கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 7 நிமிட வாசிப்பு

இளமையில் வழுக்கை ஏன்?

கு.கணேசன்
14 Aug 2022, 5:00 am
1

ங்க காலத்தில் ஆண்மையின் அடையாளமாகவும், பெண்மையின் அழகு என்றும் பார்க்கப்பட்ட தலைமுடி, இன்றைக்கு இளம் வயதினரின் உளவியல் சிக்கலுக்கும், உறவுச் சிக்கலுக்கும் உள்ளாகி, வாழ்க்கைப் பிரச்சினையாக உருமாறியிருக்கிறது. என்ன காரணம்? இளமையில் வழுக்கை!

ஒருவருக்குத் தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிருமானால் மருத்துவ ஆலோசனை தேவை. ஒரு செடி வளர்வதுபோல் முடியானது தொடர்ச்சியாக வளர்வதில்லை. வளரும் பருவம், உதிரும் பருவம், ஓய்வுப் பருவம் என முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. தலைமுடி ஒவ்வொன்றும் ஒரு பருவத்தில் இருக்கும்.

வளரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால் முடி வளர்ந்துகொண்டே இருக்கும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால் முடி கொட்டும்; வழுக்கை விழும். முன்பு இதைத் தீர்மானிப்பது பரம்பரையில் வரும் மரபணுக்களாக இருந்தன; இப்போது நம் வாழ்வியல் தவறுகள்தான் முன்னிலையில் இருக்கின்றன.

முடியைக் கெடுக்கும் மன அழுத்தம்

இன்றைய இளைய வயதினரின் டாப் 10 பிரச்சினைகளில் ஒன்று மன அழுத்தம். கல்விச்சூழல், பணிச்சூழல், குடும்பச்சூழல், உறவுச்சூழல் எனப் பல காரணங்களால் இவர்களுக்கு மன அழுத்தம் பதின்பருவத்திலேயே நெருப்பாகப் பற்றிக்கொள்கிறது. இது சருமத்தில் முடி முளைக்கிற பருவத்தை ‘எரித்து’விடுகிறது. இதனால் தலைமுடி உதிரும் பருவம் முந்திக்கொள்கிறது. இளமையில் வழுக்கை இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

‘ஆபீஸ் ஸ்ட்ரெஸ்’ எனப்படும் அலுவலக மன அழுத்தம் ‘ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ (Oxidative stress) எனும் உடலியல் பிரச்சினையைத் தூண்டுகிறது. இது தலைமுடிக்குத் தலையாய எதிரி; வழுக்கையை அள்ளித் தரும் வள்ளல்.

அத்தோடு, புகைக்கும் பழக்கமும் இருந்தால், அந்தப் புகையின் நச்சு முடியின் வேருக்கு ரத்தம் போவதைக் குறைக்கிறது. அருந்தும் மது முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை உறிஞ்சவிடாமல் தடுக்கிறது. அதனால்தான் பலருக்குச் சின்ன வயதிலேயே வழுக்கை விழுகிறது. புகை, மது, மன அழுத்தம் இந்த மூன்றையும் விட்டொழித்தால்தான் மீண்டும் தலைமுடி தளிர்க்கும். இந்த உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

ஷாம்பு எனும் வில்லன்!

இன்றைய நாகரிக உலகில் நீளமான, அடர்த்தியான, பொலிவான கூந்தல் வேண்டும் என்று ஆசைப்படாத பெண்கள் இல்லை! இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை கருமையான கூந்தலுக்குக் கரிசலாங்கண்ணிச் சாறு, சிகைக்காய், காய்ந்த செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களையே பயன்படுத்துவார்கள். தற்போதைய அவசர யுகத்தில் இவற்றையெல்லாம் தேட பெண்களுக்கு நேரம் ஏது? தலைமுடிக்கான தேடல் சூப்பர் மார்க்கெட் ரேக்குகளில் முடிந்துவிடுகிறது. அங்கே குன்றுபோல் குவிந்திருக்கும் ஷாம்பு / கண்டிஷனர்கள்தான் இவர்களுக்கு முடி காக்கும் தோழிகள். உண்மையில், இவை இரண்டுமே தலைமுடிக்கு ஆகாத வில்லன்கள். இது தெரியாமல், இவற்றைக் குளியலறையில் அடுக்கிக்கொள்வதும் பயன்படுத்துவதும் எரிகிற கொள்ளியால் சொரிகிற சோகம்.

டிடர்ஜன்ட், எண்ணெய், புரதம் எனப் பலவற்றைக் கலந்து தயாரிக்கும் திரவ நிலை சோப்புதான் ஷாம்பு. கண்ணைக் கவரும் நிறத்துக்காகவும், வசீகர மணத்துக்காகவும், நுரைதள்ளும் குணத்துக்காகவும் வீரியமிக்க ரசாயனங்களையும் ‘அறம் பார்க்காமல்’ சில நிறுவனங்கள் கலந்து விற்கின்றன. இவற்றில் காணப்படும் வேதிக்கலப்புகள் முடி உதிர்வதை மட்டுமல்ல பல்வேறு புற்றுநோய்களையும் அழைத்துவரும் எமதூதுவர்கள் என்பதைப் பயனாளிகளும் புரிந்துகொள்வதில்லை.

