கட்டுரை, அரசியல் 5 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியாவின் கதை; டாடாவின் கதையும்கூட!

வ.ரங்காசாரி
08 Oct 2021, 5:00 am
3

இது உலக ஆச்சரியம்தான்! ஒரு நாட்டின் அரசு நாட்டுடைமையாக்கின அதே நிறுவனத்தை மீண்டும் அதன் முந்தைய தாய் நிறுவனத்திடமே அரை நூற்றாண்டு காலம் கழித்து, அரசு மீண்டும் விற்கும் கதை. 1932-ல் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் டாடா உருவாக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை 1953-ல் தன் வசப்படுத்திய இந்திய அரசு மீண்டும் டாடா நிறுவனத்திடமே 2021-ல் அதை விற்கிறது. இரு தரப்புகளுக்குமே இது நல்ல ஒரு முடிவு என்றாலும்கூட, இரு தரப்புகளுக்குமே இதில் நிறைய சவால்களும் இருக்கின்றன.

ஏர் இந்தியா வரலாறு

தனியார் நிறுவனத்திடம் விமான சேவை இருப்பது சரியாக இருக்காது; நாட்டின் சொத்தாக அது இருக்க வேண்டும் என்று ‘ஏர் இந்தியா’வை நேரு காலத்தில் வாங்கிய அரசு, ‘ஏர் இந்தியா’ போன்ற நிறுவனங்களை எல்லாம் வெற்றிகரமாக நிர்வகித்து நடத்த முடியாது என்று மோடி காலத்தில் விற்கிறது. இரண்டு முடிவுகளுக்கும் இடையே ஒரு பெரிய வரலாறு இருக்கிறது.

ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (சுருக்கமாக ஜேஆர்டி டாடா) பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் துணிச்சலுடன் தொடங்கியது ‘டாடா ஏர்சர்வீஸ்’ விமான நிறுவனம். இந்தியாவில் விமானம் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்தியர் அவர்தான். 1932-ல் முதல் விமானப் பயணத்தை 25 கிலோ எடையுள்ள தபால் பையுடன் அவரது விமான நிறுவனம் கராச்சியிலிருந்து மும்பைக்குத் தன் சேவையைத் தொடங்கியது. கராச்சியிலிருந்து ஆமதாபாத் - மும்பை வழியாக சென்னைக்கு அஞ்சல் பைகளை எடுத்து வரும் பணியையே அது நீண்ட நாட்கள் செய்துவந்தது. படிப்படியாகத் தன்னுடைய சேவைகளை விஸ்தரித்த அது, அடுத்து தன்னுடைய பெயரை ‘டாடா ஏர்லைன்ஸ்’ என்று மாற்றிக்கொண்டது. உலகப் போர் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவும் சில காரியங்களையும் டாடாவின் விமானங்கள் செய்தன. போருக்குப் பின் அதன் விமான சேவைகள் மேலும் விரிந்தன. 1946-ல் ‘ஏர் இந்தியா’ எனும் பெயரை அது சூடிக்கொண்டது.

டாடாவின் செல்லம்

பொதுவாகவே, டாடா நிறுவனம் தரமான சேவைகளுக்குப் பேர் போனது. ‘ஏர் இந்தியா’ ஜேஆர்டி டாடாவின் விருப்பத்துக்குரிய நிறுவனமாக வேறு இருந்ததால், பயணிகளுக்கு மேம்பட்ட சேவையை அது உத்தரவாதப்படுத்தியது.

ஜேஆர்டி டாடாவுக்கு நேரந்தவறாமை முக்கியம். போகப் போக சரி செய்துகொள்ளலாம் என்கிற சிந்தனைக்கே இடம் தர மாட்டார் அவர். ‘மலபார் பிரின்ஸஸ்’ என்று பெயரிடப்பட்ட முதல் சர்வதேச விமான சேவையை 1948 ஜூன் 10-ல் ‘ஏர் இந்தியா’ தொடங்கியது. பம்பாயிலிருந்து கெய்ரோ, ஜெனீவா வழியாக லண்டனை விமானம் வந்தடைந்தவுடன், விமான நிலையத்துக்கு வந்திருந்த இந்திய தூதர் வி.கே.கிருஷ்ண மேனனுக்குத் தன்னுடைய கைக் கடிகாரத்தில் மணியைக் காட்டினார் டாடா. விமானம் வந்து சேர வேண்டிய நேரத்துக்கும் ஒரு நிமிஷம் முன்னதாகவே லண்டனை வந்தடைந்திருந்தது என்ற பெருமிதம் அவர் முகத்தில் ஒளிர்ந்தது. டாடா எப்படி ‘ஏர் இந்தியா’வை நிர்வகித்தார் என்பதற்கு ஓர் உதாரணமாகவே இதைக் கூறுவார்கள்.

