கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 10 நிமிட வாசிப்பு

வயிற்றுவலிக்கு என்ன காரணம்?

கு.கணேசன்
10 Jul 2022, 5:00 am
0

“வலது தோள்பட்டையில் வலிக்கிறது” என்று என்னிடம் சிகிச்சைக்கு வந்தார் ஒரு வாலிபர். பரிசோதித்தபோது, அவருக்குப் பித்தப்பையில் பிரச்சினை இருந்தது.

“வயிறு வலிக்கிறதா?” என்று கேட்டேன். “ஆமாம், டாக்டர். இரண்டு நாளா வயிறும் வலிக்குது. எனக்கு ஏற்கனவே அல்சர் உண்டு. அதுக்கு நான் ‘பேன்டாசிட்’ மாத்திரை சாப்பிடறேன். காலையிலிருந்து தோள்பட்டை வலிக்குது. வாயுப்பிடிப்பா, தசைப்பிடிப்பான்னு எக்ஸ்-ரே எடுத்துத் தெரிஞ்சிக்குவோமே” என்றார். 

“எக்ஸ்-ரே அவசியமில்லை. வயிற்றை ஸ்கேன் எடுக்க வேண்டும்” என்றேன். “முதல்ல தோள்பட்டை வலிக்கு எக்ஸ்-ரே எடுத்துப் பாருங்க, டாக்டர்! பிறகு அல்சருக்கு ஸ்கேன் எடுக்கலாம்!” என்றார் அழுத்தமாக.

“உங்களுக்குப் பிரச்சினை பித்தப்பையில்தான்; தோள்பட்டையில் இல்லை. அதுக்கு வயிற்றைத்தான் ஸ்கேன் எடுக்கணும்” என்றதும், “பித்தப்பைக்கும் தோள்பட்டை வலிக்கும் என்ன சம்பந்தம், டாக்டர்?” என்று கேட்டார்.

“பித்தப்பையில் ஏற்படும் வலி தோள்பட்டைக்கு வரும். இரண்டுக்கும் ஒரே நரம்பு” என்றேன். “வலி ஓரிடம்… நோய் இருக்கும் இடம் வேறயா?” என்று ஆச்சரியப்பட்டார். “ஆமாம்” என்றேன்.

இந்த வாலிபரைப் போல வயிற்றில் வலி வந்தால் அல்சர்தான் காரணம் என்று அவர்களாகவே முடிவு செய்துகொண்டு சுய மருத்துவம் செய்துகொள்வதும், மற்ற காரணங்களை அறியாமல் சிகிச்சையைத் தள்ளிப்போடுவதும், பல நேரங்களில் நோயைப் பெருசுப்படுத்தி, ஆபத்தான கட்டத்துக்குக் கொண்டு போய்விடும்!

வயிற்றுவலி யாருக்கும், எப்போதும் வரலாம். அது சாதாரண வலியா, சிக்கலான வலியா என்று தெரிந்துகொண்டால் ஆபத்துகளைத் தவிர்க்கலாம். உங்கள் சுயமதிப்பீட்டால் வயிற்றுவலிக்குக் காரணம் தெரிந்துகொள்ள சில டிப்ஸ் தருகிறேன்.

வயிற்றுவலியின் பிறப்பிடங்கள்

‘பாட்ஷா’ படத்தில் ‘எட்டு எட்டா மனுஷன் வாழ்வைப் பிரிச்சிக்கோ’ என்று ரஜினி பாடுவார். அதுமாதிரி, வயிற்றை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து வைத்திருக்கிறது மருத்துவம். எந்தப் பகுதியில் வலி வந்தால் வயிற்றில் எங்கு பாதிப்பு என்பதைத் தோராயமாகத் தெரிந்துகொள்ளத்தான் இந்த வகைப்பாடு.

வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கமாக வலி எடுத்தால், கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கலாம். மேல்வயிற்றில் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால், இரைப்பை, முன்சிறுகுடல், கணையம் ஆகியவை காரணமாகவும், மேல் வயிற்றில் இடது பக்கத்தில் வலி உண்டானால், மண்ணீரல் காரணமாகவும் இருக்கலாம்.

