கட்டுரை, அரசியல், சர்வதேசம் 20 நிமிட வாசிப்பு

கோர்பசெவ் ஆண்டுகள்

பி.ஏ.கிருஷ்ணன்
06 Sep 2022, 5:00 am
5

நான் 2013இல் மாஸ்கோ சென்றிருந்தபோது எனக்கு வழிகாட்டியாக இருந்தவரின் கூரிய அறிவு என்னை வியக்க வைத்தது. ரஷ்ய வரலாற்றை மிகத் தெளிவாக அவர் விளக்கிய விதம் அவரை நான் அதுவரை சந்தித்திருந்த மற்றைய வழிகாட்டிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. பின்னால்தான் தெரியவந்தது அவர் மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழிற்நுட்பக் கழகத்தில் (நம் ஐஐடி போன்றது) முனைவர் பட்டம் பெற்றவர் என்று. நிலைமைக்கு கோர்பசெவ்தான் காரணம் என்று அவரே சொன்னார். நான் சந்தித்த யாரும் கோர்பசெவைப் பற்றி ஒரு வார்த்தைகூட நல்லதாகச் சொல்லவில்லை. மாறாக ஸ்டாலின் மீது மக்களுக்கு இருந்த மதிப்பு அசாதாரணமாக இருந்தது – அவர் இறந்து அறுபது ஆண்டுகள் ஆன பின்பும்.

ஜோசஃப் ஸ்டாலின் 5 மார்ச் 1953ஆம் ஆண்டு இறந்தார். உலகத் தலைவர்கள் அனைவரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது முக்கியம் அல்ல. சோவியத் ஒன்றியத்தின் மக்கள் அவரது இழப்பை தங்கள் சொந்த இழப்பாகக் கருதினார்கள் என்பதுதான் முக்கியம். ஸ்டாலின் இறுதி ஊர்வலத்தில் சாதாரண மக்கள் பெருமளவு பங்கு பெற்றதையும் நாடு முழுவதும் துயரத்தில் ஆழ்ந்ததையும் பல மேற்கத்திய பத்திரிகைகள் பதிவுசெய்திருக்கின்றன. இன்றும் ரஷ்யாவில் மக்களால் மிகவும் மதிக்கப்படும் தலைவராக அவர் இருக்கிறார்.

கோர்பசெவ் 2022, 30 ஆகஸ்ட் அன்று இறந்தார். மேற்கத்திய ஊடகங்கள் அவருக்கு தினமும் புகழ்மாலை சூடிக்கொண்டிருக்கின்றன. அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. மேற்கத்திய ஏகாதிபத்தியம் உலகில் தங்கு தடையின்றி சாமியாட்டம் ஆட கோர்பசெவ் வகை செய்தார் என்று அவை சிறிது நன்றியோடு நினைத்துக்கொள்கின்றன. இன்று ரஷ்யத் தலைவர் புதின் மீது மேற்கத்திய நாடுகள் கொண்டிருக்கும் கோபத்தின் காரணமே எங்கள் நாட்டிற்கு அருகே வந்து ஆடாதே என்று அவர் சொன்னதால்தான்!

வார்சா ஒப்பந்த நாடுகளிலும் வன்முறையே இல்லாமல் ரஷ்ய அரவணைப்பிலிருந்து விலக அனுமதித்தற்காக கோர்பசெவை அந்நாடுகளின் மக்கள் நன்றியோடு நினைத்துக்கொள்கிறார்கள். மாறாக, ரஷ்ய மக்கள் அவருடைய மறைவைக் குறித்து அதிகம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மாஸ்கோவில் நூற்றுக்கணக்கானவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியதாக பிபிஸி சொல்கிறது. பெரும்பாலான ரஷ்ய மக்கள் தங்கள் நாடு 26 டிசம்பர் 1991 அன்று உடைந்ததற்கு, சீரழிந்ததற்குக் காரணம் அவர்தான் என்று நினைக்கிறார்கள். இது உண்மையா?

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கோர்பசெவ்தான் உடைத்தாரா?

உலகின் மிகப் பெரிய கூட்டமைப்பு பொய்யாய், பழங்கனவாய் மறைந்துபோவதற்கு ஒரு மனிதன் மட்டுமே காரணமாக இருக்க முடியுமா? கோர்பசெவ் வரலாற்றைப் பிடித்து இழுத்து அழிவின் மையத்திற்குக் கொண்டுவந்தாரா? அல்லது வரலாறு அது நடத்திய அழிவு விளையாட்டின் மையத்திற்கு அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்ததா? இக்கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் 1991 கிறிஸ்துமஸுக்கு மறுதினத்தில் நடந்தவை நம் நாட்டையும் சீனத்தையும் எவ்வாறு பாதித்தன என்பதைப் பற்றி ஆராய வேண்டும். அதைச் செய்தால்தான் கோர்பசெவை மையத்தில் வைத்து நடந்த அழிவு உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தை ஓரளவு அளவிட முடியும். 

இந்தியா எவ்வாறு எதிர்கொண்டது?

