கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 8 நிமிட வாசிப்பு

மூலத்துக்கு முடிவு கட்டலாம்

கு.கணேசன்
17 Apr 2022, 5:00 am
0

மிழகத்தில், நகரங்களில் மட்டுமல்லாமல், பட்டி தொட்டியெங்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஒரு நோய் விளம்பரம் செய்யப்படுகிறது என்றால், அது ‘மூல’நோய்தான். ஆனாலும் இந்த நோய் வந்தவர்களில் அநேகம் பேர் வெளியில் சொல்ல கூச்சப்பட்டு, ஆரம்பக் கட்டத்தில் சிகிச்சை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் ஆசனவாயில் வலி, வீக்கம், ரத்தப்போக்கு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.

40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்சினைகள் புறப்படுகின்றன. ஒன்று, மூலம் (Piles). அடுத்தது, ஆசனவாய் வெடிப்பு (Fissure). மூன்றாவது, பௌத்திரம் (Fistula). இந்த மூன்றில் முக்கியமானது மூலநோய். 

எது மூலநோய்?

சாதாரணமாக, உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. இவை சிரைக் குழாய்களில் ரத்தம் தேவையில்லாமல் தேங்கி நிற்பதைத் தடுக்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை. இதனால் அவற்றில் சாதாரணமாகவே புவி ஈர்ப்பு விசை காரணமாக அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த அழுத்தம் கொஞ்சமே அதிகமானால்கூட அவற்றில் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் மாதிரி வீங்கிவிடும். இப்படியான ரத்தக் குழாய் வீக்கத்தைத்தான் ‘மூலநோய்’ என்கிறோம்.

என்ன காரணம்?

மூலநோய் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல்தான் முக்கியமானக் காரணம். மலச்சிக்கலின்போது மலத்தை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயை உண்டாக்கும். ஆண்களிடம் காணப்படும் சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் ஆகியவற்றாலும் மூலநோய் உண்டாகிறது. வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடல் புற்றுநோய் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும். 

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் பரம்பரை காரணமாக இந்த ரத்தக் குழாய்கள் துணி தைக்கும் பருத்தி நூல்போல மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். உடல் பருமனாக இருப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காலில் சிரை வீக்கம் (Varicose veins) உள்ளவர்கள், ஒட்டுநர் போன்று உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், கண்டக்டர் போன்று அதிக நேரம் நின்றுகொண்டே இருப்பவர்கள், மூலத்தை எதிர்கொள்வோர் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்கள்.

இரண்டு வகைகள்

மூலநோயில் வெளி மூலம், உள் மூலம் என இரண்டு வகை உண்டு. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாக புதைந்திருப்பது 'உள் மூலம்'; வெளிப்புறத்தில் தோன்றுவது 'வெளி மூலம்'. இரண்டாவதாகச் சொன்னதைக் கையால் தொட்டுப் பார்த்தே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் உள் மூலம் அப்படியில்லை. இது ஏற்பட்டால் என்ன நடக்கும்?

மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் சொட்டுவது அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படுவது இதன் ஆரம்ப அறிகுறி.  சில வாரங்களில் அல்லது மாதங்களில், அந்த நபருக்கு மலம் போன பிறகு, ஆசனவாயில் லேசான வீக்கம் தெரியும். ஆசனவாயில் வீக்கமுற்ற ரத்தக் குழாய்கள் அங்குள்ள சதையோடு வெளியே தள்ளப்படுவதால் இந்த வீக்கம் தோன்றுகிறது. மலம் போன பிறகு, இதை உள்ளே தள்ளிவிட்டால், மறைந்துவிடும். சிலருக்கு இந்த வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பும், வலியும் தினமும் தொல்லை தரும். இதனால் மலம் போவது ரொம்பவும் கஷ்டப்படும். முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி என்று சொல்வது இதற்கு ஏகப்பொருத்தம்.

சிலருக்கு ஆசனவாயில் கண்ணாடியை வைத்துக் கீறியது போல் வெடிப்புகள் (Anal fissure) இருக்கும். அல்லது அந்த இடம் சுண்டுவிரல்கூட நுழைய முடியாதபடி சுருங்கி இருக்கும். அப்போதும் இந்த மாதிரி ஒரு கொடுமையான வலி மணிக்கணக்கில் படுத்தி எடுக்கும். இவர்கள் மலம் கழிப்பதற்கே பயப்படுவார்கள். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

என்ன செய்ய வேண்டும்?

சாதாரணமாக, 40 வயதைக் கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அந்த வயதுக்காரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை குடும்ப மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் மூலநோய் இருந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் பலரும் அதை அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.

எந்த ஒரு நோய்க்கும் பலசரக்குப் பட்டியல்போல பல பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று சொல்லப்படும் இந்தக் காலத்திலும், மூலத்துக்கு மட்டும் எந்தப் பரிசோதனையும் தேவையில்லை! நோயாளியின் ஆசனவாயில் டாக்டர் விரலால் பரிசோதித்துப் பார்த்துத்தான் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியும். மூலம் இருக்கும் இடம், அளவு, நிலைமை இந்த மூன்றும் துல்லியமாகத் தெரிந்தால்தான் இதற்கு சரியான சிகிச்சையைக் கொடுக்க முடியும். அதற்கு ‘பிராக்டாஸ்கோப்’ என்ற கருவியை ஆசனவாய்க்குள் நுழைத்து மூலத்தை மருத்துவர் நேரில் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகுதான் சிகிச்சை!

என்ன சிகிச்சை?