இன்றைக்கு அல்ல; 1948-ல் சர்வதேச விமான சேவையை டாடா தொடங்கிய காலத்திலும் விமானத் துறையில் கடும் போட்டி நிலவவே செய்தது. ‘கேஎல்எம்’, ‘ஏர் பிரான்ஸ்’, ‘இம்பீரியல் ஏர்வேஸ்’ ஆகிய உலகளாவிய நிறுவனங்கள் எல்லாம் அன்றைக்குப் பெரிய ஜாம்பவான்கள். இந்தியாவிலோ பெரும்பாலான நகரங்களில் நேரடி பஸ் போக்குவரத்தே அன்றைக்கு முழுமையாக இல்லை. அப்படிப்பட்ட காலத்தில்தான் வெற்றிகரமாக விமானப் போக்குவரத்தை நடத்திக்காட்டினார் டாடா.

பரிசோதனை முயற்சிகள்

புதிய நிறுவனத்துக்கு அந்தக் காலத்தில் எல்லோரும் உலகப் போரில் குண்டு வீச்சு விமானங்களாகப் பயன்பட்டவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கி இருக்கைகளைப் பொருத்தி, சில மாறுதல்களை மட்டும் செய்து ஓட்டும் போக்கு இருந்தது. டாடா புதிய விமானங்களை வாங்கினார். டாடாவின் விமானங்கள் வெளியே புதிதாக ஜொலித்தாலும், உள்ளே இந்திய பாரம்பரியத்தன்மையைப் பிரத்யேகமாக அளிக்க வேண்டும் என்று விரும்பினார். விமானத்துக்குள் உள்ள சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட இந்திய வண்ணத்தைச் சேர்த்தார். விமானங்களிலும், அலுவலகங்களிலும் இந்தியாவைப் பிரதிபலிக்கும் அற்புதமான புகைப்படங்கள் அலங்கரித்தன. ‘ஏர் இந்தியா’ விமானங்களில் பணிப் பெண்கள் இந்திய பாணியில் சேலை கட்டி வந்தனர். விமானத்தில் அளிக்கப்பட்ட ருசியான உணவுக்காகவே பலர் டாடா விமானங்களைத் தேர்ந்தெடுத்தனர்.

பொதுவுடைமைக் கனவு

இந்தியா சுதந்திரம் அடைந்த மறு ஆண்டில் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் 49% பங்குகளை வாங்கியது அரசு. 1953-ல் பெரும்பான்மைப் பங்குகள் வாங்கப்பட்டு நிறுவனம் அரசுடைமை ஆக்கப்பட்டது. டாடா மிகுந்த வருத்தத்துடனேயே நிறுவனத்தைக் கையளித்தார். பிரதமர் நேரு அவருடைய நண்பர். அவருடைய பொதுவுடைமைக் கனவை டாடா உணர்ந்திருந்தார். தான் முதுகில் குத்தப்பட்டதாகப் பின்னாளில் குறிப்பிட்டாலும்கூட, அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஜேஆர்டி டாடாவே ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைவராகத் தொடர்ந்து வழிநடத்தினார்.

பெரிய கனவுகளோடு நிறுவனங்களை நடத்த இந்திய அரசு முற்பட்டாலும், மிக மோசமாகவே அது நிர்வகித்தது. இந்திய அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமும் சேர்ந்து சீரழித்த நிறுவனங்களில் ஒன்றானது ‘ஏர் இந்தியா’.

அரசியலர்களின் விருப்பு - வெறுப்புகளுக்கேற்ப புதிய தடங்களில் விமானங்களை இயக்குவது, பழைய தடங்களில் சேவையைத் தனியாருக்கு ஜாடையாக விட்டுக்கொடுப்பது, ஊதாரித்தனமான நிர்வாகம், ஊழல், தில்லுமுல்லு, அலட்சியம், தரகு வேட்கை என்று எல்லாப் பிரச்சினைகளும் சூழ்ந்து வீணாகிப்போனது ‘ஏர் இந்தியா’ விமான சேவை.

உள்நாட்டுக்கு ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’, வெளிநாடுகளுக்கு ‘ஏர் இந்தியா’ என்று இரு நிறுவனங்களாக நடத்தப்பட்ட விமான சேவை, இரு நிறுவனங்களும் ஒன்றாகப்பட்டு நடத்தப்பட்ட விமான சேவை, பங்குகளையும் சில சேவைகளையும் தனியாரோடு பகிர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தம்... இப்படி எதுவும் இந்திய அரசு ஒரு விமான நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தும் ஆசைக்கு இடம் கொடுக்கவில்லை.