அடுத்து, ஆளுக்கு ஆள் தலைமுடியின் தன்மை மாறும். அதுபோல் ஒவ்வொரு வகைத் தலைமுடிக்கும் ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. எனவே, அவரவர் தலைமுடியின் தன்மையை முதலில் தெரிந்திருக்க வேண்டும். ஷாம்பு நம் தலையில் உள்ள அழுக்கு, தூசு, எண்ணெய்ப் பிசுக்கு ஆகியவற்றை அகற்றுகிறது. ஹேர் கண்டிஷனர் தலைமுடிக்கு ஈரப்பதம் கொடுத்து மினுமினுப்பு ஆக்குகிறது. இதிலும் பலவிதம் உண்டு. அவரவர் முடிக்குப் பொருத்தமாகத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், எத்தனை பேருக்குத் தெரியும் இந்த அறிவியல் விதிகள்? மக்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் கோடி கோடியாகக் கொள்ளையடிக்கின்றன. இவற்றின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு இல்லாத சாமானிய மனிதன் நோயாளி ஆவதுதான் நவீன வாழ்வியல் கொடுத்திருக்கும் சாபம்!

நடுவீட்டு நாட்டாமை!

தலைசீவும்போது வழக்கத்தைவிட அதிகமாக ஒன்றிரண்டு முடிகள் சீப்பில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டால்போதும், பல்லி விழுந்தப் பாலைக் குடித்தமாதிரி இளம் பெண்கள் பதறிப்போவார்கள். உடனே சோப்புதான் காரணமா, ஷாம்புவை மாற்றலாமா, மூலிகைத் தைலம் தேய்க்கலாமா என்கிற ரீதியில் ‘உலக நடப்பை’ அம்மாவிடமும் தோழிகளிடமும் அலசி ஆராயத் தொடங்குவார்கள். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இலவசமாக வழிகாட்டுவது நடுவீட்டில் அமர்ந்துகொண்டு நாட்டாமை செய்யும் திருவாளர் தொலைக்காட்சிதான்.

அரை மணிக்கொரு தடவை “இதில் புரோட்டீன் இருக்கிறது… முட்டை கலந்திருக்கிறது… அதிக போஷாக்கு தருகிறது… ‘ஹெர்பலில்’ தயாரித்தது” என்றெல்லாம் வெள்ளைக்கோட்டு அணிந்த விளம்பர டாக்டர்கள் வாய்கூசாமல் பொய் சொல்வார்கள்; கூந்தல் வளர்ச்சிக்குச் சாட்சியாக கிராபிக்ஸில் அசத்தும் அனிமேஷன் காட்சிகளைக் காட்டுவார்கள்; ‘ஒன்றுக்கு ஒன்று இலவசம்’ என ஆசை காட்டுவார்கள். அவற்றில் மயங்கும் மங்கையர்கள் அந்த ஊடகம் சொன்ன சோப்பு /ஷாம்பு / தைலத்தை நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காமல் வாங்கித் தலையில் தேய்த்துக்கொள்வார்கள். ஆனால், நிஜத்தில் அநேகம் பேருக்கு அதற்குப் பிறகுதான் மொத்த முடியும் கொட்டத் தொடங்கி திகில் ஏற்படுத்தும். அப்போது படியேறி வரும் பாம்பைப் பார்த்து பயந்தமாதிரி அலறியடித்து டாக்டரிடம் ஓடுவார்கள்.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தலையில் தேய்க்கும் திரவக்குழம்பில் இயற்கை புரோட்டீனே இருந்தாலும் சரி… அது நாமக்கல் முட்டையால் தயாரித்தது ஆனாலும் சரி… முடியில் அவை துளியும் உறிஞ்சப் போவதில்லை. எனவே, விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். இருக்கிற முடியையும் இழந்துவிடாதீர்கள்.

முடி உதிரக் காரணம்!

