பேட்டி, அரசியல் 10 நிமிட வாசிப்பு

ராகுலை யாரும் சந்திக்க முடியவில்லை: ஆசாத் பேட்டி

01 Sep 2022, 5:00 am
1

காங்கிரஸிலிருந்து சமீபத்தில் வெளியேறிய அதன் மூத்தத் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பல்வேறு ஊடகங்களுக்கும் அளித்த பேட்டியில், ஒரு விஷயம் புலப்படுகிறது. காங்கிரஸ் இன்று எப்படி உள்ளுக்குள் இருக்கிறது என்பதே அது! இந்தியாவில் அரசியல் துறையில் இருக்கும் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரும் வாசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய பல விஷயங்கள் ஆசாத்தின் பேட்டிகளில் வெளிப்படுகின்றன. முக்கியத்துவம் கருதி இந்தப் பேட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்கு இங்கே தருகிறது.

ராகுலை எந்த வகையில் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?

காங்கிரஸ் தலைவராக சோனியா பதவி வகித்த காலத்தின் முற்பகுதியில் - 1998-2004 காலத்தில் அவருடைய குடும்பத்தினர் கட்சி விவகாரங்களில் தலையிட்டதில்லை. மூத்தவர்களுடன் ஆலோசனை கலப்பார், அவரவர்களுக்குப் பொறுப்புகளை ஒப்படைப்பார். ராகுல் மக்களவை உறுப்பினரான பிறகு கட்சி சகாக்களிடம் ஆலோசனை கலப்பதை சோனியா குறைத்துக்கொண்டார். 2013இல் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு சோனியா பின்வரிசைக்குப் போய்விட்டார். ராகுல் நல்லவர்தான். ஆனால், கட்சி நிர்வாகத்தில் அவருக்கு ஆர்வம் கிடையாது. கட்சியை எப்படி நடத்துவது என்பதும் அவருக்குத் தெரியவில்லை.

காங்கிரஸிலிருந்து விலகும் உங்களுடைய முடிவு, பாஜகவை காஷ்மீரில் வலுப்படுத்துவதற்காக என்று குற்றஞ்சாட்டுகிறார்களே?

அரசியல் அறிவே இல்லாதவர்கள்தான் காங்கிரஸில் இப்போது நிர்வாகத்தில் இருக்கிறார்கள். அவர்கள்தான் இப்படிப் பேசுகிறார்கள். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நான் கூட்டணி வைத்தாலும் என்னால் பாஜகவுக்கு ஒரு வாக்கைக்கூட அதிகம் பெற்றுத்தர முடியாது. அதேபோல அவர்களுடைய கூட்டால் எனக்கும் ஒரு வாக்குகூட அதிகமாகக் கிடைத்துவிடாது. ஆக, இரண்டு கட்சிகளுக்குமே ஆதரவாளர்கள் வேறு வேறு என்னும்போது கூட்டணி வைப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

காங்கிரஸிலிருந்து வெளியேறிய பல தலைவர்களில் சரத் பவார், மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் மட்டுமே வென்றிருக்கின்றனர். நீங்கள் 73 வயதில் எந்த நம்பிக்கையில் தனிக்கட்சி தொடங்க நினைக்கிறீர்கள்?

அரசியல் கட்சி தொடங்குவதற்கும் வயதுக்கும் தொடர்பில்லை. சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய மகாத்மா காந்தி இதில் முதலாமவர். அவருடைய கால் தூசுக்குக்கூட நாம் சமமில்லை என்றும் எனக்குத் தெரியும். இந்திய அரசியலில் மிகுந்த செல்வாக்கு மிக்க இந்திரா காந்தியை முழுப் புரட்சி அறைகூவல் மூலம் பதவியிலிருந்து இறக்கிய ஜெயப்பிரகாஷ் நாராயண் அடுத்த உதாரணம். காஷ்மீரில் 84 வயது ஃபாரூக் அப்துல்லா இன்னமும் செல்வாக்குள்ள தலைவராக இருக்கிறார். சரத் பவார் இன்னமும் செல்வாக்குடன் இருக்கிறார். தமிழ்நாட்டில் 90 வயதைக் கடந்தும் திமுக தலைவர் மு.கருணாநிதியே முதல்வர் பதவிக்கான வேட்பாளராகக் களத்தில் நின்றார். மக்களுடைய ஆதரவு இருந்தால் எந்த வயதிலும் அரசியல் தலைவர்களால் சாதிக்க முடியும். ஜம்மு-காஷ்மீர் முதல்வராக நான் ஆற்றிய பணிகளை அனைவருமே இன்றும் நினைவுகூர்கின்றனர்.  