சோவியத் ஒன்றியம் இந்தியாவிற்குக் கை கொடுக்கும் நண்பனாக எப்போதும் இருந்தது. வெளியுறவு விவகாரங்களில் இந்தியாவிற்கு என்றும் அது உறுதுணையாக இருந்தது. காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்குத் தொடர்ந்து அது ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்தது. இந்திய சோவியத் நட்புறவு உடன்படிக்கை ஏற்படாவிட்டால் வங்கதேச போரை இவ்வளவு எளிதாக இந்தியாவால் வென்றிருக்க முடியாது.

இந்திய - சோவியத் உறவை நான்கு வலுவான தூண்கள் பிடித்து நிறுத்திக்கொண்டிருந்தன. முதலாவது ராணுவ உறவு; இரண்டாவது பொருளாதார உறவு; மூன்றாவது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறவு; நான்காவது கலாச்சார உறவு. இந்திய ராணுவத்தில் டாங்கிகள் தயாரிப்பு முதல் விமானங்கள் தயாரிப்பு வரை சோவியத் / ரஷ்யப் பங்களிப்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. இந்திய நீர்மூழ்கிக் கப்பல் துறையின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் சோவியத் உதவிதான். 1980களில் அணு மின் சக்தியால் இயங்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியாவிற்கு ஒப்பந்த அடிப்படையில் அது அளித்ததை நம்மால் மறக்க முடியாது. சோவியத் ஒன்றியம் இருந்தவரை அதுதான் நம்முடன் வர்த்த உறவில் முதன்மை வகித்தது. ரூபிள் – ரூபாய் வர்த்தகம் நடந்ததால் அன்னியச் செலாவணிப் பிரச்சினைகள் அதிகம் ஏற்படவில்லை. ஈராக் எண்ணெயை நமக்கு டாலர்கள் செலவழிக்காமல் வாங்கிக் கொடுத்ததும் அதுதான். உலோகவியல், சுரங்கம், எண்ணைய் எரிவாயு துறைகளில் நமக்குப் பணவுதவி செய்ததும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்ததும் அந்நாடுதான். அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் சோவியத் நூல்களை மறந்திருக்க மாட்டார்கள். மிகவும் மலிவான விலையில் இலக்கிய, அறிவியல் நூல்கள் கிடைத்தன (Perelman எழுதிய Fun with Physics போன்ற புத்தகங்கள் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள்).

சோவியத் ஒன்றியம் உடைந்ததால் இத்தூண்கள் ஆட்டம் கண்டனவே தவிர உடைந்து போய்விடவில்லை – கலாச்சாரத் தூணைத் தவிர. இன்று ரஷ்யப் புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில்தான் கிடைக்கின்றன. உடைந்ததும் எல்லாமே உடைந்து போய்விட்டன என்ற நலிவு சிலருக்கு - குறிப்பாக கம்யூனிஸத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு – இருப்பது உண்மை. அன்று தொலைந்த வழி இன்றுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பலர் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் கோர்பசெவைத் துரோகியாகக் கருதுகிறார்கள். ஆனால், சோவியத் நாட்டோடு நமக்கு இருந்த உறவு அதன் பெரும் பகுதி ரஷ்யாவாக மாறிய பின்பும் அதிகச் சேதம் ஏற்படாமல் தொடர்ந்து வந்தது என்பதுதான் உண்மை.

இந்தியாவும் நன்றி மறக்கவில்லை. கடுமையான பொருளாதார நெருக்கடியில் ரஷ்யா இருந்தபோது அதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு பில்லியன் டாலர்கள் அளவில் வாங்கிய கடனை தவணை தவறாமல் இந்தியா திரும்பக் கொடுத்துக்கொண்டிருந்தது. ராணுவத் தளவாடங்களையும் அன்றிலிருந்து இன்றுவரை வாங்கிக்கொண்டிருக்கிறது.  கோர்பசெவ் தலைமையில் நடந்த நிகழ்வுகளே இந்தியாவைத் தாராளமயத்தை நோக்கி ஓட வைத்தது, அதனால் நாடு பெருமளவு பயனடைந்தது என்று சொல்பவர்கள்கூட இருக்கிறார்கள்.

சீனா எவ்வாறு எதிர்கொண்டது?

சீனத் தலைவரான டெங்க் ‘கோர்பசெவ் ஒரு முட்டாள்’ என்று சொன்னாராம். கோர்பசெவின் ‘முட்டாள்’தனம் சீனாவிற்கு சாதகமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்றியம் உடைந்ததும் அங்கு நிலவிய குழப்பநிலை முதலீடு செய்வோரை ரஷ்யா பக்கம் வரவிடாமல் தடுத்தது. சீனாவில் இருந்த ஒழுங்கும் அமைதியும் அவர்களை அங்கே செல்ல வைத்தது. மிகக் குறைந்த ஊதியத்திற்கு சீன மக்கள் வேலை செய்யத் தயாராக இருந்தார்கள். ஒருவேளை ரஷ்யாவில் நிலைமை சீரடைந்திருந்தால் சீனாவிற்கு ரஷ்யா போட்டியாக இருந்திருக்கும். ரஷ்யாவின் தொழிலாளர்களின் தொழிற்திறன் சீனத் தொழிலாளர்களுடையதைவிட அதிகமாக இருந்திருக்கும்.

