கட்டுரை, அரசியல், சட்டம் 10 நிமிட வாசிப்பு

வாழ்க்கையைச் சிதைக்கலாமா சட்டம்?

கௌதம் பாட்டியா
08 Apr 2022, 5:00 am
1

பொதுவாக, ‘தில்லி கலவர வழக்குகள்’ என்று குறிப்பிடப்படும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான உமர் காலித்துக்கு, ஜாமீன் விடுதலை தர முடியாது என்று தில்லி குற்றவியல் நீதிமன்றம் சென்ற வாரத்தில் (மார்ச் 24) கூறிவிட்டது. 2020 பிப்ரவரியில் 50க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைப் பலி வாங்கிய தில்லி கலவரத்துக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் காலித்தும் ஒருவர் என்பது காவல் துறையின் குற்றச்சாட்டு. 1967இல் இயற்றப்பட்ட ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட’ப்படி (யுஏபிஏ) காலித் மீது குற்றப்பத்திரிகை தாக்கலாக்கப்பட்டு, விசாரணை நிலுவையில் இருப்பதால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 500 நாள்களுக்கும் மேலாக சிறையில்தான் இருக்கிறார், இந்த வழக்கில் விசாரணையே இன்னும் ஆரம்பிக்கவில்லை.

தில்லி கலவர வழக்கில் காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முறைகள் குறித்தும் குற்றவாளிகள் என்று அவர்கள் அடையாளம் கண்டு பலரை மட்டும் தேடித் தேடி கைது செய்தது குறித்தும் கலவரம் தொடர்பாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்தும் ஊடகங்களில் எவ்வளவோ எழுதியாகிவிட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-க்கு எதிராகத் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு, அவர்கள்தான் அதிகம் இந்த வழக்குகளில் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குடியரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத்தான் தில்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக வழக்குகள் ஜோடிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், கலவரத்தைத் தூண்டும் வகையில் (எதிர்த் தரப்பில்) பேசிய சிலர் மீது அரசுத் தரப்பு வழக்கு எதையும் பதியவில்லை. காலித்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதானது, மிகத் தீவிரமான இன்னொரு பிரச்சினையையும் சுட்டிக்காட்டுகிறது. அது, இந்தியாவின் தண்டனைச் சட்டப்படி நீதி வழங்கும் முறைமை பற்றியது ஆகும்.

ஜாமீன் மனுவை விசாரிப்பதே இழுபறி!

முதலில் இந்த உண்மைகளைப் பரிசீலிப்போம்!

ஜாமீன் கோரி 2021 ஜூலையில் மனு செய்தார் காலித். பல மணி நேரம் மனு தொடர்பாக வாதப் பிரதிவாதங்களைப் பல நாள்கள் நடத்தி, பல முறை விசாரணைகளை ஒத்திவைத்து, ஜாமீன் தர முடியாது என்ற ஆணையையே வழங்காமல் மூன்று முறை தள்ளிப்போட்டு, இறுதியில்தான் ஜாமீன் கிடையாது என்று இப்போது அறிவித்திருக்கிறது நீதிமன்றம்.

ஜாமீன் விடுதலை கோரி தாக்கல் செய்த ஒரு மனு மீது ஏன் இத்தனை முறை விசாரணை நடத்த வேண்டும், தர முடியாது என்பதைக் கூற ஏன் எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

தண்டனையியல் சட்டத்தில், ஜாமீன் என்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதே குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிக்குப் புறம்பாக, சுதந்திரமாக வாழ முடியாமல் தடுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்! குற்றவாளி என்பது நிரூபிக்கப்படாத நிலையில், வழக்கு விசாரணையில் இருக்கும் தருணத்தில் அவர்களைச் சிறையில் வைத்திருக்கக் கூடாது.

சாதாரணமான தருணங்களில் இம்மாதிரியான வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தப்பி ஓடக்கூடியவரா, சாட்சிகளை மிரட்டிக் குலைத்துவிடுவாரா என்றெல்லாம் பார்ப்பது வழக்கம். அப்படி எந்த ஆபத்தும் இல்லை என்று அரசுத் தரப்பு திருப்திப்படும் நிலையில் குற்றம் நிரூபிக்கப்படாத ஒருவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைப்பதில் பயன் ஏதும் இல்லை. இதை வேறு மாதிரிச் சொல்வதானால், குற்றம் நிரூபிக்கப்படும் வரை – குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் - அவரும் அப்பாவிதான்!