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் நியமனம் மூலமாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டும் பதவி வகித்தீர்கள். காங்கிரஸ் தலைவருக்கு நீங்களும் 22 பிற மூத்தத் தலைவர்களும் வெளிப்படையாகக் கடிதம் எழுதும் வரையில் காரிய கமிட்டிக்கான தேர்வு எப்படி நடக்கிறது, கூட்டு முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்றெல்லாம் எதையும் கூறாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் அடுக்கடுக்காகக் குற்றம்சாட்டுவது ஏன்?

கெட்டிலில் நிரப்பப்பட்ட தண்ணீர் அடுப்பில் வைக்கப்பட்டதும் சூடேறும். அது கொதித்து வெளியே கொப்பளிக்கும் வரை யாரும் கெட்டிலை இறக்கிவிடுவதில்லை. பல கட்சி விவகாரங்கள் அப்படித்தான். அது உள்ளுக்குள் கனிந்துகொண்டேயிருந்து ஒருகட்டத்தில் வெடித்து பொங்கும். ஏன் இப்போது மட்டும் வெடித்து வெளியேறியது என்று கேட்பதைப் போலத்தான் இருக்கிறது இந்தக் கேள்வி. இனியும் சகிக்க முடியாது என்ற நிலை வரும்போது மட்டுமே இப்படி முடிவெடுக்க முடியும்.

இப்போது நீங்கள் குற்றம்சாட்டும் அதே அமைப்பின் மூலம்தான் நீங்களும் கட்சியிலும் அரசிலும் பதவிப் பலன்களை அடைந்தீர்கள் அல்லவா?

இந்த விவரங்களையெல்லாம் என்னுடைய நூலில் நிச்சயம் எழுதுவேன். காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டங்களில் புரட்சிகரமான யோசனைகளைத் தெரிவிக்கும் முன்னணித் தொண்டனாக இருந்தேன். சமீபத்திய காரிய கமிட்டி கூட்டங்களில் நான் மௌனியாகிவிட்டது அவர்களுடைய அதிருஷ்டம். அதற்கும் காரணம் இருக்கிறது. இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோர் மீது எனக்கு அளப்பரிய மரியாதை. மிகவும் இளையவனாக இருந்தாலும் இந்திரா என்னுடன் பேசிவிட்டு என் ஆலோசனைகளை அமல்படுத்துவார். நானும் ராஜீவும் இளைஞர் காங்கிரஸில் சகபாடிகளாக உழைத்தோம். அவர் பிரதமர் - நான் கட்சியின் நிர்வாகி என்ற உறவு கடந்து தோழர்களாகவும் நண்பர்களாகவும் இருந்தோம். 

காங்கிரஸ் தலைவராக சோனியா பதவியேற்ற நாளிலிருந்தே காங்கிரஸ் காரிய கமிட்டிக்குத் தேர்தல் நடக்கவில்லை. இந்த விவகாரத்தை 2020இல் எழுப்பிய நீங்கள் ஏன் அதற்கும் முன்னால் இதைப் பற்றிப் பேசவில்லை?

சோனியா தலைவரான முதல் ஆறு ஆண்டுகளில் கட்சி நிர்வாகத்தில் பிரச்சினைகள் அதிகம் இல்லை. மூத்த சகாக்களிடம் ஆலோசனை கலந்த பிறகே செயல்பட்டார். எங்களுக்கு அதிகாரத்தை வழங்கினார். நாங்கள் அதற்கேற்பச் செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெற்றுத்தந்தோம். 1998 முதல் 2004 வரையில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸின் பொறுப்பாளராக என்னை நியமித்தார்; அதில் ஏழு மாநிலங்களில் வெற்றியைப் பெற்றுத்தந்தேன், எட்டாவது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினேன். அதற்குப் பிறகு அவர் புதியவர்களுடன் ஆலோசனை கலக்கத் தொடங்கினார்; மூத்த தலைவர்களுடனான ஆலோசனைகளைக் குறைத்துக் கொண்டுவிட்டார். 2013இல் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற பிறகு இது அதிகமானது.

