கட்டுரை, அரசியல், சர்வதேசம் 7 நிமிட வாசிப்பு

கோர்பசெவை எப்படி மதிப்பிடுவது?

ஆர்ச்சி பிரௌன்
08 Sep 2022, 5:00 am
0

ருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் மிக முக்கியமான உலகத் தலைவர் மிகைல் கோர்பசெவ்; ரஷ்ய வரலாற்றில் மிகச் சிறந்த சீர்திருத்தர்களுள் ஒருவர்.

சோவியத் ஒன்றியம் தனது இறுதிமூச்சை விட்டுக்கொண்டிருந்த தருணத்தில் கோர்பசெவ் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்; அப்போது ரஷ்யா அதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு சுதந்திர நாடாக உருவாவதற்கு அவர் மிக முக்கியமான பங்கை ஆற்றியிருந்தார். ரஷ்யாவில் புதிதாக உருவான சகிப்புத்தன்மையும் சுதந்திரமுமான சூழல், கூடவே சோவியத்தின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் எல்லாம் சேர்ந்து கிழக்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளின் மக்களுக்குத் துணிவைத் தந்தன. இதனால் அவர்கள் தங்கள் நாடுகளின் கம்யூனிஸ ஆட்சியாளர்களை ஆட்சிப் பொறுப்பிலிருந்து துரத்தினார்கள், மாஸ்கோவின் மேலாதிக்கத்தையும் தூக்கியெறிந்தார்கள்.

சோவியத் தலைவர்களில் மிகச் சிறந்த சமாதான விரும்பியாக - அநேகமாக ரஷ்யத் தலைவர்களுள் மிகச் சிறந்த சமாதான விரும்பியாக - கோர்பசெவ் இருந்தார். அதனால்தான் வார்ஸா ஒப்பந்த நாடுகள் 1989இல் விடுதலை பெற்றபோதும், அதே ஆண்டு நவம்பரில் பெர்லின் சுவர் வீழ்ந்தபோதும், அல்லது 1990இல் இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றுசேர்ந்தபோதும் சோவியத்தின் ஒரு ராணுவ வீரர்கூட ஒரு தோட்டாவைகூட செலவழிக்கவில்லை. 

சோவியத் ஒன்றியம் 1985இல் மிகவும் நெருக்கடியான கட்டத்தை எட்டிவிட்டதென்றும், கோர்பசெவ் ஒரு சீர்திருத்தர் என்பதால் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ அவரைத் தேர்ந்தெடுத்தது என்றும், அதனால் புரட்சிகர சீர்திருத்தங்களை முன்னெடுப்பதைத் தவிர கோர்பசெவுக்கு வேறு வழியில்லை என்றும் மேற்குலகில் ஒரு கட்டுக்கதை பரவலாக நிலவுகிறது. ஒரு சர்வாதிகார ஆட்சியின் சட்டங்களும் கட்டளைகளும் மதிக்கப்படாத சூழல் ஏற்படும்போதும், வெகுமக்கள் எதிர்ப்பு தொடர்ந்து நிலவும்போதும், குறிப்பாக, அதுபோன்ற கொந்தளிப்பான சமூகச் சூழலும் அரசியல் தலைவர்களின் உயர்வர்க்கத்தினரிடையே வெளிப்படையான பிளவுகளும் கைகோத்துக்கொள்ளும் நிலையும் நிலவும்போதுதான் அந்த சர்வாதிகார ஆட்சி நெருக்கடியில் இருக்கிறது என்று அர்த்தம்.  

ஆனால், 1985இல் இவை எதுவும் நிலவவில்லை – உண்மையில் கொர்பசெவின் பொருளாதார - அரசியல் சீர்திருத்தங்களின் (பெரஸ்த்ராய்க்கா) சில ஆண்டுகள் வரை அதுபோன்ற கொந்தளிப்பான சூழல் நிலவவில்லை. உண்மையில் நெருக்கடியால் வேறு வழியே இல்லாமல்தான் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன என்று சொல்லவே முடியாது, சீர்திருத்தங்கள்தான் நெருக்கடிக்குக் காரணமாயின. புதிதாகக் கிடைத்த சுதந்திரம் 70 ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த குமுறல்கள், இனக்குழு - தேசியம் தொடர்பான குமுறல்கள் உட்பட, அரசியல் வாழ்க்கையின் மேற்பரப்பில் வெளிப்படுவதற்கு உதவியது.   

