கட்டுரை, ஆளுமைகள், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு
வி.கிருஷ்ணமூர்த்தி: பொதுத் துறையுலகின் சிற்பி
இந்தியாவின் தலைசிறந்த பொதுத் துறை நிர்வாகிகளுள் ஒருவரான வி.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை பொதுத் துறை வரலாற்றில் ஒரு சகாப்தம் என்றே சொல்ல வேண்டும். இரு நாட்களுக்கு முன் காலமான அவர், 1925ஆம் ஆண்டு பிறந்தவர். குடும்பச் சூழல் காரணமாக பாலிடெக்னிக் டிப்ளமா வரையே அவரால் படிக்க முடிந்தது. சென்னை மின் வாரியத்தில் 1944இல் சேர்ந்தவர் பின்னர் மத்திய பொறியியல் சேவைத் தேர்வை எழுதி வென்று, அத்துறையில் சேர்ந்தார்.
நேருவின் தேர்வு
ஜவஹர்லால் நேருவினால், 1954இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்டக் குழுவில், மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கும் உறுப்பினராக இணைந்து செயலாற்றினார். 1972ஆம் ஆண்டு, இவர் பாரத் கனரக மின் நிறுவனம் என்னும் பொதுத் துறை நிறுவனத்தின் முக்கிய மேலாண் அலுவலர் மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டார். பெரும் நஷ்டத்தில் இயங்கிவந்த அந்த பொதுத் துறை நிறுவனத்தை லாபகரமாக மாற்றினார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், உதிரிகளாக இயங்கிவந்த அந்த நிறுவன மேலாண்மையை ஒருங்கிணைத்தார். உற்பத்தியில், சமரசமில்லாத உயர்தரம் என்பதை உறுதியான கொள்கையாக முன்வைத்து, சரியான தலைவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தார். அந்நிறுவனம் அடுத்த 25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டது. இந்திய மின் உற்பத்தித் திட்டங்களின் முதுகெலும்பாக விளங்கியது.
பிறகு, 1977-80 ஆண்டு காலத்தில், இந்தியத் தொழில் துறையின் செயலராகப் பணியாற்றினார். 1980ஆம் ஆண்டு தேர்தலில் வென்று, மீண்டும் பதவிக்கு வந்த இந்திரா காந்தி ஒரு தொழில் முன்னெடுப்பைச் செய்தார். 1970களின் மத்தியில், அவரது மகன் சஞ்சய் காந்தி, இந்தியாவில் மக்களுக்கான கார் என ஒரு திட்டத்தைத் தொடங்கியிருந்தார். அது பெரும் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொண்டது மட்டுமல்லாமல், இந்திரா காந்தியின் பெயருக்கும் பெரும் களங்கமாக மாறியது. பின்னர், சஞ்சய் காந்தி ஒரு விமான விபத்தில் மறைந்தார்.
தோல்வியுற்ற அந்தத் திட்டத்துக்கு உயிரூட்ட இந்திரா காந்தி முடிவெடுத்தார். கிருஷ்ணமூர்த்தி அந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். புதிய பொதுத் துறை நிறுவனத்துக்காக, சரியான தொழில்நுட்பப் பங்குதாரரைத் தேர்ந்தெடுக்க உலகெங்கும் உள்ள கார் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்கள்.
பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி, இறுதியில், ஜப்பானின் சுசுகி நிறுவனம் இதன் பங்குதாரராக இணைந்தது. பேச்சுவார்த்தைகளில், உலகின் பல்வேறு பெரும் கார் நிறுவனங்களின் தொழில்நுட்ப அணிகள் பங்குகொண்டனர். சுசுகியின் தரப்பில் இருந்தது, ஒவ்வொரு முறையும், அதன் தலைவர் ஒசாமு சுசுகி தவறாமல் பங்குகொண்டார். இந்திய அரசு சுசுகியைத் தேர்ந்தெடுத்தன் பின்னணியில், சுசுகி காட்டிய இந்த சிரத்தையும் ஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டது.
தொடக்கத்தில், உதிரிப் பாகங்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த விலையினாலான மக்களுக்கான வாகனம் 'மாருதி-800' பெருவெற்றி அடைந்தது. மெல்ல மெல்ல, இந்தியாவிலேயே உதிரிப் பாகங்கள் தயாரிக்கப்பட்டன. அதுவரை லைசென்ஸ் ராஜ்ஜியத்தின் பிடியில் இருந்த கார் உற்பத்தித் துறை பெரும் வளர்ச்சியைக் கண்டது.
