கட்டுரை, அரசியல், கலாச்சாரம், வரலாறு 15 நிமிட வாசிப்பு

ஹாங்காங்கின் 25 ஆண்டுகள்

மு.இராமநாதன்
30 Jun 2022, 5:00 am
0

சீன அதிபர் ‘ஷி ஜிங் பிங்’ ஜூலை 1 அன்று (1.7.22) ஹாங்காங் வருகிறார். கரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் நேற்று வரை அவர் சீனாவைத் தாண்டி வெறெங்கும் பயணிக்கவில்லை. ஆகவே, இந்தப் பயணம் சர்வதேச ஊடகங்களில் செய்தியாகி இருக்கிறது.

ஹாங்காங் சீனாவின் ஒரு மாநிலம்தானே? பிறகு ஏன் இது செய்தியாக வேண்டும்? சீனாவின் இன்னபிற மாநிலங்களைப் போன்றதல்ல ஹாங்காங். அது தன்னாட்சி அதிகாரங்களும் ஜனநாயக உரிமைகளும் கொண்டது. ஹாங்காங் சீனாவிற்கு உள்ளேதான் இருக்கிறது. ஆனால், சீனாவின் பிற பகுதிகளிலிருந்து ஹாங்காங்கிற்குச் செல்ல விசா வேண்டும். அதாவது, ஹாங்காங் சீனாவிற்கு வெளியில் இருக்கிறது. 

ஹாங்காங் சீனக் குடையின்கீழ் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்கத்தான் ஷி ஜிங் பிங் வருகிறார். சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் ஹாங்காங் இன்று இடம்பெறும். அதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. அது ஹாங்காங்கின் தனித்துவம். 

ஹாங்காங் ஒரு நகரம். ஹாங்காங் ஒரு மாநிலம். ஹாங்காங் ஒரு நாடு. ஓப்பிய யுத்தத்தில் 1842ஆம் ஆண்டு ஹாங்காங்கைக் கைப்பற்றியது பிரிட்டன். அது முதல் 155 ஆண்டுக்காலம் அது பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. தன் தனித்துவத்தின் ஒரு சிறு பகுதியை அது பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றிருக்கலாம். 1997இல் சீனாவோடு இணைந்தது ஹாங்காங். தன் தனித்துவத்தின் பிறிதொரு பகுதியை அது தாய் மண்ணிலிருந்து பெற்றிருக்கலாம். எனில், ஹாங்காங்கின் தனித்துவத்தின் பெரும் பகுதியை அதன் குடிமக்களே உருவாக்கினார்கள். ஹாங்காங்கின் வரலாறு அதைத்தான் சொல்கிறது. 

ஹாங்காங் அதன் தடையற்ற வர்த்தகத்திற்காக அறியப்படுவது. நகரின் துறைமுகமும் விமான நிலையமும் திறன் மிக்கவை. ஹாங்காங்கில் தனிமனித சுதந்திரம் நிலவுகிறது, நீதித்துறை சுயேச்சையானது. 97% மக்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது. நகரம் பாதுகாப்பானது. ஆரோக்கியாமானதும்கூட. சராசரி ஆயுள்: 83 ஆண்டுகள். உலகின் ஆகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் மூன்று ஹாங்காங்கில் இருக்கின்றன. 99.9% மெட்ரோ ரயில்கள் காலம் தாழ்த்துவதில்லை. குடிமக்கள் யாரும் கையூட்டு தர வேண்டியதில்லை. 175 நாடுகளை உள்ளடக்கிய ஊழலற்ற நிர்வாகங்களின் தரவரிசையில் ஹாங்காங் 17வது இடத்தில் இருக்கிறது. 

ஏகதேசம் சென்னைப் பெருநகரத்தின் பரப்பளவும் மக்கள்தொகையும் கொண்டது ஹாங்காங். 1997இல் ஹாங்காங்கில் காலனி ஆட்சி முடிவுக்கு வந்தது. அதுகாறும் ஹாங்காங்கில் நிலவிவந்த முதலாளித்துவமும் ஜனநாயகமும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு, அதாவது 2047 வரை பேணப்படும் என்று வாக்குறுதி நல்கியிருந்தார் மறைந்த சீனத் தலைவர் டெங் சியோ பிங். இப்போது அதன் சரி பாதித் தூரம், அதாவது 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.

