கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 15 நிமிட வாசிப்பு

உயர் சாதியினரின் எதிர்க் கலகம்

ஜீன் டிரேஸ்
23 Apr 2022, 5:00 am
4

இந்தியாவில்  இந்து தேசியவாத எழுச்சி என்பதை மக்களாட்சியின் சமத்துவ உரிமைக் கோரல்களுக்கு எதிரான ‘உயர் சாதி’யினரின் கலகம் என்பதாகப் பார்க்கலாம். பிராமணிய சமூக அடுக்கை மீட்டெடுக்க முனையும் இந்துத்துவத் திட்டம் உயர் சாதியினருக்கு உயிர் காக்கும் படகைப் போன்றது.

இந்து தேசியவாதத்தின் சமீபத்திய எழுச்சியானது, சாதிகளை அழித்து, மேன்மையான சமத்துவச் சமூகத்தை உருவாக்க முயலும் இயக்கங்களுக்கு மிகப் பெரும் பின்னடைவு என்று சொல்லலாம். இந்தப் பின்னடைவு யதேச்சையான விபத்தல்ல. இந்து தேசியவாதத்தின் வளர்ச்சி, மக்களாட்சியின் சமத்துவ உரிமைகோரல்களுக்கு எதிரான கலகமாக இதைக் காணலாம்.

இந்துத்துவாவும் சாதியமும் 

இந்துத்துவம் என அழைக்கப்படும் இந்து தேசியவாதத்தின் முக்கியக் கூறுகளைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல. ‘இந்துத்துவத்தின் இன்றியமையாத அம்சங்கள்’ என்னும் நூலில், வீர் சாவர்க்கர் (சாவர்க்கர், 1923), அவற்றைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். எம்.எஸ்.கோல்வால்கர் போன்ற பிற தொடக்கக் கால இந்துத்துவச் சிந்தனையாளர்கள் அவற்றை மேலும் விரிவுபடுத்தியுள்ளனர். இந்தியா ‘இந்துக்கள்’ எனப்படுபவர்களுக்கே சொந்தமானது என்பதே இந்துத்துவத்தின் அடிப்படைச் சிந்தனை.

இந்த ‘இந்துக்கள்’ என்பதற்கான வரையறை தீவிர மதரீதியான அளவுகோலில் அல்லாமல் கலாச்சாரரீதியாக விரிவுபடுத்தப்பட்டு சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் ஆகியோரை உள்ளடக்கி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர்க்கிறது (ஏனென்றால் இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்தியாவில் தோன்றிய மதங்கள் அல்ல). இந்துத்துவத்தின் இறுதி இலக்கு, இந்துக்களை ஒன்றிணைத்து, இந்து சமூக மறுமலர்ச்சியை உருவாக்கி, இந்தியாவை ‘இந்து தேசம்’ ஆக்குவதாகும்.

இந்தக் கருத்துக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்கள் பகுத்தறிவு, அடிப்படைக் கூருணர்வு, அறிவியல்ரீதியான புரிதல் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விலகி நிற்பவை. எடுத்துக்காட்டாக, இந்துக்கள் அனைவரும் ஆரிய இனம் என்கிற ஒற்றை இனத்தைச் சார்ந்தவர்கள் என்னும் கோல்வால்கரின் வாதத்தை எடுத்துக்கொள்வோம். இந்த வாதம் இன்று நமக்குக் கிடைத்துள்ள அறிவியல் தரவுகளுக்கு எதிராக இருப்பதை அவர் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால், அவர் ஆரியர்கள் இந்தியாவுக்கு வடக்கிலிருந்து அதாவது வடதுருவத்துக்கு அருகிலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தைப் பற்றிக்கொள்கிறார்.  வடதுருவமே ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்தது என்னும் வாதத்தின் மூலம் இதை எதிர்கொண்டார்.

கோல்வால்கரின் வரையறை

‘வடதுருவம் என்பது நிலையானதல்ல.. பழங்காலத்தில் அது இன்று நாம் பிஹார், ஒரிசா என்று அழைக்கும் பகுதியில் இருந்தது. அது பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்தது.  பின்னர் மேற்கு, வடக்கு என நகர்ந்து, இன்று இருக்கும் இடத்தை அடைந்தது… ஆனால், நாம் என்றுமே இங்குதான் இருந்தோம்.. துருவப் பகுதி, நம்மை விட்டு வடக்கு நோக்கி வளைந்து வளைந்து நகர்ந்துவிட்டது...’ (கோல்வால்கர், 1939).