கோர்பசெவுக்கு முன்பு ஆட்சியில் இருந்த கான்ஸ்டான்டின் செர்னென்கோ காலத்தின் செயலின்மை மட்டுமல்ல, கோர்பசெவ் பொருளாதார சீர்திருத்தத்தைவிட அரசியல் சீர்திருத்தத்துக்கே முன்னுரிமை கொடுத்தார் என்ற உண்மையானது 1980களின் நடுப்பகுதியில் நாட்டில் காணப்பட்ட மோசமான பொருளாதாரச் சூழல்தான் சீர்திருத்தத்தைக் கட்டாயப்படுத்தியது என்ற கருத்தைப் பொய்ப்பிக்கிறது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் நிலையை மேம்படுத்துவதற்கு இது எந்த வகையிலும் உதவவில்லை – ஏனெனில், புதிய அரசியல் சூழலில் கட்டளைகளை அலட்சியப்படுத்தவோ புறக்கணிக்கவோ முடிந்தது, மேலும் மக்கள் தங்களுக்குள் முணுமுணுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் நீண்ட வரிசைகள் குறித்தும் பொருட்களின் தட்டுப்பாடு குறித்தும் வெளிப்படையாகவே விமர்சிக்கும் நிலையும் ஏற்பட்டது.      

பிற்பாடு 1990ஆம் ஆண்டு அளவில்தான் சந்தைப் பொருளாதாரத்தை கோர்பசெவ் பொதுவாக ஏற்றுக்கொண்டார், அது சமூக ஜனநாயக முறைப்படி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனினும், அதற்குள் அவர் தனது ஆரம்ப கால அரசியல் செல்வாக்கில் பெருமளவு இழந்துவிட்டிருந்தார்; அடிப்படை உணவுப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் சந்தை விலைகளையும், அதிக விலைகளையும் நாடும் ஆபத்தான பணயத்தை அவர் மேற்கொள்ளவில்லை.

ஆகவே, சோவியத் பொருளாதாரம் ஒன்றும் செய்ய முடியாத நிலையை எட்டியது, மைய அமைப்பினால் கட்டுப்படுத்துவதாகவோ அல்லது சந்தை அடிப்படையிலானதாகவோ இல்லாமல் இரண்டும்கெட்டான் நிலையை எட்டியது. 

எனினும் கோர்பசெவின் அரசியல் சீர்திருத்தங்கள் அசாதாரணமான வகையில் துணிச்சலானவை. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் என்று மட்டும் இல்லை, உலகத் தலைவர்கள் எவருக்கும் இல்லாத அளவுக்கு, ஆச்சரியமூட்டும் வகையில் திறந்த மனது கொண்டவர் அவர்.

கோர்பசெவ் முன்னெடுத்த கிளாஸ்னோஸ்ட் (பெரும் வெளிப்படைத்தன்மை) அவருடைய தலைமைத்துவத்தின் தொடக்க காலத்திலிருந்து, அவருடைய ஆசிகளுடன், பேச்சு சுதந்திரமாகவும், போகப்போக பதிப்புச் சுதந்திரமாகவும் பரிணாமமடைந்தது. அதுவரை மறைத்து வைத்திருந்தவையும், வெளிநாடுகளில் வெளியிடப்பட்டவையும் அவற்றை வைத்திருப்பதே குற்றமாகக் கருதப்பட்டதுமான இலக்கியப் படைப்புகள் 1989 வாக்கில் மாஸ்கோவில் பெரும் எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டன. ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’, அலெக்ஸாண்டர் சோல்செனிட்ஸினின் ‘த குலாக் ஆர்க்கிபெலகவ்’ போன்ற படைப்புகளும் அடங்கும்.

எதிர்ப்பாளர்களுக்குச் சிறைவாசத்திலிருந்தும் நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்தும் விடுதலை கிடைத்தது. கடந்த காலத்தில் அநியாயமாக முடக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் (இந்த மறுவாழ்வு நடவடிக்கைகள் நிகிதா குருசெவ் காலத்தில் தொடங்கப்பட்டு லெனிட் பிரெஷ்னெவ் காலத்தில் கைவிடப்பட்டன) மீண்டும் முன்னெடுக்கப்பட்டன.

