கட்டுரை, இன்னொரு குரல் 4 நிமிட வாசிப்பு

இந்திய ஆட்சிப் பணியாளர்களின் மேட்டிமை மனநிலை

சுபகுணராஜன் விஎம்எஸ்
22 Feb 2022, 5:00 am
1

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கே.அசோக்வர்தன் ஷெட்டி, வி.ரமணி ஆகியோர் எழுதிய, ‘ஐஏஎஸ் அதிகாரிகள் தேவையை எப்படி ஈடுகட்டலாம்?’ கட்டுரை பிரச்னையின் காரணிகளையும், தீர்வுகளையும் பேசும் தெளிவான கட்டுரை. பல தளங்களைத் தொட்டுப் பேசுவதும் பாராட்டுக்கு உரியது.  இந்தக் கட்டுரை முன்வைக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணிச் சீரமைப்பு ஆலோசனைகள் மிகச் சிறப்பானவை. அவை குறித்து கூடுதல் எண்ணங்களை சேர்ப்பதைவிட, திரு.அசோக் வரதன் ஷெட்டி அவர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுவிட்டு விவரிக்காமல் விடப்பட்ட இரண்டு பகுதிகள் குறித்த என் எண்ணங்களைப் பதிவுசெய்ய எண்ணுகிறேன்.

1) ஒன்றிய அரசின் துறைகளின் தலைமை நிர்வாகங்களை (கேபினட் செயலர்) எல்லாம் ஐஏஎஸ் அதிகாரிகளே ஏற்று நடத்த வேண்டும் என்ற கொள்கையைக் கைவிட வேண்டும். குறிப்பாக ஒன்றிய அரசின் நிதித் துறை மற்றும் காமர்ஸ் (இந்தத் துறையை வணிகத் துறை என்று குறிப்பிட்டால் அதன் விரிவு அகப்படாது) மற்றும் பல துறைகளின் பணித் தொகுப்பு (Cadre base) தனித்துவமாக உள்ளது. அவர்கள் முற்றிலுமாக ஒன்றிய பணிகளிலேயே இருப்பவர்கள். இவர்கள் மிக ஆபூர்வமாகவே (அரசியல் தொடர்புகளால்) மாநில அரசுப் பணிகளுக்குச் செல்ல முடியும். ஐஆர்எஸ், ஐஏஏஸ், ஐஆர்டிஎஸ் (ரயில்வே) போன்றவை அவற்றில் சில. இவர்களும் ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்வாகும் அதே யுபிஎஸ்சி மூலமாகவே தேர்வாகிறார்கள். அந்தத் துறைகளின் சிறப்புச் செயலர் (Special Secretary) வரை வரும் இவர்கள், துறைச் செயலர் ஆக முடியாது என்ற கொள்கை அர்த்தமற்றது.

மிகக் குறிப்பாக வருவாய்த் துறையில் (வருமான வரி /சரக்கு மற்றும் சேவை வரி / சுங்கம் மற்றும் கலால் துறைகள்), அந்தத் துறைகளுக்கென்ற தேர்வாகிய ஐஆர்எஸ் அதிகாரிகள் தங்கள் பணிக்காலம் முழுமையும் அங்கேயே பணிபுரியும் முற்றிலுமான ஒன்றிய அரசு அதிகாரிகள். அவர்களது துறை சார்ந்த நிபுணத்துவம் சிறப்பானது. ஆனால் நிதித்துறை, வருவாய் துறை, வணிகத்துறை, இறக்குமதி/ஏற்றுமதி போன்ற துறைகளின் துறைத் தலைமைப் பொறுப்பிற்கு இவர்களால் வர முடியாது.

2) குரூப் பி அதிகாரிகள் தேர்வு: 

இந்தப் பிரிவிற்கான தேர்வும் ஒன்றிய தேர்வாணைக் குழுவின் ஐஏஎஸ் / ஐபிஎஸ்/ ஐஆர்எஸ் போலவே நடத்தப்பட்டு, தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியவர்கள் தேர்வாகிறார்கள். இவர்கள் ஒரு குறிப்பிட்ட ஒன்றிய துறைக்கென்றே ஒதுக்கீடுசெய்யப்படுவார்கள். துறையின் இணைச் செயலர் வரையான பதவிகள் வரை வர முடியும். இந்தத் தேர்வை தொடர்ந்தால், இணைச் செயலர் பதவிகளுக்கு மாநில அதிகாரிகளை வரும்படி கட்டாயப்படுத்தும் முறையைத் தவிர்க்க முடியும். அந்தத் துறை சார்ந்த நீண்ட அனுபவம் கொண்ட இவர்களைவிட, மாநிலத்திலிருந்து தருவிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரியால் பங்களிக்க முடியாது என்பது திண்ணம்.

3) சர்வம் ஐஏஎஸ் / ஐபிஎஸ் மயம்.

ஒன்றிய அரசின் ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரம் ஒருவிதமான மேட்டிமை மனநிலை கொண்டது. ஒருவிதமான ‘குழு மனப்பான்மை’ கொண்டதும்கூட. அதிகாரத்தின் தனி உயர்வர்க்கமாக தங்களைப் பாவிக்கும் தன்மை கொண்டது. இந்த மனோபாவம் சர்வம் ஐஏஎஸ் ‘லாபி’ என்ற நிலையால் உருவானது.

