பேட்டி, சமஸ் கட்டுரை, ஆளுமைகள், ரீவைண்ட் 10 நிமிட வாசிப்பு

என் வலியை அழுதுகாட்ட விரும்பவில்லை: பாலு மகேந்திரா பேட்டி

சமஸ் | Samas
14 Feb 2022, 5:02 am
0

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள நெரிசல் மிக்க காமராஜர் தெருவில், வரிசையாக விரிக்கப்பட்டு இருக்கும் மீன் கடைகளை ஒட்டி இருக்கிறது, ‘பாலுமகேந்திரா சினிமா பட்டறை.’ ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதைத் தாண்டி, தமிழ் சினிமாவுக்கு பாலு மகேந்திராவின் முக்கியமான பங்களிப்பு இது. ‘‘ஒரு வருஷத்துக்கு 12 மாணவர்கள். இது மூன்றாவது அணி. தமிழ்தான் பயிற்றுமொழி. வெளி மாநில மாணவர்களும் புரிந்துகொள்கிறார்கள்’’ என்கிறார். வீட்டுக் கூடம்போல் இருக்கிறது வகுப்பறை. கீழே அமர்ந்துதான் படிக்கிறார்கள். மாணவர்களோடு மாணவராக சிறுகதைகள், கவிதைகள் படிக்கிறார், படங்கள் பார்க்கிறார், விவாதிக்கிறார். வாத்தியார் வேலையின் சந்தோஷம் முகத்தில் தெறிக்கிறது!

இப்படிப்பட்ட நெரிசல் மிகுந்த இடத்தில் நீங்கள் இருப்பது வியப்பை அளிக்கிறது...

இது ‘வீடு’ படத்துக்காகக் கட்டப்பட்ட வீடு. படத்தில் வருவதுபோல, முற்றுப்பெறாத நிலையிலேயே பல ஆண்டு காலம் கிடந்தது. அப்புறம்தான் புரிந்தது... இது என் பள்ளிக்கூடத்துக்காக விதிக்கப்பட்ட வீடு என்பது. இங்கு குடியேறிய சமயத்தில், இந்த நெரிசல், புகை, புழுதி, சத்தம் எல்லாம் எனக்கே பெரும் சங்கடமாகத்தான் இருந்தன. குறிப்பாக, பக்கத்தில் உள்ள மீன் சந்தை. காலி செய்துவிடலாமா என்றுகூடத் தோன்றும். அப்புறம் மெள்ளப் புரிந்தது. அவர்கள் அவர்களுடைய வேலையைச் செய்ய இங்கு வருகிறார்கள். நான் என் வேலையைச் செய்ய வருகிறேன். அவர்கள் என்னைத் தொந்தரவாகக் கருதவில்லை. ஆனால், நான் ஏன் அவர்களைத் தொந்தரவாகக் கருத வேண்டும்? அப்புறம் பழகிவிட்டது. இப்போது இந்தச் சத்தமும் மீன் வாடையும் இல்லாவிட்டால்தான் எனக்குச் சங்கடம்!

பாடசாலைகளில் உட்கார்ந்து சினிமாவைக் கற்றுக்கொள்ள முடியுமா என்ன?

சினிமா ஒரு மொழி என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். தமிழைப் பாடசாலைகளில் உட்கார்ந்துதானே கற்றுக்கொள்கிறோம்.

தமிழ் சினிமாவை இப்போது உங்கள் சிஷ்யர்கள் ஆள்கிறார்கள். அவர்களுடைய வெற்றிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னுடைய ஒவ்வொரு மாணவனும் தனித்துவமானவன். அவர்களுடைய முழு ஆற்றலையும் உணர்ந்தவன் நான். இந்த வெற்றி எனக்கு ஆச்சர்யம் இல்லை. உண்மையில், அவர்களிடம் இருந்து இன்னும் நான் எதிர்பார்க்கிறேன்!

மிக மென்மையான கதைசொல்லி நீங்கள். ஆனால், உங்கள் சிஷ்யர்கள் வன்முறைக் கதைகளைத்தான் கையாளுகிறார்கள். இந்த வேறுபாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு படைப்பாளி என்கிற முறையில் இது அவரவர் சுதந்திரம். நான் யார்... ‘நீ இப்படிப்பட்ட படம்தான் எடுக்க வேண்டும்’ என்று சொல்ல? அவரவர் இஷ்டப்பட்ட கதைகளை அவரவர் படமாக்குகிறார்கள்!

சரி... ஓர் இயக்குநராக, 34 வருஷங்களில் 21 படங்கள் தந்திருக்கிறீர்கள். இது போதுமானதா?