சட்டத்தின் கொடுங்கோன்மை  

இந்த இடத்தில்தான், அனைவரையும் அச்சப்படுத்தும் ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம்’ (யுஏபிஏ) என்ற கொடுங்கோன்மைச் சட்டம் தன்னுடைய தன்மையைக் காட்டுகிறது. இந்தச் சட்டப்படி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுவிட்டால் வழக்கை விசாரிக்கும் நீதிபதி, காவல் துறையின் அறிக்கை அல்லது வழக்கு ஆவணங்களையே பின்பற்றுகிறார். குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்தச் செயலில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்களை வழக்கை விசாரிக்கும் காவல் துறை முதல் நோக்கில் திருப்திப்பட்டுத்தான் இந்த வழக்கில் அவரைச் சேர்த்திருக்கிறது என்றே பெருமளவுக்கு நீதிபதி நம்பவைக்கப்படுகிறார். ஆகையால், ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் மனு மீதான விசாரணையே, இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணையைப் போல மாறிவிடுகிறது என்கிறார் குற்றவியல் நடைமுறைச் சட்ட நிபுணரான சட்ட வல்லுநர் அபிநவ் சேக்ரி.

இந்திய தண்டனையியல் சட்டங்கள் சிலவற்றிலும் யுஏபிஏ சட்டத்தின் சாயல்கள் உண்டு. சட்ட விரோத தடைச் சட்டப்படியான வழக்காக இல்லாவிட்டாலும் சிலவகை குற்றவியல் வழக்குகளில் அவற்றின் தீவிரம் கருதி, ஜாமீன் கோரும் மனுக்கள் மீது இதே கண்ணோட்டத்தில் அணுகுவதும் நடக்கிறது. இது குற்றவியல் நடைமுறைச் சட்ட நடைமுறையில் தொடரும் பிரச்சினை. ஆனால், யுஏபிஏ வழக்குகளில் இந்தத் தன்மை அப்பட்டமாக வெளிப்பட்டுவிடுகிறது.

வழக்கில் போதிய ஆதாரங்களைத் திரட்டி, சாட்சிகளை விசாரித்து – குறுக்கு விசாரணை நடத்தி, இருதரப்பு வாதங்களையும் முடித்த பிறகுதான் குற்றஞ்சாட்டப்பட்டவர் நிரபராதியா, குற்றவாளிதானா என்பதை நீதிமன்றத்தால் முடிவு செய்ய முடியும். ஆனால், ஜாமீன் மனு விசாரணையின்போதே இது எப்படி சாத்தியப்படும்?

ஆகையால், ஜாமீன் மனுவின்போதே இதை நிறுவ முற்படுவது வழக்கு நடைமுறைகளைப் பலவீனப்படுத்திவிடுகிறது.

ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான விசாரணையையே வழக்கின் குறுவிசாரணைபோல் ஆக்குவது மட்டும் பிரச்சினை அல்ல. ஒரு தரப்பு இரு கைகளாலும் குத்துச்சண்டை நிகழ்த்தும்போது எதிர்த்தரப்பு ஒரு கையைக் கட்டிக் கொண்டுதான் சண்டையிட வேண்டும் என்ற வினோத நிபந்தனையைப் போல ஆகிவிடுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்பாக அரசுத் தரப்புக் குற்றச்சாட்டுகளை அடுக்கி, அது நிரூபிக்கப்பட்டால் அவருக்குக் கிடைக்கக் கூடிய தண்டனைகள் வரையில் எடுத்துரைத்து, அப்படிப்பட்டவரை விடுதலை செய்யக் கூடாது என்று வாதிட முடிகிறது. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜாமீன் மனு தாக்கல் நிலையில், தன்னுடைய தரப்பை எடுத்துரைக்கவோ, அரசுத் தரப்பின் சாட்சிகளை விசாரிக்கவோ, அதன் ஆதாரங்களைக் கேள்வி கேட்கவோ முடிவதில்லை.

காவல் துறையின் தரப்பை மட்டுமே நீதிபதியால் முழுதாகக் கேட்க முடிகிறது. இதே வழக்கின் முழு விசாரணையாக இருந்தால், அரசுத் தரப்பின் வாதங்களைக் குற்றஞ்சாட்டப்பட்டவர் மறுக்க முடியும்; அரசின் சாட்சியங்களைக் குறுக்கு விசாரிக்க முடியும்; சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்ட முடியும்; தங்களுடைய தரப்பை நிலைநாட்ட தங்களுடைய சாட்சிகளைக் கூண்டிலேற்றி உண்மையை விளக்க முடியும்; இறுதியாக இந்த வழக்கில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படவில்லை என்றாவது வாதிட முடியும்.