டெங்கின் வாக்குறுதி எந்த அளவுக்கு நிறைவேற்றப்படுகிறது என்பதைப் பரிசீலிக்க இந்த மைல்கல் சரியான தருணமாக இருக்கும். சீன அரசு 2020இல் கடுமையான விதிகளைக் கொண்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொணர்ந்தது. தொடர்ந்து ஜனநாயகச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். இவையெல்லாம் ஹாங்காங்கின் தனித்துவம் நீடிக்குமா என்கிற ஐயத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதைப் பரிசீலிப்பதற்குக் கடந்த 25 ஆண்டு காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும். இந்த 25 ஆண்டுகளை ஒரு வசதிக்காக ஐந்தாகப் பகுத்துக்கொள்ளலாம். 

தேனிலவுக் காலம் (1997 - 2002)

பிரிட்டன், ஹாங்காங்கை சீனாவிற்கு திரும்பக் கொடுத்த வைபவம், 1997 ஜூன் 30 நள்ளிரவில் நிகழ்ந்தது. அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் கைகளை இறுக்கமாகக் குலுக்கியபோது யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, மக்கள் சீனத்தின் கொடியும், கூடவே ஹாங்காங்கின் தனிக் கொடியும் ஏற்றப்பட்டன. அடுத்த நிமிடம் முதல், அதாவது 1997 ஜூலை 1 முதல் ஹாங்காங்கில் ‘ஒரு தேசம் ஈராட்சி முறை’ (One Country Two Systems) அமலுக்கு வந்தது. 

சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அதிபர் உள்ளிட்ட அமைச்சரவையும் மாநில அமைச்சரவையும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. என்றாலும் ஹாங்காங்கிற்கு விலக்கு அளிக்க மறைந்த சீனத் தலைவர் டெங் ஸியோ பிங் ஒப்புக்கொண்டார். அவர் முன்மொழிந்ததுதான் இந்த ஈராட்சி முறை. அதாவது, சீனத்தின் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும், ஹாங்காங் ‘சிறப்பு நிர்வாகப் பகுதி’யாக (Special Administrative Region) விளங்கும்; வெளியுறவு, பாதுகாப்பு நீங்கலாகப் பிற துறைகளில் ஹாங்காங் தன்னாட்சியோடு விளங்கும்; முதலாளித்துவம், பேச்சுச் சுதந்திரம், தனி நாணயம், தனிக் குடியுரிமை, தனிக் கடவுச்சீட்டு, தனிக் கொடி, கட்டற்ற வணிகம், சுயேச்சையான நீதித் துறை போன்ற ஹாங்காங்கின் அடையாளங்கள் தொடரும். ஆட்சி மாற்றத்திற்கான இந்த விதிமுறைகள் 1984ஆம் ஆண்டே வகுக்கப்பட்டு, சீன - பிரிட்டிஷ் அரசுகளால் ஏற்கப்பட்டன.

அதன்படியே ஹாங்காங்கிற்கான ‘ஆதார விதி’களும் (Basic Law) உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமையைப் (rule of law) பேண வேண்டும் என்பதும் ஏற்கப்பட்டது. இந்த ஆதார விதிகளை ஹாங்காங்கின் குட்டி அரசமைப்புச் சட்டம் எனலாம். ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவர் (Chief Executive) ஒரு காலக்கட்டம் வரை சீன அரசுக்கு ஆதரவான உயர்மட்டக் குழுவாலும், பின்னர் மக்களால் நேரடியாகவும் தேர்வு செய்யப்படுவார் என்பதும் ஆதார விதிகளில் இருக்கிறது.

‘துங் சீ வா’, 1997இல் ஹாங்காங்கின் முதல் செயலாட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்; அவரது அமைச்சர்கள் சீன அரசின் ஒப்புதலோடு அவரால் நியமிக்கப்பட்டனர். அவரது ஆட்சியின் தொடக்கம் சுமுகமாக இல்லை. அவர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் தாய்லாந்தின் நாணயம் ‘பட்’ தலை குப்புற வீழ்ந்தது. மலேசியாவின் ‘ரிங்கட்’, இந்தோனேசியாவின்  ‘ரூபியா’, பிலிப்பைன்சின் ‘பீசோ’ என்று ஆசியப் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்தது. ஹாங்காங்கின் ரியல் எஸ்டேட் மதிப்பு சரிந்தது. வேலையின்மை அதிகரித்தது. எனினும் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் பணப்புழக்கத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் உதவின. ஹாங்காங் செல்வந்த நாடு. அதன் இருப்பு நிதியிலிருந்து செலவழிக்க அதன் செயலாட்சித் தலைவர்கள் தயங்கியதே இல்லை. ஹாங்காங், பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீண்டது.