ராகுலின் பிரச்சினைகளை சோனியாவிடம் கூறினீர்களா அல்லது ராகுலிடமே விவாதித்தீர்களா?

சோனியாவிடம் 3 அல்லது 4 முறை பேசினேன். ராகுலிடம் 6 முறை முறையிட்டேன். சோனியாவைப் பார்ப்பதில் எனக்கு இடர் இருந்ததில்லை. இளையவரைத்தான் சந்திக்க முடிந்ததில்லை. நான் மட்டுமல்ல; பிற மூத்த நிர்வாகிகளாலும் எளிதில் சந்திக்க முடியவில்லை. மீண்டும் சோனியாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம், அதற்கும் பலன் இல்லை. அதன் பிறகே 23 பேர் கூட்டாகச் சேர்ந்து கடிதம் எழுதினோம். முதலில் நான்தான் சோனியாவுக்குக் கடிதம் எழுதினேன்; 23 பேர் கடிதத்தில் உள்ளவற்றை நான் முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன். பதிலுக்காக ஒரு மாத காலம் காத்திருந்தேன். எதுவுமே நடக்கவில்லை. பிறகே அனைவரும் சேர்ந்து கடிதம் எழுதினோம். அதற்குப் பிறகு 2020 டிசம்பரில் சோனியா, ராகுல், பிரியங்காவை நானும் வேறு 10 பேரும் சந்தித்தோம். அந்தக் கூட்டத்தில்கூட கட்சிக்கு வலுவூட்ட குறுகிய கால, நீண்ட கால திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவையும் அமல்படுத்தப்படவில்லை. 

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கொண்டுவந்த அவசரச் சட்ட நகலை ஊடகங்களின் முன்னால் 2013இல் ராகுல் காந்தி கிழித்து எறிந்தது தான் அரசின் மீதான நம்பிக்கைக் குலைவுக்கு முக்கிய காரணம் என்று குற்றஞ்சாட்டினீர்கள், நீங்களும் அப்போது அரசில்தானே இருந்தீர்கள், ஏன் மௌனம் சாதித்தீர்கள்?

அவசரச் சட்டத்தை இயற்றிய பிரதமரே அதைக் கண்டித்தோ, குறை கூறியோ எதுவுமே சொல்லவில்லையே? பிரதமர் மவுனமாக இருந்ததால் நான் எதையும் சொல்லவில்லை. அவர் அதை ஏற்றுக்கொண்டு சமரசப்பட்டுவிட்டார். அச்செயலை அவமானமாகக் கருதினால் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றுகூட சிலர் அவரிடம் கூறினார்கள். நிலைமை மேலும் மோசமாகிவிடக்கூடாது என்று நாங்களும் அமைதி காத்தோம். கட்சித் தலைமை நாம் சொல்வதைக் கேட்கவில்லை என்ற உடனேயே பதில் நடவடிக்கையை எடுத்துவிட முடியாது; தலைமைக்கும் சிறிது அவகாசம் அளிக்கத்தான் வேண்டும். 2019 மக்களவை பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ராஜிநாமா செய்வதாக அறிவித்த ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் தன்னை ஆதரிக்காததால் விலகுவதாகக் குறிப்பிட்டார். ‘எந்த விஷயத்தில் உங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை?’ என்று கேட்டோம். ‘சௌகிதார் சோர் ஹை’ (காவல்காரனே திருடன்தான்) என்ற தன்னுடைய முழக்கத்தை யாரும் வழிமொழியவில்லை, எத்தனை பேர் அவரை ஆதரித்து அதையே பேசினார்கள் என்று கேட்டார். கூட்டத்தில் இருந்த சில இளம் உறுப்பினர்கள் மட்டுமே கையை உயர்த்தினார்கள். மூத்தவர்கள் நாங்கள் கைகளை உயர்த்தவில்லை. இந்த மாதிரியான ஆதரவைத்தானே கட்சித் தலைமை எங்களிடம் எதிர்பார்த்தது? இப்படி எல்லாமே சேர்ந்து பெரிய மலையாகிவிட்டது.

சஞ்சய், ராஜீவுக்கு நெருக்கமாக இருந்தீர்கள், ஆரம்ப காலத்தில் சோனியாவுடன் பேசும் அளவுக்கு உள்வட்டக் குழுவில் இருந்தீர்கள். இப்போது புதிய உள்வட்டக் குழு வந்திருக்கிறது, இதில் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது?