ஜாமீன் மனு விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்த மாதிரியெல்லாம் வாதிடவே முடியாது. காவல் துறையின் அறிக்கை முழுக்க முழுக்க உண்மைத் தகவல்களையே அடிப்படையாகக் கொண்டது என்ற அனுமானத்தின்பேரில்தான் ஜாமீன் மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன. இந்த அனுமானத்தின்பேரில்தான் அரசுத் தரப்பு, பிரதிவாதியின் தரப்பு இரண்டுமே வாதங்களை முன்வைக்க முடியும்.

மிக அபூர்வமான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்கில் உள்ள சாட்சிய முரண்பாடுகளைச் சுட்டிக்காட்ட முடியும் அல்லது அவை நம்பகத்தகாதவை என்று கூற முடியும்.

இதைத் தெளிவாக விளக்க இன்னொரு உதாரணைத்தையும் கூறலாம். ஒரு விஷயம் தொடர்பாக இரண்டு பேரை விவாதத்துக்கு அழைத்துவிட்டு – ஒருவரை மட்டும் அவருடைய தரப்பை முழுதாகப் பேச அனுமதித்த பிறகு, எதிராளியை ஓரிரு கேள்விகள் மட்டுமே கேட்கலாம் என்று கட்டுப்படுத்திவிட்டு - யார் நன்றாகப் பேசினார்கள் என்று முடிவு செய்வதைப் போன்றது இந்த ஜாமீன் மனு விசாரணை.

இப்படிப்பட்ட நடைமுறையைக்கூட, எங்கெல்லாம் குற்றவியல் நடைமுறைச் சட்ட விசாரணைகள் மிகவும் திறமையாகவும் விரைவாகவும் நம்பத்தக்க வகையிலும் நடைபெறுகின்றனவோ அங்கே வேண்டுமானால் அனுமதிக்கலாம். குற்றவியல் வழக்குகளில் வழக்கு தொடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வருவது நிச்சயம் என்ற நிலையிருந்தால் – பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான வழக்குகளில் மட்டும் – விசாரணைக்கு முன்னதாக ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கிறார்கள் என்றால் ஓரளவுக்கு ஏற்கலாம் - அதுவும்கூட மிகவும் வலி மிக்க தண்டனைதான் (தனிப்பட்ட முறையில் இது கூட அநீதிதான் என்பேன்).

இந்தியாவில் இது நடைமுறையில்லையே! யுஏபிஏ சட்டப்படி தொடரப்படும் வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூற, பத்து ஆண்டுகள்கூட ஆகிறது. இத்தகைய சூழலில் ஜாமீன் தொடர்பாக நீதிமன்றம் எடுக்கும் முடிவு கிட்டத்தட்ட வழக்கின் தீர்ப்புபோலவே ஆகிவிடுகிறது. ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டால், குற்றஞ்சாட்டப்பட்டவர் பத்தாண்டுகளோ அதற்கும் அதிகமாகவோ சிறையிலேயே இருக்க வேண்டியதுதான். ஆனால், யுஏபிஏ வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இறுதித் தீர்ப்பில் தண்டிக்கப்படுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது. வழக்கின் முழு விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் விடுவிக்கப்படுகின்றனர்.

இத்தகு சூழலில், ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஏன் இவ்வளவு தாமதப்படுகிறது, சுற்றிச்சுற்றி வருகிறது என்பதற்கு மேலே கூறியதையே விளக்கமாகவும் கருதலாம். ஜாமீன் மனு மீதான தீர்ப்பு - வழக்கின் இறுதித் தீர்ப்பைப் போல என்பது அரசுத் தரப்புக்கும் பிரதிவாதி தரப்புக்கும் தெரியும். ஜாமீன் மனு நிராகரிக்கப்படும்போது ஏற்படும் விளைவானது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் உண்மையிலேயே குற்றம் செய்திருக்கிறார் என்று தீர்ப்பு வருமானால் என்ன நேருமோ அதற்கே இட்டுச் செல்கிறது. ஆம், அதாவது பத்தாண்டுகளுக்கும் மேல் சிறைவாசம். ஆனால், உண்மையிலேயே விசாரணை விரைவில் முடிந்து, குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டால் அவருக்குக் கிடைக்கக்கூடிய ஒரு சில சட்டப் பாதுகாப்புகள் அவர் விசாரணைக் கைதியாகத் தொடரும்போது கிடைப்பதில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

ஜாமீனுக்காக வாதிடும்போது காவல் துறை கூறுவதை முற்றாக நிராகரிக்கவோ, தவறு என்று நிரூபிக்கவோ முடியாமல், குற்றஞ்சாட்டப்பட்டவருடைய வாய் கட்டப்பட்டுவிடுகிறது. பிறகு காவல் துறையின் குற்றச்சாட்டு தவறு என்று வலுவாக நிரூபிக்கவில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டு ஜாமீன் நிராகரிக்கப்படுகிறது!

