கட்டுரை, சாவர்க்கர் வாழ்வும், நூல்களும் 10 நிமிட வாசிப்பு

சாவர்க்கர்: இளம் வாழ்க்கை

பி.ஏ.கிருஷ்ணன்
01 Nov 2021, 5:00 am
4

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாவர்க்கர் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்தார். ஆனால், பாஜகவின் கை ஓங்க ஓங்க சாவர்க்கர் மறுமலர்ச்சி பெற்று, மறு உருவம் பெற்று இன்று பலரால் பேசப்படுகிறார்.

ஒரு தரப்பினருக்கு அவர் உலகின் மிகப் பெரிய புரட்சி வீரர்களில் ஒருவர். காந்தி, நேரு, போஸ், பகத்சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களைவிட ஆங்கிலேயர்களை எதிர்த்ததில் மிகக் கூர்மையான நிலைப்பாட்டை எடுத்தவர். மறைந்திருந்து கொல்வது, எதிரி எதிர்பாராமல் இருக்கும்போது தாக்குவது போன்ற வீரதீரப் போர்த் தந்திரங்களின் மூலம் ஆங்கிலேயரை எதிர்கொள்ளலாம் என நினைத்து உழைத்தவர். மறு தரப்பினருக்கு, சாவர்க்கர் ஒரு கோழை. ஆங்கிலேயர்களிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு, காலில் விழுந்து விடுதலை பெற்றவர். முதுகில் குத்தும் கலையில் கைதேர்ந்தவர். இந்துத்துவம் என்ற பூதத்திற்கு உயிரும் வடிவமும் தந்தவர். பல கொலைகாரர்களுக்குக் கையில் கத்தியை எடுத்துக் கொடுத்தவர். காந்தியைக் கொன்றவர்களில் முதல் குற்றவாளியாக அவர்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் தந்திரமாகத் தப்பிவிட்டார்.

முதல் தரப்பினர், இந்துத்துவத்தை ஆதரிப்பவர்கள். இரண்டாம் தரப்பினரில் இன்று பல கட்சிகளையும் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். கஷ்டம் என்னவென்றால், இரு தரப்பினரிலும் பெரும்பான்மையினருக்கு உண்மையான வரலாறு மீது ஈடுபாடு கிடையாது.

உண்மையான வரலாறு என்ன? யார் உண்மையான சாவர்க்கர்? மிக எளிய முறையில் இவற்றைப் பற்றி, நான் எழுதலாம் என்றிருக்கிறேன். எனக்கு உறுதுணையாக நின்றவை மூன்று புத்தகங்கள்.

வைபவ் புரந்தரே எழுதிய ‘சாவர்க்கர்: தி ஸ்டோரி ஆஃப் தி ஃபாதர் ஆஃப் ஹிந்துத்வா’ (Savarkar: The True Story of the Father of Hindutva). விக்ரம் சம்பத் எழுதிய ‘சாவர்க்கர்: தி எக்கோ ஃப்ரம் அ ஃபர்காட்டன் பாஸ்ட்’, ‘சாவர்க்கர்: எ கன்டெஸ்ட்டட் லெகஸி’ (Savarkar: The Echoes from a Forgotten past, Savarkar: A Contested Legacy).

இந்தப் புத்தகங்களுக்கு நான் ‘அவுட்லுக்’ இதழுக்கு ஏற்கெனவே மதிப்புரைகள் எழுதியிருக்கிறேன். படிக்க விரும்புபவர்கள் இங்கே படிக்கலாம். இப்புத்தகங்கள் சாவர்க்கரை அனுதாபத்தோடு அணுகுகின்றன. விமர்சனம் செய்யும் நோக்கில் அணுகவில்லை. அதேசமயம், இவை புகழாரம் சூட்டும் வாழ்க்கை வரலாறுகள் அல்ல என்றும் சொல்ல முடியும். மிகுந்த கவனத்தோடு, ஆவணங்களின் துணையோடு எழுதப்பட்டவை.