வயிற்றின் நடுப்பகுதியில் இடது பக்கமாக ஏற்படும் வலிக்கு இடது சிறுநீரகமும், வலது பக்கத்தில் வலி என்றால், வலது சிறுநீரகமும் காரணமாக இருக்கலாம். நடு வயிற்றில் மத்தியப் பகுதியில் வலி ஏற்படுகிறது என்றால், சிறுகுடலில் பிரச்சினை என்று ஊகிக்கலாம். அடிவயிற்றின் வலது பக்க வலிக்குக் குடல் வால் அழற்சி, வலது சிறுநீர்க்குழாய்க் கல் (Ureteric Stone), கருக்குழாய் பாதிப்பு, ஏறுகுடல் கோளாறு போன்றவை முக்கியமான காரணங்கள். அடிவயிற்றில், தொப்புளுக்குக் கீழ் வலி வந்தால், கருப்பை அல்லது சிறுநீர்ப்பைக் கோளாறு காரணமாகும்.  அடிவயிற்றில் இடது பக்கத்தில் வலித்தால், இடது சிறுநீர்க்குழாய்க் கல் / இறங்கு குடல் கோளாறு இருக்க வாய்ப்பிருக்கிறது.

திடீர் வயிற்றுவலிக்கு என்ன காரணம்?

இதற்கான காரணப் பட்டியல் மிக நீண்டது. அந்தப் பட்டியலில் ‘வி.வி.ஐ.பி.’ நோய்கள் மட்டும் இங்கே:  

  1. அல்சர் துளை: நெஞ்சுக்குழியில் கடுமையான வலி தொடங்கி வயிறு முழுவதும் பரவும். வாந்தி ஏற்படும். வயிறு உப்பும். ஓபன் சர்ஜரிதான் தீர்வு!
  2. குடல்வால் அழற்சி (Appendicitis): குழந்தை முதல் நடுவயது வரை உள்ளவர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம். வயிற்று வலி முதலில் தொப்புளைச் சுற்றி ஆரம்பிக்கும் பிறகு வலது  அடிவயிற்றில் நிலைகொள்ளும். மிதமான காய்ச்சலும் வாந்தியும் வரலாம். குடல் வாலை நீக்குவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு. இப்போது லேப்ராஸ்கோப்பியில் எளிதாகச் செய்கிறார்கள்.
  3. குடலில் துளை விழுதல் /அடைப்பு: தொப்புளைச் சுற்றி கயிறு கட்டி இறுக்குவது போல் வலிக்கும். அடிவயிறு முழுவதிலும் மந்தமான வலி இருக்கும். வாந்தி கடுமையாகும். வயிறு மரப்பலகை போன்று இறுகிவிடும். அறுவை சிகிச்சை அவசியம்.
  4. குடலுக்குள் குடல் செருகுதல்: இந்தப் பாதிப்பு குழந்தைகளுக்குத்தான் அதிகம். வயிற்றுவலி, வாந்தி, கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். சர்ஜரிதான் தீர்வு!
  5. கணைய அழற்சி (Pancreatitis): மதுவின் பாதிப்புதான் கணைய அழற்சி. நெஞ்சுக்குழியில் கடுமையான வலி ஆரம்பித்து முதுகுக்குப் பரவும். குனிந்தால் வலி குறையும் படுத்தால் வலி அதிகரிக்கும். இது முக்கியமான அறிகுறி. வாந்தி வரும். வயிறு உப்பும். மருந்து சிகிச்சைக்குக் கட்டுப்படும்.
  6. பித்தப்பை அழற்சி / கற்கள் (Gall stones): வலது பக்க மேல் வயிற்றில் வலி ஆரம்பித்து, முதுகு வரைக்கும் சென்று, தோள்பட்டையில் நிலைகொள்ளும். இதற்குப் பித்தப்பையை நீக்குவதுதான் ஒரே வழி. ஓபன் சர்ஜரியிலும் லேப்ராஸ்கோப்பியிலும் நீக்கிவிடலாம்.
  7. சிறுநீரகக் கற்கள்: சிறுநீரகத்தில் கல் இருந்தால் முதுகில் வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்பு உறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளித் துவாரம் வரை பரவும். நீர்க்கடுப்பு, வாந்தி இருக்கும். ESWL சிகிச்சையில் கற்களை உடைக்கலாம். வயிற்றைப் பிளக்காமல் சர்ஜரி செய்தும், யூரெட்டிரோஸ்கோப் மூலமும் கற்களை அகற்றிவிடலாம். 
  8. கருக்குழாய் / சினைப்பை நீர்க்கட்டி வெடிப்பு: அடிவயிற்றில் திடீரென வலி தொடங்கும். அடிவயிறு முழுவதும் மந்தமான வலி இருக்கும். வாந்தி வரும். கருக்குழாய் வெடிப்பின்போது பெண் பிறப்பு உறுப்பில் ரத்தமும் வெளியேறும். உடனே சர்ஜரி செய்ய வேண்டும்.