அதிகபட்ச அநீதி

தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) எதிர் சஹூர் அகமது ஷா வதாலி (2019) வழக்கில், காவல் துறை தரப்பில் கூறப்பட்டதை கீழமை நீதிமன்றம் ஆழ்ந்து விசாரிக்கத் தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தடைகூட விதித்துவிட்டது! இதனால்தான் காலித்தின் ஜாமீன் மனு ஏற்கப்படாததைப் போன்ற நிலைமை ஏற்படுகிறது. காலித் மீது காவல் துறை குற்றச்சாட்டில் கூறியிருந்த பல்வேறு தகவல்களைத்தான் ஜாமீன் நிராகரிப்பு உத்தரவில் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகளில் சில ஆதாரம் ஏதுமற்ற, காவல் துறை கேள்விப்பட்ட விஷயங்கள்தான், எனவே விசாரணையின்போது அவை ஏற்கப்பட மாட்டாது. சில நம்ப முடியாதவை, சில பிரதிவாதிகள் தரப்புக்கு பதில் தராமலே நிராகரிக்கும் வகையில் இருக்கின்றன. இந்த வழக்கில் காவல் துறைக்கு துணைபோகும் ஸ்டெனோகிராபர்போலத்தான் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என்ற கேள்வி தொடர்பாக சட்ட வல்லுநர்களும் வழக்கறிஞர்களும் கருத்து மாறுபடலாம். மேற்கொண்ட காரணங்களையெல்லாம் ஆராய்ந்த பிறகு நமக்குத் தோன்றுவது யுஏபிஏ வழக்குகளில் ஜாமீன் நிராகரிக்கப்படுவது மிகப் பெரிய அநீதி என்பதுதான்.

தண்டனையியல் சட்டப்படியான நீதிமன்ற நடைமுறைகளைச் சீர்திருத்துவது பல ஆண்டுகளாக பேசப்படும் விஷயமாகும். இனி வரும் காலத்திலாவது இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குக்கு ஆளாகிறவர்களின் எதிர்காலம் பாழாகாத வகையில் இதன் தீமைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஜாமீன் அளிக்க இச் சட்டம் விதிக்கும் நிபந்தனைகளை மறு ஆய்வு செய்து திருத்த வேண்டும் அல்லது கைவிட வேண்டும். இத்தகைய வழக்குகளில் காவல் துறையினரின் குற்றச்சாட்டுகள் எப்படிப்பட்டவை என்று ஜாமீன் மனு விசாரணையின்போதே கறாராகப் பார்ப்பது நல்லதொரு தொடக்கமாக அமையும். இதைச் செய்வதற்கு நீதித்துறைக்கு மனமும் உறுதியும் இருக்குமா என்று பார்க்க வேண்டும்.

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கௌதம் பாட்டியா

கௌதம் பாட்டியா டெல்லி சார்ந்த வழக்கறிஞர். அரசமைப்புச் சட்டம் சார்ந்து ‘தி இந்து’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் தொடந்து எழுதிவருபவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1

2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

SAMPATH.S   2 years ago

எப்போதும் போல் திரு கவுதம் பாட்டியா இந்தப் பிரச்சனையில் நீதிமன்றம் நடந்து கொண்ட முறையை அருமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

இலக்கியப் பிரதிலவ் டுடேதேவாலயம்உழைப்புஅண்ணன் பெயர்கேட்கும் திறன்இந்திய வேளாண்மைஷோஹாfinancial yearதீ விபத்துஅடிப்படையான முரண்பாடுகள்அனல் மின் நிலையம்திருமாவேலன் பெரியார்காலந்தவறாமைபருவகால மாறுதல்கள்மருந்துசெயற்கைக்கோள்பதினெட்டாம் பெருக்குஐந்து மாநிலத் தேர்தல்ஆய்வுஇயற்கைஆயுர்வேதம்காம்யுநவீன கட்டிடங்கள்எல்.இளையபெருமாள்லூஸாகாசிறுநீர்க் குழாய்தியாகராஜ சுவாமிகள்பச்சிளம் குழந்தைகள்சமஸ் - மெக்காலே

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!