கட்டுரை, சட்டம், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

கூடாரவல்லி

கே.சந்துரு
16 Feb 2022, 5:00 am
6

மார்கழி மாதம் 30 நாட்களும் வைணவக் கோயில்களில் ஆண்டாளின் திருப்பாவை பாடப்படும்.  அதில் 27-ம் நாள் மிகவும் புனிதமான நாள் என்று கொண்டாடுவார்கள். அந்த நாளை ‘கூடாரவல்லி’ என்று சொல்வார்கள். 27-வது திருப்பாவையின் முதல் வரிகள் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்று ஆரம்பிக்கும். அதற்கு அர்த்தம் பகைவனை வெல்லும் கோவிந்தன் என்று கூறலாம். அதுதான் காலப்போக்கில் மருவி ஆண்டாளைக் கொண்டாடும் தினமாக - கூடாரவல்லி - என்று அழைக்கப்படுகிறது. 

ஜெயலலிதா 1991-ல் முதல்வராகப் பதவி ஏற்ற காலகட்டத்தில், தனக்கென்று ஒரு தனி மேலாடையை அணிந்துகொள்ள ஆரம்பித்தார். வழக்கமாகப் புடவை தரித்து பொதுவெளிகளில் நடமாடிவந்த அவர் திடீரென்று புடவைக்கு மேல் ஒரு மேலங்கியைப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தார். எல்லோருக்கும் அதற்கான காரணம் தெரியவில்லை. அவரே பின்னர் ஒரு பேட்டியில் பெண்கள் பொதுவெளியில் வரும்போது ஏற்படும் சில சங்கடங்களைத் தவிர்க்கவே அப்படிப்பட்ட ஒரு மேலங்கியை அணிந்துகொண்டதாகக் கூறியிருந்தார். அவருடைய புதிய தோற்றத்திற்கு அச்சமயத்தில் சிலர் அவரைக் கேலிசெய்யும் விதமாக ‘கூடாரவல்லி’ என்று குறிப்பிட ஆரம்பித்தனர்.  

தங்களது தோற்றத்தை முழுமையாக மூடிக்கொண்டு வரும் இஸ்லாமியப் பெண்களை ‘கோஷா’ என்று அழைப்பார்கள். அப்படிக் கூட்டமாக புர்கா அணிந்துவரும் இஸ்லாமியப் பெண்களை ஒரு ஐரோப்பியர், ‘நகர்ந்து செல்லும் கூடாரங்கள்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். அந்த ஐரோப்பியருக்கு அது ஆரம்பத்தில் வேடிக்கைக் குறியீடாக இருந்தாலும், பின்னர் 21-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஐரோப்பிய பெண்கள் அத்தகைய உடைதரித்தலை நியாயப்படுத்தி பொதுவெளிகளில் விவாதங்களைத் தொடங்கியதை நாம் பார்த்திருக்கிறோம்.

சார்டோரியல் டெஸ்பாடிஸம் 

இஸ்லாமியப் பெண்கள் தங்களது உடலை (அ) முகத்தைத் துணியால் மூடிக்கொண்டிருக்கும் உடையானது, அதன் வகைகளுக்கு ஏற்ப புர்கா, ஹிஜாப், கூங்கட், கோஷா என்று அழைக்கப்படுகிறது. அது மதம் சார்ந்த கட்டுப்பாடு (அ) மதத்திற்கு இன்றியமையாத தேவை என்ற விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை. பெண்களின் உடை என்பது ஆண்களின் விருப்பப்பாடு என்பதை நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