எனக்கு சாவர்க்கர் பெயர் தெரியும்போது பதினோறு வயதிருக்கும். 1957-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று அழைக்கப்பட்ட 1857 எழுச்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்தச் சமயத்தில் சாவர்க்கர் எழுதிய ‘தி இண்டியன் வார் ஆஃப் இண்டிபென்டன்ஸ்’ (The Indian War of Independence) நூலானது  தமிழில் ஜெயமணி சுப்ரமணியம் மொழிபெயர்ப்பில் வந்தது; ‘எரிமலை’ என்ற பெயரில்.

ஜெயமணி சுப்ரமணியம் அன்றைய மலாயாவின் புகழ்பெற்ற 'தமிழ்நேசன்' பத்திரிகையில் வேலை பார்த்தவர். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் கையில் மலாயா இருந்தபோது, ஹிட்லரின் ‘மெயின் காம்ஃப்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். மிக மோசமான மொழிபெயர்ப்பு, ஹிட்லருக்குத் தமிழ்த் தெரிந்திருந்தால் ஆஸ்விட்சிற்கு அனுப்பியிருப்பான் என்று சிலர் சொன்னார்கள். போருக்குப் பின்னால் சென்னை வந்து, ‘கல்கி’யில் சேர்ந்தார் என்று நினைக்கிறேன். ஆனால், ‘எரிமலை’ எனக்குப் பிடித்திருந்தது. ‘வெள்ளை ஆசிரியர்களின் விஷப் பிராச்சாரம்’ என்பது ஓர் அத்தியாயத்தின் தலைப்பு என்று நினைக்கிறேன். கே மற்றும் மாலிசன் எழுதிய ‘தி ஹிஸ்டரி ஆஃப் சிபாய் ம்யூடினி’ (The History of Sepoy Mutiny) புத்தகத்தை ஒரு பிடி பிடித்திருப்பார். நான் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றிய புரிதல் இல்லாமலேயே பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு, வெள்ளை வரலாற்று ஆசிரியர்களுக்குச் சவால் விட்டுக்கொண்டிருந்தேன்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஒவ்வொரு பெயரும் - தாதியா தோபே, மௌல்வி அஹமது ஷா, பகதூர் ஷா, நானா சாகேப், அஸிமுல்லா கான், குன்வார் சிங், எல்லாவற்றிற்கும் மேலாக ஜான்சியின் ராணி - மனதில் நின்று தாண்டவமாடிக்கொண்டிருந்தன.

சாவர்க்கர் வேறு ஏதும் செய்யாமல் இருந்திருந்தாலும், அவருடைய இப்புத்தகம் வரலாற்றில் அழியா இடம் பெற்றிருக்கும். இதன் பதிப்பாளர்கள் பட்டியல் நமக்குப் பிரமிப்பை அளிக்கிறது.

முதல் பதிப்பைத் திருத்தியவர்களில் வ.வே.சு. ஐயர், எம்.பி.டி. ஆச்சார்யா போன்றவர்கள் இருந்தார்கள். அது ஹாலந்தில் 1909-ல் மேடம் காமா, ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா போன்றவர்களின் முயற்சியால் வெளியிடப்பட்டது.

இளம் நேருவை பெரிதும் கவர்ந்த புத்தகம் இது: “அருமையான புத்தகம்.. இதற்கு புதுப் பதிப்பு வந்தால் - சுருக்கமாக, மேடைப் பேச்சு சமாச்சாரங்களை நீக்கிவிட்டு - அது 1857 சம்பவங்களைக் குறித்த பிரித்தானிய பிரித்தானியப் பிரச்சாரங்களுக்கு மிகச் சரியான எதிர்வினையாக இருக்கும்” என்று அந்தப் புத்தகத்தைப் பற்றி நேரு சொல்லியிருக்கிறார். இரண்டாவது பதிப்பை, கத்தர் கட்சிப் போராளியான லாலா ஹர்தயால் கொண்டுவந்தார். மூன்றாவது பதிப்பைக் கொண்டுவந்தது பகத் சிங். சுதந்திரத்திற்கு முன் நான்காவது பதிப்பைக் கொண்டுவந்தது சுபாஸ் போஸ். அவர் சிங்கப்பூரில் இருக்கும்போது கொண்டுவந்தார். இந்திய ஆசிரியர் எழுதிய எந்தப் புத்தகத்திற்கும் இத்தகைய பதிப்பாளர்கள் இருந்ததாகத் தெரியவில்லை.

