ட் பவர் இந்தியா’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்திய மக்களில் 13% பேர் அரசின் மின்தொகுப்பிலிருந்து மின்சாரம் பெறாமல் இருக்கிறார்கள் அல்லது வேறு ஆதாரங்கள் மூலம்தான் மின்னிணைப்பு பெற்றுள்ளார்கள். இந்தியாவின் அனைத்துக் கிராமங்களையும் மின்சாரம் அடைந்துவிட்டது என்று ஜெர்மனியின் மூனிக் நகரில் பிரதமர் மோடி பெருமிதமாக அறிவித்த அதே நாளில், பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்து ஒரு பகுதி குடியிருப்புக்கு மின்சாரம் வழங்க ஒடிசா மாநில மின்சாரத் துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறது என்று!

தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை (என்எஃப்எச்எஸ் 5) தரவுகள்படி 2015-2016லேயே இந்தியாவின் 88% வீடுகளுக்கு மின்சார இணைப்பு கிடைத்துவிட்டது. மோடி அரசு எட்டு ஆண்டுகளில் மேற்கொண்டு முயன்று அதை 96.80%ஆக உயர்த்தியிருக்கிறது. இந்தியாவின் பல கிராமங்களிலும் மலைப்பகுதி உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள மேலும் சில ஆயிரம் வீடுகளுக்கு இன்னமும் மின்சார இணைப்பு தரப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள அரசு வெட்கப்படத் தேவையில்லை.

உண்மைக்கு அப்பாற்பட்டது

அரசின் கூற்று: இந்தியாவில் 4,371 நகரங்களில் திறந்தவெளி மலக்கழிப்பு இல்லை என்றாகிவிட்டது. ‘ஸ்வச் பாரத்’ இயக்கம் ஆதரவில் கிராமங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார வசதிகள் 100% செய்யப்பட்டுள்ளன. 11 கோடிக்கும் மேற்பட்ட தனிக் கழிப்பறைகள் வீடுகளில் கட்டித்தரப்பட்டுள்ளன.

உண்மை: ‘தெற்காசிய தொழிலாளர் கட்டமைப்பு’ நடத்திய ஆய்வில், இந்திய மக்களில் 45% பேர் இன்னமும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கைவிடவில்லை. 12 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும் அவ்வளவு எண்ணிக்கையில் உண்மையில் கட்டப்படவே இல்லை. 4,320 நகரங்களில் 1,276இல் மட்டுமே தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் உள்ளன, ஓரளவுக்கு சுகாதாரம் பராமரிக்கப்படுகிறது. 

ஊட்டச்சத்து இலக்கு

அரசின் கூற்று: 2022க்குள் ஊட்டச்சத்துக் குறைவு என்ற குறைபாடு இந்தியாவிலிருந்து நீக்கப்படும். போர்க்களம்: ஊட்டச்சத்துள்ள உணவு பெறும் உரிமை. ஆயுதம்: ஊட்டச்சத்து மிக்க உணவு. விளைவு: கர்ப்பிணித் தாய்மார், குழந்தை பெற்ற இளம் தாய்மார், குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த சரியான உணவு வழங்க ரூ.1,81,000 கோடி நிதி ஒதுக்கீடு.

உண்மை: உலகளாவிய பட்டினி குறியீட்டெண்படி (அக்டோபர் 2021) இந்தியா, மொத்தமுள்ள 116 நாடுகளில் 101ஆம் இடத்தில் இருக்கிறது.

‘தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வறிக்கை 5’ இதைவிட மோசமான தகவல்களைத் தெரிவிக்கிறது. 15 முதல் 49 வயது வரையுள்ள பெண்களில் 57% ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 முதல் 23 மாதங்கள் வரையிலான இளம் குழந்தைகளில் 11.3% குழந்தைகள் மட்டுமே போதுமான அளவு உணவு உண்கின்றனர். வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற எடையில்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 32.1%. ஊட்டச்சத்துக் குறைவு, நோய்த் தொற்று ஆகியவற்றுடன் வளர்ச்சிக்கான குடும்ப சூழல் இல்லாத குழந்தைகள் எண்ணிக்கை 35.5%, உடல் இளைத்த குழந்தைகள் 19.5%, மிகவும் மெலிந்த உடல் கொண்ட குழந்தைகள் 7.7% என்ற புள்ளிவிவரங்கள் அரசு பெருமைப்படும் வகையில் சாதிக்கப்படாமல், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இவை உள்ளதையே காட்டுகிறது. 

இந்த சாதனைப் புத்தகங்களில் கூறியுள்ள சில அம்சங்கள் உண்மையாகவும், மிகச்சில உண்மைக்கு நெருக்கமாகவும்கூட இருக்கின்றன, அவற்றில் மிகைப்படுத்தலும் உண்டு. ஆனால், பெரும்பாலானவை வெறும் பீற்றல்தான். எல்லா அரசுகளுமே தங்களுடைய சாதனைகள் குறித்து இப்படி தம்பட்டம் அடித்துக்கொள்வதுண்டு. ஆனால், இந்த அரசு அதிலும் எல்லை மீறிப் போகிறது. எந்த திட்டத்திலும் எந்தக் குறையும் இல்லை என்று பிடிவாதமாக ஏற்க மறுக்கிறது. ஹாரி ட்ரூமேன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, “எதையும் நம்புங்கள், ஆனால் சரிபாருங்கள்!”

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மக்களின் மனவெளிசரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்புதுணை தேசியம்கோர்பசெவ்ஐடி துறைஆல்கஹால்மோடிகல்விச்சூழல்பாண்டியன்: ஒடிஷா அணைக்கும் தமிழ் மருமகன்மாற்றங்கள் செய்வது எப்படி?தென்னாப்பிரிக்கஅடையாள அரசியல்இடஒதுக்கீடுஅரசமைப்புச் சட்டப் பேரவைஅபிஷேக் பானர்ஜிதவில் கலைஞர்ஈரோடு இடைத்தேர்தல்மஞ்சள் நிற தலைப்பாகைகாந்தி செய்த மாயம் என்ன?என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா துயரம்ஊடகம்சின்னம்மாதினமலர்கல்யாணச் சாப்பாடுஎடப்பாடி பழனிசாமிமொழிவழித் தேசியம்பாண்டியன்தஞ்சாவூர் பெரிய கோயில்ஏவுதளம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!