வடதுருவப் பகுதி வளைந்து நகர்ந்து சென்றபோது, ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவிலேயே நிலைத்திருந்தார்கள் என்பதை கோல்வால்கர் விளக்கவில்லை. இதேபோன்ற திட்டமிடப்பட்ட வாதங்களின் மூலம், இந்துக்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசியவர்கள் என்கிற விசித்திரமான பார்வையையும் ஆதரித்தார்.

இந்துத்துவத் திட்டம் என்பதை, இந்து மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் கலாச்சாரம் என்று சொல்லப்படும் ஒரு பண்டைய சமூக அடுக்கை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவும் காணலாம்.  சாதி அல்லது வர்ண அமைப்பு என்று சொல்லப்படும் நான்கு அடுக்குச் சமூகப் பிரிவினை, இந்தச் சமூக அமைப்பின் முக்கிய அங்கமாகும். ‘வீ ஆர் அவர் நேஷன்ஹுட் டிஃபைண்டு’ (We or Our Nationhood Defined)  புத்தகத்தில், ‘இந்துச் சமூகக் கட்டமைப்பு என்பது, வர்ணங்களாலும் ஆசிரமங்களாலும் ஆனது’ என்று தெளிவாகச் சொல்கிறார் கோல்வால்கர் (கோல்வால்கர் 1939).  இதை மேலும் விரிவாக, இந்துத்துவச் சிந்தனைகளின் அடிப்படை நூல்களுள் ஒன்றான ‘சிந்தனைக் கொத்து’ நூலில் (Bunch of Thoughts) பேசும் கோல்வால்கர், வர்ண அமைப்பே ‘இணக்கமான சமூக ஒழுங்’கின் அடிப்படை எனப் புகழ்கிறார்.

சாதி அமைப்பை ஆதரிக்கும் பலரைப் போல, வர்ண அமைப்பு என்பது, மேல்-கீழ் அதிகார அடுக்கு அல்ல என்றும் சொல்கிறார். ஆனால், இந்த வாதம் நம்பும்படியாக இல்லை.

கோல்வால்கருக்கும் மற்ற இந்துத்துவச் சிந்தனையாளர்களுக்கும், சாதி என்பது ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால், ‘சாதியம்’ எனச் சிலர் சொல்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. இந்துத்துவ மொழியில், ‘சாதியம் என்பது சாதிப் பாகுபாட்டை நேரிடையாகக் குறிப்பதல்ல (இனவாதம் என்பது இன அடிப்படையில் மக்களை ஒதுக்குவதைக் குறிப்பதைப் போல). சாதிகளுக்கிடையே உள்ள பூசல்கள், எடுத்துக்காட்டாக, தலித்துகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது, இட ஒதுக்கீடுகள் கேட்பது போன்றவையே சாதியம். ஏனெனில், இவை இந்து சமூகத்தைப் பிளவுபடுத்துகின்றன.

ஆர்எஸ்எஸ்ஸின் விசுவாசம்

இன்று இந்து தேசியவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மேற்சொன்ன அடிப்படை இந்துத்துவக் கொள்கைகளுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறது. சாதி என்பது, ‘நாட்டின் மேதமையின் ஒரு பகுதி’ என்பதே சாதியைப் பற்றிய அவர்களின் மாறாத நிலைப்பாடாக இருக்கிறது என்பது, பாஜகவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (2017) நாளேட்டில் கூறியதிலிருந்து தெரியவருகிறது. சாதி அல்ல, சாதியம்தான் பிரச்சினை என்பதே அவருடைய நிலைப்பாடு.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதை மேலும் வெளிப்படையாகப் பேசினார்.  கோல்வால்கரைப் போலவே, இவரும், “சாதி என்பது சமூகத்தை ஒழுங்காக நிர்வகிக்கத் தேவையான அமைப்பு” என்று சொன்னார். “உழுத நிலத்தில் சீராக வைத்திருக்கும் வரப்புகளைப் போல, சாதி என்னும் அமைப்பு, இந்து சமூகத்தைச் சீராகவும் ஒழுங்காகவும் பாதுகாக்க உதவுகிறது. சாதியால் எந்த பிரச்சினையும் இல்லை. சாதியம்தான் பிரச்சினை” என்றார்.

