கட்டுரை, பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

பட்ஜெட்: எண்களில் ஒரு மாய்மாலம்

ப.சிதம்பரம்
14 Feb 2022, 5:01 am
0

பிரதமர் மோடியும் அவருடைய மனக் குறிப்பை அறிந்த அவருடைய நிதியமைச்சரும் தனியார் துறை மீது அதிக நம்பிக்கை வைத்து ஆதரித்தது ஒருகாலம். வேளாண்மை - சேவைத் துறை மட்டுமல்ல – தொழில் துறையின் பெரும் பகுதியிலும் மோடி விரும்பிய வளர்ச்சி மாதிரிகள் தனியார் துறையையே மையமாகக் கொண்டவை. அரசு இத்துறைகளிலிருந்து ஒதுங்கிக்கொண்டு, நெறிப்படுத்தும் வேலையை - அதுவும் தேவை என்று கருதும்போது - மட்டுமே செய்தால் போதும் என்று தீர்மானித்திருந்தனர்.

பணமதிப்புநீக்க நடவடிக்கைக்குப் பிறகு தன்னுடைய இந்தச் சிந்தனையை மோடி மாற்றிக்கொண்டுவிட்டார்.  தனியார் துறை மீது அவர் வைத்த நம்பிக்கை கரைந்துவிடவே, அரசை முன்னிலைப்படுத்தும் வளர்ச்சிக்கு ஆதரவாளராக மாறிவிட்டார். இப்போது தாக்கல்செய்யப்பட்டுள்ள 2022-23 நிதிநிலை அறிக்கை அதை முழுமையாக வெளிப்படுத்துகிறது. இந்த நிதிநிலை அறிக்கை முழுக்க முழுக்க ஒரே இயந்திரத்தையே நம்பியிருக்கிறது – அது அரசு மூலம், மூலதனச் செலவுகளை அதிகப்படுத்தி பொருளாதார வளர்ச்சியைக் காண்பது ஆகும். ஆனால் இந்த நோக்கமும் நிறைவேற முடியாதபடிக்கு எங்கோ உதைக்கிறது – ஆம், எங்கே என்றால் அறிக்கையில் இடம்பெற்றுள்ள எண்களில்!

திசை மாறுகிறது

நிதியமைச்சர் கூறினார், 2021-22 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அளவைவிட மூலதனச் செலவுகள் அதிகமாகவே உள்ளன என்று. பட்ஜெட் மதிப்பீட்டின்படி மூலதனச் செலவு ரூ.5,54,236 கோடி. திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுபடி அதுவே ரூ.6,02,711 கோடி. இதில் ஏற்பட்ட வியப்பு, நிதிநிலை அறிக்கையை முழுதாகப் படித்த பிறகு கசப்பாகவே மாறிவிட்டது. அரசுத் துறையிலிருந்து டாடாவுக்கு விற்கப்பட்ட ஏர்-இந்தியா விமான நிறுவனம் பட்ட கடனையும் செலுத்த வேண்டிய நிலுவைகளையும் அடைப்பதற்காக அரசு ஒதுக்கியுள்ள ரூ.51,971 கோடியும் இந்தத் தொகையில் அடக்கம்; கடனை அடைப்பதற்கான தொகை எப்படி மூலதனச் செலவாக முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தத் தொகையைக் கழித்துவிட்டால், மூலதனச் செலவு 2021-22-ல் ரூ.5,50,840 கோடி – பட்ஜெட்டில் மதிப்பிட்டதைவிடக் குறைவு!

இது வியப்பைத் தரவில்லை. மூலதனக் கணக்கில் செலவிடுவதற்கான அரசின் ஆற்றல் பல அம்சங்களைப் பொருத்தது: அரசின் பல்வேறு நிலைகளில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், அதிகமான கோப்புகளை மேலும் கீழும் அனுப்பும் வேலைகள், பொறுப்பேற்கும் அம்சத்தைப் பலருக்கும் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல் என்று பலவற்றைப் பொருத்தது அது. அரசின் நிர்வாக இயந்திரச் சக்கரங்களை முடுக்க விரும்புகிறார் பிரதமர் என்பதாலேயே இந்தப் படிநிலைகளும், நிர்வாக அமைப்பு முறையும் மறைந்துவிடாது.