எது எப்படியோ சீனாவிற்கு சோவியத் ஒன்றியத்தின் சிதைவு சாதகமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். மக்களாட்சியின் குழப்பம் தேவை என்ற பெயரில் சோவியத் நாட்டில் உள்ளறுப்பு வேலைகள் செய்த மேற்கத்திய நாடுகள் சீனாவில் மக்களாட்சி என்று பேச்சையே எடுக்கவில்லை.

ரீகன் பயன்படுத்திய ‘கொடிய பேரசு’ (Evil Empire என்ற சொற்றொடர் சோவியத் ஒன்றியத்தைத்தான் குறித்ததே தவிர சீனாவை அல்ல. சோவியத் நாட்டிற்கு, குறிப்பாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிகழ்ந்தது தங்களுக்கும் நிகழக் கூடாது என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உணர வைத்தது அங்கு நடந்த நிகழ்வுகள். ஒருவேளை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மாற்றங்களைக் கொண்டுவருவதில் வெற்றியடைந்திருந்தால் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தன் வழியை மாற்றிக்கொண்டிருக்கலாம்.

கோர்பசெவ் வருகைக்கு முன்

ஏறத்தாழ முழுவதும் விவசாய நாடாக இருந்த ஜாரின் பேரரசை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மிக்க நாடாக ஆக்கிக் காட்டினார் ஸ்டாலின். உலகத்தை ஹிட்லரிய கொடுங்கோன்மையிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் சோவியத் ஒன்றியத்தை முன்னிலையில் நிற்க வைத்தார். இரண்டாம் உலகப் போரில் நடந்த பேரழிவிலிருந்து மிகவும் விரைவாக நாட்டை அவர் மீட்டுக் கொடுத்தார். அவர் போட்ட அடித்தளத்தால்தான் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு பொருளாதார, ராணுவ, தொழிற்நுட்பத் துறைகளில் முன்னேறியது. உலகில் இரண்டாவது வலுவான நாடாக மாறியது. மக்களுக்குப் போதுமான உணவு கிடைத்தது. உறைவிடம் இருந்தது. ஓய்வூதியம் கிடைத்தது. கல்வியும் மருத்துவ உதவியும் இலவசமாகக் கிடைத்தன. 1960களின் இறுதியிலிருந்து அதன் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறையத் துவங்கியது. அதற்கு காரணங்கள் பல.

சில முக்கியமானவற்றைச் சொல்கிறேன். 

சோவியத் சரிவுக்கான காரணங்கள்

விவசாயத்திலிருந்து தொழில் வளர்ச்சிக்கு ஒரு நாடு மாறும்போது அதன் வேகம் முதலில் அதிகம் இருக்கும். பின்னால் குறையும். முதலாளித்துவ நாடுகளிலும் அவ்வாறே நடந்தது. எழுபதுகளில்கூட ரஷ்யாவின் வளர்ச்சி 2.5% இருந்தது. அமெரிக்காவின் வளர்ச்சியும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இதே வேகத்தில்தான் இருந்த்து என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், சோவியத் ஒன்றியத்தில் ரீகனின் ‘விண்மீன் போர்கள்’ (star wars) திட்ட்த்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக ராணுவம் சார்ந்த துறைகளில் பல விஞ்ஞானிகளும், தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள். மற்றைய துறைகள் தேக்கம் அடைந்தன.

மேலும் அமெரிக்காவில் தொழிலாளர் வருமானம் 1960களிலிருந்து இன்று வரை அதிகம் உயரவே இல்லை. 2018 டாலர் மதிப்பில் அது 1964இல் 20.27 டாலர்களாக இருந்தது. 2018இல் 22.65 டாலர்கள். சோவியத் ஒன்றியத்திலும் தொழிலாளர்களின் வருவாய் வேகமாக உயர்ந்து எண்பதுகளில் குறையத் துவங்கியது. ஆனால், அமெரிக்காவில் ஆளும் வர்க்கத்தின் வருமானமும் அதற்கு உதவி செய்யும் உயர்தட்டு, நடுத்தர வர்க்கங்களின் வருமானமும் தொழிலாளர்கள் வருமானத்தைவிட மிக அதிகமாக இருந்தது.

சோவியத் ஒன்றியத்தில் அவ்வாறு இல்லை. அதன் அரசு அதிகாரிகள் விஞ்ஞானிகள், பொறியியலாளர் போன்றவர்கள் அதிக வருமானத்தை எதிர்ப்பார்க்கத் துவங்கினார்கள். நவீன நுகர்வுப் பொருட்களுக்காக ஏங்கினார்கள். இவர்கள் எதிர்பார்ப்பை அரசினால் ஈடு செய்ய முடியவில்லை. இவர்கள்தாம் அரசிற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் திரும்பினார்கள். இன்னொன்றும் சொல்ல வேண்டும். 1970களில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடையத் துவங்கியது. அது மேலை நாடுகளிலேயே பெரும்பாலும் நிகழ்ந்தது.