அந்தக் காலத்தில் இப்படி உள்குழுவெல்லாம் கிடையாது. சஞ்சய், ராஜீவ், சோனியாவெல்லாம் ஒரு நாளைக்கு 18 மணி நேரத்தைக் கட்சிக்காக ஒதுக்கினார்கள். எவர் வேண்டுமானாலும் சந்திக்க முடியும்.

ஒருகாலத்தில் தலைமைக்கு நெருங்கிய குறுங்குழுவில் இருந்தீர்கள், இப்போது வேறு சிலர் அதில் இருக்கிறார்கள்; அதனால் உங்களுக்கு பொறாமை, செல்வாக்கு போய்விட்டதே என்று மருகுகிறீர்கள். சரிதானே?

புதிய குறுங்குழுவால் கட்சிக்கு என்ன நன்மை, அது எதையாவது சாதித்துவிட்டதா, புதிய வழியைக் காட்டிவிட்டதா? 39 முறை மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சி தோற்றிருக்கிறது, இரண்டு மாநிலங்களில் மட்டுமே கட்சி முழுமையாக ஆள்கிறது, மக்களவையில் 44 இடங்கள், மாநிலங்களவையில் 52 இடங்களாக கட்சி சுருங்கிவிட்டது. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராகும் தகுதியைக்கூட கட்சி இழந்துவிட்டது. இதுதான் புதிய குறுங்குழுவின் சாதனை என்றால், நல்லது அப்படியே தொடரட்டும்!  

காங்கிரஸிலிருந்து நீங்கள் விலகியதற்கு ஜம்மு-காஷ்மீர் பகுதியிலிருந்து மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர், நாற்பதாண்டுகள் கட்சியின் நிர்வாகியாக இருந்தும் பிற மாநிலங்களிலிருந்து ஆதரவு காணோமே?

நான் இப்போது மாநிலக் கட்சியாகத்தான் நடத்தப் போகிறேன் என்பதால் அவர்கள் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. மாநிலக் கட்சியை தேசியக் கட்சியாக மாற்றும்போது அவர்கள் வெளிப்படுவார்கள். ஜம்மு – காஷ்மீர்தான் என்னுடைய முதல் இலக்கு, கட்சியின் 90% தொண்டர்கள் என்னுடன் வந்துவிட்டார்கள்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று ஒன்றரை ஆண்டுகளாகியும் தில்லியில் அரசு பங்களாவில் உங்களால் மட்டும் எப்படித் தொடர்ந்து வசிக்க முடிகிறது, பாஜகவின் ஆதரவு இல்லாமல் எப்படி சாத்தியம் என்று கேட்கிறதே காங்கிரஸ்?

என்னைப் போல எந்த காங்கிரஸ் தலைவர் பஞ்சாபில் 26 முறையும், ஜம்மு – காஷ்மீரில் 16 முறையும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறார்கள்? எனக்கு ‘இசட்-பிளஸ்’ பாதுகாப்பை வழங்கியது மோடி அரசு அல்ல, முந்தைய காங்கிரஸ் அரசுதான். உயிராபத்து தொடர்வதால்தான் அதே பங்களாவில் வசிக்க இந்த அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது. அதேசமயம் வாடகை, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை அரசுக்குத் தொடர்ந்து செலுத்துகிறேன்.

சரி, இப்போது ‘நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோஷத்துடன் ராகுல் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்கும் பாத யாத்திரை தொடங்கிவிருக்கிறார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இப்படியெல்லாம் பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்னால் பாதை எப்படி இருக்கிறது என்று முதலில் ஆராய வேண்டும். கிராமம் கிராமமாக யாத்திரை சென்றால் மக்களிடம் எழுச்சி ஏற்படும். மாறாக, நீங்கள் பிரதான சாலை வழியாகத்தான் போகப் போகிறீர்கள் என்றால், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதைத் தவிர இதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடும்? மேலும், நாடு சுதந்திரம் பெற்ற புதிதில் இருந்ததைப்போல எந்த மாநிலத்திலும் இப்போது பிரிவினை கோரிக்கையே இல்லை, ‘நாட்டைக் காப்போம்’ என்ற கோஷம் எதற்காக?

