கட்டுரை, கல்வி, பொருளாதாரம் 10 நிமிட வாசிப்பு

தமிழக பட்ஜெட்: கல்வியில் சிறந்ததா தமிழ்நாடு?

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
22 Mar 2022, 5:00 am
3

பொதுவாக ஒன்றிய நிதிநிலை அறிக்கைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மாநில நிதிநிலை அறிக்கைக்கு அளிக்கப்படுவதில்லை. மாநில அரசின் நிதிநிலை அறிக்கையானது குறுகிய எல்லைகளைக் கொண்டது  என்றாலும் மக்களின் அன்றாட வாழ்வோடு மிக நெருக்கமானது. இந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பல வகைகளிலும் பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. முதல்முறையாக நிதித் துறைப் பின்னணியில் இருந்து, தொழில்முறைசார் நிர்வாகி ஒருவர் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தது ஒரு காரணம். தமிழ்நாடு பெரிய கடன் சுமையையும், பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டுவருவதும் அதை விமர்சித்து, "ஒரு மாற்றுச் சூழலைக் கொண்டுவருவோம்" என்று சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு காரணம்.  "நல்ல நிதி நிர்வாகத்தோடு மக்கள் நலத் திட்டங்களையும் பராமரிப்போம்" என்று சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான நம்பிக்கையும் ஒரு காரணம். இதுவரை இல்லாத அளவுக்கு ஆட்சி நிர்வாகத்தில் சரியான இடத்தில் நல்ல அதிகாரிகள் அமர்த்தப்பட்டிருப்பதோடு சர்வதேச அளவில் பெயர் பெற்ற பொருளியலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு, உள்ளூர் சமூகத்தின் பொருளாதார பலங்கள் - பலவீனங்களை அறிந்த ஆய்வாளர்கள் குழு என்று ஒரு பெரும் அணி களம் இறங்கியதும் அது உண்டாக்கியிருக்கும் எதிர்பார்ப்புகளும் ஒரு காரணம். இத்தகு சூழலில் வெளியாகியிருக்கும் நிதிநிலை அறிக்கை தொடர்பில் விரிவான விவாதங்களை 'அருஞ்சொல்' நடத்தவிருக்கிறது. மிக முக்கியமான கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பேசுகிறது.

தமிழக நிதிநிலை அறிக்கையில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட துறை இது. மேல்நிலைப் பள்ளி முடித்து 52% மாணவர்கள் கல்லூரி செல்கிறார்கள். இது நாட்டிலேயே மிக அதிகமான சதவீதம் எனத் தமிழகம் பெருமைப்படும் புள்ளிவிவரம். எனவே, கல்வித் துறை என்ன புதிய திட்டங்களை முன்னெடுக்கப்போகிறது எனப் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். கல்வித் துறைக்கான ஒதுக்கீடு ரூபாய் 37,680 கோடியில் இருந்து வரும் ஆண்டுக்கு ரூபாய் 42,565 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 

பள்ளிக்கல்வி

இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், புதிய வகுப்பறைகள், தொடக்கப் பள்ளிகளில் திறன் மிக்க வகுப்பறைகள், அதி நவீனக் கணினி ஆய்வகங்களை உருவாக்க ரூ.1,300 கோடி நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில், இத்திட்டத்துக்கு ரூ.7,000 கோடி என்னும் ஐந்தாண்டுத் திட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க திட்டம். இதற்கு அடுத்தபடியாக, மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள உதவும் ஆலோசனைத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டமும் மிக அவசியமான ஒன்றே.

கரோனா பெருந்தொற்று உருவாக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் காரணமாக, கீழ் மத்திய வர்க்க மக்கள் பெருமளவில் தனியார் பள்ளிகளைவிட்டு, அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த அதிக மாணவர் சேர்க்கையை அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது பற்றிய எந்த அறிக்கையும் இல்லாதது ஏன் எனத் தெரியவில்லை.

அரசுப் பள்ளிக்கல்வியில், தில்லியின் ஆம்ஆத்மி அரசு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. தமிழ்நாடு போன்ற பெரும் மாநிலத்துடன் ஒப்பிடுதல் சரியல்ல எனினும், தில்லி அரசுப் பள்ளித் துறையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளில் இருந்து, படிப்பினைகளைப் பெற்று, நம் மாநிலத்துக்கேற்ப அவற்றை மாற்றிக்கொள்ள முடியும்.