புத்தகத்தின் கடைசி வரிகள் தில்லியின் கடைசி பாதுஷாவாக இருந்த பகதூர் ஷா ஃஸஃபரின் கவிதை வரிகள்: “ஒவ்வொரு தருணமும் நீ வலுவிழந்துகொண்டிருக்கிறாய். உயிரோடு இருப்பதற்கே வெள்ளையன் காலைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துகொண்டிருக்கிறது! ஓ பேரரசனே! இந்தியாவின் வாள் உடைந்துவிட்டது! பாதுஷா பதிலளிக்கிறார்: “நம் வீரர்களின் இருதயங்களில் நம்பிக்கை இருக்கும் வரை இந்தியாவின் வாள் கூர்மையாக இருக்கும். ஒரு நாள் அது லண்டன் வாசல்களில் பளீரிடும்!”

புத்தகத்தில் இந்தியர்கள் மதம், சாதி, இனம் போன்றவற்றை மறந்து இந்திய விடுதலைக்காக ஒன்றுபட்டதைச் சொல்கிறார் சாவர்க்கர்.

 இதே சாவர்க்கர்தான் பின் முழுவதும் மாறிப்போனார்.

சாவர்க்கர் ஏன் மாறினார்? எவ்வாறு மாறினார்? நாம் இப்போது பார்க்கும் மூன்று புத்தகங்களின் இரு ஆசிரியர்களும், தங்கள் புத்தகங்களில் மாற்றத்தின் வரலாற்றைத் திறமையாகச் சொல்கிறார்கள்.

சாவர்க்கரின் வாழ்க்கையை நாம் இவ்வாறாகப் பிரித்துப் பார்க்கலாம். 1. இளம் சாவர்க்கர். 2 இங்கிலாந்தில் சாவர்க்கர். 3. அந்தமான் சிறையில் சாவர்க்கர். 4. இந்து மகா சபாவில் சாவர்க்கர். 5. காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர்.

வாழ்க்கைக் குறிப்பு

சாவர்க்கர் நாசிக் நகரத்திற்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றில் 1883-ல் பிறந்தார். இரண்டு சகோதரர்கள். ஒரு சகோதரி. ஒன்பதாம் வயதில் தாயாரை காலராவில் இழந்தார். தந்தை இனாம் நிலத்திற்குச் சொந்தக்காரர். பெரும் பணக்காரர் என்று சொல்ல முடியாவிட்டாலும் வறுமையில் இருந்த குடும்பம் இல்லை. நிலத்தை எதிர்பார்த்து இருந்ததால், பஞ்சம் வரும்போதும், மழை தவறியபோதும் வருமானத்திற்கு தடைகள் இருந்தன.

அனேக சித்பவன் பிராமணர்களைப் போலவே சாவர்க்கரின் தந்தையும் திலகரை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். திலகரின் ‘கேசரி’ பத்திரிகையை சாவர்க்கர் இளவயதிலேயே படித்ததால், அரசியல் உணர்வு அவருக்குப் பிறந்தது என்று சொல்லப்படுகிறது. இள வயதிலேயே மாணவர்களோடு சேர்ந்து மசூதி ஒன்றிற்குச் சேதம் விளைவித்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எவ்வளவு உண்மை என்பது தெரியாது. ஆனால், கவிதை எழுதத் துவங்கி விட்டார் என்பது உண்மை. அவர் கவிதை ஒன்று பூனா நகரின் புகழ்பெற்ற பத்திரிகையில் வெளிவந்தபோது கிராமமே அந்நிகழ்வைக் கொண்டாடியதாம்.  