இதை வேறொரு கோணத்தில் பார்க்கையில், இந்துத்துவச் சிந்தனையாளர்கள் அடிப்படையானதொரு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது; 'சாதியால் பிளவுண்டிருக்கும் இந்து சமூகத்தை ஒன்றிணைப்பது எப்படி?'  சாதியைப் பிளவுபடுத்தும் சக்தியாகப் பார்க்காமல், ஒன்றிணைக்கும் நிறுவனமாக முன்னிறுத்துவதுதான் அவர்களது தீர்வு.

ஆனால், இந்த யோசனை சாதி அடுக்கில் கீழ்நிலையில் இருக்கும் சாதிகளுக்குப் பிடிக்காது. அதனால் யோகி ஆதித்யநாத் நேர்காணலில் சொன்னதுபோல இது வெளிப்படையாகச் சொல்லப்படுவது மிக அரிது. பொதுவாக, இந்துத்துவத் தலைவர்கள், சாதி அமைப்பைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால், இப்படிப் பேச மறுப்பதே ரகசியமாகச் சாதி அமைப்பை ஏற்றுக்கொள்வதுதான். சில இந்துத்துவத் தலைவர்கள் சாதி அமைப்பை எதிர்த்துப் பேசியதும் உண்டு.

தீண்டாமையை எதிர்த்துப் பேசுதல் அல்லது செயல்படுதல் மூலம் இந்துத்துவத் தலைவர்கள் சிலர் தாம் சாதிய அமைப்பை எதிர்ப்பவர்கள் என்னும் எண்ணத்தைச் சில நேரம் உருவாக்குவார்கள். சாவர்க்கர் தீண்டாமையை எதிர்த்தவர். மகத் சத்தியாக்கிரகம் உள்ளிட்ட டாக்டர் அம்பேத்கரின் தொடக்க கால சட்ட மறுப்புப் போராட்டங்களை ஆதரித்தவர் (Zelliott, p.80). ஆனால், தீண்டாமையை எதிர்ப்பதும் சாதிய அமைப்பை எதிர்ப்பதும் ஒன்றல்ல. தீண்டாமை என்பது பிற்காலப் பிறழ்வு என்று தீண்டாமையை எதிர்த்துக்கொண்டே சாதியத்தை ஆதரிப்பது பல காலங்களாக மேல் சாதியினரிடையே இருந்துவரும் வழக்கம்தான். 

நிச்சயமற்ற அதிகாரம்

இந்துத்துவத் திட்டம் மேல் சாதியினருக்கு நன்மை தரக் கூடியது. ஏனெனில், அது அவர்களை உயர் பீடத்தில் அமர்த்தும் பழங்காலச் சமூக அமைப்பை மீட்டெடுக்க வல்லது. அதனால்தான் ஆர்எஸ்எஸ் ‘மேல் சாதி’யினரைப் பெரிதும் ஈர்க்கிறது. அவ்வமைப்பைத் தோற்றுவித்தவர்கள் அனைவரும் பிராமணர்கள். ராஜபுதனரான ராஜேந்திர சிங் ஒருவர் தவிர இன்றுவரை ஆர்எஸ்எஸ்ஸின் அத்தனை தலைவர்களும் பிராமணர்கள். சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், நாதுராம் கோட்ஸே, சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, மோகன் பாகவத், ராம் மாதவ் என அதன் முக்கியப் பிரமுகர்கள் பலரும்  பிராமணர்கள்.

கால ஓட்டத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது செல்வாக்கை, மேல் சாதியினரைத் தாண்டி விரிவாக்கிக்கொண்டாலும், மேல் சாதியினரே அதன் மிக விசுவாசமான நம்பிக்கைக்குரிய ஆதரவுத் தளமாக விளங்குகின்றனர். 