சோவியத் ஒன்றியத்தில் பழைய தொழிற்நுட்பங்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம். இன்று நடப்பது போலவே அன்றும் மேற்கத்திய நாடுகள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பல தடைகளை ஏற்படுத்தின. ஆனாலும், அமெரிக்காவில் நிகழ்ந்த்து போல பழையவற்றைக் கழித்துக் கட்டி புதிய தொழில்நுட்பங்களை கையில் எடுக்கும் திறன் சோவியத் ஒன்றியத்திற்கு இருந்தது. ஆனால், அதைச் சீராக எடுத்து வழிநடத்தும் அரசியல் தலைமை இல்லை. இந்தக் காலகட்டத்தில்தான் ஆப்கானிஸ்தான் போர் நிகழ்ந்தது. அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரி செய்ய முடியாமல் ஒன்றியம் திணறியது. 1980களில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 32 டாலரில் இருந்து 12 டாலருக்கு வீழ்ச்சி அடைந்தது. உற்பத்தியை அதிகரிக்க சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் அது நிகழ்ந்தது. எண்ணெய் விற்று அன்னியச் செலாவணி பெற்றுக்கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்திற்கு இது மிகப் பெரிய அடி.

இவ்வளவு பிரச்சினைகளிலிருந்தும் சோவியத் ஒன்றியம் மீண்டிருக்க முடியும் என்று பல வல்லுநர்கள் கருதுகிறார்கள். மீளாததன் காரணம் கோர்பசெவின் தலைமைதான் என்பதில் மிகப் பெரும்பாலனவர்களுக்கு ஐயம் இல்லை. கோர்பசெவ் என்ன செய்தார் என்பதைப் பார்ப்பதன் முன்னால் ஒன்றிய வீழ்ச்சியின் பரிமாணங்களைப் பார்ப்போம்.

வீழ்ச்சியின் பரிமாணங்கள்

1990இல் உற்பத்தி 100% என்றால், அது 2003இல் 66% ஆக வீழ்ச்சி அடைந்தது. முக்கியமாக மின் உற்பத்தி 77%; இயந்திரத் தயாரிப்பில் 54%; கட்டுமானப் பொருள்களில் 42%; உணவு உற்பத்தியில் 67%; எல்லாவற்றிற்கும் மேலாக சிறுதொழில்களில் 15%. மரணங்கள் வேகமான அதிகரித்தன. ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்தது. மக்களில் பலர் வீதிக்கு வந்தனர். முன்பு இலவசமாக கிடைத்தவை எட்ட முடியாத உயரத்திற்குச் சென்றன. பணத்தைச் சுருட்ட முடிந்தவர்கள் சுருட்டிக்கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களும் அரசு அதிகாரிகளும் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். உலகம் முழுவதற்கும் பாலியல் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் முக்கியமான நாடாக ரஷ்யா மாறியது. எல்லாவற்றிற்கும் காரணம் கோர்பசெவ் என்று மக்கள் நினைத்தார்கள்.

கோர்பசெவ் ஆண்டுகள்

கோர்பசெவ் தன்னை தீவிர லெனினியவாதியாகக் கருதினார் என்ற தகவல் பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால் உண்மை. ‘மக்களிடம் நேரடியாகச் செல்லுங்கள்’ என்ற லெனினிய கோட்பாட்டை அவர் உறுதியாக நம்பினார். ஆனால், மக்களிடம் செல்வதற்கு எதிராக இருக்கும் தடைகளை நொறுக்கும் மனத்திடம், ஒற்றைக் குறிக்கோள் அவரிடம் இல்லை.

எந்தப் புரட்சியும் வெற்றியடைவதற்கு மூன்று சூழ்நிலைகள் இருக்க வேண்டும் என்ற லெனினின் புகழ் பெற்ற வரையறைகள் இவ்வாறு சொல்கின்றன: அரசின் அதிகாரங்களை செயற்படுத்த முடியாத நிலைமை; மக்களுக்கு அரசின் மீது இருக்கும் அச்சம் விலகி முழு வெறுப்பு ஏற்படுவது; வேகமாக சீரழியும் வாழ்வாதாரங்கள்.

கோர்பசெவிற்கு இவ்வரையறைகள் தெரியாமல் இல்லை. கோர்பசெவ் கைகளில் அதிகாரம் வந்தபோது இம்மூன்று சூழ்நிலைகளும் அந்நாட்டில் இருந்தன். ஆனால், அவற்றின் அடிப்படையில் இன்னொரு புரட்சியைத் தலைமை தாங்கி நடத்த அவரிடம் திறன் இல்லை. வெறும் வாக்குறுதிகளோடும் முழக்கங்களோடும் நின்று கொண்டார். மக்கள் கோர்பசெவ் தனக்கு இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி செயல்பட வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அவர் தயங்கினார். குறிப்பாக வன்முறையைத் தேவைப்படும்போது எடுக்கத் தயங்கக் கூடாது என்ற அடிப்படையான லெனினிய கோட்பாட்டை அவர் செயல்படுத்தத் தயங்கினார் என்ற குற்றச்சாட்டு அவருடைய கட்சியினர் மத்தியிலேயே இருந்தது. மேற்கத்திய நாடுகளும் வன்முறையின்றி மாற்றம் என்ற கொள்கையை கோர்பசெவ் பதவியில் இருக்கும் வரையில்தான் ஆதரித்தனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யெல்ட்சின் 1993 ரஷ்ய நாடாளுமன்றத்தின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியபோதும் அதைக் கலைத்தபோதும், நிலைமையை மிகத் திறமையாகக் கையாண்டதாக அவரை அமெரிக்கா பாராட்டியது.