போதாது. நிச்சயம் போதாது! ஒரு வருஷத்துக்கு ஒரு படமாவது எடுத்திருக்க வேண்டும். வசூலை அள்ளிய படம் ‘மறுபடியும்’. அதற்குப் பிறகு ஐந்து வருடங்கள் சும்மாதான் இருந்தேன். அந்த இடைவெளிக்கு எந்தக் காரணமும் கிடையாது. ஏதோ அப்படி நடந்துவிட்டது. அவ்வளவுதான். பொதுவாகவே, நான் யாரிடமும் சென்று ‘உங்களுக்குப் படம் செய்கிறேன்’ என்று கேட்டது கிடையாது. தோன்றும்போது, அமையும்போது படம் செய்தே பழகிவிட்டேன்.

இந்திய சினிமாவின் இன்றைய போக்கும் வளர்ச்சியும் அதன் இயல்பில் இருந்து உருவானதா அல்லது உலக சினிமாவின் பிரதிபலிப்பா?

எது உலக சினிமா? வெளிநாட்டு சினிமாவை உலக சினிமா என்று குறிப்பிடுகிறோம். எல்லா நாடுகளிலுமே தரமான படங்களும் எடுக்கப்படுகின்றன. மசாலாப் படங்களும் எடுக்கப்படுகின்றன. ஆனால், திரைப்பட விழாக்களில் வெளிநாடுகளின் தரமான படங்களை மட்டும் பார்த்துவிட்டு, அந்த நாட்டில் உள்ள எல்லாப் படங்களுமே இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொள்கிறோம். நம் ஊர் சினிமாவைக் கீழ் இறக்கிப் பார்க்கிறோம். சினிமா என்பது ஒரு சமூகத்தின் சகல போக்குகளில் இருந்தும் உருவாகிறது. அதன் வளர்ச்சியும் அப்படித்தான்.

வெளிநாட்டுப் படங்களின் பாதிப்பில் நீங்கள் சில படங்களை எடுத்திருக்கிறீர்கள். நேர்மையாக அதை ஒப்புக்கொண்டும் இருக்கிறீர்கள். ஆனால், வெளிநாட்டுப் படங்களை அப்படியே பிரதியெடுத்து, அதற்கு அங்கீகாரமும் கோரும் இன்றைய சினிமா போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தவறு. அதேசமயம், நேர்மையான வழியில் அனுமதி பெற்று, ஒரு வெளிநாட்டுப் படத்தை ரீமேக் செய்யும் வியாபாரச் சூழலும் பொருளாதாரச் சூழலும் அவர்களுக்கு இங்கு இல்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இன்றைய இயக்குநர்களுக்கு ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி, கோடம்பாக்கத்து நிர்பந்தங்கள் உங்கள் படங்களைச் சூழ்ந்துவிட அனுமதிக்காதீர்கள். இந்தக் கோடம்பாக்கத்தில் இருந்துதான் ஒரு ‘பராசக்தி’ வந்தது, ஒரு ‘ரத்தக் கண்ணீர்’ வந்தது, ஒரு ‘மூன்றாம் பிறை’ வந்தது. தமிழ் சினிமாவின் உன்னதங்கள் என்று நீங்கள் நினைக்கக்கூடிய சகல விஷயங்களையும் உங்கள் முன்னோடிகள் இந்த நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் இருந்துதான் கொண்டுவந்தார்கள். இதை நினைவில் வைத்துச் செயல்படுங்கள். பணம் பண்ண வேண்டும்தான். ஆனால், தேவைக்கு அது போதுமானது. நாம் எல்லோருமே சாதாரணப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள்தான். ஏன் நம்முடைய பிள்ளைகளைப் பணக்காரர்கள் ஆக்க அருவருக்கத்தக்க வகையில் நம் வாழ்நாளைச் செலவிட வேண்டும்?

உங்களுடைய ஆதர்ஷ இயக்குநர்கள் யார் யார்?

சத்யஜித் ரே, அகிரா குரோசோவா, மிருணாள் சென்.

ரேவை உங்கள் சின்ன வயதில் பார்த்ததற்கும் இந்த வயதில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா?

எப்போதுமே அவர்தான் என் வாத்தியார். அவர் மீதான மரியாதையும் பிரமிப்பும் என்றைக்குமே மாறாது.

ரேவிடம் இருந்து இந்திய சினிமா ரொம்பவும் விலகி வந்துவிட்டதோ?

நாம் எப்போது ரேவிடம் நெருங்கி இருந்தோம்... விலகி வர?