என்னுடைய தீர்ப்பொன்றில் நான் இதை ‘உடை சர்வாதிகாரம்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதை வர்ணிக்க ‘சார்டோரியல் டெஸ்பாடிஸம்’ என்ற புதிய ஆங்கில வார்த்தையை என் தீர்ப்பில் பயன்படுத்தினேன். அதுகுறித்து ஆராயும் முன் சில நடைமுறை நிகழ்வுகளை இங்கு பதிவுசெய்வது அவசியம்.  நீதிமன்றங்களில் வக்கீல்கள் எந்த உடையை அணிய வேண்டும் என்பதை 1961-ம் வருடத்திய வழக்குரைஞர் சட்டத்தின் கீழ் இந்திய பார் கவுன்சில் ஒழுங்காற்று விதிகள் மூலம் நிர்ணயித்துள்ளது. பெண் வழக்குரைகளைப் பொறுத்தவரை அவர்கள் கறுப்பு கௌன் ஒன்றையும், கழுத்தில் வெள்ளைப் பட்டியும் அணிந்திருந்தால் போதும். 1980-களில் உயர் நீதிமன்றத்தில் வழக்காடிய பெண்களும் அப்படித்தான் தோன்றினார்கள். ஆனால், ஒரு நீதிபதிக்கு இதில் உடன்பாடு இல்லை. தன் முன்னால் ஆஜரான மூத்த வழக்குரைஞர் நளினி சிதம்பரத்தைப் பார்த்து, “இனி நீங்கள் ஆண்கள்போலவே கோட்டு அணிந்து அதற்கு மேல் கறுப்பு கௌன் அணிந்து வர வேண்டும்” என்று ஆலோசனை கூறினார். அதற்கு அவரும் சம்மதித்து, தான் உடை அணிவதை மாற்றிக்கொண்டார்.

நீதிமன்றங்களில் பெண் வழக்குரைஞர்கள் அனைவரும் இந்தப் புதிய உடைக் கட்டுப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டார்கள். இக்கட்டுப்பாடு குறித்து இந்திய பார் கவுன்சிலை யாரும் இதுவரை கலந்தாலோசிக்கவில்லை. இப்படிப்பட்ட புதிய உடைக் கட்டுப்பாடு விதிக்க அதிகாரத்தையும், அதற்கான தேவையையும் நீதிபதிகள் எந்த அடிப்படையில் முடிவு எடுத்தார்கள் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. சில வருடங்களுக்குப் பிறகு தங்களுக்கு முன்னால் தீர்ப்புகளைக் குறிப்பெடுத்துக்கொள்ள வரும் பெண் உதவியாளர்களும் கோட்டு அணிந்து வர வேண்டும் என்ற எழுதப்படாத விதி அவர்கள் மீது திணிக்கப்பட்டது. ஆனால், இதற்கான எதிர்ப்புகள் எதுவும் எழாத நிலையில் அவ்விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இன்றைக்கும் கட்டிடத் தொழிலாளர்களில் சித்தாள் வேலைக்கு வரும் பெண்கள் ஆண்களின் சட்டையொன்றை மேலே போட்டுக்கொண்டு வருவதைப் பார்க்கலாம். அது சௌகரியமாக இருக்கிறது என்றுகூட அவர்கள் கூறுவார்கள். இதெல்லாம் அவர்களது அனுபவத்திலிருந்து அவர்கள் உருவாக்கிக்கொண்ட ஏற்பாடுகள் என்றும், ஆண்களின் தவறான பார்வையைத் திசை மாற்றுவதற்குதான் இப்புதிய உடை என்றும் கூறினர்.

இந்த உடை மாற்றம் அவர்களாகவே உருவாக்கிக்கொண்டதே ஒழிய எந்த மேஸ்திரியோ (அ) கட்டிட ஒப்பந்தக்காரர்களோ அவர்கள் மீது திணித்ததல்ல. ஆனால், இத்தகைய உடை மாற்றத்திற்கு காரணகர்த்தாக்கள் ஆண்களாக இருந்தார்கள் என்பதற்குப் புதிய விளக்கம் தேவை இல்லை.