பூனா நகரில் 'ப்ளேக்' வந்தபோது உணர்வுகளை மதிக்காமல் வீடுகளுக்குள் நுழைந்தார் என்பதற்காக 'ரேண்ட்' என்ற ஆங்கிலேயரைக் கொன்தற்காக சாபேகர் சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அதை எதிர்த்து இளம் சாவர்க்கர் கவிதை எழுதினார். இன்றும் அவர் மராத்தியில் குறிப்பிடத்தக்க கவிஞரில் ஒருவராக மதிக்கப்படுகிறார். அவருடைய நெருங்கிய பால்ய நண்பர்கள் சித்பவன் பிராமணர்கள் அல்லர். தையல்காரச் சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

சாவர்க்கரின் தந்தையும் ப்ளேகிற்குப் பலியானார். சாவர்க்கர் அண்ணன் - அண்ணி அரவணைப்பில் வளர்ந்தார். திருமணமும் நடந்தது. யமுனா என்பது அவர் மனைவியின் பெயர். சாவர்க்கர் காலகட்டத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த பலர் ப்ளேகிற்கு பலியானார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, ஓர் இந்தியனின் வாழ்க்கை எத்தனை தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது என்பதையும் நினைக்கத் தோன்றுகிறது.

வாழ்வு என்பதே கேள்விக்குறியாக இருந்தபோது, விடுதலை பற்றியும் அன்று இளைஞர்கள் நினைத்தார்கள் என்பதே வியப்பை அளிக்கிறது. 16 வயதில் ‘மித்ரமேளா’ என்ற ரகசிய நட்பு வட்டம் ஒன்றைத் துவங்கி நடத்தியவர் மூவர். அவர்களில் ப்ளேகிலிருந்து தப்பியவர் சாவர்க்கர் ஒருவரே.

சாவர்க்கர் பின்னால் ஃபெர்கூசன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருடைய ‘மித்ரமேளா’ அமைப்பிற்கு பல உறுப்பினர்கள் சேரத்துவங்கினார்கள். பெயர், 'அபினவ பாரதம்' என்று மாற்றப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் சாவர்க்கர், அவருடைய  புகழ்பெற்ற ‘ஜயோஸ்துதே’ பாடலை எழுதினார் (லதா மங்கேஷ்கர் பாடி, அவரது சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கர் இசை அமைத்த பாடல் இது). இன்றும் மகாராஷ்டிரத்தில் பல நிகழ்ச்சிகளின்போது, நாம் பாரதி பாடலைப் பாடுவதுபோல மராத்தியர்களால் இப்பாடல் பாடப்படுகிறது.

1905-ல் வங்கப் பிரிவினை நடந்தபோது, நாடு முழுவதும் அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றன. பூனாவில் நடைபெற்ற வெளிநாட்டுத் துணி எரிப்புப் போராட்டத்தை, சாவர்க்கர் முன்நின்று நடத்தினார். கல்லூரி நிர்வாகம் அவரை மாணவர் விடுதியிலிருந்து விலக்கியது. பத்து ரூபாய் அபராதமும் விதித்தது.

திலகர் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துக் கடுமையாக எழுதினார். பெர்கூசன் கல்லூரி ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்டது அல்ல. இந்தியர்களால், முக்கியமாக கோகலே மேற்பார்வையில் நடத்தப்பட்டு வந்த கல்லூரி. எனவே திலகர் எழுதினார்: “தன் சொந்த நலனுக்காகவோ, அடிமைத்தனத்தினாலோ, அறிவு வறட்சியினாலோ ஓர் ஆசிரியர் மாணவனை சரியானதைச் செய்ததிற்காகத் துன்புறுத்தினால் அவர் ஆசிரியர் என்ற பட்டத்திற்கே அருகதை அற்றவர். அவர் கட்டளையை மீறுவது கட்டுபாடுகளை மீறுவதாக ஆகாது.” திலகருக்கு சாவர்க்கரை மிகவும் பிடித்துவிட்டது.