படம் எடுக்கச் சில லட்சங்கள் போதுமானது என்று சமீபத்தில் இரானிய இயக்குநர் மக்மல் பஃப் சொல்லி இருந்தார். இங்கு அது ஏன் சாத்தியம் ஆகவில்லை?

இங்கும் சாத்தியம்தான். 20 லட்ச ரூபாய்க்குள் ஓர் அற்புதமான படத்தை எடுத்துவிட முடியும். நமக்கு முயற்சிகள் வேண்டும்.

இவ்வளவு கலாசார வளம் மிக்க ஒரு நாட்டில், அதைப் பின்புலமாகக்கொண்ட படங்கள் வராததற்குக் காரணம் என்ன?

பிரக்ஞை இன்மை! எந்தக் கலாசாரத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்... அதைப் படமாக எடுக்க? கலாசாரம் என்பது ஒரு அங்கீகாரத்துக்காக, தேவைப்படும் இடங்களில் நீங்கள் சௌகரியமாகப் பயன்படுத்தும் வார்த்தை. நீங்கள் உணராத ஒன்று எப்படி உங்கள் படத்தில் வரும்? சிறுகதைகள், நாவல்களைப் படமாக்குவதிலேயே இன்னும் நாம் வெற்றி பெறவில்லையே... காரணம் என்ன? பரவலான வாசிப்பே கிடையாது. இன்றைக்கு பாலு மகேந்திரா என்பவன் ஏதோ ஒரு விஷயம் இங்கு செய்திருக்கிறான் என்று நீங்கள் கருதுவீர்களேயானால், அதற்கு முழுப் பின்னணியும் வாசிப்புதான். இலக்கியத்தோடு எனக்கு உள்ள நெருக்கம்தான். அடிப்படையில் நான் எழுத்தாளன். அப்புறம்தான் இயக்குநன்!

நிறைய வாசித்திருக்கிறீர்கள்... ஆனால், நீங்களே இலக்கியத்தைப் படமாக்க முயற்சிக்கவில்லையே?

ஜெயகாந்தனில் தொடங்கி ஜெயமோகன் வரைக்கும் நிறைய ஆசைகள் உண்டு. அமையவில்லை. ‘மோகமுள்’ளைப் படமாக்க தி.ஜானகிராமன் இருந்தபோதே பேசினேன். ஜானகிராமனுக்கும் என் மீது மதிப்பு உண்டு. ‘அழியாத கோலங்கள்’ பார்த்துவிட்டு, என்னுடைய வீடு தேடி வந்து பாராட்டிச் சென்றவர் அவர். ‘மோகமுள்’ளை வேறு யாரோ செய்யப்போகிறார்கள் என்று அவர் சொன்னதால், அந்த முடிவைக் கைவிட்டேன். இப்படித்தான் ஒவ்வொன்றும். இன்றைக்கும்கூட சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, ஜி.நாகராஜனின் ‘குறத்திமுடுக்கு’ இரண்டையும் படமாக்க வேண்டும் என்ற நினைப்பு உண்டு!

ஓர் ஈழத் தமிழனாக ஈழத்தின் இன்றைய நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வேண்டாம்... அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. (நீண்ட அமைதிக்குப் பின்) யாருக்காகவும் நான் என் வலியை அழுது காட்டி வெளிப்படுத்த விரும்பவில்லை!

ஆனால், உங்கள் படைப்புகளின் வாயிலாகக்கூட அந்த வலியை நீங்கள் வெளிப்படுத்தியது இல்லையே?

ஈழம் தொடர்பாக இங்கு உருவாக்கப்பட்ட படங்களோ, கதாபாத்திரங்களோ, ஈழ மக்கள் மீதான அக்கறையின்பால் உருவாக்கப்பட்டவை அல்ல; கரிசனத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல; அவர்களுடைய சோகம் ஏற்படுத்திய பாதிப்பால் உருவாக்கப்பட்டவை அல்ல; அது இங்குள்ள வியாபார உத்திகளில் ஒன்று. என்னால், அப்படி நீலிக் கண்ணீர் வடிக்க முடியாது. ஈழப் பிரச்னையைத் தொட்டுப் படம் எடுக்க வேண்டும் என்று எனக்கும் ரொம்ப ஆசை. ஆனால், அதைத் தொட்டிருந்தால், மிகத் தீவிரமாகத் தொட்டு இருப்பேன். உண்மையை அந்தப் படம் அப்பட்டமாகப் பேசி இருக்கும். உக்கிரமான உண்மையாக அது வெளிப்பட்டு இருக்கும். பலருக்குச் சங்கடம் கொடுக்கும் உண்மையாக அது இருந்திருக்கும். என்னை இந்த உலக உருண்டையில் இருந்து நிரந்தரமாக நீக்கி இருக்கக்கூட அது வழிவகுத்து இருக்கும். அச்சம் தரும் இந்தச் சூழல்தான் ஈழத்தைத் தொட்டு நான் படம் எடுக்காததற்குக் காரணம்!