இந்திய விடுதலைக்குப் பின்னர் அச்சுறுத்துலுக்குள்ளான மேல் சாதியினர் ஆதிக்கத்தின் மீட்புப் படகாக இந்துத்துவம் உருவெடுத்துள்ளது. உண்மையில், விடுதலைக்குப் பின், மேல் சாதியினர் தங்களது அதிகாரத்தையும் சிறப்பு உரிமைகளையும் பெரும்பாலும் தக்க வைத்துக்கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, 2015ஆம் ஆண்டு, அலகாபாத் நகரில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ‘அதிகாரமும், செல்வாக்கும் உள்ள பதவிகளில் இருப்பவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு அது. அதாவது, பல்கலைக்கழக ஆசிரியர்கள், வழக்கறிஞர் சங்கங்களின் உறுப்பினர்கள், பத்திரிகையாளர் சங்கங்களின் உறுப்பினர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கியது.

உத்தர பிரதேச மக்கள்தொகையில் 16% மட்டும் உள்ள உயர் சாதியினர், 75% பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். இவற்றில் சரிபாதிப் பதவிகளில் பிராமணர்கள், காயஸ்தர்கள் இருந்தார்கள். இந்தச் சமநிலையின்மை, சமூக அமைப்புகளான தொழிற்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள், பத்திரிகையாளர் சங்கங்கள் போன்றவற்றில், அரசு நிறுவனங்களைவிட  அதிகமாக இருந்தது கவனிக்கத்தக்கது. அலகாபாத் என்பது ஒரு நகரம் மட்டுமே. அதைத் தாண்டி எடுக்கப்பட்ட பல்வேறு கணக்கெடுப்புகள் - ஊடக நிறுவனங்கள், தனியார் நிறுவன உயர் பொறுப்புகள், கிரிக்கெட் அணிகள், அரசு உயர் பதவிகள்  என - அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த பல சூழல்களில் மேல் சாதியினரின் மேலாதிக்கம் தொடர்வதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.

ஆனாலும், மேல் சாதியினரின் கப்பல், பல பக்கங்களிலிருந்தும் ஒழுகத் தொடங்கியுள்ளது. கல்வி ஒருகாலத்தில் முழுக்க மேல் சாதியினரின் ஏகபோக உரிமையாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுத்தறிவு பிராமணர்களிடம் சாதாரணமாகப் பரவியிருந்தது. தலித்துகளில் கிட்டத்தட்ட யாருக்கும் அது கிடைக்கவில்லை.  இன்றும் கல்விச் சூழலில், சமத்துவமின்மையும், பாகுபாடும் நீடித்தாலும், அரசுப் பள்ளிகளிலாவது தலித் குழந்தைகள், மேல் சாதியினருக்குச் சமமாக நடத்தப்படும் நிலையில் உள்ளனர். மேல் சாதிப் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை எனினும், அனைத்துச் சாதிக் குழந்தைகளும் ஒரே மதிய உணவை உண்ணும் நிலை உருவாகியுள்ளது (Dreze, 2017).

பல மாநிலங்களில், மதிய உணவில் முட்டை சேர்த்தது, சைவ உணவுப் பழக்கம் கொண்ட மேல் சாதியினரைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் தாக்கத்தால் பல மாநிலங்களில், பாஜக அரசுகள் மதிய உணவில் முட்டை சேர்ப்பதைத் தடுத்துவருகின்றன. 

பொது வாழ்வில் மேல் சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் சலுகைகளையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலுக்கான ஓர் எடுத்துக்காட்டுதான் பள்ளிக் கல்வி. தேர்தல் அமைப்பு அதற்கு இன்னோர் எடுத்துக்காட்டு. “18 வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமையும் அடிக்கடி நடைபெறும் தேர்தல்களும் ஆளும் வர்க்கம் அதிகாரமும் ஆதிக்கமும் உள்ளவர்களைச் சென்றடைவதைத் தடுக்கவில்லை.” (அம்பேத்கர், 1945).

எனினும், தேர்தல் அரசியல் களம் மேல் சாதியினர் மற்றவர்களோடு தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய இன்னொரு களம். மக்கள்தொகையில் மேல் சாதியினரின் சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாக மக்களவையில் அவர்களுடைய இருப்பு இருந்தாலும், மக்களவையின் மொத்த இடத்தில் அவர்கள் பங்கு 29%தான்.