பொருளாதாரம் நொறுங்க என்ன காரணம்?

ஸ்டாலின் காலத்திலிருந்து மைய அரசையே அச்சாகக் கொண்டு செயல்பட்ட பொருளாதாரம் சீராக இயங்கியதற்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் இருந்தன: சொத்துகள் மற்றும் பொருளாதார இயக்கத்தால் கிடைக்கும் உபரி வருமானங்கள் மீது அரசிற்கு இருந்த இரும்புப்பிடி; ஊதியம் மற்றும் நுகர்வு மீது இருந்த இறுக்கமான கட்டுப்பாடு; மக்கள் கையில் செலவழிப்பதற்கு அதிகப் பணம் இல்லாமல் பார்த்துக்கொள்வது – குறிப்பாக முதலீடு செய்வதற்குத் தேவையான வருமானம் இல்லாமல் பார்த்துக்கொள்வது என்ற வியூகம். இரண்டாம் உலகப் போரில் நடந்த பேரழிவின்போதும் சோவியத் பொருளாதாரம் சீர்குலையவில்லை.  ஸ்டாலின் காலத்திற்குப் பிறகு நிலவிய ஊழல் காலத்திலும் அரசு பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் பல கோடிக்கணக்கான ரூபிள்களை அதிகம் பணம் இருப்பவர்களிடமிருந்து கைப்பற்றியது. இதனால் பணப்புழக்கத்தில் ஒரு சீரான நிலைமை இருந்தது. ஆனால், மக்கள், குறிப்பாக நடுத்தர மக்கள், தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள விரும்பினார்கள். மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டு அங்கு கிடைப்பது இங்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கினார்கள்.

மக்களுக்குத் தேவையான பொருள்கள் கிடைத்தன என்றாலும் நுகர்வுப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு இருந்தது. அவற்றைத் தயாரிக்கத் தேவையான முதலீடு அரசிடம் இல்லை. கிடைத்த உபரி வருமானம் வைத்துக்கொண்டு ஓய்வூதியம், கல்வி, மருத்துவ வசதி மற்றும் ராணுவத்திற்குத் தேவையான நிதியை அளிக்கவே அரசுக்குப் பெருத்த நெருக்கடி இருந்தது. இதனால் ஏற்பட்ட வளர்ச்சித் தேக்கம் நகரங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கோர்பசெவ் இந்தக் குட்டையில் மேலும் குழப்பம் விளைவித்தார்.

தொழிற்சாலைகளும் இதர உற்பத்தி நிறுவனங்களும் தாங்கள் ஈட்டும் லாபத்தை தாங்களே எடுத்துக்கொண்டு அதை தொழில் மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், நடந்தது என்னவென்றால் லாபத்தின் பெரும் பகுதி ஊதியங்களைப் பெருமளவு அதிகரிப்பதிலேயே பயன்படுத்தப்பட்டது. மேலும், கூட்டுறவு நிறுவனங்கள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசு நிதியையே கையாட ஆரம்பித்தார்கள். இதனால் பணப்புழக்கம் அதிகமாகி விலைவாசி விண்ணை எட்டத் துவங்கியது. அரசு அதிகம் நோட்டுகளை அச்சடித்து நிலைமையை இன்னும் சீர்குலைத்தது. நிலைமை சீரழியச் சீரழிய அடிப்படைத் தேவைகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தச் சமயத்தில் கோர்பசெவ் கட்சியில் உட்கட்சி நடவடிக்கை மூலம் கடுமையான சீர்திருத்தங்களைச் செய்திருக்க வேண்டும். ஊழல் பேர்வழிகளைக் கடுமையாக எதிர்கொண்டிருக்க வேண்டும். லெனின் காலத்திலிருந்து இது கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. ஆனால் அவர் நேர்மாறாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரசு இயந்திரங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது இருந்த பிடியைத் தளர்த்தத் துவங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றைய கட்சியைப் போலச் செயல்படும் என்ற கொள்கையினால் சுமார் எட்டு லட்சம் பேர் வேலையிழந்தனர். அரசு நிறுவனங்கள் மேற்பார்வையே இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படத் துவங்கின. ஊழல் கட்டுக்கடங்காமல் பெருகியது.  பல இடங்களில் நடந்த வேலைநிறுத்தங்கள்  பொருளாதாரத்தை இன்னும் சீர்குலைத்தன.