இப்போது திரும்பிப் பார்க்கும்போது, உங்கள் படங்களிலேயே உங்களுக்குப் பிடித்த படம் எது, எடுத்திருக்க வேண்டாம் என்று நினைக்கும் படம் எது?

பிடித்தது ‘சந்தியா ராகம்’. தவிர்த்து இருக்கலாம் என்று நினைக்கக் கூடிய படம் ‘நீங்கள் கேட்டவை’. அது ஒரு வீம்புக்காக எடுத்த படம். ‘பாலு மகேந்திராவால் ‘மூன்றாம் பிறை’யைப் போல படம் எடுக்க முடியும். மசாலா படம் எடுக்க முடியுமா?’ என்று சவால் விட்ட ஒரு நண்பருக்கு, அப்படி மசாலா படம் எடுப்பது எனக்கு ஜுஜுபி என்று காட்டுவதற்காக எடுத்த படம் அது. ஆனால், அதிலும் அடிப்படைத் திரைமொழி மோசம் இல்லை என்பதை சமீபத்தில் அந்தப் படத்தைப் பார்த்தபோது உணர்ந்தேன். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே... சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!

உங்கள் ஊட்டி மோகத்துக்கு என்ன காரணம்?

பொதுவாகவே ஏற்ற இறக்கங்கள், வளைவுகளைக் கொண்டவை எனக்குப் பிடித்தமானவை. ஊட்டி பிடித்ததும் அப்படித்தான்!’’ (சிரிக்கிறார்)

உங்கள் முன்னோடிகளில் ஒருவரான பெர்க்மன் ‘படைப்பாளிகளுக்கு எல்லாக் காலங்களிலும் பெண்களும் காதலும் வேண்டும்’ என்கிறார். உங்களுக்கு எப்படி?

நான் ‘மறுபடியும்’ படத்தை யாருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன் தெரியுமா? ‘என்னை நானாக்கிய எல்லாப் பெண்களுக்கும்!’ நான் முதன்முதலாகக் காதல் வயப்பட்டது என்னுடைய பதினாலாவது வயதில். அவளுடைய பெயர் அன்னலட்சுமி. என் அப்பாவிடம்தான் முதலில் சொன்னேன். ஜெயகாந்தன் முதல் சுய இன்பம் வரைக்கும் நான் சகலத்தையும்பற்றி விவாதிக்கக் கூடிய மனிதர் அவர். ‘பார்க்கக் கருவண்டுபோல நல்லா இருக்கா பொண்ணு’ என்றார் அப்பா. ஆனால், அவள் காதலித்தாளா என்பது எனக்குத் தெரியாது. கதைகள் அங்கிருந்து தொடங்குகின்றன. போதும். பாலு மகேந்திரா பெண்களையும் காதலையும்பற்றிப் பேச ஆரம்பித்தால், புத்தகத்தின் பக்கங்கள் காணாது!

- ஆனந்த விகடன், ஜூலை 2012

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com



5





அரசமைப்புச் சட்டப்பிரிவு 159பழமையான நகரம்சம்ஸ்கிருதமயம்புதிய பாடத் திட்டங்கள்ஒவைசியை எதிர்க்கும் பாஜகவின் மாதவி லதாகண்காணா தெய்வம்எஸ்.சந்திரசேகர் கட்டுரைபூஸான்டிரெண்டிங்கேள்விவிஜயநகர அரசுகாஸாஇமையம் சமஸ்சர்ச்சைகள்சோடாஆபாசம்மேட்டுக்குடி நிதியமைச்சர்கள்!ஆவின்: பாதுகாக்கப்பட வேண்டிய பால் கூட்டுறவு நிறுவனபக்தி இலக்கியம்நாகூர் தர்காபள்ளி நிர்வாகம்ஜி ஜின் பிங்தேசிய புள்ளிவிவரம்கள்ளச்சாராயம்ஆண்களுக்கே உண்டான அவதி!மன்னார்குடி அன்வர் கடை புரோட்டாஉலகமயமாக்கல்மாயக்குடமுருட்டி‘வலிமை’யான தலைவர் பொய் சொல்வதேன்?தெற்கு ஆசியா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!