கட்டுரை, வாழ்வியல் 3 நிமிட வாசிப்பு

வேனில் கால மாம்பழக் காதல்

மீனாட்சி தேவராஜ்
13 Jul 2023, 5:00 am
0

மிழ்நாட்டின் தெருக்களில் கொன்றை பூக்கள், பலாப்பழம், மாம்பழம் என கோடை காலத்தில் மஞ்சள் நிறத்தின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். நம் தேசிய பழமான மாம்பழம், நாட்டின் பல இடங்களில் வளர்ந்தாலும் தமிழர்கள் மாம்பழத்தை முக்கனிகளில் ஒன்றாக சேர்த்துக் கொண்டாடுகின்றனர். 

என்ன சொல்கிறது இலக்கியங்கள்?

தமிழ் இலக்கியங்களில் மாமரம் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. சங்க இலக்கியங்கள் கொத்துக் கொத்தாக மாம்பூக்களுடன் மாந்தளிர் துளிர் விடுவதை இளவேனில் கால வருகையின் குறியீடாகவே பாடுகின்றன. இளவேனில் காலம் காதலர்களுக்கு உகந்த மாதம் எனச் சொல்கிறது அகநானூறு. இதனால்தான் இளவேனில் காலத்தில் பூக்கும் மாம்பூக்கள் காமனின் மலர் அம்புகளில் ஒன்றாக விளங்குகிறது போலும். தலையில் சூடப்பபடாத இந்தச் சிறு பூக்கள் காதலை தூண்டும் பூக்களாக இருப்பது ஆச்சரியம்தான். 

குறுந்தொகையில் மாமரத்தை குறித்த ஒரு சுவாரசியமான குறிப்பு உண்டு. வேனில் காலத்தில் மாந்தளிர்கள் காற்றில் ஆடுவதை தலைவனை பிரிந்த தலைவி பார்க்கிறாள். இந்த நேரத்தில் தன்னுடன் இல்லாத தலைவன் எவ்வளவு கொடுமைக்காரன் என அவளுக்கு நினைக்க தோன்றுகிறது. மாம்பழங்கள் பழுத்து தொங்கும்போது தன் துணைக்கும் குட்டிகளுக்கும் அவை கிடைக்க வேண்டும் என ஒரு ஆண் குரங்கு மாமரத்தை உலுக்குகிறது. ஆண் குரங்கு தன் துணை மேல் காட்டிய பாசம் அவளை மேலும் வருத்துகிறது. தன் நிலை நினைத்து கலங்கி, தலைவன் மேல் அவளுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை தன் தோழி ஒருத்தியுடன் புலம்பித் தீர்க்கிறாள். இப்படி வேனில் காலத்தில் பூத்து காய்க்கும் மாமரம் தன் துணையை பிரிந்த தலைவிக்கு பெரும் மனக் கலக்கத்தை தந்துவிடுகிறது. 

கோடை காலத்தின் ஆரம்பத்தில் துளிர்விடும் பளபளக்கும் அழகிய வண்ணம் கொண்ட மாந்தளிர்கள் நம் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த மாந்தளிர்களை நம் இலக்கியங்கள் பெண்களின் சருமத்திற்கு உவமையாக வார்ணிக்கின்றன. ‘மாந்தளிர் மேனி’ என்னும் சொற்றொடரையும், தலைவனை பிரிந்த தலைவியின் மேனி இந்த மாந்தளிர் அழகை இழந்துவிடுவது பற்றிய குறிப்புகளையும் தமிழ் இலக்கியங்களின் பல பாடல்களில் காணலாம். 

வடுமாங்காயும் புளிக்குழம்பும்

மாங்காய் என்றால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஊறுகாய்தான். இந்த ஊறுகாய் பல ஆயிரம் காலங்கள் முன்பே தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் இருந்தது தெரியுமா? ஊறுகாயை 'காடி' என்னும் சொல்லால் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிக்கின்றன. காடி என்ற சொல்லுக்குப் புளிப்பு என்று பொருள். இன்றைய காஞ்சிபுரம் செல்லும் ஒரு யாழ் இசைக் கலைஞரின் பயணத்தைப் பற்றிப் பாடும் நூல் பெரும்பாணாற்றுப்படை.