விரும்பத்தகாத பல ஆச்சரியங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் எண்களாக விரவிக் கிடக்கின்றன. மாநில அரசுகள் மூலதனச் செலவுகளை மேற்கொள்வதாக இருந்தால், வட்டியில்லாமல் கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கிக்கொள்ள அனுமதிப்பதாக நிதியமைச்சர் மிகவும் தாராளமாக அறிவித்தார். அது என்ன என்று விரைவிலேயே புரிந்துவிட்டது. நிதிச் சந்தையில் மாநில அரசுகள் கடன் வாங்கிக்கொள்ளலாம், ஒன்றிய அரசு அந்த வட்டிச் செலவை மட்டும் ஏற்றுக்கொள்ளும். இதில் கசப்பான ஆச்சரியம் என்னவென்றால், மாநில அரசுகள் வாங்க அனுமதித்த கடன் தொகையையும் 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டின் மொத்த மூலதனச் செலவு ரூ.7,50,246 கோடியில் சேர்த்துவிட்டார்; அது மட்டுமல்ல; இதைச் செய்துவிட்டு, கடந்த ஆண்டைவிட மூலதனச் செலவை 35% அதிகரித்திருப்பதாக நிதியமைச்சர் கூறிக்கொள்வதுதான் மேலும் வியப்பு.

கண்கட்டு வித்தைபோல இது மிகவும் மோசடியானது. இந்த ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கழித்துவிட்டால் 2022-23 நிதிநிலை அறிக்கையில் பட்ஜெட் மதிப்பீட்டுத் தொகை ரூ.6,50,246 கோடி, 2021-22 நிதிநிலை அறிக்கையின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட வெறும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மட்டுமே அதிகம்.

நம்பிக்கை இழப்பு

அரசின் மூலதனச் செலவை அதிகப்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திருப்பதாக மோடி அரசு கூறிக்கொள்வது மிகையானது. மேலும் முதலீடுசெய்ய வேண்டும் என்ற விருப்பம் தனியார் துறைக்கு இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை இந்த அரசிடம் இல்லை. அரசுத் துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்க வேண்டும் என்ற அரசின் திட்டத்துக்கும் ஆதரவு கிடைக்காமல் அது குலைந்துவிட்டது. பிபிசிஎல், சிசிஎல், எஸ்சிஐ ஆகிய அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றுவிட மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே முடிவுசெய்தது. அத்துடன் அரசுத் துறை நிறுவன வங்கிகள் இரண்டையும், ஒரு அரசுத் துறை காப்பீட்டு நிறுவனத்தையும்கூட தனியாருக்கு விற்க ஆர்வம் காட்டியது.

இவை போக, அரசுத் துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துகளைக் குத்தகை அடிப்படையில் சில காலத்துக்கு தனியாரின் பயன்பாட்டுக்குத் தந்து ரூ.6 லட்சம் கோடி ஈட்டும் மிகப் பெரிய விருப்ப திட்டத்தையும்கூட நிதியமைச்சர் கடந்த ஆண்டு அறிவித்தார். இவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியவில்லை.

ரயில்வே துறையானது, ‘109 வழித்தடங்களில் 151 பயணிகள் ரயில் சேவையைக் கைமாற்றிக் கொடுக்க, ஏலம் கேட்க வரலாம்’ என்று தனியாருக்கு அறிவித்தது. ஒருவர்கூட ஏலம் கேட்க வரவில்லை. அரசுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் முதலீட்டுக்கு ரூ.1,75,000 கோடியைத் திரட்ட 2021-22 பட்ஜெட்டில் அறிவித்த திருத்த மதிப்பீட்டுக்கு எதிராக இப்போது ரூ.78,000 கோடியை மட்டுமே – அதுவும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவு திட்டமிட்டபடி 2022 மார்ச்சுக்கு முன்னதாக வெற்றிகரமாக நடந்தால் – சாத்தியம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

தொழில் வளர்ச்சியில் முதலீடுசெய்யாமல் தனியார் துறை ஏன் ஒதுங்குகிறது என்பதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம், சந்தையில் நுகர்வோரிடமிருந்து கேட்பு (தேவை) கிடையாது. பல துறைகளில் உற்பத்திசெய்யக்கூடிய கொள்ளளவில் பாதியை மட்டும்தான் நிறுவனங்கள் இப்போது பயன்படுத்துகின்றன. அந்தப் பாதியில் உற்பத்தியாவதை விற்பதற்கே அதிகம் பாடுபட வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் உற்பத்தியளவை மேலும் அதிகப்படுத்த யார் முன்வருவார்கள்? தொழில்-வியாபாரம் செய்வதற்கான சூழல் இந்த ஆட்சியில் மேலும் மேலும் கடினமாகிக் கொண்டே வருகிறது. அரசுக்கு ஆதரவான தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுகிறது. எல்லாத் தொழில் நிறுவனங்களுமே அரசின் செயல்களாலும் கொள்கைகளாலும் குழப்பமும் அச்சமும் அடைந்துள்ளன.