லெனினின் “எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” என்ற முழக்கத்தை அவர் செயற்படுத்த முயற்சித்தார். அரசியல் அமைப்புச் சட்டத்தை தன்னிச்சையாக மாற்றினார். அதனால் உருப்படியாக ஏதும் நடக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் காங்கிரஸ் கூட்டப்பட்டு அதில் பலர் சுதந்திரமாகப் பேச முடிந்தது. அவ்வளவுதான்.

இந்தக் குழப்பத்தை சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து போக விரும்பியவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இவர்களை சரியான முறையில் எதிர்கொள்ள கோர்பசெவ் தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘சீர்திருத்தப்பட்ட ஒன்றியம்’ என்ற பெயரில், ‘புதுப்பிக்கப்பட்ட அமைப்பு சமமான இறையாண்மை பெற்ற குடியரசுகளின் ஒன்றியமாக இருக்கும்; அதில் ஒவ்வொரு தேசிய இனத்தை சார்ந்தவர்களின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உறுதி அளிக்கப்படும்’ என்ற தீர்மானத்தை காங்கிரசில் நிறைவேற்றி மக்கள் வாக்களிப்பிற்கு விட்டார் கோர்பசெவ். 1991இல் நடந்த வாக்களிப்பில் சுமார் 78% மக்கள் சோவியத் ஒன்றியம் உடையாமல் இருக்க வேண்டும் என்றுதான் கருத்துத் தெரிவித்தார்கள். 22% பேர் மட்டுமே எதிராக இருந்தார்கள். ஆனால், பிரிந்து வந்தவர்கள் தங்கள் கொத்தடிமைகளாகச் செயல்படுவார்கள் என்பதை அறிந்த மேற்கத்திய ஏகாதிபத்தியம் பிரிவினையை எல்லா விதங்களிலும் ஆதரித்தது. ஜார்ஜியா, அர்மீனியா, மால்டோவா போன்ற குடியரசுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன. உக்ரைனில் உக்ரைனின் விடுதலைக்கும் சேர்த்து வாக்களிப்பு நடந்தது. அதில் உக்ரைனின் மேற்குப் பகுதியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிவினையை ஆதரித்தார்கள். இதனால் குழப்பம் கூடியதே தவிர குறையவில்லை. கோர்பசெவ் எவ்வளவோ முயன்றும் எல்ட்சின் நடத்திய திருகுதாளங்களால் பிரிவினை நடந்தேறியது.

கோர்பசெவ் காலத்தின் வரலாற்றை எழுதிய பல அறிஞர்கள் அவர் செய்தது குதிரைக்கு முன் வண்டியை நிறுத்தும் வேலை என்று கருதுகிறார்கள். உதாரணமாக சீனாவில் நடந்ததைக் காட்டுகிறார்கள். சீனத் தலைவர்கள் சந்தைப் பொருளாதாரத்தை கொண்டுவந்தாலும் அதை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கையிலேயே வைத்திருந்தார்கள். தேவைப்பட்டால் வன்முறையைக் கையில் எடுக்கவும் அவர்கள் தயங்கவில்லை. இது சரியா தவறா என்ற விவாதத்திற்கான தளம் இதுவல்ல. ஆனால், உண்மை என்னவென்றால் சீனாவின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. ரஷ்யா அதள பாதாளத்திற்குச் சென்று இப்போது மீள முயற்சி செய்துகொண்டிருக்கிறது. மக்களாட்சித் தத்துவம் அங்கு வெற்றி பெற்றதா என்றால் அதுவும் இல்லை.

வரலாற்றுப் பறவையின் எச்சம்

வரலாற்றில் தனிமனிதர்கள் பல சமயங்களில் முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறார்கள் என்பது உண்மை. ரஷ்ய வரலாற்றை எடுத்துக்கொண்டால் 1917ல் லெனின் இருந்திருக்காவிட்டால் ரஷ்யப் புரட்சி நடந்திருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதேபோல 1941இல் சோவியத் தலைவராக ஸ்டாலின் இருந்திருக்காவிட்டால், ஹிட்லருக்கு எதிராக நிகழ்ந்த போரில் சோவியத் ஒன்றியம் வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. இதே போன்று கோர்பசெவ் தலைவராக இல்லாமல் திறமை மிக்க ஒருவர் தலைவராக இருந்திருந்தால் சோவியத் ஒன்றியம் உடைந்திருக்காது என்று சொல்ல முடியும். ஆனால், கோர்பசெவ் மேற்கத்திய நாடுகளின் கைக்கூலியாகச் செயல்பட்டார் என்று சொல்வது அவதூறு. மார்க்ஸியம் படித்தவர்கள் வாதத்தில் வெல்வதற்காக அவ்வாறு சொல்வார்களே தவிர உண்மையில் அவ்வாறு நினைக்க மாட்டார்கள். வரலாற்றின் சிடுக்குகளை அவிழ்க்கத் தெரியாதவர் அவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். துரோகி என்று நிச்சயம் சொல்ல முடியாது.

