கட்டுரை, சாவர்க்கர் வாழ்வும், நூல்களும் 7 நிமிட வாசிப்பு
சாவர்க்கர்: இங்கிலாந்து வாழ்க்கை
கப்பலில் ஏறுவதற்கு முன்னால் தன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு, மனைவியிடம் ‘உடனே குழந்தைக்கு அம்மைத் தடுப்பூசி போட ஏற்பாடு செய். இல்லையென்றால், அவன் மேலே அம்மனிடம் போய்ச் சேர்ந்துவிடுவான்’ என்றார் சாவர்க்கர். தன் குழந்தையை திரும்பச் சந்திக்கவேயில்லை. 1909 அம்மைக்கு அவருடைய குழந்தை பிரபாகர் இறந்துபோனார்.
லண்டனில் அவர் இருந்த ‘இந்தியா ஹவுஸ்’ என்ற இந்தியா இல்லம், காந்திக்கு முந்தைய சுதந்திரப் போராட்ட வீரர்களின் இருப்பிடமாக இருந்தது. லால ஹர்தயால், வீரேந்திரநாத் சட்டோபாத்யாய், சேனாபதி பாபட், வி.வி.எஸ். ஐயர், எம்.பி.டி. ஆச்சாரியா, ஜே ஸி முகர்ஜி, மதன்லால் திங்ரா, க்யான்சந்த் வர்மா, பாய் பரமானந்த், சர்தார் சிங் ராணா, மேடம் பிகாஜி காமா போன்ற தியாகத் திருவிளக்குகள்.
மாஜினி காட்டிய வழி
அபிநவ பாரத சங்கத்தைப் போலவே ‘ஃப்ரி இந்தியா சொஸைடி’ என்ற இயக்கத்தை லண்டனில் தொடங்கினார் சாவர்க்கர். அவருடைய ஆதர்ஷம் மாஜினி!
இந்த சமயத்தில் நான் மாஜினியைப் பற்றிச் சொல்ல வேண்டும். பாரதிகூட ‘மாஜினியின் சபதம்’ என்ற கவிதையை எழுதியிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த, விடுதலையை விரும்பிய எல்லா இளைஞர்களையும் கவர்ந்த ஒரு பெயர் மாஜினி. இத்தாலியர். 19-ம் நூற்றாண்டில் இயங்கியவர். துண்டுதுண்டாகப் பிரிந்திருந்த இத்தாலியை ஒன்றாகச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், ‘இளைய இத்தாலி’ என்ற அமைப்பை உருவாக்கியவர். நவீன இத்தாலியின் முன்னோடிகளில் ஒருவர் என்றாலும் அவருடைய பல போரட்டங்களும் ரகசிய அமைப்புகளும் படுதோல்விகளைத்தான் சந்தித்தன. மார்க்ஸ் இவரை ‘That everlasting old ass’ என்று அழைத்தார்.
மத்திய வர்க்கத்தினரைச் சேர்த்து ஒரு புதிய சமுதாயத்தைப் படைத்துவிடலாம் என்ற கனவில் இயங்கியவர் மாஜினி. ஆனாலும், இவருக்கு இத்தாலியில் செல்வாக்கு இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு காலகட்டத்தில் இவரது அமைப்புகளில் 60,000 உறுப்பினர்கள் இருந்தார்கள். இவரைப் பின்பற்றித்தான் சாவர்க்கர் தமிழ் மற்றும் மராட்டிய பிராமணர்களையும், லண்டனில் இருக்கும் உயர்சாதியினரையும் வைத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து வெள்ளைக்காரர்களை விரட்டிவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இந்திய மக்களுக்கு இதில் பங்கு என்ன? என்ற கேள்விகூட அவருக்குத் தோன்றியதாகத் தெரியவில்லை. தோன்றியிருந்தாலும் அவர்கள் புரட்சியாளர்கள் பக்கம்தான் இருப்பார்கள் என்ற கனவோடுதான் சாவர்க்கர் இருந்திருக்க வேண்டும். அவர் சொல்வதைக் கேளுங்கள்: "பிரித்தானிய மேற்பார்வையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள் நம் ஆயுதங்கள். வீரர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களுக்கும் நாட்டை விடுதலைப் பெறச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களிடையே விடுதலைத் தீயைப் பரவச் செய்யுங்கள். கைகளின் இருக்கு அதே ஆயுதத் தளவாடங்களுடன் எவ்வாறு பிரித்தானியர்களுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!"