பரிசோதனைகள் என்னென்ன?

வயிறு வலிக்கும் இடத்தை வைத்துக் காரணத்தைக் கண்டறிவது 100% சாத்தியம் எனச் சொல்ல முடியாது. அதாவது, நமக்குக் கொள்ளை நடந்த இடம் தெரிகிற மாதிரி வயிற்றில் எந்தப் பகுதியில் பிரச்சினை என்று இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்; அதேவேளை கொள்ளைக்காரனைக் கண்டுபிடிக்க மோப்ப நாயைப் பயன்படுத்துகிற மாதிரி வயிற்று நோயைத் துல்லியமாக கண்டுபிடிக்க ரத்தம், சிறுநீர், மலம் ஆகியவற்றைப் பரிசோதிக்க வேண்டும். அல்ட்ரா சவுண்ட், எண்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என ‘ஸ்பெஷல் ஸ்குவாடு’ம் தேவைப்படும்; அடிக்கடி வலி வருபவர்களுக்கும். ஆபத்தான வயிற்றுவலி வந்தவர்களுக்கும் இவை கட்டாயம்.

சரி, வயிற்றுவலி சாதாரணமானதா, ஆபத்தானதா?

இதை எப்படித் தெரிந்துகொள்வது? சாப்பிடாமல் இருப்பது, நேரத்துக்குச் சாப்பிடாதது, அதிகமாகச் சாப்பிடுவது, கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, வலி மாத்திரை சாப்பிடுவது, பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வருவது என வயிற்றுவலிக்கான காரணம் நமக்கே தெரியும். இது சாதாரண வயிற்றுவலி. இப்படி எதையும் சம்பந்தப்படுத்த முடியாமல், வயிற்றுவலி திடீரென ஆரம்பித்து, பொறுக்க முடியாத அளவுக்கும், காய்ச்சல், வாந்தி போன்ற ‘துணை’ அறிகுறிகளுடனும் அச்சுறுத்தினால், அது ஆபத்தானது என அறிந்து உஷாராகிவிட வேண்டும்.

உதாரணமாக, குறிப்பிட்ட ஓர் இடத்தில் தொடர்ந்து வலி ஏற்படுவது, மிக அதிக காய்ச்சல், தொடர் வாந்தி, ரத்த வாந்தி, தார் மாதிரி மலம் போவது, அடிக்கடி மலம் போவது, தோள்பட்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கடுமையான அல்சர், குடலடைப்பு, கணைய அழற்சி, புற்றுநோய், பித்தப்பை அழற்சி/கல், சிறுநீரகக் கல், கருக்குழாயில் கரு வளர்வது, சினைப்பை நீர்க்கட்டி வெடிப்பது என எதுவாகவும் இருக்கலாம். எனவே, காலம் கடத்தாமல் உடனே டாக்டரிடம் சென்றுவிட வேண்டும். தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிஷமும் வயிற்றுக்குள் ஆபத்து மழைக்கால காளான் போல் வளர்ந்து கொண்டிருக்கும்.

சிகிச்சைகள் என்ன?

