தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.
சில நாட்களுக்கு முன்னதாக, ராமேஸ்வரம் நகராட்சியில் பணிபுரியும் வெளிமாநிலத்தவர்கள் தங்களை நகராட்சியில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பு பேசுபொருளானது. இந்த அறிவிப்பு தொடர்பாக வாசகர் ஒருவரின் கேள்விக்கு ‘கேள்வி நீங்கள் - பதில் சமஸ்’ பகுதியில் பதில் வெளியானது. அந்த பதிலுக்கு வந்த எதிர்வினை நேற்று முன்தினம் ‘இன்னொரு குரல்’ பகுதியில் பிரசுரம் ஆனது. அந்த எதிர்வினைக்கான மறுவினையை இங்கே தருகிறோம்.
சில நாட்களுக்கு முன்பு, ராமேஸ்வரத்தில் பெண் ஒருவர் நான்கு வட மாநிலத்தவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்வினையாக உள்ளூர் நகராட்சி இங்கே வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள், தங்களது விவரங்களை நகராட்சி அலுவலகத்தில் பதிந்துகொள்ள வேண்டும் என ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
இது வழக்கமாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை உள்ளூர் நிர்வாகங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை. உடனே சிலர், 'தமிழ்நாடு மொழி வெறி பிடித்த மாநிலம்; சகிப்பின்மை இல்லாத மாநிலம்' என்றெல்லாம் திறம்பட தங்கள் வாதங்களை முன்வைக்கிறார்கள்.
நான் இந்தியாவில் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். அதில் 16 ஆண்டுகள், தில்லி, மும்பை, கர்நாடகம் (பெங்களூரு, ஷிமோகா) எனப் பணிபுரிந்திருக்கிறேன். சில நடைமுறை உண்மைகளைப் பேசலாம் என நினைக்கிறேன்.
கர்நாடகம்
அது 1970-1980 காலகட்டம், மேற்கு தமிழகத்தில் இருந்து விவசாயிகள் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா, மைசூர் போன்ற மாவட்டங்களில் நிலங்களை வாங்கியும், குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள். 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், காவிரி தீர்ப்பாயத்தின் ஆணைகளை எதிர்த்து தமிழர்களுக்கு எதிராகப் பெரும் கலவரம் நடந்தது.
இந்தப் பகுதியில் இருந்த விவசாயிகள் அனைவரும் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள். அங்கே நிலத்தை வாங்கியிருந்த விவசாயிகள் தங்கள் சொதுக்களை இழந்து தமிழ்நாடு திரும்பினர். அதேபோல, பெங்களூர் நகரத்தில் கூலி வேலை செய்துகொண்டிருந்த மக்கள் வன்முறைக்கு ஆளாகினார்கள். இதைக் கண்டித்து தமிழகத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தனவே ஒழிய, இங்குள்ள கன்னட மக்கள் மீது எந்தத் தாக்குதல்களும் நடக்கவில்லை.
மும்பை
சிவசேனை, 1960-1970களில் மும்பையில் தென்னிந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டார்கள். ரயில் நிலையங்களில் நின்றுகொண்டு, அடையாள அட்டை கேட்டு, தமிழர்கள் என்றால் அவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது.
ஐஐம் கல்கத்தாவில் பயின்று, கோத்ரேஜில் மேலாளராகப் பணிபுரிந்துவந்த என் தமிழ் நண்பர், ரயிலில் பயணம் செய்தபோது, பாதுகாப்புக்காக தான் ஒரு கோவா கிறிஸ்துவர் எனப் போலி அட்டையை எடுத்துக்கொண்டு சென்ற காலத்தைச் சொல்லியிருக்கிறார்.
தில்லி
தில்லியில் வசந்த் குஞ்ச்சில் குடியிருந்தபோது, வீட்டுப் பணிப்பெண் எனது கடிகாரம், பணம் முதலியவற்றைத் திருடிக்கொண்டு போய்விட்டார். போலீஸில் புகார் கொடுக்க எண்ணி, நண்பரிடம் பேசினேன். “நீ வசந்த் குஞ்ச் நகரில் வாடகைக்கு வந்ததையும், உன் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் விவரங்களையும் போலீஸ் நிலையத்தில் பதிந்திருக்கிறாயா?” எனக் கேட்டார். "இல்லை" என்றேன். “அப்போ எஃப்.ஐ.ஆரே போட மாட்டாங்க.. அப்படியே போடணும்னா பெரிசா செலவாகும்” என்று சொன்னார். அவர் சொன்ன செலவானது திருடுபோன மதிப்பைவிட அதிகமாக இருந்ததால், அதை விட்டுவிட்டேன்.