இது ஊர் ஊராக சென்று உப்பு விற்கும் உமணர்கள் தங்களுடன் ஊறுகாயை ஜாடியில் வைத்து துணியால் மேல் வாயை கட்டி தங்கள் பயணத்தில் எடுத்துச் சென்ற காட்சியை விவரிக்கிறது. மேலும் பிராமண வீடுகளுக்கு செல்லும் விருந்தினர்களுக்கு வடுமாங்காய் ஊறுகாய் பரிமாறப்பட்டதை பற்றிய குறிப்பையும் பெரும்பாணாற்றுப்படையில் காணலாம். இன்றும் பிராமண வீடுகளில் வடுமாங்காய் ஊறுகாய்க்குச் சிறப்பு இடம் உண்டு. 

சங்கப் புலவர்கள் வடுமாங்காயை பெண்களின் கண்களுக்கு உவமையாக பாடுகிறார்கள். அறுசுவையில் ஒன்றான புளிப்பு தமிழர்களுக்கு ரொம்ப பிடித்த சுவை என்றே சொல்லலாம். மாங்காயில் இருக்கும் புளிப்புச் சுவையை பழந்தமிழர் உணவுகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். மன்னன் கிள்ளிவளவன் ஆண்ட காவிரி ஆற்றுப் பகுதியில் உழவர்கள் மாங்காயைக் கொண்டு புளிக்குழம்பு செய்ததாக சொல்கிறது புறநானூறு. இன்றும் மாங்காய் காலம் தொடங்கியவுடன் மாங்காய் நம் வீட்டு புளிக்குழம்புக்குள் வருவதை பார்க்க முடிகிறது.

கள் - கட்டு

மாம்பழத்தின் இனிப்புச் சுவையை எடுத்துரைக்கும் வண்ணம் மாம்பழத்தை ‘தேமா’ என்னும் சொல்லால் தமிழ் இலக்கியங்கள் குறிக்கின்றன. சாறுள்ள மாம்பழத்தின் சுவை நம்மை அதை விட்டு விலக முடியாதபடி செய்துவிடும் என்கிறது மலைபடுகடாம். மாம்பழத்தின் சுவையை தூய பாலின் சுவையோடு ஒப்பிடுகிறது குறுந்தொகை. பிரமாண்ட விருந்துகளில் மாம்பழத்திற்கு என்றும் தனி இடம் உண்டு. கல்யாண விருந்தில் கரும்பு சாறோடு மாம்பழ இனிப்பு பரிமாறப்பட்டதை சீவகசிந்தாமணி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

பழந்தமிழர்கள் இயற்கையாக கிடைக்கும் தானியம், பழங்களைக் கொண்டு கள் தயாரிப்பதில் வல்லவர்களாக இருந்தார்கள். வேனில் காலத்தில் அவர்கள் மாம்பழத்தில் இருந்து கள் தயாரிக்கவும் தவறவில்லை. உழவர்கள் கிளி போல் இருக்கும் மாம்பழத்தைப் பறித்து, அதன் சாறைப் பதமாக்கி பனை ஓலை குடத்தில் ஊற்றி வெயில் பட புளிக்க வைத்து கள் தயாரிப்பார்கள். பின் அந்தக் கள்ளை அவர்கள் தங்கள் அயர்ச்சியைப் போக்க குடித்து மகிழ்ந்ததாகச் சொல்லும் ஓர் அகநானூறு பாடல் இருக்கிறது. மற்றோர் அகநானூற்று பாடல் பெண்கள் மாம்பழத்துடன் தேன் போன்ற பொருள்களைச் சேர்த்து மூங்கிலுக்குள் ஊற்றி கள் தயாரித்து கடவுளுக்குப் படைத்ததாக விவரிக்கிறது.