உள் மூலத்தை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளது மருத்துவம். மலம் கழிக்கும்போது ரத்தம் வருவது முதல்நிலை. ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றுவதும் உள்ளே மறைந்துகொள்வதும் இரண்டாம் நிலை. வீக்கம் நிரந்தரமாகிவிடுவது மூன்றாம் நிலை. வீக்கத்தில் புண், சீழ் ஏற்படுவது நான்காம் நிலை.

மூலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் மருந்து, மாத்திரை, களிம்பு மூலமே சரிசெய்துவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொண்டால், மூலநோயும் விடை பெற்றுவிடும். அடுத்தகட்ட பாதிப்பு இருந்தால் மட்டுமே பாண்டிங் (Banding), ஸ்டேப்ளர், அறுவை சிகிச்சை என மற்ற சிகிச்சைகளை யோசிக்க வேண்டும்.

இந்த இடத்தில் நோயாளிகள் பலரும் செய்யும் தவறு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். மலத்தில் ரத்தம் வந்தால், உடனே ‘மூலம்’ என்று சுயமாக முடிவு கட்டாதீர்கள். இதற்குப் பெருங்குடலில் ஏற்படும் புண், புற்றுநோய் என ஆபத்தான காரணங்களும் இருக்கலாம்.

சமீபத்தில் என்னிடம் ஒரு நோயாளி வந்திருந்தார். “எனக்கு மூலம் முத்திப்போச்சி, டாக்டர்! உள்ளூர் வைத்தியரிடம் மூணு மாசமா மருந்து சாப்பிட்டும் ரத்தம் நிக்கலே!” என்றார். அந்த ‘டாக்டர்’ அவரைப் பரிசோதிக்காமல், மலத்தில் ரத்தம் போகும் அறிகுறியை மட்டும் வைத்துக்கொண்டு ‘மூலம்’ என்று முடிவுசெய்து மருந்து கொடுத்திருக்கிறார். நான் பரிசோதித்தபோது, அவருக்கு மலக்குடலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. 

நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும்தான் பார்க்கக் கூடாது. ஆனால், ஆசனவாய் மூலத்தை நேரில் பார்த்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டும்!

சிகிச்சைகள் என்னென்ன?

  1. சுருங்க வைத்தல்: ரத்தம் உறைய வைக்கும் மருந்தை மூலநோய் உள்ள இடத்தில் செலுத்தி, வீங்கியுள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது இதன் செயல்முறை. முதல்நிலை மூலநோயாளிக்கு இது உதவுகிறது.
  2. வளையம் இடுதல்: இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள். இதனால் ரத்தக் குழாய்க்கு ரத்தம் வருவது தடைபட்டு, வீக்கம் சுருங்கிவிடுகிறது. இரண்டாம்நிலை மூலநோய்க்கான சிகிச்சை இது.
  3. உறைய வைத்தல்: திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால் அதில் உள்ள ரத்தக் குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும். இதுவும் இரண்டாம் நிலை மூலத்துக்கு உதவுகிறது.
  4. அறுவை சிகிச்சை: நாட்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள். வெளிமூலம் மற்றும் 3, 4ஆம் நிலை உள் மூலத்துக்கு இது நல்ல பலன் தருகிறது.
  5. கதிர்வீச்சு சிகிச்சை: ஐ.ஆர்.சி. (IRC – Infra Red Coagulation) என்ற கருவி மூலம் இது செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக் கதிர்களை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு அனுப்புகிறது. அப்போது அக்கதிர்கள் மூலத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை நிறுத்திவிடுவதால் வீக்கம் சுருங்கிவிடும். முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இது உதவுகிறது.
  6. லேசர் சிகிச்சை: லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள திசுக்களை அழிப்பது இந்த சிகிச்சையின் செயல்முறை. ஆனால் இதற்கு ஆகும் பணச்செலவு அதிகம்.
  7. ஸ்டேப்ளர் சிகிச்சை: ஸ்டேப்ளர் கருவி கொண்டு மூலநோயின் மேல்பகுதியை இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள தசைப் பகுதியையும் வெட்டி எடுத்து தையல் போட்டுவிடுகிறார்கள். மூலநோய் முற்றியநிலையில் உள்ளவர்களுக்கும், முதியோருக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. இதற்கான செலவும் அதிகம்தான்
  8. ஆசனவாய் வெடிப்புக்கு சிகிச்சை: நோய் ஆரம்பக் கட்டத்தில் இருந்தால், ஆசனவாயை விரித்துவிட்டாலே போதும். பாதிப்பு அதிகம் என்றால், அறுவை சிகிச்சைதான் தீர்வு.

 (பேசுவோம்)

கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


3


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

டெல்லி வாழ்க்கைஇந்திய நீதித் துறைசொந்த நாட்டை விமர்சிப்பது அன்பின் வெளிப்பாடுகுடலைக் காப்போம்!சேஃப் பிரவுஸிங்இயற்கை விவசாயம்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணபோட்டிகளும் தேர்வுகளும்சவால்இளைஞர்கள்ஆன்மிகம்ஆறு விதிகள்பக்ஷி அமித் குமார் சின்ஹா கட்டுரைதமிழ்நாட்டில் காந்திஇந்திய அரசியல் வரலாறுசோராஉடல் உறுப்புஇயன்முறை சிகிச்சைமொழிக் கொள்கைகாவளம் மாதவன் பணிக்கர்நெல் கொள்முதல்ஜனநாயக மையவாதம்கடுமைதமிழர் மருத்துவம்நாட்டின் எதிர்காலம்டாடா ஏர் இந்தியாபிடிஆர் முழுப் பேட்டிமாறிய நடுத்தர வர்க்கம்அதிகாரம்எல்ஐசிசிபிஎம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!