எனக்கு வழிகாட்டியாக இருந்த முனைவர் இன்னொன்றும் சொன்னார். “கோர்பசெவ் ஆண்ட காலத்தில் வரலாற்றுப் பறவை எங்கள் நாடு முழுவதும் எச்சமிட்டுச் சென்று விட்டது. இன்றுவரை அதன் நாற்றத்தைச் சகித்துக் கொண்டு அதைச் சுரண்டி எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இன்றில்லாவிட்டாலும் என்றாவது நிச்சயம் வெற்றியடைவோம்.”

எனக்கும் ரஷ்ய மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது!

இக்கட்டுரை எழுதுவதற்கு எனக்கு உதவிய நூல்கள்:

1. Collapse: The Fall of the Soviet Union Vladislav M Zubok.
2. The Cambridge History of Communism Volume
3. Crisis of Socialism and Effects of Capitalist Restoration, Paul Cockshott, Monthly Review
4. The Destruction of the Soviet Economic System - An Insiders' History - edited by Ellman and Kondorovich

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


2

1





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   3 years ago

சோவியத் ரஷ்யாவில் ஆரம்பம் முதலே ஊழல், கையாடல்கள் இருந்தன. வெளியே தெரியாமல் நடந்தன. 1960களுக்கு பிறகு இது அதிகரித்தது. எதிர்கட்சிகள், சுதந்திரமான ஊடகங்கள், கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதால் இவை வெளியே தெரியவில்லை. அனைத்து மட்டத்திலும் ஊழல் இருந்தது. அது பணமாக இல்லாமல், இதர வடிவங்களிலும் மலிந்திருந்தது. ஒரு வேலை பெற, வீடு பெற பண்ட மாற்று அடிப்படையில் பல்வேறு வகையான ஊழல்கள் மலிந்தன. கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள், தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தனி கடைகள், வீடுகள், சிறப்பு கவனிப்புகள் கிடைத்தது. ராஜ வாழ்க்கை வாழ்ந்தனர். ’சமத்துவம்’ என்று அங்கு எதுவும் இருந்ததில்லை. கோர்பச்சேவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரும் ஊழலில் திளைத்தவர் தான். அவரின் மனைவி ரெய்ஸா ஆடம்பர பொருட்கள், ஆடைகளை வாங்கு குவித்தார். இதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது ? ஊழல் மிகுந்த அதிகார வர்கத்துடன் கோர்பேச்வ் குடும்பம் ’சமரசம்’ செய்து கொண்டு, பண்ணை வீடு, நகர் வீடுகளை பெற்றனர். இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஊழலை ’ஒழிக்க’ அவர் எடுத்த நடவடிக்கைகளை ஆரய வேண்டும்.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   3 years ago

//இந்தக் குழப்பத்தை சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து போக விரும்பியவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இவர்களை சரியான முறையில் எதிர்கொள்ள கோர்பசெவ் தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்// உக்ரைன், லேட்வியா, எஸ்டோனியா, உஸ்பெக்கிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு குடியசரசுகள் ஒரு காலத்தில் தனி நாடுகளாக சுதந்திரமாக இருந்தன. சோவியத் ஒன்றியத்தின் கீழ் துப்பாகி முனையில் சேர்க்கப்பட்டு, அடிமைகளைப் போல பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்டனர். ரஷ்ய மொழி, கலாச்சாரம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. (இந்தியாவில் இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழகத்தை இங்கு ஒப்பிட வேண்டும்). இதில் இருந்து ’பிரிந்து’ போக விரும்புவது குற்றமா ? அது தான் மனித இயல்பு. கூட்டாட்சி, மாநிலங்களின் உரிமைகள் பற்றி பேசும் அருஞ்சொல் ஆசிரியர் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். 1940களில் திருநெல்வேலியில் பிறந்த பி.ஏ.கே, உக்ரைன் அல்லது எஸ்டோனியாவில் அதே ஆண்டில் பிறந்திருந்தால், இன்று தீவிர உக்ரைனிய தேசியவாதியாக, ரஷ்யா மற்றும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சி பற்றி முழங்கியிருப்பார்.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   3 years ago

//1990இல் உற்பத்தி 100% என்றால், அது 2003இல் 66% ஆக வீழ்ச்சி அடைந்தது. முக்கியமாக மின் உற்பத்தி 77%; இயந்திரத் தயாரிப்பில் 54%; கட்டுமானப் பொருள்களில் 42%; உணவு உற்பத்தியில் 67%; எல்லாவற்றிற்கும் மேலாக சிறுதொழில்களில் 15%. மரணங்கள் வேகமான அதிகரித்தன. ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்தது. மக்களில் பலர் வீதிக்கு வந்தனர். முன்பு இலவசமாக கிடைத்தவை எட்ட முடியாத உயரத்திற்குச் சென்றன. // ஆம். ஆனால் இதை மட்டும் சொல்பவர், 2000களுக்கு பிறகு ரஷ்யா எப்படி மீண்டெழுந்தது என்பதை சொல்ல மறுக்கிறார். சோவியத் ஆட்சியில் இல்லாத அளவுக்கு இன்று ரஷ்யாவில் வாழ்க்கை தரம் அதிகரித்துள்ளது. வறுமை வெகுவாக குறைந்து விட்டது. வளர்ந்த நாடாக ரஷ்யா மாறியுள்ளது. புட்டின் ஆட்சியில் சர்வாதிகார போக்குகள் இருந்தாலும், சோவியத் காலம் போன்ற 100 சதவீத சர்வாதிகாரம் அங்கு இல்லை. இவற்றையும் சொல்வதே நேர்மை.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   3 years ago