சமூகத்தில் அதிகாரமும் செல்வாக்கும் உள்ள மற்ற தளங்களில் அவர்களுக்கு இருக்கும் ஆதிக்கத்தைவிட இது குறைவானதுதான் (திரிவேதியும் மற்றவர்களும், 2019). பஞ்சாயத்து ராஜ் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு, பட்டியல் சாதியினர் (தலித்) மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு போன்றவை, அரசியல் விவகாரங்களில் மேல் சாதியினரின் பிடியை வலுவிழக்கச் செய்துள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் நிலை இன்னும் எட்டப்படவில்லை என்றாலும், நீதி விசாரணை அமைப்புகள் (நில அபகரிப்பு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை, தீண்டாமை போன்ற விஷயங்களில்) மேல் சாதியினரின் தன்னிச்சையான அதிகார வழிமுறைகளை அவ்வப்போது கட்டுப்படுத்திவருகின்றன.

பொருளியல் மாற்றங்கள் 

பொருளியல் மாற்றங்கள் சிலவும் மேல் சாதியினரின் மேலாதிக்க நிலையைக் குறைத்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம், மொராதபாத் மாவட்டத்தில் உள்ள பாலன்பூர் என்னும் ஊரில் இதை நான் காண நேரிட்டது. மான்சிங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பாலன்பூர்வாசியை, அண்மைக் காலத்தில் அவர் கிராமத்தில் நிகழ்ந்த சமூகப் பொருளியல் மாற்றங்களை எழுதச் சொன்னோம். ‘மேல் சாதி’யினர், ‘கீழ் சாதி’யினர் தொடர்பான அவருடைய விவரணை இதுதான்: 

  1. மேல் சாதியினரைவிட, கீழ் சாதியினர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறது. இதனால் மேல் சாதியினர் மனதில் கீழ் சாதியினர் மீது பொறாமையும் வெறுப்பும் உருவாகியுள்ளன.
  2. கீழ் சாதியினரில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம் வேகமாக அதிகரித்துவருகிறது.
  3. கீழ் சாதியினர் முன்னேறுகிறார்கள், மேல் சாதியினர் கீழ் நோக்கிச் செல்கிறார்கள். இன்றைய நவீன உலகத்தில் கீழ்சாதியினரின் பொருளாதார நிலை, மேல் சாதியினரின் பொருளாதார நிலையைவிட மேம்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

மேற்சொன்ன கருத்துகளில், மான்சிங், ‘கீழ் சாதி’, எனக் குறிப்பிட்டது, தலித்துகளை அல்ல. முரோ என்னும் அவருடைய சாதியைத்தான் குறிப்பிட்டுள்ளார் (உத்தர பிரதேசத்தில் ‘இதர பிற்படுத்தப்பட்ட சாதி’களில் ஒன்று முரோ). இதை நான் புரிந்துகொள்ளும் வரையில் அவருடைய கருத்துகளை என்னால் சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், கீழ் சாதி என்பது பிற்படுத்தப்பட்ட சாதி என விளங்கியதும், அவர் எழுதியவை நாங்கள் கண்டறிந்தவற்றுடன் ஒத்துப்போயின.

ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு, பசுமைப் புரட்சி எழுந்த காலத்தில், முரோ சாதியினர், உயர் சாதிகளான தாக்கூர்களைவிட அதிகச் செல்வச் செழிப்பை அடைந்தார்கள். கலப்பையைத் தொடாத பாரம்பரியத்தில் வந்த உயர் சாதிகளான தாக்கூர்கள், வேலையில்லாத நிலாச்சுவான்தார்களாகத் தங்கள் பொருளாதார நிலையை நிலைநிறுத்தத் திணறிக்கொண்டிருக்க, முரோ சாதியினர், ஆழ்துளைக் கிணறுகளை நிறுவுதல், பல போகம் பயிர்செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு, நிலங்களை வாங்கி மான்சிங் கூறுவதைப் போல் கல்வி போன்ற விஷயங்களில் தாக்கூர்களுக்கு இணையாக முன்னேறினர். தாக்கூர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கினர்.