தில்லி அரசின் கல்வித் துறையானது, துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் நேரடி நிர்வாகத்தில் உள்ளது. அவருக்குக் கீழே, ஆலோசகராக அதிஷி மார்லேனா என்னும் கல்வியாளர் உள்ளார். தில்லி ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பயின்ற இவர், வரலாற்றில் முதுகலைப் பட்டத்தை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தவர். தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி கல்விக்காக உருவாக்கிய மதனப்பள்ளி ரிஷிவேலி பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

ஆம்ஆத்மி கட்சியானது, ஆட்சிக்கு வந்தவுடன், தில்லியில் அரசுப் பள்ளிக் கட்டமைப்பைச் சரிசெய்தார்கள். மிக முக்கியமாக அரசுப் பள்ளிகளில் தண்ணீர் வசதியுடனான கழிப்பறைகளைக் கட்டினார்கள். பள்ளி அறைகளில் மின் விசிறி, விளக்குகள், நல்ல மேசைகள் எனக் கட்டமைப்பை வலுப்படுத்தினார்கள்.

வெறும் கட்டமைப்புடன் நின்றுவிடாமல், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளைப் பெருமளவில் முன்னெடுத்தார்கள். தில்லியின் ஆசிரியர்களை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் உள்ள சிறந்த பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அழைத்துச் சென்றார்கள். பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்குப் புத்துயிர் கொடுத்தார்கள்.

இந்த முயற்சிக்கு நல்ல வெளிச்சமும் கொடுக்க, தனியார் பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டிருந்த மத்திய வர்க்கக் குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளை தில்லி அரசுப் பள்ளிகளில் கொண்டுசேர்க்கத் தொடங்கினார்கள்.

தில்லி அரசு அத்துடன் நின்றுவிடவில்லை. தனியார் பள்ளிகளின் செலவுகளைத் தணிக்கைசெய்து, பள்ளிகள் விதிக்கும் கட்டணத்தைக் குறைத்தார்கள். இந்த நடவடிக்கைகள் பெருமளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. 

தில்லியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கை 9 லட்சம். தமிழகத்தில் கிட்டத்தட்ட 70 லட்சம். தில்லி பள்ளிக்கல்விக்காக ஒதுக்கும் நிதி 15,000 கோடி ரூபாய். தமிழ்நாடு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கும் நிதி 37000 கோடி ரூபாய். தில்லி அரசு, ஒரு மாணவருக்குச் செலவிடும் நிதி, தமிழகத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். எனவே, தில்லி அரசு செய்த முதலீடுகளையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், நாம் இன்னொரு ஒப்பீட்டையும் செய்துகொள்ள வேண்டும். நமது அண்டை மாநிலமான கேரளம். அதன் பட்ஜெட் 50 லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 23000 கோடி. ஒரு மாணவருக்குக் கேரளம் செலவிடும் நிதி தமிழகத்தைவிடக் குறைவு. ஒப்பீட்டளவில் கேரள அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் தமிழகத்தைவிட உயர்வாக உள்ளது.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தமிழில் பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருக்கிறார் என்பதும், 5 ஆம் வகுப்புக் கணக்குகளைப் போடத் தடுமாறுகிறார் என்பதும் நாம் பெருமைப்படக் கூடிய விஷயங்கள் அல்ல. 

’சென்னை - இலக்கு 2020’, என்னும் தலைப்பில் உரையாற்றிய, உலகப் புகழ் பெற்ற மேலாண் அறிஞரும், கோடம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் பயின்றவருமான சி.கே.ப்ரஹலாத் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

’சென்னைக்கான ஒரு புதிய கனவை உருவாக்கும்போது, அது இன்னொரு உலக நகரம்போல உருவாக வேண்டும் என நகல்செய்யாதீர்கள். சென்னைக்கென ஒரு தனித்துவமான கனவை உருவாக்கி, இலக்குகளை நிர்ணயுங்கள். மிக முக்கியமாக, அந்த இலக்குகள் தற்போது இருக்கும் வளங்களால் அடைய முடியாத ஒன்றாக இருக்கட்டும். அப்போதுதான், புத்தாக்கங்கள் (Innovation) சாத்தியப்படும்.’