சென்ற தலைமுறையில் வயிற்றில் வலி வந்தால் ‘ஓபன் சர்ஜரி’தான் ஒரே முடிவு! இப்போது நிலைமை மாறிவிட்டது. நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாத்திரை, மருந்துகள் தொடங்கி வலி தெரியாத சர்ஜரிகள் வரை பல ‘புதுமுகங்கள்’ அறிமுகம் ஆகிவிட்டன. வயிற்றில் சில துவாரங்கள் மட்டும் போட்டு மேற்கொள்ளப்படும் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை, வாய்வழியாக ஒரு குழாயை நுழைத்து செய்யப்படும் எண்டோஸ்கோப்பி சிகிச்சை என எவ்வளவோ நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. வயிற்றில் வலி வந்த பிறகு, கடை மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு, “ரெண்டு நாள் பாத்துட்டு அப்புறமா டாக்டர்கிட்டே போவோம்” என்ற அலட்சியம் மட்டும் ஆகாது. ‘எரிகிற நெருப்பின் மீது துணியைப் போட்டு மூடுவது’ மாதிரிதான் சிகிச்சையைத் தாமதப்படுத்துவதும். இதற்கு உதாரணம் அகிலா!

கல்லூரி மாணவியான இவர் வயிற்றுவலிக்காக என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். பரிசோதித்ததில் பித்தப்பையில் கல் இருப்பதும், காமாலை பாதிப்பு இருப்பதும் தெரிந்தன. “சர்ஜரி செய்தால்தான் வலி தீரும்; காமாலை கட்டுப்படும்” என்றேன். அவரோ காமாலை என்றதும், அதை நாட்டுவைத்தியத்தில் குணமாக்கிவிடலாம் என்று கிளம்பிவிட்டார். ‘அடைப்புக் காமாலை’ (Obstructive jaundice) பச்சிலைச் சாற்றில் சரியாகாது என்பதையும், சர்ஜரிதான் ஒரே வழி என்பதையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை.

ஒரு வாரம் கழித்து அவர் மீண்டும் என்னிடம் வந்தார். ஒரு சின்ன வித்தியாசம்... முதல் வாரம் அம்மாவின் துணையோடு வந்தார். அடுத்த வாரம் நான்கு பேர் துணையோடு ஆம்புலன்ஸில் வந்தார். இப்போது அவருக்குப் பித்தப்பை வீங்கி, அழுகிப் போயிருந்தது. அவசர ஆபரேஷன், பித்தப்பையில் சீழை அகற்றி வயிற்றில் வடிகுழாய் வைக்க வேண்டிய நிலைமை என்று பல சிக்கல்கள்! லேப்ராஸ்கோப்பி சிகிச்சையில் மூன்று நாளில் குணமாகி வீட்டுக்குச் செல்ல வேண்டியவர், ஓபன் சர்ஜரி செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேல் அவதிப்பட்டார்.

முதலில் சொன்ன வாலிபருக்கும் இதே பிரச்சினைதான். அவர் சர்ஜரிக்கு உடனே சம்மதித்ததால், சுலபத்தில் சுகமானார்.

(பேசுவோம்...)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2

2





நெட்பிளிக்ஸ் தொடர்டிஸ்ட்டோப்பியாஜனநாயகத்தின் மலர்ச்சிதகவல்கள்உலகின் முதல் பெண் துப்பறியும் இதழியலாளர்தகுதி நீக்கம்ஆளுமைநிர்விகார் சிங் கட்டுரைவேலாயுதம்சாலட்மாற்றம் விரும்பிகளுக்கும்மருத்துவர் ஜீவானந்தம்புத்தகங்கள்கோர்பசெவ்: வரலாற்றில் ஓர் அவல நாயகர்இன ஒதுக்கல்மீனளம்குடும்ப வருமானம்கணக்கு தாக்கல்காதல் திருமணங்கள்தொழில் வளர டாடா காட்டிய வழிவிஜயநகர்ஓணம்சமூக வலைத்தளம்எண்ணும்மைதாளித்தல்வாஷிங்டன்: காய்ச்சிய நீர் குடிக்க அறிவுரைஎம்எஸ்எஸ்: பெரிய தலைக்கட்டுவிமான நிலையங்கள்சரியான நேரத்தில் சரியான முடிவுஇந்திய நீதித் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!