பாலன்பூரில் மட்டுமின்றி, இதே போன்ற பொருளியல் மாற்றங்கள், பல கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் தெரியவந்துள்ளன. ஒப்பீட்டளவில், மேல் சாதியினரின் இந்தப் பொருளியல் சரிவு சுதந்திரம் பெற்ற காலத்திற்குப் பின், ஊரக இந்தியா முழுமைக்கும் நிகழ்ந்த மாற்றம் எனச் சொல்ல மாட்டேன். ஆனால், பல இடங்களில் தென்படும் பொதுவான மாற்றமாக இது உள்ளது. 

சுருங்கச் சொல்வதானால், பொருளியல், சமூகத் தளங்களில், உயர்சாதிகளின் ஆதிக்கம் இன்னும் வலுவாக இருந்தாலும், சில தளங்களில், அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழந்துகொண்டோ அல்லது இழக்கும் அபாயத்திலோ இருக்கிறார்கள். அவர்களின் சலுகையில் நிகழும் சிறு இழப்புக்கூட மிகப் பெரிதாக உணரப்படுகிறது.

திருப்பியடித்தல்

கடந்த சில பத்தாண்டுகளில் மேல் சாதியினரின் ஆதிக்கத்துக்கு விடுக்கப்பட்ட சவால்களில் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதுதான் உயர்சாதியினரால் கடுமையாக வெறுக்கப்படுவதாக இருக்கிறது. இட ஒதுக்கீடானது உயர்சாதியினரின் கல்வியையும் வேலை வாய்ப்பையும் எந்த அளவு பாதித்திருக்கிறது என்பது தெளிவாக இல்லை. ஆனால், இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை. மேலும் அவை அரசு, பொதுத் துறைகளில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், தங்களின் கல்விப் பட்டங்களும் வேலை வாய்ப்புகளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளால் பிடுங்கப்பட்டுவிட்டன என்பதே மேல் சாதியினரின் பொதுப்புத்தியில் உள்ள பொதுக் கருத்து.

மண்டல் கொண்டுவந்த மாற்றங்கள்

1990ஆம் ஆண்டு, வி.பி. சிங் அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவெடுத்த பிறகு, பாஜக மீண்டும் உயிர்பெறத் துவங்கியது. இந்து சமூகத்தைப் பிளக்கும் அபாயத்தைக் கொண்டிருந்ததோடு (மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் மேல் சாதியினர் கோபமடைந்திருந்தனர்) இந்தியச் சமூகத்தில் 40% உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினரை பாஜகவிடமிருந்து அந்நியப்படுத்தும் என்ற அச்சமும் இந்துத்துவ வட்டாரங்களில் நிலவியது.

இதனால் பாஜக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்தது. இந்தக் காலகட்டத்தில் தொடங்கிய எல்.கே.அத்வானியின் ரத யாத்திரை, (அதைத் தொடர்ந்த 1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு), இந்த 'சாதிய அபாய'த்தைத் தவிர்த்து, இந்துக்களை, இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு அணியில் பாஜக மற்றும் உயர்சாதியினர் தலைமையில் இணைத்தது.

மேல் சாதியினரின் ஆதிக்கத்துக்கும் சலுகைகளுக்கும் எதிரான சவால்களைத் தகர்த்து, அவர்கள் இந்து சமூகத்தின் மீதான தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக்கொள்ள இந்துத்துவம் எவ்வாறு உதவியது என்பதற்கான முகத்தில் அறையும் உதாரணம் இது. இதுவே இன்றைய இந்துத்துவ இயக்கத்தின் மிக முக்கியமான செயல்பாடாக இருப்பதாகத் தெரிகிறது.  இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர், கம்யூனிஸ்ட்டுகள், மதச்சார்பற்றவர்கள், பகுத்தறிவுவாதிகள், பெண்ணியவாதிகள் – சுருக்கமாகச் சொல்வதானால் பிராமணச் சமூக அடுக்கை மீட்டுருவாக்கம் செய்யும் இந்துத்துவத்துவ இயக்கச் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் எவருமே - இதன் எதிரிகளாகக் கருதத் தக்கவர்கள். இந்துத்துவம், பெரும்பான்மையினரின் இயக்கம் என அழைக்கப்பட்டாலும், ஒடுக்கும் மனநிலை கொண்ட சிறுபான்மையினருக்கான இயக்கம் என அதை அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