மாருதி நிறுவனம், உதிரிப் பாகங்களை உருவாக்கும் உள்ளூர் தனியார் நிறுவனங்களை உருவாக்கியது. அந்த நிறுவனங்களும், ஜப்பானியத் தரம் மற்றும் உற்பத்திமுறைகளை உள்வாங்கிச் செயல்பட வேண்டியிருந்தது. இது, இந்திய வாகன உற்பத்தித் துறையின் கலாச்சாரத்தையே மாற்றியமைத்தது. தரமான பொருட்களை உற்பத்தி செய்வது என்பது ஒரு நிறுவனத்தின் குறைந்தபட்சத் தேவை என்னும் மனநிலை இந்திய வாகன உற்பத்தித் தொழிலில் உருவானது.
தீர்க்கதரிசி...
இந்தப் பெருவெற்றியில், தொழில் துறைக் கலாச்சார மாற்றத்தில், கிருஷ்ணமூர்த்தியின் தலைமையும், வழிகாட்டுதலும் மிக முக்கியமான பங்கு வகித்தன. இன்றும் மாருதி சுசுகி இந்தியாவின் மிகப் பெரும் வாகன உற்பத்தியாளராக வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
இதே காலகட்டத்தில், நஷ்டத்தில் இயங்கிவந்த ‘இந்திய இரும்பு நிறுவன’த்தை (Steel Authority of India) லாபகரமாக மாற்றும் பொறுப்பு கிருஷ்ணமூர்த்தி வசம் ஒப்படைக்கப்பட்டது. பாரத் மின் கனரக நிறுவனத்தைவிடப் பல மடங்கு பெரிய, சிக்கலான நிறுவனம் இந்திய இரும்புக் கழகம். மிகக் குறுகிய காலத்திலேயே அதன் நிறுவன அமைப்பை மாற்றி, செயல்திறனை மேம்படுத்தி அதை லாபகரமான நிறுவனமாக உருவாக்கினார். அதேபோல், 1984இல் தொடங்கப்பட்ட ‘இந்திய இயற்கை வாயு’ (Gas Authority of India) நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பு கிருஷ்ணமுர்த்தி வசம் 1985ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. 1,800 கி.மீ. நீளமுள்ள ஹஜீரா – விஜய்ப்பூர் - ஜெகதீஸ்ப்பூர் ‘இயற்கை வாயு பைப்லைன் திட்டம்’ மூன்றே ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. இன்று இந்திய இயற்கை வாயுத் தொழிலில் 70% பங்கு இந்த நிறுவனத்திடம் இருப்பதே, இதன் செயல்திறனுக்கான சான்று.
இந்தியத் தொழில் துறை நிர்வாகப் பொறுப்புகளைத் தாண்டி, பெங்களூர் ‘இந்திய மேலாண் கழகம்’, ‘தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம்’ போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவராக இருந்து வழிநடத்தியிருக்கிறார். இவரது உந்துதலில், திருச்சியில், ‘பாரதிதாசன் மேலாண் கழகம்’ உருவாக்கப்பட்டது.
கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தொழில் துறை மற்றும் பொதுத் துறை நிர்வாகத்தில் ஒரு சகாப்தம். இன்று சுதந்திரச் சந்தையிலும் பல பொதுத் துறை நிறுவனங்கள் போட்டியிட்டு லாபகரமாக இயங்கிவருவதற்கு கிருஷ்ணமூர்த்தி போன்ற பெரும் நிர்வாகிகளின், தீர்க்கதரிசிகளின் பங்களிப்பு மிக முக்கியமான காரணம்!
1
5
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
K.R.Athiyaman 3 years ago
V.Krishnamurthy பெரும் சாதனையாளர் தான். ஆனால் அவரைப் பற்றிய கட்டுரையில் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றியும் குறிப்பிடுவதே நடுநிலமை : //The second one is most damaging for it alleges that Krishnamurthy and his sons received commissions from multinationals, while Krishnamurthy was chairman of Maruti and SAIL.// //That's where Krishnamurthy's name also figured in the list of shareholders. Then Harshad Mehta's records showed a transfer of Rs 32.74 lakh as a loan to K.J. Investments, a company in which Krishnamurthy's son, K. Jayakar, was promoter-director.// //According to the FIR, the commissions were received by two companies, Delhi-based Apten Marketing and Management Services and Hong Kong-based Link Universe. While Jayakar held shares in Apten, Chandra was a partner in Link. This is the case to be investigated in the US.// https://www.indiatoday.in/magazine/economy/story/19940630-cbi-fails-to-nail-v.-krishnamurthy-in-securities-scam-follows-up-probe-into-other-charges-809333-1994-06-30
Reply 3 0
Ganeshram Palanisamy 3 years ago
சாதனைகள் மிகப் பெரியதாகவும் வேதனைகள் மிகச் சிறியதாகவும் இருக்கும் பட்சத்தில் அதை கண்டுகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
Reply 0 1
Login / Create an account to add a comment / reply.