சுமக்க முடியாத சுமை

கரோனா காலகட்டத்தில் விமான சேவை நிறுவனங்கள் உலகம் முழுவதும் பெரும் தாக்குதலுக்கு உள்ளானபோது, ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருந்த ‘ஏர் இந்தியா’ மேலும் அல்லாடியது. இப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். முக்கியமாக ஊழியர்களை எப்படி நிர்வகிப்பது என்றே அதற்குத் தெரியவில்லை. 16,000 ஊழியர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஊதிய நிலுவை இருக்கிறது. விமானம் ஓடுகிறதோ, இல்லையோ பராமரிப்பு மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. விமானங்களை நிறுத்தும் இடங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆக வரவு இல்லாவிட்டாலும் செலவு நிரந்தரமாகிவிட்டது.

மோடி அரசு நீண்ட காலமாகவே ‘ஏர் இந்தியா’வை விற்கும் முடிவில் இருந்தது. ஏராளமான கடன்கள் ‘ஏர் இந்தியா’வைச் சூழ்ந்திருந்தாலும், ஏராளமான சொத்துகளும் அதற்கு இருக்கின்றன; நல்ல நிர்வாகி கையில் எடுத்தால், அதை நிர்வகிக்க முடியும் என்று இந்த விற்பனையைப் பொது நிறுவனங்களின் ஆதரவாளர்கள் எதிர்க்கின்றனர். அது ஒருபுறம் உண்மைதான் என்றாலும், மறுபுறம் ‘ஏர் இந்தியா’வை வாங்கும் போட்டியும் அப்படி ஒன்றும் சூடு பிடிக்கவில்லை. பல நிறுவனங்களும் தயங்கின. இத்தகு சூழலில்தான் டாடா குழுமம் அதை மீண்டும் வாங்கவிருக்கிறது.

எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்

எந்த நம்பிக்கையில் ‘ஏர் இந்தியா’வை டாடா வாங்குகிறது என்ற பேச்சும்கூட துறைக்குள்ளேயே இருக்கிறது. விமானங்களை இயக்க மட்டும் ரூ.24,000 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ‘ஏர் இந்தியா’ - ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனங்களுக்குக் கடன் சுமையே ரூ.40,000 கோடிக்கு மேல் இருக்கிறது.  கோடிக்கணக்கான ரூபாய் கடனில் மூழ்கிவிட்ட நிறுவனம், பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கட்டாயம் மாதாமாதம் ஊதியம் வழங்கியாக வேண்டிய நிறுவனம், பெருந்தொற்றால் சேவை முழுதாக மேற்கொள்ளப்பட இன்னும் ஓராண்டுகூட பிடிக்கலாம் என்ற சூழல், எரிபொருள் விலை தொடர்ந்து உயர்வு, பராமரிப்பு - இயக்கச் செலவுகளும் ஏறுமுகம், சேவை தொடங்கினாலும் பிற நிறுவனங்களின் கடும் போட்டியைச் சமாளித்தாக வேண்டிய நிலை என்ற பிரச்சினைகள் அணிவகுத்து காத்துக்கொண்டிருக்கின்றன. 

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நிறுவனத்துக்கென்றே பல பலங்களும் உள்ளார்ந்து காணப்படுகின்றன. உள்நாட்டில் 4,400 சேவைகளையும் வெளிநாடுகளில் 1,800 சேவைகளையும் இப்போதும் அளித்துக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம். வெளிநாடுகளில் 900 விமானங்களைத் தரையிறக்கவும் விமான நிலையங்களில் நிறுத்திக்கொள்ளவும் ஏற்கெனவே உரிமம் பெற்றிருக்கிறது.

டாடா மீதான நம்பிக்கை

விமான சேவையில் டாடா நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டுவருவதால், ‘ஏர் இந்தியா’வை அது நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. அத்துடன் அதற்கு உதவி செய்ய ஏராளமான துணை நிறுவனங்கள் டாடா குழுமத்திலேயே இருக்கின்றன. ‘ஏர் இந்தியா’, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ ஆகிய அரசு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கினால், அது ஏற்கெனவே கையாளும் ‘விஸ்தாரா’, ‘ஏர் ஏஷியா’ ஆகிய இரண்டு நிறுவனங்களையும் புதிய நிறுவனங்களுடன் இணைத்து, பெரிய நிறுவனம் ஆக மாறும். உள்நாட்டு, வெளிநாட்டு சேவையில் தனியிடத்தை அது பெற முடியும். டாடா நிறுவனத்தின் பழைய வாடிக்கையாளர்கள் முழு நம்பிக்கையுடன் நிறுவனத்தையே உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தேர்வுசெய்வார்கள். ஆக, மீண்டும் பழைய பொலிவுடன் ‘ஏர் இந்தியா’ வலம் வரும் என்றும் இத்துறையிலுள்ள பலர் பேசுகிறார்கள்.