இந்துத்துவ இயக்கம் (அல்லது அதன் அண்மைக்கால அதிவேக வளர்ச்சி) பற்றிய இந்த விளக்கத்துக்கு மாற்றாக வைக்கப்படக்கூடிய ஒரு வாதம் அவ்வியக்கத்துக்குத் தலித் மக்கள் பெரும் ஆதரவு அளிக்கிறார்கள் என்பதாகும். ஆனால், இந்த வாதத்தை மறுதலிப்பது எளிது. முதலில், தலித் மக்கள் ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சித்தாந்தங்களை உண்மையிலேயே ஆதரிக்கிறார்களா என்பது கேள்விக்குரியது. 2019இல் பாஜகவுக்குப் பலர் வாக்களித்திருந்தாலும் அது இந்துத்துவத்துக்கு ஆதரவளிப்பது ஆகாது.

பாஜகவுக்கு வாக்களிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இரண்டாவது, இந்துத்துவ இயக்கத்தின் சித்தாந்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்துத்துவ இயக்கத்தின் சில கூறுகள் தலித் மக்களுக்குப் பிடித்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆர்எஸ்எஸ் இயக்கம், சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள மக்களுக்காகப் பல பள்ளிகளை நடத்திவருகிறது. சமூகப் பணிகளை ஆற்றிவருகிறது. மூன்றாவதாக, டாக்டர் அம்பேத்கரை ஸ்வீகரித்துக்கொண்டதில் தொடங்கி சமூகப் பணிகள் மட்டுமல்லாமல், பரப்புரைகள் மூலமாகத் தலித் மக்களைக் கவர ஆர்எஸ்எஸ் பல உத்திகளைக் கையாண்டது. மனச்சாய்வின்றிப் பார்த்தால் அம்பேத்கரும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் இணையும் புள்ளி எதுவுமே இல்லை. இருந்தாலும் ஆர்எஸ்எஸ் இயக்கம், அம்பேத்கரைத் தனக்குரியவராகச் சித்தரிக்கப் பல வழிகளில் முயல்கிறது. 

இறுதியாக, இந்துத்துவா, சாதியை ஒழிப்பதை ஆதரிக்கவில்லை எனினும், சாதி பற்றிய அதன் பார்வை மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள், இன்று இருக்கும் சாதிய ஒடுக்குமுறையைவிட மேலானவை என்கிற வாதம் பொருட்படுத்ததக்கது. தலித் மக்களில் சிலர், இன்று பொதுச் சமூகத்தால் தாங்கள் நடத்தப்படுவதைக் காட்டிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் மேலாக நடத்தப்படுவதாக உணரலாம். “இந்துத்துவமும் பொது இந்து அடையாளமும், பெருமளவில் தலித் மக்களையும் பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் எப்போதும் கவர்வதாகவே உள்ளது. ஏனெனில், அது சாதி என்னும் குறுகிய, பலவீனமான அடையாளத்திலிருந்து விடுவிக்கும் வாக்குறுதியை அவர்களுக்கு அளிக்கிறது” (சிங் 2019) என்கிறார் ஆர்எஸ்எஸ் அனுதாபி ஒருவர். இந்த ‘வாக்குறுதி’ ஒரு மாயைதான் என்பதற்கு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பன்வர் மேக்வன்ஷியின் அனுபவங்கள் பலருக்கு விழிப்புணர்வூட்டும் எடுத்துக்காட்டாகும் (மேக்வன்ஷி, 2020).

பாஜவின் வெற்றி எதைக் குறிக்கிறது?

முன்பே குறிப்பிட்டதுபோல, இந்து தேசியவாதத்தின் எழுச்சியை, பாஜகவின் தேர்தல் வெற்றியுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. என்றாலும், பாஜகவின் 2019ஆம் ஆண்டின் அபாரமான தேர்தல் வெற்றி, ஆர்எஸ்எஸின் வெற்றியும்தான். முக்கியமான பதவிகள் பலவற்றில் (பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மக்களவைச் சபாநாயகர், முக்கிய அமைச்சர்கள், பல ஆளுநர்கள்), இந்து தேசியவாதச் சித்தாந்தத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள், இன்னாள் உறுப்பினர்களே வீற்றிருக்கின்றனர். மக்களாட்சிக்கு எதிரான, உயர்சாதியினரின் இந்த எதிர்க் கலகமானது  கருத்துச் சுதந்திரம், மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட மக்களாட்சியின் நிறுவனங்களை நேரடியாகத் தாக்கும் வடிவத்தை எடுத்துள்ளன. மக்களாட்சியின் பின்னடைவும் உறுதிப்பட்டுவரும் சாதியும் ஒன்றை ஒன்று வலிமைப்படுத்தியபடி மேலெழும் அபாயம் நம் முன் உள்ளது. 