மாங்காயின் வடிவத்தை நாம் பல இடங்களில் உபயோகம் செய்வதைக் காண்கிறோம். சிறு சிறு மாங்காய்கள் கோர்த்து தொங்குவது போன்ற மாங்காய் மாலை நகைகளில் பிரபலமானது. நம்ப ஊரில் நெசவப்பட்ட சேலைகளிலும் மாங்காய் வடிவத்தைப் பார்க்கலாம். இது மட்டுமல்ல ‘மாம்பழக் கட்டு’ என்ற சேலை உடுத்தும் முறையும் தமிழ்நாட்டில் உண்டு. கொசுவத்தைச் சேர்ந்து பின்னால் மடித்துச் சொருகுவார்கள். சொருகி பின்னால் தொங்கும் சேலையின் கொசுவம் மாம்பழம் போல இருப்பதால்தான் இதற்கு ‘மாம்பழக் கட்டு’ என்று பெயர்.

மாங்கனித் திருவிழா

இன்று மாம்பழத்தை நாம் சுவைக்க வேண்டும் என்று ஆசைப்படும்போது நம் கண்முன் நிற்கும் பெரிய சவால் ரசாயனம் கொண்டு செயற்கையாக பழம் ஆக்கப்படும் மாம்பழங்களைத் தவிர்ப்பதுதான். ஆனால், சங்க காலத்தில் விவசாய நிலங்களான மருத நிலங்களில் மாம்பழ மரங்கள் குவிந்திருந்தன. மாம்பழத்தை பறிக்க கரும்பைக் கொம்பாக பயன்படுத்தி இருகிறார்கள். மாம்பழங்கள் இயற்கையாக பழுத்து, பறிக்க ஆள் இல்லாமல் குளத்தில் விழுந்து அவற்றை வாளை மீன்கள் உண்டு இருக்கின்றன. அன்று மீன்களுக்குக்கூட இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் கிடைத்து இருக்கிறது.

மாம்பழத்தைக் கொண்டு ஒரு விழாவும் தமிழ்நாட்டில் உண்டு. ஆனி மாதம் நடுவில் காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா நடக்கும். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் பெரிய சிவபக்தர். அவர் வீட்டிற்கு ஒரு நாள் ஒரு சிவனடியார் உணவு உண்ண வருகிறார். உணவு தயாராக இல்லாததால் அம்மையார் தன் கணவர் தன்னிடம் கொடுத்த மாம்பழங்களில் ஒன்றை அவருக்கு தந்துவிடுகிறார். 

உணவு உண்ணவரும் கணவன் ஒரு மாம்பழத்தைச் சுவைத்த பின் இனொன்றையும் கேட்க, செய்வது அறியாமல் அம்மையார் சிவபெருமானிடம் வேண்டுகிறார். சிவனும் அவருக்கு ஒரு மாம்பழத்தை தந்து அருள்கிறார். தெய்வீக மாம்பழத்தை காரைக்கால் அம்மையார் பெற்றதை நினைவுகூறும் வண்ணம் மாங்கனித் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் வீட்டு மாடிகளில் இருந்து மாம்பழங்களை வாரி இறைப்பார்கள்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

4






ஐஏஎஸ்தேசியத் தலைநகர்மாநகர்சமச்சீர் வளர்ச்சிநவீனம்143 ஆண்டுகள் பழமைதி.ஜ.ரங்கநாதன்லால்துஹுமாசமஸ் அருஞ்சொல் தமிழ்நாடு பிரிவினைகடற்கரைஜனநாயக வானில் நம்பிக்கைக் கீற்றுகள்உங்களுடைய மொபைல் உளவு பார்க்கப்படுகிறதா?ஹரப்பாபெரியாரும் காந்தி கிணறும்இந்துஸ்தானி இசைக் கலைஞர் குமார் கந்தர்வாமூன்றாவது மக்களவைத் தேர்தல்கலை விமர்சகர்கண் தானம்பாலின விகிதம்அழகியலும் மேலாதிக்க சுயமும்வெள்ளப் பெருக்குஇந்திய ஊடகங்கள்காங்கோ நதிஎன்சிபிஹரிஹரசுதன் தங்கவேலு கட்டுரைதமிழ் நாட்டிய மரபுகைவிட்ட ஊடகங்கள்சைமாரோநிவாரணம்இயற்கை உற்பத்தி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!