வாழ்வியல், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

கொழுப்பைக் குறைக்க மருந்தா, மாற்று வழியா?

கு.கணேசன்
23 Oct 2021, 5:00 am
1

லக அளவில் மக்கள் பயன்படுத்தும் மாத்திரைகளுள் ஆன்டிபயாடிக் மாத்திரைகளுக்கு அடுத்தபடியாக ரத்தத்தில் கொலஸ்டிரால் எனும் கொழுப்பைக் குறைக்கும் ‘ஸ்டாடின்’ (Statin) வகை மாத்திரைகளே அதிகம். சென்ற வாரம் ‘அருஞ்சொல்’லில் நான் எழுதிய ‘நல்ல கொழுப்பை அதிகப்படுத்த என்ன வழி?’ கட்டுரையைப் படித்துவிட்டு, கொலஸ்டிரால், கெட்ட கொழுப்பு மற்றும் ‘ஸ்டாடின்’ மாத்திரைகள் தொடர்பில் கைபேசியில் பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்களையே இந்த வாரம் கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

கொலஸ்டிரால் வகைகள் என்னென்ன?

ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை நான்கு விதமாகப் பார்க்கிறது மருத்துவம். 1. மொத்தக் கொலஸ்டிரால். 2. டிரைகிளிசெரைடு. 3. எல்.டி.எல். கொலஸ்டிரால். 4. ஹெச்.டி.எல். கொலஸ்டிரால். பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் மொத்த கொலஸ்டிரால் 200 மி.கி./டெ.லிட்டருக்குக் குறைவாகவும், டிரைகிளிசெரைடு 150 மி.கி./டெ.லி.க்குக் குறைவாகவும், எல்.டி.எல். கொலஸ்டிரால் (கெட்ட கொழுப்பு) 100 மி.கி./டெ.லி.க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். ஹெ.ச்.டி.எல். கொலஸ்டிரால் (நல்ல கொழுப்பு) 50 மி.கி./டெ.லி.க்கு அதிகமாக இருக்க வேண்டும்.

ஸ்டாடின் மாத்திரைக்கும் கொழுப்புக்கும் என்ன தொடர்பு?

மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய் அடைப்பு போன்றவை நம்மை பாதிப்பதற்கு, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரிப்பது ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. நாட்பட்ட தண்ணீர்க் குழாய்களில் பாசி படிந்து அடைப்பதைப்போல நம் ரத்தக் குழாய்களில் கொலஸ்டிரால் படிப்படியாகப் படிந்து அடைத்துக்கொள்வதுதான் இந்தப் பாதிப்புகளுக்கு அடிப்படைக் காரணம். அவ்வாறு படிந்துள்ள கொலஸ்டிராலைக் கரைப்பதும் குறைப்பதும் அவசியம்; இனிமேல் அது படியாமல் பாதுகாக்க வேண்டியதும் முக்கியம். அதற்கு ஸ்டாடின் வகை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஸ்டாடின் மாத்திரைகள் எப்படி கொலஸ்டிராலைக் குறைக்கின்றன?

உடலில் கொலஸ்டிரால் அதிகமாக உற்பத்தியாகும் இடம், கல்லீரல். நாம் சாப்பிடும் கொழுப்பு மற்றும் மாவு சார்ந்த உணவுகளிலிருந்து கல்லீரல் கொலஸ்டிராலைத் தயாரிக்கிறது. இந்தத் தயாரிப்புக்கு ‘ஹெச்எம்ஜி-கோஏ ரெடக்டேஸ்’ (HMG-CoA reductase) எனும் நொதி உதவுகிறது. ஸ்டாடின் வகை மாத்திரைகள் இந்த நொதியின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன அல்லது தடுக்கின்றன. அதன் பலனால், கல்லீரலில் கொலஸ்டிரால் உற்பத்தியாவது குறைந்துவிடுகிறது.

உடலில் கொழுப்பு இல்லாதவர்களும் கொலஸ்டிரால் மாத்திரையைச் சாப்பிட வேண்டுமா?

உடல் தசைகளில் இருப்பது, கொழுப்பு. ரத்தத்தில் இருப்பது, கொலஸ்டிரால்.  இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. பொதுவாக, உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் உடலில் கொழுப்பு இல்லாதவர்களுக்கு - அதாவது ஒல்லியாக இருப்பவர்களுக்கு - கொலஸ்டிரால் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது.