டெங் சியோ பிங் ஒருமுறை சொன்னதுபோல 1997க்குப் பிறகும் ஹாங்காங்கின் குதிரைப் பந்தயங்களும் பங்குச்சந்தை பேரங்களும் எந்த பாதிப்புமின்றித் தொடர்ந்தன. ஊடகங்களும் நீதித் துறையும் சுதந்திரமாக இயங்கின. காலனி ஆட்சி முடிவுக்கு வந்தபோது மக்கள் கலவையான மனநிலையில் இருந்தனர்.

தாய்நாட்டோடு இணைகிற பெருமிதம் சிலருக்கு இருந்தது. என்றாலும், சீனாவின் ஆளுகையில் ஹாங்காங்கின் சுதந்திரக் காற்றுக்குப் பங்கம் நேருமோ என்கிற அச்சம் பலருக்கு இருந்தது. ஹாங்காங்கின் சுயாட்சியில் பெய்ஜிங் பெருமளவில் தலையிடவில்லை. முதல் ஐந்து ஆண்டுகளின் முடிவில் அப்படியான அச்சத்திற்கு அவசியமில்லை என்கிற முடிவுக்குப் பலரும் வந்தனர். 

சார்ஸிலிருந்து மீண்டெழுந்த காலம் (2002 - 2007)

துங் சீ வா 2002இல் இரண்டாவது முறையாகச் செயலாட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். எல்லாம் நன்றாகத் துவங்கியதுபோலத்தான் இருந்தது. 2003 மார்ச் மாதத்தில் சர்வதேச ஊடகங்களில் ஹாங்காங் தலைப்புச் செய்தியாகியது. அதற்கான காரணம் துரதிருஷ்டவசமானது. ‘சார்ஸ் – சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்’ (SARS- Severe Acute Respiratory Syndrome) எனும் தொற்றுநோய் நகரின் மத்தியில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. 2003 மார்ச் மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடையில் சுமார் 1,800 பேரைப் பாதித்து 300 பேரைக் காவு கொண்டது.

மற்றவர்களின் சுவாசக் காற்றின் மீதேறி மரண தூதன் பயணிக்கிறானோ என்று மக்கள் பீதியுற்றிருந்த அசாதாரண காலம் அது. பல நாடுகள் ஹாங்காங்கைத் தவிர்க்கச் சொல்லித் தம் குடிமக்களை அறிவுறுத்தின. பங்குச்சந்தையும் ரியல் எஸ்டேட்டும் வீழ்ச்சி கண்டன. வணிகம், தொழில், சுற்றுலா அனைத்தும் பாதிக்கப்பட்டன. ஆனால், அந்தச் சூழலிலும் அரசாங்கமும், நிர்வாக இயந்திரமும், வல்லுநர்களும், மக்களும் விவேகத்தோடு நடந்துகொண்டார்கள்; திண்மையோடு நோயைப் புறங்கண்டார்கள். அனைவரும் ஒற்றைக் கட்டாக நின்று நகரத்தை மீட்டு எழுப்பினார்கள்.

இந்த இக்கட்டான தருணத்தில் 'ஆதார விதி'களில் பிரிவு 23-ஐச் சட்டமாக்கும் முயற்சியில் இறங்கியது துங் சீ வாவின் அரசு. தேசத் துரோகம், பிரிவினை, ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி போன்றவற்றை அடக்குவதற்கு தேசப் பாதுகாப்புச் சட்டத்தை முன்மொழிந்தது. அதன் முன்வரைவு சில கடுமையான விதிகளைக் கொண்டிருந்தது. இதற்கு எதிராக 2003 ஜூலை 1ஆம் தேதி ஐந்து லட்சம் மக்கள் வீதிகளில் திரண்டனர். அரசியல் அவதானிகள் யாரும் அப்படியொரு பேரணி நடக்கக்கூடும் எனக் கணித்திருக்கவில்லை. ஹாங்காங்கில் எழுந்த அதிர்ச்சி அலைகள் பெய்ஜிங் வரை உயர்ந்தன. அரசு சட்டத்தை மீளப்பெற்றது. செயலாட்சித் தலைவர் துங் சீ வாவ் பின்னாளில் (2005) பதவி விலகினார். அதற்கு இந்தப் பேரணியே காரணமாக அமைந்தது. 