- The India Forum 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஜீன் டிரேஸ்

ஜீன் டிரேஸ், வளர்ச்சிப் பொருளியல் நிபுணர். ராஞ்சி பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையின் வருகை தரு பேராசிரியர்.


2

3





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   3 years ago

சிறப்பான கட்டுரை. இதில் ஒரு விசியம் மட்டும் விவாவதத்தித்குரியது. உ.பியில் 16 % உயர் சாதியினர். ஆனால் தமிழகத்தில் 8% கூட FCகள் இல்லை. காரணம், உ.பியில் FCஆக வகைபடுத்தப்படும் பல சாதிகளுக்கு இணையான தமிழக சாதிகள் இங்கு BCயில் உள்ளனர். உதாரணமாக FCயில் உள்ள ஜாட் பிரிவினர், கொங்கு கவுண்டர்களுக்கு முற்றிலும் இணையானவர்கள். நில உடைமை சமூகம். ஜமீந்தார்களாகவும் இருந்த சமூகங்கள். ஆனால் இங்கு கவுண்டர்கள் BCயில் வருவதால், அரசு வேலைகளில் உள்ள FCகள் விகிதத்தில் இரு மாநிலங்களுக்கும் பெரும் வேறுபாடு உருவாகிறது. காயசத்திற்கு இணையானவர்கள் முதலியார்களில் சில பிரிவினர். இதிலும் distorted picture உருவாகிறது. இதைப் பற்றி மேலும் விரிவான ஆய்வுகள் தேவை..

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Anantharaja R   3 years ago

மேல் சாதியினரின் ஆதிக்கத்துக்கும் சலுகைகளுக்கும் எதிரான சவால்களைத் தகர்த்து, அவர்கள் இந்து சமூகத்தின் மீதான தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக்கொள்ள இந்துத்துவம் எவ்வாறு உதவியது என்பதற்கான முகத்தில் அறையும் உதாரணம் இது. இதுவே இன்றைய இந்துத்துவ இயக்கத்தின் மிக முக்கியமான செயல்பாடாக இருப்பதாகத் தெரிகிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

kuttalingam   3 years ago

This man has just cut and pasted what Dravidian parties/chirstian missionaries are saying so far ( dividing the society on caste lines). This essay doesnot give any ideas other than reservation to annihilate the caste system.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   3 years ago

மிக அருமையான கட்டுரை! கருத்துக்களை காத்திரமாக முன்வைத்துள்ளது!

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

செவிநரம்புவண்டி எங்கே போகும்?கள்ளச்சாராயம் சித்ரா பாலசுப்பிரமணியன்சுவைமிகு தொப்புள்கொடிதிருக்கோவிலூர்கே.ஆர்.வாசுதேவன்: ஓர் இதழியல் வாழ்க்கைபுதிய ஆட்டம்பார்க்கின்சன் நோய்வ.சேதுராமன் கட்டுரைத.வி.வெங்கடேஸ்வரன் கட்டுரைவேலைத்தரம்சந்துரு பேட்டி அருஞ்சொல்சிறைவாசிகள் எதிர்பார்ப்புஎதிர்க்கட்சிசங்கம் புகழும் செங்கோல்சுரங்கப் பாதைகள்சி.என்.அண்ணாதுரைவரி விகிதம்கர்ப்பிணிப் பெண்கள்சிவப்பணுக்கள்ஐந்து ஆறுகள்ஹிமந்த விஸ்வ சர்மாஇன்டிகாசோவியத் கம்யூனிஸ்ட் கட்சிகழிவுஒன்றிய நிதி அமைச்சகம் புதிய காலங்கள்விதிகள்samas letter

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!