காரணம் என்னவென்றால், ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடுவதற்கு கொழுப்புணவு சாப்பிடுவது மட்டுமே காரணம் அல்ல. ஒருவரின் வயது, பாலினம், பரம்பரை அம்சம், கல்லீரல் செய்யும் பணி ஆகிய நான்கும் சேர்ந்துதான் கொலஸ்டிரால் அளவைத் தீர்மானிக்கின்றன. முக்கியமாக, கொழுப்புணவைக் குறைத்துக்கொண்டு, மாவுச் சத்துள்ள அரிசி உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டாலும் அந்த அதீத மாவுச் சத்தைக் கல்லீரல் கொலஸ்டிராலாக மாற்றி சேமித்துக்கொள்ளும். ஆகவேதான், கொழுப்பு உணவைக் குறைவாகச் சாப்பிடுபவர்களுக்கும்கூட, ஒல்லியாக இருப்பவர்களுக்கும்கூட கொலஸ்டிரால் பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறோம். அப்போது அவர்களும் கொலஸ்டிராலைக் குறைக்க மாத்திரையைச் சாப்பிட வேண்டியது வரும்.

ஸ்டாடின் மாத்திரை நமக்குப் பலன் தருவது எப்படி?

ஸ்டாடின் மாத்திரையை முறையாகச் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் மொத்த கொலஸ்டிரால் கட்டுப்படுகிறது. குறிப்பாக, கெட்ட கொலஸ்டிராலை எல்லை தாண்டாதவாறு பார்த்துக்கொள்கிறது; நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்துகிறது; டிரைகிளிசெரைடு அளவையும் கட்டுப்படுத்துகிறது. தவிரவும், ரத்தக் குழாயின் உட்பக்கத்தில் அழற்சி ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன் பலனால், ரத்தம் அந்த இடத்தில் உறைவதைத் தடுத்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைப் பாதியாகக் குறைத்துவிடுகிறது. இப்படி மாரடைப்பையும் பக்கவாதத்தையும் தடுக்கும் முதன்மைத் தடுப்பாக ஸ்டாடின் மாத்திரை இருக்கிறது.

ஸ்டாடின் மாத்திரை யாருக்கு அவசியம்?

ரத்தத்தில் மொத்த கொலஸ்டிரால் 200 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும், எல்.டி.எல். கொலஸ்டிரால் 100 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும் உள்ள அனைவரும் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேலாக நீரிழிவு இருந்தால் அவர்களுக்கும் இந்த மாத்திரைகள் தேவைப்படும்.

ரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்டிரால் 100 மி.கி./டெ.லி.க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் விதி அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் - அதாவது புகைபிடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், வம்சாவளியில் ஒரு குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டவர்கள் - ஏற்கெனவே மாரடைப்பு அல்லது பக்கவாதம் வந்து சிகிச்சையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு எல்.டி.எல். கொலஸ்டிரால் 70 மி.கி./டெ.லி.க்குக் குறைவாகவே இருக்க வேண்டும். இந்த அளவு அதிகமானால் ஸ்டாடின் மாத்திரையைச் சாப்பிட வேண்டும். பைபாஸ் ஆபரேஷன் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சைக்குப் பிறகும் இந்த மாத்திரை தேவைப்படும். கொலஸ்ட்ராலைக் குறைக்க மாத்திரை சாப்பிடும் அனைவரும் உணவுக் கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். பொதுவாக, ஒருவருக்கு நாளொன்றுக்கு 30 கிராம் கொழுப்புணவு தேவை. இதயநோயாளிகளுக்கு 20 கிராம் போதுமானது.

நான் ஒல்லியாக இருக்கிறேன்; கொழுப்புணவைச் சாப்பிடுவதில்லை. தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். ரத்த கொலஸ்டிரால் கொஞ்சம் அதிகம்தான். நான் ஸ்டாடின் மாத்திரையைச் சாப்பிட வேண்டுமா?

நம்மில் பலரிடம் உள்ள கேள்வி இது. கொழுப்புணவைச் சாப்பிடாதவர்களுக்குப் பரம்பரை காரணமாக ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடலாம். பாலினம் காரணமாகப் பெண்களுக்கு ஆண்களைவிட கொலஸ்டிரால் இயற்கையிலேயே அதிகமாக இருக்கலாம். இவர்களுக்குக் கல்லீரல் கொஞ்சம் கூடுதலாகவே கொலஸ்ட்ராலை உற்பத்திசெய்துவிடலாம்.