இப்போராட்டம்தான் சாவர்க்கர் இங்கிலாந்து செல்லக் காரணமாக இருந்தது. சியாமாஜி கிருஷ்ண வர்மா, இந்திய மாணவர்களுக்கு லண்டனிலிருந்து படிப்பதற்கு உதவித் தொகை அளிக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், சாவர்க்கர் தன் விண்ணப்பத்தையும் அனுப்பினார். சியாமாஜி கிருஷ்ணவர்மா, ‘இந்தியன் சோஷியாலஜிஸ்ட்’ இதழை நடத்தி வந்தவர். இந்தியா முழு விடுதலை அடைய வேண்டும் என்று அந்தக் காலகட்டத்தில் விரும்பிய மிகச் சிலரில் ஒருவர் அவர்.  கிருஷ்ண வர்மா உதவித்தொகை பெறும் மாணவர்கள் பின்னால் அரசு வேலையில் சேர மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருந்தார். திலகர் சாவர்க்கரின் விண்ணப்பத்தைப் பரிந்துரைத்தார். அவர் அரசு வேலையில் சேரமாட்டார் என்ற உறுதிமொழியையும் அளித்தார். பரிந்துரையோடு அனுப்பப்பட்ட விண்ணப்பம் உடனடியாக ஏற்கப்பட்டது.

வெளிநாடு செல்லும் முன்னால் அவர் பேசியவை பின்னால் அவர் மீது தேசத் துரோக குற்றஞ்சாட்டப்பட்டபோது பயன்படுத்திக்கொள்ளப்பட்டன.

ஒரு பேச்சில் அனுமான் சிலையைக் காட்டி, அவர் காலுக்கு கீழ் கிடக்கும் அரக்கனின் வண்ணம் வெள்ளை அல்லது சிவப்பு என்றார். பிரித்தானியரின் நிறமும் அதுதான். அவர்களையும் அரக்கனை நசுக்குவதுபோல நசுக்க வேண்டும் என்று சொல்லாமல் சொன்னார்.  இன்னொரு பேச்சில் சிவாஜியை மேற்கோள் காட்டி ‘ஒன்று திரட்டுங்கள், ஊக்கம் கொடுங்கள், வெளிநாட்டவரை இங்கிருந்து விரட்டும் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்துங்கள்’ என்றார்.  கடைசிப் பேச்சில் அவர் சொல்கிறார்: “நாம் தர்மத்தைக் கடைப்பிடித்தால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும்  சொந்தமான இந்த நாடு வளம் பெறும். இது இங்கு பிறந்தவர்களுக்குச் சொந்தமானது.  இங்கு நமக்காக உணவைக் கொடுக்கும் உழவர்களுக்குச் சொந்தமானது. அவர்கள் குழந்தைகளுக்குச் சொந்தமானது. இவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படலாம். மற்றவர்களுக்காகச் சேவை செய்யப்பிறந்தவர்கள் என்று அழைக்கப்படலாம். சேவை செய்யப்பிறந்தவர் என்றே வைத்துக் கொண்டாலும், யாருக்குச் சேவை செய்யப்பிறந்தவர்கள்? நம் போன்ற அடிமைகளுக்காக அல்ல. நாட்டுக்காக.”

09 ஜூன் 1906ம் ஆண்டு அவர் இங்கிலாந்திற்குக் கப்பலேறினார். அவர் வாழ்க்கையின் அடுத்த கட்டம் ஆரம்பித்தது.

(நாளை பேசுவோம்…)

பின் இணைப்புகள்:

சாவர்க்கர் நூல்களைப் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் ‘அவுட்லுக்’ இதழுக்கு எழுதிய மதிப்புரைகள்

https://www.outlookindia.com/magazine/story/books-pro-patria-mori-meets-fire-and-brimstone/302276

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.








1

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

V balasubramaniam   3 years ago

வீர சவர்க்காரை எரிமலை வாயிலாக எனது 13ஆம் வயதில் அறிந்தேன் அப்போது எனது ரத்தம் கொதித்தது மனிதர்கள் மாறுகிறார்கள் சவர்க்கார் விதிவிலக்கல்ல எனக்கு வயது 80 அவர் என்னளவில் சாகசங்கள் செய்த போராளிகளில் ஒரு முன்னோடி எண்ணுவதற்குரிய மனிதர்