ஆனால், இவர்களால் ‘பிறப்பு’ மற்றும் மேலதிகார ஆட்சியாள / அரசியல் தொடர்புகள் வழியாக வரும் Lateral Entryகளிடம் எதுவும் செய்யமுடியாது. இதற்கான சிறந்த உதாரணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்ரவர்த்தி ரங்கராஜன் (Former RBI Governor C. Rangarajan ) போன்றவர்கள். ஒரு கூகுள் செய்தால் இவர் வகித்த பல மாநில கவர்னர், தலையமைச்சரின் பொருளாதார ஆலோசகர், ராஜ்ய சபா எம்பி போன்ற பதவிகளின் பட்டியல் கொட்டும். இவர் ஒரு மாதிரி மட்டுமே. இன்னும் பல சிவராமன்கள் (இவரும் வருவாய்த் துறை செயலர் உள்ளிட்ட பல Plum posts பார்த்த தமிழர்), அஜீத் தோவல்கள் (ஐபிஎஸ்), சக்திகாந்த தாஸ்கள் (ஆர்பிஐ கவர்னராகியுள்ள முதல் ஐஆர்எஸ் அதிகாரி) உண்டு.

4. இதையெல்லாம் மீறி தலைமை அமைச்சர் மோடி அவர்களின் ஐஏஎஸ் ‘பறிப்பு’ திட்டம் மாநில உரிமைகளில் தலையிடும் நோக்கம் கொண்டதே. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பணிபுரியும் ‘கொள்கைப் பிடிப்பு’ கொண்ட சிறந்த அதிகாரிகளை ‘பிடித்து’ ஒன்றிய அரசின் மூலை ஒன்றில் இருத்துவது மட்டுமே பிரதான நோக்கம்.

ஏற்கனவே அரசுத் துறை இணைச் செயலர் வரையிலான பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளைப் பணியமர்த்தும் திட்டம் செயல்படத் துவங்கிவிட்ட நிலையில் (இந்தக் கொள்கையும் மகா ஆபத்தானது. ஆட்சியை தனியார் வசம் நகர்த்தும் எளிய வழி.) இந்த ஐஏஎஸ் திட்டம் ஓர் அரசியல் நடவடிக்கை இடையீடு மட்டுமே!

சுபகுணராஜன் விஎம்எஸ்

சுபகுணராஜன் விஎம்எஸ், அரசியல் விமர்சகர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. 'சாதியும், நிலமும், காலனியமும், மூலதனமும்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   6 months ago

RBI முன்னாள் ஆளுநர் C.ரங்கராஜன் பற்றி அறிவுலகம் அறியும். மிக நேர்மையான, திறனையான ஆளுநர். பொருளாதார நிபுணர். அவர் எழுதிய பொருளியல் நூல்கள் IIM-Aவில் பாடப் புத்தகமாக உள்ளது. மிகச் சிறந்த கல்வியாளராக இருந்து பின்னர் RBI Governorஆக நியமிக்கப்பட்டவர். அவரின் சாதனைகள், திறன்கள், economics expertiseகளை உணர்ந்து, சந்திரபாபு நாயுடு அவரை ஆந்திரா ஆளுநாராக நியமிக்க செய்து, அவரின் வழிகாட்டுதல்களை பெற்றார். ஆனால் பிறப்பால் பிரமணர் என்பதால் தான் அவர் இத்தனை சிறப்புகளை, பதவிகளை, வாய்ப்புகளை பெற்றார் எனது சுபகுணராஜன் கூசாமல் எழுதுகிறார். Nonsensical allegations. பெரியாரியம் அளித்த கொடை இது. I am outraged by this. அவரின் கட்டுரையில் இருந்து : //ஆனால், இவர்களால் ‘பிறப்பு’ மற்றும் மேலதிகார ஆட்சியாள / அரசியல் தொடர்புகள் வழியாக வரும் Lateral Entryகளிடம் எதுவும் செய்யமுடியாது. இதற்கான சிறந்த உதாரணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்ரவர்த்தி ரங்கராஜன் (Former RBI Governor C. Rangarajan ) போன்றவர்கள். ஒரு கூகுள் செய்தால் இவர் வகித்த பல மாநில கவர்னர், தலையமைச்சரின் பொருளாதார ஆலோசகர், ராஜ்ய சபா எம்பி போன்ற பதவிகளின் பட்டியல் கொட்டும். இவர் ஒரு மாதிரி மட்டுமே.//

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிராந்தியக் கட்சிகள்எதிர்ப்புஅமைச்சர் ஷாஜி செரியன்மார்க்குவஸ்மார்க்சிஸ்ட்குறைந்த வருவாய் மாநிலங்கள்அருஞ்சொல் ராஜாஜி கட்டுரைமஹாஸ்வேதா தேவிடெல்லி வழக்குமாவுச்சத்துபரம்பரைக் கோளாறுசீனக் கம்யூனிஸ்ட் கட்சிஉலக எழுத்தாளர் கி.ரா.குக்கீஅருஞ்சொல் நேருகாந்தி சமஸ்சந்துரு பேட்டி அருஞ்சொல்எதிர்வினைகள்ஜீன் திரேஸ் கட்டுரைகரும்பு சாகுபடிவழிபாடுஇந்திய பொருளாதாரம்சவுக்கு சங்கர்கட்டமைப்புப் பொறியாளர்இந்திய சுதந்திரம்வேலையில் ஜொலிப்பது எப்படி?பொதுத் தேர்தல்ஹெம்லிகாங்கிரஸ் - திரிண்மூல் காங்கிரஸ் மோதல்அரிப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!