தொழிலாளர்களின் புலம்பெயர்வு
இதில் 1980களின் மத்திய காலத்தில் தமிழகத்தின் வறட்சியான மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பல மாநிலங்களுக்குப் புலம்பெயர்வது வழக்கமாக இருந்தது. கர்நாடகம், மும்பை, தில்லி போன்ற நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். பெங்களூரின் அசுர வளர்ச்சி காரணமாக இன்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து பெங்களூர் செல்பவர்கள் இருக்கிறார்கள்.
1980களின் இறுதியில், இந்தப் புலம்பெயர்தல் குறைந்தது. காரணம், தமிழகத்தில் ஜவுளி, முட்டை, லாரி, தோல் பதனிடுதல் போன்ற தொழில்கள் பெருமளவில் வளர்ந்தன. புதிதாக வளர்ச்சி கொண்ட மென்பொருள் துறையும் பொறியியல் படித்த லட்சக் கணக்கான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. அதிகம் படிக்காதவர்கள் துபாய், சிங்கப்பூர் எனப் புலம்பெயர்ந்தார்கள்.
தமிழகத்தின் திறனில்லா உடல் கூலி வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. மிக இயல்பாக இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலங்களில் இருந்து வேலையாட்கள் தமிழகத்துக்கு வரத் தொடங்கினார்கள். திருப்பூர், சென்னை போன்ற நகரங்களில், இவர்கள் பெருமளவில் உள்ளார்கள்.
இதுபோன்ற பெரும் நகர்வுகள் உருவாகிவருகையில், சமூக உரசல்கள் எழுவது இயல்பானது. அதுவும் ராமேஸ்வரத்தில் நடந்தது போன்ற ஒரு குற்றச் செயல் நிகழ்கையில் சில நாட்கள் மக்களிடையே உணர்வெழுச்சி அதிகம் இருக்கும். சில நாட்களில் அது நீர்க்குமிழிபோல அடங்கிவிடும்.
இன்றும் கர்நாடகத்தில் குற்றம் செய்தவர் தமிழர் எனில், அது நிகழும். தற்போதைய மலையாளப் படங்களில் கீழ்நிலைக் குற்றங்கள் செய்பவர்கள் தமிழர்களாக இருப்பதைக் காணலாம். அதேசமயம், விஜய், சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக ரசிகர்கள் இருப்பது கேரளத்தில்தான். இந்த முரணை எல்லாச் சமூகங்களிடமும் காணலாம்.
புலம்பெயர்தல் பொருளாதாரக் காரணங்களுக்காக நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. இதனால், முதலில் நடப்பது சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள். அதை எல்லா உள்ளூர் நிர்வாகங்களும் ராமேஸ்வரம் நகராட்சி செய்ததுபோல நடவடிக்கைகளை எடுத்துத்தான் கண்காணிக்க முடியும். அதே ஊரில் இப்படி இன்னொரு குற்றம் நடந்தால், வட மாநிலத்தவருக்கு எதிரான குரல்கள் வலுக்கும்.
அதேசமயம், வட மாநிலத்தவர்கள் இங்கே 5 ஆண்டுகள் வசித்தால், இந்த மாநிலத்தில் வசித்தவர்கள் என ஒரு அந்தஸ்தைப் பெற்றுவிட முடியும் (resident). அதை வைத்துக்கொண்டு, அவர்கள் குழந்தைகள் கல்லூரிகள் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புகளில் பங்கெடுக்க முடியும்.
இது இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், 70%-80% வரை உள்ளூர் வேலையாட்களைத்தான் பணியில் அமர்த்த வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால், நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
எனவே, நடந்தது ஒரு குற்றச் சம்பவம். அதற்கு உள்ளூர் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைத்தான் சட்டப்படி செய்திருக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கையில், ‘உதிரிக் குழுக்கள்’ (fringe groups) என்னும் உள்ளூர் கும்பல்கள் சப்தம் விடுவார்கள். அது தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வதற்குதான். அவர்களை பெருமளவில் செயல்பட்டு சட்ட ஒழுங்கைக் குலைக்க தமிழ்நாடு அரசு அனுமதித்ததில்லை.
எனவே, தமிழ்நாடு இனவெறி கொண்டது என்றும், சகிப்புத்தன்மையற்றது என்றும் எழுதுவது உண்மைக்குப் புறம்பானது. அமெரிக்காவில் இருந்துகொண்டு அம்புலி மாமா கதை எழுதும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்!
தொடர்புடைய கட்டுரைகள்
தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு இனவெறி?
6
4
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Thiruvasagam 2 years ago
இதே கட்டுரை நேற்று வேறு ஒருவர் பெயரில் வெளியாகி இருந்தது! ஒரு கணம் எனக்கு ‘ஜமாய் ஓ’ நிகழ்ந்துவிட்டதோ என்று தோன்றியது! 😂😂
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.