பொதுவாக, சரியான உணவையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதன் மூலம் 10%-20% கொலஸ்டிராலைக் குறைக்கலாம். மீதி உள்ள கொலஸ்டிராலைக் குறைக்க ஸ்டாடின் மாத்திரைதான் உதவும்.

நான் ஸ்டாடின் மாத்திரையைச் சாப்பிட்டு வருகிறேன். ரத்தத்தில் கொலஸ்டிரால் குறைந்ததும் மாத்திரையை நிறுத்திவிடலாமா?

பொதுவாக, ஸ்டாடின் மாத்திரையை நிறுத்தினால் மறுபடியும் கொலஸ்டிரால் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மாறாக, மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரை அளவைக் குறைத்துக்கொள்ளலாம். சரியான உணவுமுறையையும் உடற்பயிற்சியையும் தொடரலாம்.

கொலஸ்டிராலைக் குறைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வது ஒன்றுதான் வழியா? மாற்றுவழி இல்லையா?

மாற்றுவழி இருக்கிறது. மாத்திரைகளைவிட முக்கியமானது, நம் வாழ்க்கை முறைகள். வெள்ளை அரிசி, வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை உப்புப் பயன்பாட்டைக் குறைப்பது, முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் முழுதானிய உணவுகளையும் உண்பது, துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது, அதிக கொழுப்புள்ள இறைச்சி/ எண்ணெய் வகைகளைக் குறைத்துக்கொண்டு மீன், ஆளிவிதைகள், பழங்கள், கொட்டை உணவுகளை அதிகப்படுத்துவது, பேக்கரி உணவுகளையும் நொறுக்குத் தீனிகளையும் தவிர்ப்பது, புகைப்பதை நிறுத்துவது, மதுவை மறப்பது, மன அழுத்தம் குறைப்பது, தேவையான ஓய்வு எடுப்பது, நடைப்பயிற்சி / யோகா / தியானம் மேற்கொள்வது போன்ற ஆரோக்கிய வழிமுறைகளைச் சிறு வயதிலிருந்தே கடைப்பிடித்தால் கெட்ட கொலஸ்டிராலுக்கு ரத்தத்தில் இடமில்லாமல் போகும். நல்ல கொலஸ்டிரால் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளும். உங்களுக்கு இத்தனையும் சாத்தியமென்றால், கொலஸ்டிராலைக் குறைக்க மாத்திரைகள் தேவைப்படாது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com








பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Magesh Margabandu   3 years ago

statin மாத்திரையின் பக்கவிளைவுகள் பற்றி நிறைய செய்திகள் ஆராய்ச்சிகள் வருகின்றனவே. அவற்றின் பலன்களும் அவ்வளவு பெரியதல்ல என்று இப்பொழுது மேலை நாட்டு மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது பற்றி தங்கள் கருத்து என்ன அதோடு மாற்றுவழிகள் பற்றி நீங்கள் அதிகம் பேச வேண்டும். மாத்திரை சாப்பிட்டால் நாம் வாழ்க்கை முறையை மாற்ற தேவை இல்லை என்ற எண்ணம் பலரிடம் உள்ளது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

writer samasபச்சை வால் நட்சத்திரம்திருமாவளவன் பேட்டிமத்திய - மாநில உறவுகள்உணவு நெருக்கடிஅருஞ்சொல்லுக்கு வயது இரண்டுமீண்டும் கறுப்பு நாள்முதுகெலும்புஅந்தணர்கள்ஆய்வுக் கட்டுரைராம ஜென்ம பூமிஇந்தியாவின் பெரிய கட்சி எது?கோடி பூக்கள் பூக்கட்டும்விஞ்ஞானம்மேற்கத்திய மருந்துகள்: மறுக்க முடியாத சில உண்மைகள்2ஜிஊர் தெய்வம்புனித உடன்படிக்கைதீபாவளிஏழு கடமைகள்பல்கலைக்கழகங்கள்வைசியர்கள்பதவியிலிருந்து அகற்றம்தேர்வுச் சீர்திருத்தம்பெரும்பான்மையினம்நிதீஷ் குமார்ஜெயலலிதாவாதல்!அருஞ்சொல்‘சிறிய மாநிலம்293வது பிரிவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!