மிக நிச்சயமாகப் பள்ளிக்கல்வித் துறை எதிர்கொள்ளும் சவால் மிகப் பெரியது. அதில் சந்தேகமே இல்லை. இந்த மாதிரிச் சூழலில், சவாலை எதிர்கொண்டு, புதிய வழிமுறைகளைச் சமைத்து, பெரும் இலக்குகளை எட்டும் மனநிலையுடன் அணுகினால் ஒழிய, தற்போதைய பள்ளிக் கல்வியின் தரம் உயர வாய்ப்புகள் இல்லை. பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையைப் படிக்கையில், அப்படியான புத்தாக்கங்களுக்கான திட்டங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே இருக்கும் ஒரு கட்டமைப்புக்கான பட்ஜெட் என்னும் வழக்கமான வழிமுறைகளை நிறுத்திவிட்டு, மொத்த கல்வி அமைப்பின் அடிப்படையையும் மாற்றி புதிதாக உருவாக்கும் மனநிலையுடன் அணுக வேண்டும். 

அதன் முதல்படியாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் திட்டம்பற்றிய தெளிவான ஒரு ஒப்பீட்டு அறிக்கையைத் தயாரித்து, இந்தியா மற்றும் உலகின் வளர்ந்த நாடுகளில் பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கும் சிலவற்றை ஒப்பீட்டு இலக்குகளாக முன்வைத்து, தமிழகம் அதை எத்தனை ஆண்டுகளில் அடையப்போகிறது என்னும் ஒரு திட்டத்தை இயக்கம்போலச் செய்து முடிக்க வேண்டும். 80-களில் சாம் பிட்ரோடா தொடங்கிய தொழில்நுட்ப இயக்கங்களின் வெற்றி நமக்கு ஒரு நல்ல உதாரணம்.

இத்திட்டத்தை, பள்ளிக்கல்வியின் மிக முக்கியமான அங்கமான ஆசிரியர்களுடன் இணைத்து உருவாக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் உதவியோடு, கல்விச் செயல்பாடுகளை, குறைந்த செலவில் மேம்படுத்தும் வழிகளைச் செயல்படுத்த வேண்டும்.  ஆசிரியர்கள் தவிர, கல்வி நிர்வாகச் செலவுகள் எவ்வளவு என்பது ஒரு புலனாய்வுத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும். 

ஆசிரியர்கள் செய்ய வேண்டிய அவசியமற்ற வேலைகள் ஆட்டோமேட் செய்யப்பட்டு, அவர்கள் செயல்பாடுகள் கற்பித்தலில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இன்று தனியார் துறைகளில், முதல் நிலை வேலைகள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு, இரண்டாம் நிலைக் கண்காணிப்பாளர்கள், மேலாளர்களின் தேவைகள் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டன. இதுபோன்ற அணுகுமுறையை வழக்கமான கல்வித் துறை அதிகாரிகள் செய்ய மாட்டார்கள். இங்கே புதிய சிந்தனைகொண்ட ஒரு மேலாண் ஆலோசனைக் குழு உதவக் கூடும்.

1990-களுக்குப் பின் வந்த மென்பொருள் தொழில் அலையில், தமிழக மாணவர்கள் பெருமளவில் உலகெங்கும் பரவி, பணிபுரிந்துவருகிறார்கள். அவர்களில் பலர், தாம் பெற்ற பயனுக்கு நன்றிக் கடனாக, தாங்கள் பயின்ற பள்ளியின் மேம்பாடுகளில் பங்கு பெற்றுவருகிறார்கள். தமிழக அரசு, இந்த முயற்சிகளுக்கான சரியான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். இதை ஒரு அரசு திட்டமாகவே முன்னெடுத்து, உலகம் எல்லாம் வாழும் தமிழர்களின் உதவியை நாடலாம். இதை ஒரு முறை நிதியாகவோ அல்லது மாதா மாதம் தொடர்ந்து சிறு நிதியாகவோ வழங்கும் வழிமுறைகளை உருவாக்கலாம். முதல்வரே இந்த வேண்டுகோளை முன்வைத்தால், பலன் பல மடங்கு அதிகரிக்கும். கரோனாவுக்காக தமிழக அரசு வெற்றிகரமாகத் திரட்டிய நிதி ஒரு நல்ல முன்னுதாரணம். 

பெரும் பிரச்சினைகளே பெரும் வாய்ப்புகளைத் தருகின்றன. 1991 சிக்கல், புதிய பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும் வாய்ப்பைத் தந்தது. இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து, ஒரு பெரும் பொருளாதார சக்தியாக மாறியது. அப்படி ஒரு வாய்ப்பை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றிருக்கிறார். என்ன செய்யப்போகிறார்?