வேறு எவரும் விதித்திருக்க முடியாது

சில வருடங்களுக்கு முன் உச்ச நீதிமன்றமே வளாகத்தில் பணியாற்றும் வழக்குரைஞர்கள், குமாஸ்தாக்கள்கூட ஜீன்ஸ் அணியக் கூடாது என்று கட்டளையிட்டது. சமீபத்தில் பம்பாய் நீதிமன்றமோ மனைவியை ஜீன்ஸ் அணியக் கூடாதென்று கட்டளையிட்ட கணவனின் செயல் குரூரமானது என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த மனநிலையில் இருந்த ஆண் நீதிபதிகள் முன் பெண்களின் சீருடை குறித்த கட்டுப்பாடுகள் பற்றிய வழக்குகள் வந்தபோது அவர்கள் அதை எப்படி அணுகினார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தி.நகரிலிருந்த வெங்கடசுப்பாராவ் மெட்ரிகுலேஷன் பள்ளி திடீரென்று ஆசிரியர்களும் விதிக்கப்பட்ட சீருடையில் வர வேண்டும் என்று புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஆண் ஆசிரியர்கள் பேன்ட் சட்டையோடும், பெண் ஆசிரியர்கள் சல்வார் கமீஸிலும் வர வேண்டும் என்றும், தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நிர்வாகம் கூறியது.

இந்த விதியை எதிர்த்து ஆண் ஆசிரியர்கள் தமிழ்ப் பண்பாட்டின்படி வேட்டி சட்டையிலும், பெண் ஆசிரியர்கள் புடவை கட்டிக்கொண்டும் வர ஆரம்பித்தனர். நிர்வாகம் கூறியபடியே அபராதத் தொகையை சம்பளத்திலிருந்து கழித்துக்கொள்ள ஆரம்பித்தது.

இதை எதிர்த்து ஆசிரியர்கள் போட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. ஆனால், இவையெல்லாம் எந்த அதிகாரத்தின் கீழ் போடப்படுகிறது என்பதைத் தெரிவிக்கவில்லை.  ஆனால், போரூரிலுள்ள ஹோமியோ மருத்துவக் கல்லூரி மாணவி சல்வார் கமீஸ் அணிந்து வந்ததை தடுத்ததை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் நீதிபதி கே.வெங்கட்ராமன் அப்படி ஓர் உடைக் கட்டுப்பாட்டை கல்லூரி நிர்வாகம் விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் சீருடைக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டபோது ஆரம்பத்தில் வயது வந்த மாணவிகள் பாவாடை - தாவணியில் வர வேண்டும் என்று கூறப்பட்டது. அதுதான் தமிழர்களின் கலாச்சாரம் என்று பறைசாற்றப்பட்டது. ஆனால், மாணவிகளுக்கு சைக்கிள் கொடுத்தபோதுதான் அவ்வுடை எத்தகைய இன்னல்களை விளைவிக்கும் என்பது தெரியவந்தது.

இந்த விஷயத்தின் தீவிரத்தை முதல்வர் ஜெயலலிதா புரிந்துகொண்டார்; மாணவிகள் சல்வார் கமீஸ் சீருடைக்கு மாறிக்கொள்ளலாம் என்று அவர் உத்தரவிட்டார். பாராட்டுக்குரிய இவ்வுத்தரவு வந்த பிறகு தமிழ்நாடு முழுதும் அனேகமாக 90% மாணவிகள் அந்த உடையில்தான் வர ஆரம்பித்தனர். இதில் வடக்கு - தெற்கு என்ற பேச்சுக்கெல்லாம் இடமே இல்லாமல் போனது. 

காலனிய அடிமை மனோபாவம்

அரசுக்கு சொந்தமான மைதானத்தில் செயல்பட்டுவருகிறது சென்னை கிரிக்கெட் கிளப். அந்த கிளப்பில் ஆங்கிலேயர் உடை அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். முன்னுதாரண நீதிமானாகத் திகழ்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் எப்போதுமே கதராடையைத்தான் அணிவார்.  வெள்ளைச் சட்டையும், வேட்டியும் அணிந்து காலில் ஒரு ரப்பர் செருப்பைத்தான் மாட்டியிருப்பார்.

