கோணங்கள், ஏன் எதற்கு எப்படி? 2 நிமிட வாசிப்பு

எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரம் தெரியுமா?

டி.வி.பரத்வாஜ்
25 Oct 2021, 5:00 am
0

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) நிர்வாக வரம்பு, சர்வதேச எல்லையை ஒட்டிய மூன்று மாநிலங்களில் சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது, அதேசமயம் குஜராத்தில் குறைக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப், வங்கம் இரு மாநிலங்களும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார விரிவாக்கத்தை எதிர்த்திருக்கின்றன. என்ன விவகாரம் இது? பார்ப்போம், கூடவே எல்லைப் பாதுகாப்புப் படையைப் பற்றியும் அறிந்துகொள்வோம்!

என்ன அறிவிப்பு இது?

பஞ்சாப், வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லைக்கு உள்புறத்தில் 50 கி.மீ. வரை எல்லைப் பாதுகாப்புப் படையின் நிர்வாக எல்லையை விரிவுபடுத்தி உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். எல்லை தாண்டி வருகிறவர்களை சோதனை போடுவது, ஆயுதங்களையோ, போதைப் பொருட்களையோ, எடுத்துவர அனுமதியில்லாத பிறவற்றையோ கொண்டுவந்தால் அவற்றைக் கைப்பற்றுவது, கைதுசெய்வது ஆகிய அதிகாரங்கள் எல்லை பாதுகாப்புப் படைக்கு உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் அவர்கள் காவல் பணி செய்யும் சர்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவு வரைதான் மேற்கொள்ள முடியும். அதற்கும் மேலான பகுதியில் அந்தந்த மாநிலக் காவல் துறையினர் இதைக் கவனிக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தார்கள். இப்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார எல்லை விரிவாக்கப்பட்டிருக்கிறது. 

அதேசமயம், குஜராத் மாநிலத்தில் சர்வதேச எல்லையிலிருந்து 80 கி.மீ. வரை இப்படிச் சோதிக்க, தடுத்து நிறுத்த, கைதுசெய்ய, பறிமுதல்செய்ய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் இருந்தது; அது இப்போது 50 கி.மீ. வரையெனச் சுருக்கப்பட்டிருக்கிறது.

எல்லா மாநிலங்களுக்கும் ஒரே கணக்கா?

அப்படி இல்லை. மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம், ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகியவற்றின் முழுப் பகுதிகளுமே எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்புக்குள் வரும். சர்வதேச எல்லையிலிருந்து குஜராத்தில் 80 கி.மீ., ராஜஸ்தானில் 50 கி.மீ., பஞ்சாப், வங்கம், அசாமில் 15 கி.மீ. என்று இந்த அதிகார எல்லை இருந்தது.

ஏன் மாநிலங்கள் எதிர்க்கின்றன?

இது அந்தந்த மாநிலக் காவல் துறையினரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை; கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் என்று பஞ்சாபும் வங்கமும் கண்டிக்கின்றன.

அப்படி என்ன அதிகாரமெல்லாம் தரப்பட்டிருந்தது?

தண்டனையியல் சட்டம், 1920-ம் ஆண்டு பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைவது தொடர்பான) சட்டம், 1967-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் படியான அதிகாரங்கள் எல்லை பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவரைப் பிடித்து விசாரிக்க, சோதனையிட, கைதுசெய்ய போதுமான அதிகாரங்களை இச்சட்டங்கள் வழங்குகின்றன.

இது காவல் துறையைப் பாதிக்குமா?

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசுகளின் கடமை, எனவே எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பின் எல்லையை நீடித்துக்கொண்டேபோவது மாநிலங்களின் அதிகாரத்தில் குறுக்கிடுவதாகும் என்ற மாநிலங்களின் கவலையில் மிகுந்த அர்த்தம் உண்டு. கடந்த காலத்தில் மோடியே ஒரு முதல்வராக இதை எதிர்த்தது உண்டு. ஏற்கெனவே, மாநில அரசின் அதிகாரத்தைத் தாண்டி ஒரு மாநிலத்துக்குள் நுழையும் காவல் படையாக ‘தேசியப் பாதுகாப்பு முகமை’ உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தகு சூழலில் ‘எல்லைப் பாதுகாப்புப் படை’யின் அதிகார வரம்பு எல்லை அதிகரிக்கப்படுவதானது மாநில அரசுகளைச் சங்கடத்தில் தள்ளுகின்றன.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


1






2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுவிளிம்புநிலைபெருமாள் முருகன் அருஞ்சொல் கட்டுரைசூலக நீர்க்கட்டிதெற்கும் முக்கியம்தேசத் துரோகிவழிகாட்டுக் கொள்கைகள்வாய்வுத் தொல்லைஅசோக் செல்வன்தாதாஷமக்கான்15வது நிதி ஆணையம்அருஞ்சொல் இயக்கம்நேருவின் தேர்தல் பரப்புரைகள்உணவு அரசியல்அரசமைப்புச் சட்டப் பிரிவு 246ஏதமிழ் தாத்தாதான்சானியாவில் என் முதல் மாதம்உங்களைப் போன்றோர் தேவை சாருநாடாளுமன்ற உறுப்பினர்மாலை டிபன்ராஜ்நாத் சிங்எழுத்துப் பிழைரோமப் பேரரசுயானைகள்குறுங்கதைமத்தியஸ்தர்ரஷ்ய ராணுவம்சித்த மருந்துவருவாய் வசூல்குறைந்தபட்ச உத்தரவாத வருமானச் சட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!