எல்லைகள் கடந்து தகவல்தொடர்பு மேற்கொள்ளப்படுவதற்கான புதிய சுதந்திரத்தை கொர்பசெவ் ஊக்குவித்தார். வெளிநாட்டு ஒளி / ஒலிபரப்புகளுக்கான தடையை முடிவுக்குக் கொண்டுவருவதும் பயணம் மேற்கொள்ளுதல், வெளிநாட்டில் குடியேறுதல் போன்றவற்றுகான சுதந்திரத்தை முன்னெடுப்பதும் இவற்றுள் அடங்கும்.    

கிரெம்ளின் மாளிகையில் தான் இருந்த ஏழுக்கும் குறைவான ஆண்டுகளில் கொர்பசெவ், வேறு எந்த சோவியத் தலைவரும் – அல்லது செர்னென்கோவில் பொலிட்பீரோவின் தலைமைப் பொறுப்பில் அடுத்து வருவதற்குச் சாத்தியம் இருந்த யாரும் – சாதித்திருக்க முடியாத வகையிலான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்களெல்லாம் 1985இல் உலகத் தலைவர்கள் யாரும் (மார்கரெட் தாட்செர் ஒப்புக்கொண்டதைப் போல), ஏன் அந்த நேரத்தில் சோவியத் சீர்திருத்தவாதிகள் யாரும் கனவிலும் நினைத்துப்பார்த்திராதவை. அவர்களுடனான உரையாடல்களின் வழியே இதை நான் அறிந்துகொண்டேன்.   

அது, 1990இல் கோர்பசெவின் ‘பலவீனமான கொள்கைகள்’ என்று அழைக்கப்பட்ட கொள்கைகளுக்காக அவரை அதே சீர்திருத்தர்கள் கடுமையாக விமர்சிப்பதையும் தங்கள் விசுவாசத்தை போரிஸ் யெல்ட்ஸினிடம் அவர்கள் ஒப்படைப்பதையும் தடுக்கவில்லை.  

1985இல் கம்யூனிஸச் சீர்திருத்தராக அவர் அடியெடுத்து வைத்தார். 1988க்குள் திட்டமிட்ட மாற்றத்தை ஏற்படுத்துபவராக மாறிவிட்டிருந்தார். 1996இல் அவர் கூறியதுபோல்: “எனக்கு முன்பிருந்த சீர்திருத்தர்கள் கொண்டிருந்த அதே பிரமைகள் 1988 வரை எனக்கும் இருந்தன. அமைப்பைத் திருத்தியமைக்க முடியும் என்று நம்பினேன். திட்டமிட்ட சீர்திருத்தம் வேண்டுமென்று 1988இல் நான் உணர்ந்தேன். அமைப்பையே ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிதாக ஒன்றைக் கொண்டுவர வேண்டியிருந்தது.”

இது ஏதோ பின்தேதியிட்ட தீர்ப்பு மட்டுமல்ல. 1988 ஏப்ரலில் கட்சியின் பிராந்திய செயலாளர்களுக்கு மட்டுமான ஒரு கூட்டத்தில் கோர்பசெவ் இப்படிக் கேட்டார்: “எந்த அடிப்படையில் 20 கோடி பேரை 2 கோடி பேர் (கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை) ஆள்கிறார்கள்?” தன்னுடைய கேள்விக்குத் தானே பதிலளித்தார்: “மக்களை ஆள்வதற்கான உரிமையை நாமே நமக்களித்துக்கொண்டோம்.”    

அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கட்சியின் 19வது மாநாடு நடைபெற்றது. உண்மையான அதிகாரங்களுடனான புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அதற்கு அடுத்த ஆண்டின் வசந்த காலத்துக்குள் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அந்த மாநாட்டின் பெரும்பாலான பிரதிநிதிகளை கொர்பசெவ் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

மார்ச் 1989ல் தேர்தல் முறைப்படி நடந்தது. ‘ஜனநாயக மையவாதம்’ என்ற ஒன்றுக்கு அந்தத் தேர்தல் முடிவு கட்டியது, ஏனெனில் மாறுபட்ட கொள்கைகள் அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனை அடிப்படையிலான ஜனநாயகப்படுத்துதலுக்கான முதல் படி மட்டுமே அது, ஆனால் அதற்குப் பிறகு சோவியத் ஒன்றியமானது அதுவரை இருந்ததுபோல் நீடிக்க முடியவில்லை.  