சென்னை நண்பர் ஒருவர் அவரை சென்னை கிரிக்கெட் சங்கத்துக்கு இரவு உணவு அருந்த அழைத்துச் சென்றார். வாயிலில் இருந்த காவலாளி கிருஷ்ணய்யரை கிளப்பிற்குள் விட மறுத்துவிட்டார். அந்த கிளப்பிற்கு உள்ளே வர மேற்கத்திய உடையை (பேண்ட், சர்ட், ஷு) மட்டுமே அணிந்திருக்க வேண்டும். அழைத்துச் சென்ற நண்பர் தனது விருந்தாளி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்று கூறி வாக்குவாதம் செய்தாலும் காவலாளி, "சங்கத்தின் விதி என்றால் விதிதான். ஆகவே அவரை உள்ளே அனுமதிக்க முடியாது” என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்.

இந்தச் சச்சரவை ரசிக்காத கிருஷ்ணய்யர் அந்தக் காவலாளியிடம் சங்கத்தின் விருந்தினர் புத்தகத்தைக் கொண்டுவருமாறு கூறினார். அந்தப் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு பதிவுசெய்து வெளியேறினார் கிருஷ்ணய்யர். "நான் இரவு உணவருந்தும் வேட்கையில் இங்கே வந்தபோது காவலாளி ஒருவரால் தடுக்கப்பட்டேன். நான் போட்டிருக்கும் உடை கிரிக்கெட் சங்கத்தின் கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது, மேற்கத்திய உடைகளைத்தான் அணிய வேண்டும் என்பதுதான் இங்கே விதி! அய்யகோ, சுயராஜ்ஜியம் இந்நாட்டை விடுவித்தாலும் அந்த சுதந்திரம் இந்தச் சங்கத்தின் வாசற்படியோடு நின்றுவிட்டது. நான் இன்றிரவு விருந்து உண்ணாமலேயே இங்கிருந்து திரும்புகிறேன். ஆனால் ஒரு கௌரவமான இந்தியனாக!”

சுதந்திரம் அடைந்த பிறகும்கூட விடுபடாத நமது காலனிய அடிமைப் புத்தியைத்தான் இச்சம்பவம் படம் பிடித்துக்காட்டுகிறது.  இந்தச் சம்பவத்தை கஸ்தூரி என்ற இந்திய தேசிய விமான ஆணையத்தில் வேலைபார்த்த ஊழியர் ஒருவர் தாக்கல்செய்த வழக்கில் நான் குறிப்பிட்டேன். ஒன்றிய அரசு நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர் கதர் ஆடை அணிந்து வருவதற்குத் தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து அந்த நிர்வாகத்திற்கு அபராதத் தொகை விதித்ததுடன், முதன்முறையாக அந்தத் தீர்ப்பில் 'உடை சர்வாதிகாரம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

சென்னை கிரிக்கெட் கிளப்பில் புத்தக விழாவில் கலந்துகொள்ள வேட்டியுடன் வந்த நீதிபதி ஒருவரையும், மூத்த வழக்குரைஞர் ஒருவரையும் கிளப் ஊழியர்கள் அனுமதிக்காதது ஊடகங்களில் வெளியானது. இதைப் பார்த்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் புதிய சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தார். கலாச்சார உடையில் வருபவர்களை அனுமதிக்காத கிளப் நிர்வாகங்களுக்கு சிறைத் தண்டனை என்று அறிவித்தார்.

அதிகாரத்தைப் பறிப்பதே இறுதி முடிவு

இந்த உடைக் கட்டுப்பாட்டைப் பற்றி பேசும் நேரத்தில் சம்பவம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் திடீரென்று திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தமிழ்நாட்டில் உடைக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்றதுடன், அவரே அதற்கான உடை விதிகளையும் தனது தீர்ப்பில் அறிவித்தார். ஆனால், அந்த உத்தரவை ரத்துசெய்த இரு நீதிபதிகள் அமர்வு இது நீதிபதிகளின் வேலை அல்ல என்று அவருக்கு அறிவுறுத்தியது.