சார்ஸைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவிலிருந்து ஹாங்காங்கை மீட்பதற்காக, ஒன்றிய அரசு ஹாங்காங்கின் கதவுகளைச் சீனக் குடிமக்களுக்கு ஒருக்களித்தது. அதாவது, விசா ஏற்பாடுகளில் தளர்வு வருத்தியது. அண்டை மாநிலங்களோடு சிறப்புப் பொருளாதார ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. பிற மாநிலங்களில் வசிக்கும் சீனர்கள் ஹாங்காங்கிற்குச் சுற்றுலாப் பயணிகளாக வந்தனர். ஹாங்காங்கில் செலவு செய்தனர். நகரின் பொருளாதாரம் தலை நிமிர்ந்தது. 

மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்திருந்த துங் சீ வா, தனது பதவிக் காலம் முடியும் முன்பே 2005இல் பதவி விலகினார். அவர் பெரும் தொழிலதிபர். கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர். அவருடைய இடத்திற்கு வந்தவர் டொனால்ட் செங். ஹாங்காங் தெருக்களில் விளையாடி வளர்ந்தவர், உள்ளூர்ப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்தவர், ஹாங்காங்கின் தலைமைச் செயலராக இருந்தார், செயலாட்சித் தலைவருமானார்.

அமைதிக் காலம் (2007 - 2012)

சீனா உலகின் தலையாய சக்திகளுள் ஒன்றாக உருவெடுத்த காலமிது. சீன அரசு ஹாங்காங்கின் மீது பரிவோடு நடந்துகொண்டது. பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் மனதில் சீன அரசுக்கு ஆதரவான மனநிலை உருவாகியது. 

பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் சர்வதேச அரங்கில் சீனாவின் மதிப்பை உயர்த்தியது. அதற்கான ஒலிம்பிக் பந்தம் உலகின் பல நகரங்கள் வழியாக பெய்ஜிங்கை அடைந்தது.  சீன மண்ணில் பந்தத்தின் தொடர் ஓட்டம் துவங்கிய இடம் ஹாங்காங். மக்கள் பெருமகிழ்வுடன் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.  ஒரு தேசியப் பெருமிதம் மக்கள் மத்தியில் நிலவிய காலமது.

ஹாங்காங் சீனாவோடு நெருங்கிவருவது போல் தோன்றியது. தங்கள் தாய் மண்ணை ஹாங்காங் சீனர்கள் மீண்டும் கண்டுகொண்டதாக பெய்ஜிங் ஊடகங்கள் எழுதின.

இந்தக் காலகட்டத்தில் சட்டமன்றமும் அரசியல் கட்சிகளும் அவற்றுக்கு விதிக்கப்பட்ட வரையறைகளுக்குள் வட்டாடின. ஹாங்காங் அரசியல் கட்சிகளின் வரலாறு எண்பதுகளில்தான் துவங்கியது. ஹாங்காங் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் என்றும் ஜனநாயக ஆதரவுக் கட்சிகள் என்றும் வகைப்படுத்தப்படும். 1991இல் பிரிட்டிஷ் அரசு நடத்திய முதல் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக ஆதரவாளர்களால் 1994இல் துவங்கப்பட்டதுதான் ஜனநாயகக் கட்சி. அதற்கு முன்பாகவே 1992இல் பெய்ஜிங் ஆதரவாளர்களால் துவங்கப்பட்டது ‘டெமாக்ரடிக் அல்லையன்ஸ் ஃபார் பெட்டர்மென்ட் ஆஃப் ஹாங்காங் - டி.ஏ.பி’ (Democratic Alliance For Betterment of Hong Kong- DAB). இன்னும் பல ஜனநாயக ஆதரவு பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் அரசியல் அரங்கில் உள்ளன.

ஹாங்காங்கின் ஜனநாயகம் முழுமையானதல்ல. அதன் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், செயலாட்சித் தலைவரை ஓர் உயர்நிலைக் குழு தேர்ந்தெடுக்கிறது. 1997இல் 400 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட குழுவில் இப்போது 1,200 பேர் உள்ளனர். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு அமைப்புகளால் தேர்வு செய்யப்படுகின்றனர். எனினும் இந்த அமைப்புகள் பலவும் பெய்ஜிங்கிற்கு ஆதரவானவை. செயலாட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர். 