சோவியத் கம்யூனிஸ்ட் அமைப்பு தகர்ந்துபோனது என்பது கோர்பசெவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட எதிர்பார்த்திராத விளைவு அல்ல. ஏனெனில், அவரும் அவரது எண்ணங்களை ஒத்த சகாக்களும் திட்டமிட்டே அந்த அமைப்பைத் தகர்த்தனர். சோவியத் ஒன்றியத்துக்கு முடிவுரை எழுதப்படும் என்பதைத்தான் கோர்பசெவ் எதிர்பார்த்திருக்கவில்லை.

பேச்சுவார்த்தை மூலமும் சம்பந்தப்பட்ட நாடுகளின் விருப்பத்தின் பேரிலும் ‘புதுப்பிக்கப்பட்ட ஒன்றியம்’ என்பதன் கீழ் தன்னால் முடிந்த அளவு குடியரசுகளை உள்ளடக்கவும் அதற்கு முன்பு போலி-கூட்டாட்சியமைப்பாக இருந்ததை உண்மையான கூட்டாட்சி நாடாக ஆக்கவும் கோர்பசெவ் மிகவும் முயன்றார். அந்த முயற்சியில் அவர் தோல்வியடைந்தார். அதிகாரத்தையும் பலவந்தத்தையும் பிரயோகித்து ஒன்றியத்தை நீடிக்கச் செய்யலாம் என்று கேஜிபியின் தலைமையிடமிருந்து உட்பட அரசு அதிகாரவர்க்கத்திடமிருந்து அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. 

சமீப காலமாக கோர்பசெவின் உடல்நலம் வெகுவாகக் குன்றியது; மேலும், தனக்கு அதிகாரத்தை எந்த அமைப்பு அளித்ததோ அந்த அமைப்பைக் கட்சித் தலைவர் என்ற பொறுப்பைக் கொண்டு தகர்த்தது, பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிக முக்கியப் பங்கு வகித்தது போன்ற தனது சாதனைகள் நாசமாக்கப்பட்டதைக் கண்டு மிகவும் வருந்தினார். தெற்கு ரஷ்யாவின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனாக அவர் உக்ரைனைச் சேர்ந்த தனது தாயின் பெற்றோரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் 2022இல் தொடங்கிய போர் அவருக்கு மரண அடியைக் கொடுத்தது. அவரது கல்லறை வாசகமாக என்ன இருக்க வேண்டும் என்று அவரது கடைசி நேர்காணல்களில் ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவரது பதில் இதுதான்: “நாங்கள் முயற்சித்தோம்!”

© தி கார்டியன்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆர்ச்சி பிரௌன்

ஆர்ச்சி பிரௌன், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அரசியல் துறையின் மதிப்புறு பேராசிரியர். ‘கார்டியன்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். ‘தி ஹ்யூமன் ஃபேக்டர்: கோர்பசெவ், ரீகன் அண்டு தாட்சர் அண்டு தி எண்ட் ஆஃப் தி கோல்ட் வார்’ (The Human Factor: Gorbachev, Reagan, and Thatcher and the End of the Cold War) நூலின் ஆசிரியர்.

தமிழில்: வி.பி.சோமசுந்தரம்

3






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மார்க்ஸிய அறிஞர்கட்டுக்கதைகள்பாபர் மசூதிஅ.முத்துலிங்கம்பிரம்புசோம்பேறித்தம்வெஸ்ட்மின்ஸ்டர் முறைமுரசொலி மணி விழாக் கட்டுரைமெஷின் லேர்னிங்மணி சங்கர் ஐயர்வட கிழக்கு பிராந்தியம்காரிருள்தான் இனி எதிர்காலமா?சமத்துவ மயானங்கள் அமையுமா?உடல் உறுப்பு தானத் திட்டம் சீரமைக்கப்படுமா?பள்ளிக்கூடங்கள்வெள்ளியங்கிரி மலைசிபாப்செ.வெ. காசிநாதன்சாதகமாவிரிவாக்கம்மூட்டுவலிக்கு முழுமையான தீர்வுதொடர் தோல்விஇயற்கைதமிழக காங்கிரஸ்உம்பெர்த்தோ எகோராஜகோபாலசாமிராகுலை யாரும் சந்திக்க முடியவில்லை: ஆசாத் பேட்டிமு.க.அழகிரிவினோத் கே.ஜோஸ் பேட்டிவிளிம்புநிலை மக்களிடம் ராகுலுக்கு ஆதரவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!