நம்பிக்கைகள் பலித்து ‘ஏர் இந்தியா’ வெற்றிகரமான நிறுவனமாக மீண்டும் பறக்க ஆரம்பித்தால், எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனாலும்கூட ஒரு விஷயத்தை மட்டும் ‘ஏர் இந்தியா’ எப்போதும் சுட்டிக்காட்டியபடி இருக்கும், ஒரு பொதுத் துறை நிறுவனமாக அது ஏன் தோற்றது என்கிற வரலாறுதான் அது!

அரசுத் துறை நிறுவனங்களை வெறும் பொருளாதார லாப - நஷ்ட கணக்குகள் வழியாக மட்டுமே நாம் மதிப்பிட்டிட முடியாது. எவ்வளவோ சங்கடமான தருணங்களில் பெரும் சேவையை ஆற்றியிருக்கிறது ‘ஏர் இந்தியா’. குவைத் மீது இராக் படையெடுத்தபோது, சதாம் உசேன் அறிவித்த குறுகிய காலகட்டத்துக்குள் பல்லாயிரம் இந்தியர்களை மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து தாயகத்துக்குக் கூட்டிவர வேண்டியிருந்தது. ‘ஏர் இந்தியா’ அதைச் சாதித்தது. கரோனா காலகட்டத்தில் மீண்டும் இதேபோல நடந்தது. ஒரு நாட்டின் அரசு சொந்தமாக நிறுவனங்களை நடத்தும்போது இக்கட்டான தருணங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். அப்படியெல்லாம் எண்ணித்தான் ‘ஏர் இந்தியா’வை நாட்டுடைமையாக்கினார் நேரு. 

எவ்வளவு பெரிய கனவுடன் வாங்கப்பட்ட ஒரு நிறுவனம்; இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் அரசுக்கு இனி சொந்தமாக ஒரு விமான நிறுவனம் இருக்கப்போவதில்லை. ஆம், இந்திய அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் மோசமான இன்னொரு முகத்தை ‘ஏர் இந்தியா’ நினைவூட்டிக்கொண்டே பறக்கும். 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


1






பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

இதில் ஒரு முக்கியமான உண்மை கூறப்படவில்லை. அதாவது Indian airlinesஐயும் Air indiaவையும் இணைக்கும் முன் Air India கணிசமான இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுதும் இரண்டாக பிரித்து உள்நாட்டு சேவைகளை மற்றும் விற்கவோ அல்லது மூடவோ செய்திருக்கலாம். தனியார் பிரியர் பாசகவுக்கு இதை செய்ய விருப்பமில்லை.

Reply 0 0

Ganeshram Palanisamy   2 years ago

மற்றும் தவறு. மட்டும் சரி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   3 years ago

கட்டுரையில் வரும் பல கருத்தாடல்கள் நெருடலை தருகிறது.1953 ல் வாங்கியதிலிருந்து 25 வருடங்கள் டாடா அதன் நிறுவன் தலைவர் என்பதில் தொடங்கி பொதுநிறுவனங்கள் ஏன் தோற்றன என்ற கேள்வி வரை நிறைய இடங்களில் முரண்படுகிறது. பொதுத்துறை என்பது மக்களின் பணத்தில் உருவாக்கப்படும் துறை.. ஊர் கூடி தேரிழுக்கும் முறை... பொதுத்துறையை உருவாக்கம் கட்டமைப்பு என கருதினால் இன்றைய தனியார்மயம் கணக்கில் காட்டப்படாத care fund யை போன்றதாகும்..

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

டாடா ஏர் இந்தியாsamas oh channel interviewதென் இந்தியர் கடமை500 மெகாவாட்ஃபாலி சாம் நாரிமன்இந்தியா டுடேசிஏஏமொழிப் போராளிகள்கருத்துச் சுதந்திரம்அமெரிக்கப் பயணம்மருத்துவக் கல்லூரிகுஜராத் கலவரம்குறைந்த பட்ச விலைசிதம்பரம் அருஞ்சொல் கட்டுரைசிலிக்கா சிப்ஹரியானாகோட்டையிலேயே ஓட்டைஅருஞ்சொல் ஸ்ரீதர் சுப்ரமணியம்இந்திய விடுதலைவசந்திதேவிமத்திய நல்வாழ்வுத் துறையின் செயலர்நிலுவைத் தொகைதெலங்கானா முதல்வர் புதிய காலங்கள்இயக்கக் கோட்பாடுகார்பன் அணுக்கள்98வது தலைவர்அருஞ்சொல்‘சூலக நீர்க்கட்டிதார்மீகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!