கார் காலம் (2012 - 2017)

லியுங் சுன் இங் என்பவர் 2012இல் செயலாட்சித் தலைவரானார். 'தேசியக் கல்விக் கொள்கை' அமலானதும் இந்த ஆண்டில்தான். பாடங்கள் சீன அடையாளத்தையும் தேசாபிமானத்தையும் மையப்படுத்தியிருக்க வேண்டும் என்கிற விதி வந்தது. இந்தக் கல்வித்திட்டம் ஹாங்காங்கின் தனித்தன்மையை இழக்கச் செய்யும் என்றனர் பல கல்வியாளர்கள். விவாதங்கள் வளர்ந்தன. ஒன்றிய அரசின் மீதும் லியுங் அரசின் மீதும் அவநம்பிக்கை படர்ந்தது. அதுவே 2014ஆம் ஆண்டில் 'சென்ட்ரலை ஆக்கிரமிப்போம்' எனும் போராட்டமாக உருவெடுக்கக் காரணமாக அமைந்தது.

அடுத்த செயலாட்சித் தலைவருக்கான தேர்தல் 2017இல் நடைபெற இருந்தது. செயலாட்சித் தலைவரை மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதற்கு 2014இல் பெய்ஜிங் ஒப்புக்கொண்டது. ஆனால், வேட்பாளர்களை ஏற்கனவே உள்ள தேர்வுக் குழுதான் நியமிக்கும் என்றும் அறிவித்தது. இதற்கு ஜனநாயக ஆதரவாளர்கள் ஒப்பவில்லை. சட்டமன்றத்தில் அங்கம் வகித்த ஜனநாயகக் கட்சிகளும் ஆதரிக்கவில்லை. ஆனால், அந்தக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை, நம்பகமான தலைமையும் இல்லை.

இந்தச் சூழலில்தான் கல்வியாளர்கள் சிலர் ‘சென்ட்ரலை ஆக்கிரமிப்போம்' எனும் இயக்கத்தைத் தொடங்கினார்கள். நகரின் வணிக மையமான சென்ட்ரலில் ஆதரவாளர்களைக் கூட்டி எதிர்ப்பைத் தெரிவிப்பது அவர்களின் திட்டமாக இருந்தது. இவர்களுக்கும் பரந்துபட்ட மக்களின் ஆதரவு இல்லை. ஆனால், சென்ட்ரல் இயக்கம் 2014 செப்டம்பர் 28 அன்று ஆக்கிரமிப்பிற்கு அழைப்பு விடுத்தபோது ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அவர்கள் அரசியல் கட்சிகளையோ சென்ட்ரல் இயக்கத்தையோ சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் மாணவர்கள். மேலும் அவர்கள் ஆக்கிரமித்தது சென்ட்ரலை அல்ல, தலைமைச் செயலகம் இயங்கும் அட்மிராலிட்டி மற்றும் கடைத்தெருக்கள் மிகுந்த மாங்காக், காஸ்வேபே ஆகிய பகுதிகளிலுள்ள பிரதான சாலைகளைதான். இங்கெல்லாம் அவர்கள் கூடாரமிட்டுத் தங்கினார்கள். குடைகளுடன் வீதிகளில் அமர்ந்துகொண்டார்கள் (மேற்கு ஊடகங்கள் இந்தப் போராட்டத்தைக் குடைப் புரட்சி என்று அழைத்தன). இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பகுதிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு இரண்டரை மாதம் நீடித்தது. ஆனால், பரவலான ஆதரவைப் பெறவில்லை. எனினும் பின்னால் வரவிருக்கிற பெரும் கிளர்ச்சிகளுக்கு இந்த முற்றுகைப் போராட்டம்தான் அடித்தளம் அமைத்தது. 

2015இல் மக்களில் ஒருவரே செயலாட்சித் தலைவராகப் போட்டியிட வேண்டும், மக்களே தம் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டன. ஆனால், சீன அரசால் அவை புறந்தள்ளப்பட்டன. 