முடி கொட்டுவதைக் கட்டுப்படுத்தத் தைலத்தைத் தேடி அலைவதற்கு முன்னால், அதற்குரிய காரணத்தைத் தேட வேண்டியது முக்கியம். சீவும் சீப்பில் தொடங்கி உடலைத் தாக்கும் நோய்கள் வரை அநேகக் காரணிகள் அதற்கு உண்டு. ஆளுக்கு ஆள் அந்தக் காரணி மாறும். அக்காவுக்கு பிளாஸ்டிக் சீப்பு பிரச்சினை செய்கிறது என்றால், தங்கைக்கு ஹேர் டிரையர்தான் தலைமுடிக்குச் ‘சூடு’ போடும். அம்மாவுக்குத் தரம் குறைந்த தலைச்சாயம் எதிரியாக இருக்கும். அத்தைக்கு முடியை இறுக்கமாகக் கட்டுவது காரணம் எனில், சித்திக்கு ஈரத்துடன் தலை வாருவது காரணமாக இருக்கும். சித்தப்பாவுக்கு அடிக்கடி சோப்பு / ஷாம்பு மாற்றும் பழக்கம் இருக்கும். அதுதான் அவருக்குத் தலைமுடி உதிரக் காரணமாக இருக்கும். பாப்பாவுக்கு முடி கொட்ட அவளை அறியாமலேயே முடியைப் பிடுங்கும் பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம். தலையில் ஈறு, பேன், பொடுகு, படைகள் இருந்தாலும் இதே நிலைமைதான்.

பெண்களுக்கு நீண்ட கூந்தலை அள்ளிக் கொடுத்து அழகூட்டுவது ஹார்மோன் கெமிஸ்ட்ரி. அதேநேரத்தில், சில பெண்களுக்குத் தலையில் சொட்டை விழவைத்து அசிங்கப்படுத்துவதும் அதே கெமிஸ்ட்ரி செய்யும் அட்டகாசம்தான் என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் என்னும் இரண்டு ஹார்மோன்கள் பெண்கள் வயதுக்கு வரும்போது, மாதச் சுழற்சியின்போது, கருத்தரிக்கும்போது, பிரசவத்தின்போது, மாதவிலக்கு நிற்கும்போது என வாழ்வின் பல பருவங்களில் இசைக்கு நடனமாடும் நீரூற்றுக்கள்போல தங்கள் சுரப்பை இஷ்டத்துக்கு கூட்டிக் குறைத்து வேடிக்கை காட்டும். அப்போதெல்லாம் அவர்களுக்குத் தலைமுடி உதிரும்.

இன்றைய நவீன வாழ்வியலில் பலருக்கும் நம் பாரம்பரிய உணவுமுறை மறந்துவிட்டது. முடி வளர்ச்சிக்குத் தேவைப்படும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவது குறைந்துவிட்டது. அந்நிய நாட்டின் சக்கை உணவுகளைச் சாப்பிடுவது நாகரிகமாகிவிட்டது. இதனால் பலருக்குப் புரதம் குறைந்தும், ரத்தசோகை பிறந்தும் தலைமுடி உதிர்வது வாடிக்கையாகிவிட்டது. அத்தோடு தைராய்டு சுரப்பி பிரச்சினை செய்வதும், சினைப்பையில் நீர்க்கட்டிகள் பிறப்பெடுப்பதும் இந்தப் பிரச்சினைக்குத் தூபம் போடுவதை நடைமுறையில் காண்கிறோம்.

அடுத்து, டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை, காசநோய், புற்றுநோய் எனச் சில நோய்கள் தாக்கும்போது தற்காலிகமாகத் தலைமுடி உதிரும். மூட்டுவலி, மன அழுத்தம், இதய நோய் என சில நோய்களுக்குச் சாப்பிடப்படும் மருந்துகளும் தலைமுடி உதிர்வதைத் தூண்டும். இவை தவிர, ஸ்கேன் கருவிகள் தேவையில்லாமல் துப்பித்தொலைக்கும் எக்ஸ் கதிர்கள், புற்றுநோய்க்குத் தரப்படும் கதிர்வீச்சுச் சிகிச்சைகள், அணு உலைகள் அவிழ்த்துவிடும் அணுக்கதிர் வீச்சுகள் எனத் தலைமுடியை உதிரவைக்கும் காரணிகள் சிவகாசிச் சரவெடிபோல் நீளும். காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், முடி உதிரும் பிரச்சினையும் முடிவுக்கு வரும்.

(தொடர்ந்து பேசுவோம்...)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


3
1


14 பத்திரிகையாளர்கள்கடற்கரைதொல்லை தரும் தோள் வலி!அசோக்வர்த்தன் ஷெட்டி ஐஏஎஸ்ஹர்ஷ் மரிவாலாதிணைகள்அற்புதம் அம்மாள் சமஸ் பேட்டிமூலம் நோய்க்கு முடிவு கட்டலாம்!கூட்டுறவு கூட்டாச்சிசாதியினாற் சுட்ட வடுடிவிடெண்ட்பைஜூஸ்மியான்மர்பால் உற்பத்தியாளர்இரா.செழியன் கட்டுரைவரிக் குறைப்புஎன்னதான்மா உங்க பிரச்சினை?கிக் தொழிலாளர்கள்நுரையீரல் அடைப்பது ஏன்?திறந்தவெளிச் சிறைஉண்மைகள்ஆஸ்துமாபி.என்.ராவ்ரோபோட்முரண்களின் வழக்குமதவாதப் பேச்சுகள்ஜாக்கி அசேகாடி.கே.சிவகுமார்சாதி – மத அடையாளம்கமலா ஹாரிஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!