இது அரைவேக்காட்டுத்தனம். இந்திய சமூக அமைப்பைப் பற்றியும், இந்திய ராணுவம் அச்சமயத்தில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருந்தது என்பதையும் பற்றி தீவிரப் பார்வை அற்ற சிந்தனை. அதேசமயம், உலகம் முழுவதும் அக்காலத்தில் ரகசிய அமைப்புகள் இயங்கிக்கொண்டிருந்தன. தனிநபரைக் கொன்றால், அது அரசியல் விடுதலை விழிப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணம் பல நாடுகளில் இருந்தது. உதாரணமாக, ஜார் மன்னரைக் கொல்ல முயன்று லெனினின் சகோதரர் தூக்கிலிடப்பட்டார்.
லெனினுடன் சந்திப்பு
1909-ல் நண்பர் ஒருவர் லெனினை ‘இந்தியா இல்ல’த்திற்கு அழைத்து வந்தார். அவர் சாவர்க்கரைச் சந்தித்தார் என்று சொல்லப்படுகிறது. லெனினிடம் என்ன பேசினார் என்பது பற்றிய ஆவணங்கள் இல்லை. 1909-ல் லெனின் புரட்சிகரமான கட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அவர் தனிநபர் பயங்கரவாதத்திற்கு மிகப் பெரிய எதிரி (Revolutionary Adventurism என்ற கட்டுரையில், The urge to commit terrorist acts is a passing mood என்று எழுதுகிறார்).
லெனினோடு ஒழுங்காக விவாதித்திருந்தால் ஒருவேளை கர்சான் வைலியின் கொலை நடந்திருக்காது. சாவர்க்கரும் அந்தமான் சென்றிருக்க மாட்டார். கர்சன் வைலி கொலைக்குச் செல்லும் முன் சாவர்க்கரின் இன்னொரு பண்பைப் பற்றியும் பேச வேண்டும்.
இந்த சமயத்தில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை சாவர்க்கர் பெரிதும் மதித்தார்; “இந்தியா 30 கோடி குழந்தைகளின் தாய். அவர்கள் சகோதரர்கள், உண்மையானவர்கள், குறிக்கோளுடையவர்கள். எங்கள் குடும்பம் மனித சமுத்திரத்தில் ஒரு துளியாக இருக்கலாம். அது மறைந்தாலும் அதன் வம்சம் தொடரும். வெற்றியோ, தோல்வியோ, ஓ அன்னைபூமியே, எங்கள் உறுதியை உடைக்க முடியாது. அன்னையை விடுவிக்கும் இச்சுதந்திரத் தீயில் எங்களை எரித்துக்கொண்டு, நாங்கள் இறவாமையை அடைந்துவிட்டோம்” என்கிறார்.
சாவர்க்கர் மற்றொரு பேச்சில் சொல்கிறார்: “இந்தியாவின் இதயம் இந்துக்கள். இருந்தாலும் வானவில் தன் வித்தியாசமான வண்ணங்களால் குறைவடைவதில்லை, மாறாக மெருகு பெருகிறது. அதேபோல இந்துஸ்தான் வருங்கால வானத்தில் இன்னும் அழகாகத் தெரியும் - அதன் முஸ்லிம், பார்சி, யூத மற்ற நாகரீகங்களின் உயரிய தன்மைகளை ஒன்று சேர்த்து!”
⁋
1 ஜூலை 1909 அன்று லண்டனில் உள்ள ‘இந்தியா இல்ல’த்தில் இருந்த கர்சன் வைலி என்ற ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக் கொன்றார் மதன்லால் திங்க்ரா. அவருக்குப் பின்புலத்தில் சாவர்க்கர் இருந்தார் என்ற சந்தேகம் வெள்ளை போலீஸ் அதிகாரிகளுக்கு இருந்தாலும், வலுவான சான்றுகள் ஏதும் இல்லை. இதே சமயத்தில் இந்தியாவில் மற்றொரு வழக்கில் சாவர்க்கரின் சகோதரர் பாபாராவ் சாவர்க்கர் புரட்சிக் கவிதைகள் எழுதியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். விநாயக தாமோதர சாவர்க்கருக்கு முன்னால் அந்தமானுக்கு அனுப்பப்பட்டவர் அவருடைய சகோதரர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுவும் கவிதைகள் எழுதியதற்காக. அதற்கு பழிவாங்குவதற்காக கர்சன் வைலி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. ஆனால், சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், ‘இந்தியா இல்லம்’ நிரந்தரமாக மூடப்பட்டது.