சிதைவுகளின் காலம் (2017 - 2022)

கேரி லாம் 2017இல் செயலாட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஹாங்காங் நேரிடவிருக்கும் சிதைவுகளை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். 2019 பிப்ரவரி மாதம் கைதிகளை விசாரணைக்காக நாடு கடத்தும் மசோதா ஒன்றை அவர் முன்வைத்தார். அப்போது ஒரு ஹாங்காங் இளைஞன் தன் காதலியை தைவானில் கொன்றுவிட்டு அரவமின்றி ஹாங்காங் திரும்பிவிட்டான். குற்றம் கண்டறியப்பட்டது. ஆனால், குற்றவாளியைத் தைவானிற்குக் கைமாற்ற முடியவில்லை. இரண்டு நாடுகளுக்கிடையில் அதற்கான ஒப்பந்தம் இல்லை. அதற்கான மசோதாவைத் தயாரித்தது ஹாங்காங். இதுவரை பிழையில்லை. ஆனால், இந்த மசோதாவில் தைவானோடு சீனாவும் சேர்க்கப்பட்டது. 

சீனாவில் கைதிகள் முறையாக விசாரிக்கப்பட மாட்டார்கள் என ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் அஞ்சினார்கள். பிற்காலத்தில் எதிர்க்குரல்களை அடக்க இந்த மசோதா பயன்படலாம் என்கிற அச்சமும் சேர்ந்தது. ஜூன் 9 அன்றும் 16 அன்றும் ஹாங்காங் வீதிகளில் லட்சக்கணக்கானோர் அணிவகுத்தனர். முந்தையது வெண்சட்டைப் பேரணி. பின்னது கருஞ்சட்டைப் பேரணி. ஹாங்காங் அரசு மசோதாவை முடக்கிவைப்பதாக அறிவித்தது. ஆனால், போராட்டக்காரர்கள் பலருக்கும் அது மட்டும் போதுமானதாக இல்லை. மசோதாவைத் திரும்பப்பெற வேண்டும், செயலாட்சித் தலைவர் பதவி விலக வேண்டும் முதலான பல கோரிக்கைகள் அவர்களுக்கு இருந்தன.

அடுத்த சில மாதங்களில் நிகழ்ந்தவை ஹாங்காங்கில் முன்னுதாரணம் இல்லாதவை. போலீஸார் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. பிரதான வீதிகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விமான நிலையத்திலும் போராட்டக்காரர்கள் போலீஸாரை எதிர்கொண்டனர். பலரும் அகிம்சையைக் கீழே போட்டுவிட்டனர். அதற்குப் பதிலாகக் கையில் கிடைத்த கற்களையும் போத்தல்களையும், போக்குவரத்துக் கூம்புகளையும் எடுத்துக்கொண்டனர். அவை எறிகணைகளாகின. சிலருக்கு லேசர் ஒளிக்கதிர்கள் போலீஸாரை எதிர்க்கப் பயன்பட்டன.

போலீஸார் கண்ணீர்ப் புகையையும் ரப்பர் தோட்டாவையும் ஏவியபோது, போராடிய இளைஞர்கள் தலைக்கவசங்களும் முகமூடிகளும் கண்ணாடிகளும் கையுறைகளும் தரித்திருந்தனர். மரச் சட்டங்கள், போக்குவரத்து அறிவிப்புப் பலகைகள், இஸ்திரி மேசைகள், குடைகள் முதலானவை அவர்கள் கேடயங்களாகின. சட்டமன்றமும் சீன அரசின் அலுவலகங்களும் போராட்டக்காரர்களால் பலத்த சேதங்களுக்கு உள்ளாயின. இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை இல்லை. சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களை ஒருங்கிணைத்துக் கொண்ட இளைஞர்களின் போராட்டமாக இது இருந்தது.

ஆறு மாதங்களுக்கு மேல் நீண்ட போராட்டம், 2020இன் துவக்கத்தில் முடிவுக்கு வந்தது. காரணம்: கரோனா. தொடர்ந்து கரோனாவை நேரிடுவதில் அனைவரின் கவனமும் குவிந்தது. 2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொணர்ந்தது ஒன்றிய அரசு. 2003இல் முன்மொழியப்பட்டு பின் வலிக்கப்பட்ட அதே சட்டம். அதன் விதிமுறைகள் கடுமையானவை. அரசியலர்களும் போராட்டக்காரர்களும் கைதாகினர். ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட 'ஆப்பிள்' தினசரி நின்று போனது. தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளும் கடுமையாகின. சீனாவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியையும் மதிக்கும் 'தேசாபிமானிகள்' மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்றானது. 2021 சட்டமன்றத் தேர்தலை ஜனநாயக ஆதரவுக் கட்சிகள் புறக்கணித்தன.  