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

Pulianthope mohan   3 years ago

இதில் கட்டுரையாளர் ஹர்தயாள் பற்றி குறிப்பிடும்பொழுது ஹர்தயாள் போன்ற மனிதர்கள் மதச்சார்பின்மைக்கு எத்தகைய தீங்கு விளைவித்ததாக இருந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருந்தால சிறப்பாக இருந்திருக்கும்( அண்ணல் அம்பேத்கர் அதை பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை என்ற புத்தகத்தில் தன் வரலாற்றுப் பணியை சிறப்பாக செய்திருப்பார்) ...மற்றோரிடத்தில் பிளேக் நோய் பற்றி குறிப்பிடும்பொழுது எதனால் அவர்கள் உணர்வு புன்பட்டது...அந்த காரணத்தையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்...சாபேகர் சகோதரர்கள் தூக்கு மேடை ஏறிய போது சனாதனத்தை காக்க அவர்கள் உதித்த வார்த்தைகளையும் இந்த கட்டுரையாளர் பதிவிட்டிருந்தாள்..வரலாற்றை ஆய்வு செய்கிறார் என்று நாம் ஒப்புக் கொள்ளலாம்...இதை படிக்கக்கூடிய ஒரு ஆரம்ப நிலை வரலாற்று வாசிப்பாளர் சாவாகரை கதாநாயகனாகவே பார்ப்பார்..!

Reply 20 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

இந்தக் கட்டுரை என்னை 2019 கேரளா இலக்கிய விழா நினைவுகளுக்கு அழைத்துச்செல்கிறது. சாவர்க்கரைப்பற்றிய அரங்கில் நூலாசிரியர்களுடன் மனு எஸ் பிள்ளை நிகழ்த்திய உரையாடலுக்குப்பின் எழுந்த முதல் கேள்வி, "இது சாவர்க்கருக்கு வெள்ளை அடித்து ஒரு சுதந்திரப் போராட்டக்காரராக நிறுவ முயலும் நிகழ்ச்சியா?". தான் நம்பும் விஷயங்களுக்கும் உண்மைக்குமுள்ள தூரம் தெளிந்தபின் அதை ஏற்க மறுத்து அப்பெரும்கூட்டம் ஆர்ப்பரித்தது. (காணொளி இணையத்தில் உள்ளது) . அது தமிழ்ச்சூழலில் நிகழாதிருப்பதாக. சாவர்க்கர் இந்துத்துவத்திற்கான அடிப்படைக்கட்டமைப்பில் செயலாற்றியிருந்தாலும், அவருள்ளும் ஆதிக்கத்திற்கு எதிரான நெருப்பெரிந்தது. சாவர்க்கரை மன்னிப்புக் கடிதம் எழுதியவராக மட்டும் குறுக்கி நிறுவுவோம் என்றால் அது வரலாற்றில் அத்தனிமனிதனின் பங்களிப்புக்கு நாம் செய்யும் துரோகம்; அதை அறிவியக்கத்தினர் செய்யலாகாது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

சூ.ம.ஜெயசீலன்   3 years ago

அருமை!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

மோடி அரசுஃபுளோரைடுசந்துரு பேட்டிஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்காளைகள்இளமரங்கள் பாஜக உள்ளுக்குள் எதிர்கொள்ளும் எதிர்க்குரல்கள்புரோட்டீன்சோஸியலிஸம்விகாஸ் தூத் கட்டுரைஅப்பாவுவின் யோசனை ஜனநாயகத்துக்கு முக்கியமானதுசட்டப்பேரவைரத்தமும் சதையும்அபூர்வ ரசவாதம்மியூசிக் அகாடமிநம் காலம் செயல்பட விடுவார்களா?ஏழாவது கட்டம்கசந்த உறவுபழங்குடி சமூகங்கள்ஒன்றிய திட்டங்கள்நவீனத் தமிழ்க் கவிதைசாத் மொஹ்சேனிவேலைத்தரம்சாதிவாரிக் கணக்கெடுப்புஸ்டேட்டிஸ்டிக்ஸ்ஜாதிய ஏற்றத்தாழ்வுஉடல் பருமன்சமஸ் முக ஸ்டாலின்சாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!