ஆலோசனைகள் புறக்கணிப்பு

மந்தமான பொருளாதார வளர்ச்சி நிலையிலிருந்தும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதிலிருந்தும் பொருளாதாரத்தை மீட்க பல பொருளாதார அறிஞர்கள் பின்வரும் அணுகுமுறைகளை அரசுக்கு ஆலோசனைகளாகத் தெரிவித்துவிட்டனர்:

ஏழைகள், நடுத்தர மக்களின் கைகளில், வாங்கும் சக்தியை அதிகப்படுத்தும் வகையில் நேரடியாகப் பணத்தை அளியுங்கள், அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைப் போடுங்கள், மறைமுக வரியைக் குறையுங்கள்.

மூடப்பட்ட குறு-சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்கச் செய்யுங்கள் அல்லது உற்பத்தியைக் குறைத்துவிட்ட நிறுவனங்களை முழு அளவுக்கு உற்பத்திசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். அதனால் இழக்கப்பட்ட கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் மீண்டும் ஏற்படும்.

சமூகநலத் திட்டங்களுக்கு மேலும் நிதியை ஒதுக்கிச் செலவிடுங்கள். செலவுக்கு அரசிடம் பணம் இல்லை என்ற பல்லவி இனி எடுபடாது. நாட்டு மக்களில் வெறும் 10% பேர் தேசிய வருமானத்தில் 57%-ஐப் பெறுகின்றனர், தேசிய செல்வத்தில் 77%-ஐ வைத்துள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க கோடீஸ்வரர்களைப் போல முன்வந்து, எங்கள் மீது வரி விதியுங்கள் என்று அவர்களும் கேட்க வேண்டும்.

மீண்டும் உயிர் பெற்றுவிட்ட ‘லைசென்ஸ் ராஜ்’ கட்டுப்பாடுகளை மறு ஆய்வு செய்யுங்கள். தடையின்றி தொழில், வர்த்தகம் செய்ய அனுமதியுங்கள். இந்திய ரிசர்வ் வங்கி, செபி, வருமான வரித்துறை ஆகியவற்றின் கட்டளைகளால் ஏற்படும் அலைக்கழிப்புகளையும் குறுக்கீடுகளையும் தடுத்து நிறுத்துங்கள்.

மத்தியப் புலனாய்வுக் கழகம், அமலாக்கத் துறை இயக்குநரகம், வருமான வரித் துறை, எஸ்எப்ஐஓ (தீவிர மோசடி விசாரணை அலுவலகம்) ஆகியவை தொழில் நிறுவனங்களிலும் வங்கி நடவடிக்கைகளிலும் தலையிடுவதை குறைக்கச் செய்யுங்கள்.

பொருள் பொதிந்த, ஆக்கப்பூர்வமான இந்த அறிவுரைகளையெல்லாம் இந்த அரசு கேட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பொருளாதார அறிஞர்களை இன்னமும் புதிரில் ஆழ்த்திவரும் ஒரு விஷயத்துக்கு நிதியமைச்சர் விளக்கம் தருவாரா என்று கேட்க விழைகிறேன். 2022-23-ல் எண்களின்படி மொத்த உற்பத்தி மதிப்பு 11.1% ஆகவும் (பட்ஜெட் அப்படிக் கூறுகிறது), உண்மை மதிப்பில் ஜிடிபி வளர்ச்சி 8% ஆகவும் (புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆரூடப்படி) இருக்கப்போகிறது. இந்தச் சூழலில் பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) 3% ஆகவும் கட்டுக்குள் வந்துவிட்டால் பொருளாதார சொர்க்கம் நிச்சயம்! நிஜம்தானா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி







அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பவன் கேராதாமஸ் ஃப்ரீட்மன் கட்டுரைவியூக அறிக்கைவிதைசமூக அமைப்புகவிஞர்தி டான் ஆஃப் எவரிதிங்க்கேஸ்ட்ரொனொம்பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அருஞ்சொல்சாகித்ய அகாடமி விருதுஅக்கறையுள்ள கேள்விகள்அகில இந்திய ஒதுக்கீடுயுசிசிபொதுவான சித்திரம்இந்து - இந்திய தேசியம்அரசு கட்டிடங்களின் தரம்சங்கீதம்தேசிய கீதம்ராஜாஜியின் கட்டுரைmalcolm adiseshiahவி.கிருஷ்ணமூர்த்திசிறப்புச் சட்டம் இயற்றப்படுமா?முன்பதிவுபிரெக்ஸிட்தமிழ் வணக்கம்லேம்டா: ஆபத்தா? அடுத்தகட்டப் பாய்ச்சலா?இந்தி எதிர்ப்புப் போராட்டம்சிந்தனை உரிமையின் மேல் தாக்குதல் கூடாதுதனிநபர் வருவாய்மார்க்ஸிஸ்ட் கட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!