21 டிசம்பர் 1909-ல் இந்தியாவில் இன்னொரு சம்பவம் நடந்தது. நாசிக் கலெக்டர் ஜாக்சன் ஆனந்த் கன்ஹரே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையைப் பற்றி நடந்த விசாரணையின்போது, 1908-ல் விநாயக சாவர்க்கர் இங்கிலாந்திலிருந்து, '20 ப்ரௌணிங் பிஸ்டல்'களை சதுர்புஜ் அமீன் என்பவர் மூலம் அனுப்பியிருந்தார் என்பது தெரியவந்தது. இதேபோன்று இங்கிலாந்திலிருந்து திரும்பிய சஞ்செரி ராவ் என்ற கோயம்புத்தூர் போலீஸ்காரர் பெட்டியிலிருந்து புரட்சி பற்றிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர், 'எனக்கு இவற்றை சாவர்க்கர் கொடுத்தார்' என்று வாக்குமூலம் அளித்தார்.
சாவர்க்கர் அந்தச் சமயத்தில் நிமோனியா வந்ததால் மருத்துவமனையில் இருந்தார். நண்பர்கள் எச்சரித்ததால் பாரிஸுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். பாரீஸில் பிகாஜி காமா வீட்டில் இரண்டு மாதங்கள் இருந்த பிறகு மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். ஏன் திரும்பினார் என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஓர் ஆங்கிலக் காதலி இருந்தார் என்ற காரணம் உட்பட. ஆனால், எல்லாம் உதவாக்கரைக் காரணங்கள். திரும்பி வராமல் இருந்திருந்தால் அவருடைய வாழ்க்கையே மாறியிருக்கலாம்.
50 ஆண்டுகள் சிறை
இங்கிலாந்தில் அவர் அரசருக்கு எதிராகப் போர் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். ஜாக்சன் கொலைக்கு ஆயுதங்கள் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். புரட்சிப் பேச்சுகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டார். இங்கிலாந்தில் விசாரணை நடக்காது இந்தியாவில்தான் நடக்கும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஏனென்றால் இந்தியச் சட்டத் தண்டனைகளின் கடுமை அதிகம்.
சாவர்க்கரை இந்தியாவிற்குக் கொண்டுசெல்ல மூன்று போலீஸ்காரர்கள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டார்கள். இவர்களுடன் கப்பலில் பயணித்த சாவர்க்கர் மார்செய் துறைமுகத்தில் கழிப்பறை ஜன்னல் துவாரம் வழியாகக் கடலில் குதித்து, நீந்திக் கரை சேர்ந்தார். ஆனால், கரையில் பிரெஞ்சு போலீஸ்காரரால் பிடிக்கப்பட்டு பிரிட்டிஷ் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை ஒப்படைத்தது சரியா தவறா என்ற விவாதங்கள் நடந்தன. தெ ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில்கூட விசாரணை நடந்தது. ஆனால் தீர்ப்பு சாவர்க்கருக்கு எதிராகவே வந்தது.
இந்தியாவில் அவர் மீது இரு தனி வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்று அரசருக்கு எதிராகப் போர் தொடுத்த வழக்கு போன்ற குற்றங்களுக்காக. மற்றது ஜாக்ஸன் கொலைக்கு உதவிசெய்ததற்காக. இரண்டு வழக்குகளிலும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை. தொடர்ந்து அனுபவிக்க வேண்டும். அதாவது 50 ஆண்டுகள். சாவர்க்கருடைய சொத்துகள் அனைத்தும் பறிமுதல்செய்யப்பட்டன. மனைவி தெருவிற்கு வரும் நிலைமை.
என்ன செய்தார் சாவர்க்கர்?
(நாளை பேசுவோம்...)







பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Abdul Kareem 3 years ago
அருஞ்சொல் மூலம் சாவர்க்கர் எனும் பிம்பம் புனிதப்படுத்தப்படுகிறதா?.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.