பெண்கள் தோற்றத்தில் செய்துகொண்டுவரும் மாற்றங்கள், உடைகள் தொடர்பில் வேறு சில தீர்ப்புகளும் உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் நடத்தும் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்த இரு மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அம்மாணவிகள் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு விரோதமாக தங்களது புருவத்தை நூல் வைத்து திருத்திக்கொண்டனர் என்று கூறப்பட்டது. புருவத் திருத்தம் சீக்கிய மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குள் வருமா என்ற கேள்வியை விசாரித்த பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு 150 பக்கத்திற்குத் தங்களது பாஷ்யக்கார உரையில் அம்மாணவிகள் சீக்கிய மதக் கோட்பாடுகளை புறக்கணித்துவிட்டனர் என்றும் அவர்களது மத நிறுவனம் நடத்தும் கல்லூரியில் முன்னுரிமை அளித்து சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டது.

இச்சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது பெண்களின் உடை எத்தகையது என்பதை ஆண்களும் (எம்மதத்தைச் சேர்ந்தவராயினும்) அரசும் (நீதித் துறை உட்பட) தான் முடிவு செய்கின்றன. குறிப்பிட்ட உடை மதம் சார்ந்த உரிமையா என்ற வாதத்திற்குள் செல்வது இம்மதங்களின் அடிப்படைவாதிகளுக்கு ஈடு கொடுக்குமேயொழிய, பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியாது. உடை சர்வாதிகாரத்தை உடைக்க வேண்டும் என்றால், அந்த உரிமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஆண்களின் அதிகாரத்தைப் பறிப்பதே இறுதி முடிவாக இருக்கும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை வரவேற்கப்போகும் ஆண்டாளும் "பலகலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம்” என்றுதான் பாடியிருக்கிறார்களே ஒழிய,  அந்த உடை அணியும் உரிமையை ஆண் உலகம் அளித்தபடி என்று கூறவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்! 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


8

6





பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

K.SUSILKUMAR   3 years ago

இங்கே எல்லா அடிப்படை வாதங்களும் பெண்கள் மீதே திணிக்கப்படுகிறது.ஆயினும் இதை ஏற்றுக்கொள்வதும் உடைத்தெறிவதும் பெண்களின் முடிவுகளுக்கு உட்பட்டது.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

நீதியரசர் ஒன்றைத் தெளிவுபடுத்திவிட்டார். இங்கே பெண்களின் உடையையும் முடிவு செய்வது, எந்த அமைப்பாயினும், ஆண்களே என்பதை. இதற்கான சரியான தீர்வைக் கூறியவர் தந்தை பெரியார். அவர் கூறுவார் “பெண்களின் உடையைத் தீர்மானம் செய்ய வேண்டியவர்கள் பெண்கள் மட்டும்தான்” இதை வலியுறுத்தும் வகையில் அவர் கூறினார் “பெண்கள் அலமாரியில் உங்களுக்கு என்ன வேலை?”

Reply 3 0

K.SUSILKUMAR   3 years ago

அருமை தோழரே

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Theetharappan   3 years ago

மதம் என்று வரும்போது இரு வேறு சிக்கல் உறுவாகுகின்றன. ஆண் உடை, பெண் உடை. இந்த சிக்கல் ஆண்களுக்கும் உள்ளது. கோவிலுக்குள் செல்லும் போது, மேல் உடை அணிந்து செல்ல கூடாது. மதம் தவிர்த்து பொது வெளியில் இந்த சிக்கல் இல்லை. ஒரு செயல் தன்னை யார் என்று அடையாளப்படுத்தும் நோக்கில் செயல்பட்டால் அது தவறு. குறிப்பாக பொது வெளியில். இது பொது வெளியில் நடந்தவை. நான் முஸ்லிம் , நீ ஹிந்து ,என்று தனித்து அடையாளம் காணும் நோக்கில் நடந்தால் அது தவறு. அப்போது இருவருமே குற்றவாளிகள் தான். எப்படி சொல்ல.. அவரவர்களின் மதத்தின் உண்ணதத்தை, நாலு சுவற்றுக்குள் தேடுங்கள். பொது வெளியில் வேண்டாமே. இப்படிக்கு இரா.மீ.தீத்த்தாரப்பன்