மறுபுறம் கரோனாவும் ஹாங்காங்கின் மீது கருணையோடு நடந்துகொள்ளவில்லை. நான்கு அலைகளுக்குத் தாக்குப் பிடித்த ஹாங்காங், 2022இல் ஒமிக்ரான் மேலெழும்பியபோது தடுமாறிப் போனது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 9,000 பேர் உயிரிழந்தனர். உலகம் நம்ப முடியாமல் பார்த்தது. 

2022 மே மாதத்தில் காவல் துறை அதிகாரியாக இருந்த ஜான் லீ பெய்ஜிங் ஆதரவு உயர்மட்டக் குழுவால் செயலாட்சித் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய தினம் (1.7.2022) அவரும் அவரது அமைச்சரவையும் சீன அதிபர் ஷி ஜிங் பிங்கின் முன்னிலையில் பொறுப்பேற்பார்கள். 

சீரமைப்பின் காலம் (2022-)

ஹாங்காங்கின் பொருளாதார பலம் அது ஒரு வணிக முனையம் என்பதிலும் சுற்றுலா மையம் என்பதிலும் இருக்கிறது. போராட்டங்களும் கரோனாவும் இதில் பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. எனினும் ஹாங்காங்கை முந்தைய நிலைக்கு உயர்த்த முடியும் என்று புதிய செயலாட்சித் தலைவர் நம்புகிறார். தனது தலைமயில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

ஹாங்காங் மக்கள் தனித்தன்மை மிக்கவர்கள். ஹாங்காங் மீண்டெழுவது அவர்களின் பங்களிப்பில்லாமல் நிகழாது. அவர்கள் அதிகாரத்தோடு பேசத் தயங்காதவர்கள். 'அது அவர்கள் டி.என்.ஏ.வில் இருக்கிறது' என்கிறார் பத்திரிகையாளர் ஜெஃபி லாம். புதிய செயலாட்சித் தலைவருக்கு இது தெரியும். இதை மனதில் கொண்டு சீரமைப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.

ஹாங்காங் கல்வியில் சிறந்த நாடு. ஒழுக்கத்தை ஓம்புகிற நாடு. இதன் பாதுகாப்பும் சட்டத்தின் மாட்சிமையும் பல்லாண்டு கால உழைப்பில் உருவானவை. அதைப் போராடும் இளைஞர்கள் உணர வேண்டும். ஹாங்காங்கின் தனித்தன்மையை மக்கள் விட்டுக்கொடுக்க மாட்டர்கள் என்பதையும், அவர்கள் வாழ்நிலை முன்னேற்றப்பட வேண்டும் என்பதையும், அவர்களது அரசியல் வேட்கையையும் உணர்ந்து செயலாற்ற அரசு முன்வர வேண்டும். 2003இல் சார்ஸ் தனது கொடுங்கரங்களை நீட்டியபோது ஹாங்காங் மக்களும் அரசும் ஒற்றைக் கட்டாக நின்று நகரத்தை மீட்டு எழுப்பினார்கள். அவர்கள் மீண்டும் ஒருமுறை அதைச் செய்து காட்ட வேண்டும். இரு தரப்பும் இணைந்து செயலாற்றுவதன் மூலமே அதைச் செய்ய முடியும். ஹாங்காங் நல்லதோர் வீணை. அரசும் மக்களும் அதை இணைந்து மீட்ட வேண்டும். அப்போது மீட்டிய பிறகும் அதன் நாதம் நெடுநேரம் ஒலித்துக்கொண்டிருக்கும். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


1

1





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பேருந்துகள்திரிபுராஅறிவொளி இயக்க முன்னோடிஜார்கண்ட் சட்டமன்றம்கிராந்திஅரசுக் கல்லூரிகள்நவீன விழுமியங்கள்மகேஸ் பொய்யாமொழிபள்ளிக்கல்விகருப்புச் சட்டம்சில்க்யாராநியுயார்க் டைம்ஸ் கட்டுரைஇடதுசாரிமாமாஜிஅந்தரம்பீட்டரிடம் கொள்ளையடித்துயானைகள்அருஞ்சொல் அண்ணாலால்தெங்காரயில்வே அமைச்சர்லவ் டுடேகாமத்துப்பால்இந்தியாவுக்குப் பாடம்நவீன காலம்உடல் எடைதஞ்சாவூர் பெரிய கோயில்பெரும்பான்மைவெகுஜன எழுத்தாளர்வே.வசந்திதேவிகுடியுரிமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!