ஆரம்பம் முதலே சோவியத் உற்பத்தி முறையின் உற்பத்தி திறன் குறைவாக, அதிக செலவு செய்து குறைந்த அளவு உற்பத்தி செய்யும், விரயங்கள் அதிகம் கொண்ட முறை தான் இருந்தது. இது பொது உடைமை அமைப்பின் அடிப்படை தன்மை. தேனிக்களை போல, எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல், ஆனால் மிக திறமையான, சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனிக்களும், எறும்புகளும், நாள் பூராவும் கடுமையாக உழைத்து, உழைப்பின் பயனை தம் சமூக கூட்டிற்க்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொறு தனி உறுப்பினருக்கும், அவரின் ‘தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதை தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது. //1970களில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடையத் துவங்கியது. அது மேலை நாடுகளிலேயே பெரும்பாலும் நிகழ்ந்தது. சோவியத் ஒன்றியத்தில் பழைய தொழிற்நுட்பங்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம்.// சோவியத் ஒன்றியம் பின் தங்க உற்பத்தி திறன் குறைவே அடிப்படை காரணம். உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்து, இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலை 1960கள் முதல் 90கள் வரை இருந்தது. இன்று இல்லை.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   3 years ago

//ஏறத்தாழ முழுவதும் விவசாய நாடாக இருந்த ஜாரின் பேரரசை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மிக்க நாடாக ஆக்கிக் காட்டினார் ஸ்டாலின்.// ஆனால் இதற்கு கொடுத்த மனித விலை மிக மிக அதிமானது. குளக்குகள் என்று முத்திரை குத்தப்பட்டு பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். விவசாயத்தின் உபரி வருவாய் முற்றிலும் கையகப்படுத்தப்பட்டு, தொழித்துறைக்கு மடை மாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட பஞ்சங்களில் பல கோடி பேர் மடிந்தனர். ஆனால் பி.ஏ.கே இதை ஒத்துக் கொள்ள மாட்டார். அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட பொய்கள் என்பார். ///அதேபோல 1941இல் சோவியத் தலைவராக ஸ்டாலின் இருந்திருக்காவிட்டால், ஹிட்லருக்கு எதிராக நிகழ்ந்த போரில் சோவியத் ஒன்றியம் வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. // இதுவும் இவரின் சொந்த கருத்து. ஒரு வகையான மூடநம்பிக்கை. ஸ்டாலினுக்கு பதிலாக டிராட்ஸ்கி அல்லது புகாரின் இருந்திருந்தாலும் சோவியத் ஒன்றியம் வெற்றி பெற்றிருக்கும். 1937இல் சோவியத் ராணுவ தளபதிகள் பலரையும் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஸ்டாலின் கொன்றொழித்தார். அதன் காரணமாக சோவியத் ராணுவம் நிலை குலைந்திருந்ததால், போருக்கு தயாராக இல்லாத நிலையில் இருந்தது. உற்சாகக் குறைவு, மனச்சோர்வு ஏற்பட்டிருந்தது. ஆனால் இதையும் பி.ஏ.கே ஏற்பதில்லை. ஸ்டாலின் மீது வழிபாட்டு மனோபவம் கொண்டவர் கூற்று இது. வரலாற்று ஆய்வாளர்கள் இப்படி கருதுவதில்லை.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

ஜனநாயக உரிமைகள்வேத மரபுசர்வாதிகாரம் பெற சட்டம் இயற்றுவதுதன்னாட்சி இழப்புசஞ்சய் பாரு கட்டுரைசத்தியமங்கலம் திருமூர்த்தி: முன்னோடி இயற்கை உழவர்பாசிஸம்உச்ச நீதிமன்றத்தின்உலக ஆசான்systemஇஸ்ரேல்இடஒதுக்கீட்டுபுதிய கடல்பெட்ரோல்தேர்தல் ஆணையத்தில் தன்னாட்சி அவசியம்மாபெரும் கார்ப்பரேட் மோசடிகுற்றத்தன்மைகல்லூரிகள்புதுப்பாளையம்சைபர் வில்லன்கள்காது அடைப்புகசப்பான அனுபவங்கள்என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்கொள்குறிக் கேள்விகள்தஞ்சை பிராந்தியம்வஹிதா நிஜாம்பிரபாகரன் சமஸ்பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸில் நடக்க வேண்டிய மாற்றமகோர்பசெவ் பற்றிய கட்டுரையும்சீர்திருத்த நாடகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!