Reply 0 1

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

மத சம்பந்தப்பட்ட உடைகளை அணியும் உரிமை பற்றி தீர்ப்பு வழங்கும்போது இரண்டுவிதமான தீர்ப்புகளையும் நீதிமன்றம் அளிக்கமுடியும். ஆனால் அதுவே பெண்ணுரிமை என்று வந்தால் ஒரேயொரு நியாயம்தான். எந்த நீதிமன்றமும் அதை மீறமுடியாது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

A4 Thungabhadra   3 years ago

அய்யா சந்ருவின் கட்டுரை கூடாரை வெல்லும் ஆண்டாளின் வரிகளை மேற்கோள் காட்டினாலும் கருத்தளவில் பிரஞ்ச்சு செக்யூளரிசத்தை/முற்போக்கு வாதத்தை சார்ந்திருக்கிறது. இந்திய செக்யூளரிசம் காந்தி , ஆண்டாளப் போல பக்தியை ஒரு மரபாக ஏற்றுக்கொண்டது . அல்லாவையும், ஈஸ்வரனையும், முற்போக்கையும் ஒன்றாய் பார்க்க முயல்வது இல்லை ஒன்று மற்றொன்றுக்கு பாலாமாய் அமையும் என்று நினைப்பது. இங்கு முற்போக்காளர்களால்/பெரியாரியர்களால் அவ்வாறு செய்ய முடியாது. பிரஞ்சு செக்யூளர் வாதிகள் நிச்சயம் காந்தியை ஒரு மென் இந்துத்வாகத் தான் பார்பார்கள். அவர்ளைப் பொருத்தவரை இறை, பக்தி தலை, பழமை மட்டுமே. இதைத்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் மறுக்கிறது (ஆர்டிக்கிள் 25) . இங்கே பல் சமயத்தினருக்கும் மதம் கலாச்சாரமாய் இருப்பதை சுட்டுகிறது. ஆகவே நீதி மன்றங்கள் அடிப்படை மத வழக்கம்/முறை என்பதைக்கொண்டு நவீவனத்துக்கும் / மரபுக்கும் உள்ள சிக்கலை அனுகுகின்றன ( உதாரனம் ஜெஹோவா விட்னஸ் வழக்கு, கேரள உயர் நீதி மன்றத்தின் கூட்டமர்வின் ஹிஜாப் வழக்கு தீர்ப்பு ). தோழர் சமஸ் நெற்றியில் குங்குமம் அனிபவர் , அவர் பிற்போக்காளரா, முற்போக்காளரா? குங்குமம் , ஹிஜாப் அனிந்து கொண்டே முற்போக்கு சாத்தியம் என்பதையே காந்தி, சமஸ் நமக்கு காண்பிக்கிறார்கள். அனைத்தயும் ஆய்ந்தறியும் முற்போக்காளருக்கு சரடோரிக்கல் டெஸ்பாட்டிசம் போல அறிவியல் சர்வாதிகாரத்தையும் புரிந்து கொள்ள முடியும் தானே .

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

சட்டம் – ஒழுங்குமணீஷ் சபர்வால் கட்டுரைகலைக்களஞ்சியம்அதிகாரப்பரவல்சியுசிஇடி – CUCETவழக்கு நிலுவைகீழடிநவீன கிரிக்கெட்ஓப்பன்ஹெய்மர்அச்சத்துடனா?சர்வதேச மொழிசுய தம்பட்டப் பொருளாதாரம்!மெட்ரோ டைரிஅமர்த்யா சென் பேட்டிதனித் தெலங்கானாவாய்நாற்றம்சாதி மறுப்புத் திருமணம்கார்த்திக்வேலுஇரா.செல்வம் கட்டுரைவங்கதேச அரசியல்ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?ஆரிப் முகமது கான்காந்தி கொலை வழக்குபுவியியல் அமைப்பு எனும் சவால்ஆர்.ப்ரியாAFSPAதரம்இந்தியா – பாகிஸ்தான்: வெற்றிக்கும் தோல்விக்குமான இஇந்தியர்கள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!