மக்களை மதரீதியாகப் பிரிக்கும் பிளவு அரசியலுக்கு எதிராகத்தானே இந்த யாத்திரை அறிவிக்கப்பட்டிருக்கிறது?

அப்படியென்றால் ‘இதயத்தைக் காப்போம்’ என்றல்லவா அறிவிக்க வேண்டும்! வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், வட்டாரங்களிலும், மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். பிரபலமான வரலாற்றாய்வாளர்கள், பிரமுகர்கள், மதத் தலைவர்களை அழைக்க வேண்டும். ‘நாட்டின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் – ராகுல் காந்தியைப்போல இருக்க வேண்டும்’ என்ற முழக்கம் இந்தியாவைக் காக்கப் பயன்படுமா!

சரி, காங்கிரஸில் ஒற்றுமையைக் காக்க என்னதான் செய்ய வேண்டும்?

கட்சி விவகாரங்களுக்காக, கட்சி நிர்வாகிகளுக்காக ராகுல் நேரம் ஒதுக்க வேண்டும். கட்சியின் ஊடகத் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் சில நாள்களுக்கு முன் கட்சியிலிருந்தே விலகினார். ராகுலைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் சந்தித்துப் பேசவே முடியவில்லை என்று அவர்  கூறியிருக்கிறார். பிற கட்சிகளில் கட்சித் தலைவர்கள் பத்திரிகைத் தொடர்பாளர்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை சந்திக்கிறார்கள். என்ன பேச வேண்டும் என்றும் எதைப் பேசக் கூடாது என்றும் சொல்கிறார்கள். காங்கிரஸின் ஊடகத் தொடர்பாளர்களில் மூன்று அல்லது நான்கு பேர் ராகுல் காந்தியையே சந்தித்ததில்லை! கட்சிக்காரர்களைச் சந்திக்கவே நேரம் இல்லை என்றால், கட்சியில் எப்படி ஒற்றுமை நிலவும்?

காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்டிவிட முடியுமா?

கட்சிக்குப் புத்துயிரா, இனி அடுத்து ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால், அடுத்த தேர்தல் முடிவுக்குப் பிறகு அவரைப் பலியாடாக்கத்தான் அது உதவும். காங்கிரஸுக்குத் தலைவராக இருந்தவர் (ராகுல்), கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட தொகுதியிலேயே தோற்றுவிட்டார். இதுதான் நிதர்சனம். மற்றபடி கட்சி எப்படியாவது பழைய செல்வாக்கை அடைய மட்டும் நான் வாழ்த்துகிறேன். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி


1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Hejope   2 years ago

Gulam nabi doesn't told anything new. We know that Rahul hesitates to take the congress presidency. Then why again and again some are blaming him. Congress is a national party and it does not only about Rahul and his family. We have disagreement with Rahul's action and his way of politics against BJP. But in times of congress facing it's worst crisis as a leader we gulam and co. may be work in damage control mode. Not to damage the party further. Everyone has their reason and advises. So leaders at congress at any level need to trust the party and it's democratic principles and work to strengthen it times of crisis. Rahul had already blamed enough and more for the failures of every congress leaders. So we have to stop it.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

உலகப் பொருளாதாரம்ஷூட்டிங் ஆளுநர்களின் செயல்களும்ஆசிஷ் ஜா: பிஹாரின் சமீபத்திய கௌரவம்இந்தியன் இனிபஞ்சவர்ணம்உடன்படிக்கைகுறைந்த வருவாய் மாநிலங்கள்குப்பைபேருந்துதமிழ் வரலாறுஇந்தியா என்ன செய்ய வேண்டும்?மோன்டி பைதான்பாதுகாக்கப்பட்ட பகுதிதுயரம் எதிர் சமத்துவம்பொது முடக்கம்இயற்கை விவசாயம்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணஉலகின் முதல் பெண் துப்பறியும் இதழியலாளர்மாபெரும் தமிழ்க் கனவு ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டிஇரவிச்சந்திரன்ஒடுக்குமுறைத் தேர்வுகள்அப்பாவின் சுளுக்கிதேசத் துரோகத் தடைச் சட்டம்ஒன்றிய அரசுநாட்டுப்பற்றுக் கல்விச் சட்டம்தாங்கினிக்காசுவாசத் தொல்லைகள்சாலிகிராம்பாஜக ஆதரவு அலைவாக்கிங்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!