உயர்கல்வி

உயர்கல்வித் துறையில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது, அறிவுசார் நகர உருவாக்கம் என்னும் புதிய திட்டம். உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, அவற்றின் கிளைகள்கொண்ட நகரமாக இருக்கும் எனவும், இது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடும் எனவும் அறிவிப்பு வந்துள்ளது.  தனது பட்ஜெட் உரையில், உலகில் பல்வேறு துறைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழர்களின் உதவியோடு, மாணவர்களின் ஆராய்ச்சி வழிகாட்டுதல்கள் நிகழும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார் பிடிஆர். நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான இந்த இரண்டு அறிவிப்புகளும், பாரதூரமான விளைவுகளை உருவாக்கும் சாத்தியங்களைக் கொண்டவை. இவை மின்னல் வேகத்தில் தொடங்கப்பட வேண்டியவை. 

ஆனால், உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.5,200 கோடியில் இருந்து ரூ.5600 கோடியாக மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போதாது.

தமிழ்நாட்டில் அடுத்தநிலைப் பொருளாதார வளர்ச்சி என்பது அறிவுசார் துறைகளில் நிகழ வேண்டும் என்னும் இலக்கு இருக்கையில், இன்னும் கூடுதல் திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் அவசியம். அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகின் வளர் நுனியில் இருக்கும் துறைகளில், தமிழகத்தில் ஒரு உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இருக்க வேண்டும் என்னும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட வேண்டும். அதன் செயல்பாடுகளில் அரசியல் புகுந்திடாமல் தடுக்க அவை தன்னாட்சி பெற்ற நிறுவனங்களாக, அவற்றின் செயல்பாடுகளில், உலகின் முக்கியமான நிபுணர்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

சுருக்கமாக

இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்னும் நிலையைத் தக்க வைக்க வேண்டும் னில், பள்ளிக்கல்வியின் தரத்தில் தமிழகம் பெரும் பாய்ச்சலை அடைய வேண்டும். அனைவருக்கும் இலவசக் கல்வி என்னும் ஜனநாயகக் குறிக்கோளைத் தமிழகம் அடைந்திருக்கிறது. அடுத்து அடைய வேண்டிய இலக்கு, அனைவருக்கும் தரமான பள்ளிக்கல்வி என்பதே. அதற்குத் தேவை முற்றிலும் புதிய அணுகுமுறை. 

உயர்கல்வியில் தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சியிலும், புத்தாக்க முயற்சிகளிலும் பங்கு பெறும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இது போதாது. இதற்குத் தேவைக் கூடுதல் திட்டங்களும், அதிக நிதி ஒதுக்கீடும்!

(தொடர்ந்து பேசுவோம்...)

 

 

 

 

 

 

 

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

2

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

மலர் செல்வம்   2 years ago

படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நிதி உதவி செய்ய விரும்பினால், அரசாங்கம் அதை முறைப்படுத்த வேண்டும் என்பது புதிய பார்வை. இன்று அரசாங்கம் அதை செயல்படுத்த முனைந்திருப்பது சிறப்பு.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ARUNKUMAR K   2 years ago

மிக அருமையான கட்டுரை இது. பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும் எனில் அதன் ஒரு முக்கிய அங்கமாக ஆசிரியர்களின் திறன் மேம்பட வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை கண்டிப்பாக மறுசீரமைக்க வேண்டும். புற்றீசல்கள் போல் சுமார் 700 க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர்கள் கல்லூரிக்கு வராமலேயே (irregular mode) பட்டம் அளிக்கும் முறையை பின்பற்றுகின்றன. ஆசிரியர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த இத்தகைய முறையற்ற ஆசிரியர் கல்வி நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்து பல்வேறு புதுமைகளை புகுத்தி தரமான ஆசிரியர்களை உருவாக்கினால் மட்டுமே பள்ளிக் கல்வியில் மாற்றம் என்பது சாத்தியம்.

Reply 1 0

Aravindh Rajendran   2 years ago

நல்ல ஆலோசனை. பள்ளி கல்வியை அரசுமயப்படுத்துவதே நமது தொலைநோக்குக் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதன்படி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அரசு கையகப்படுத்த வேண்டும். உலகத் தரத்தில் ஆசிரியர்கள் உருவெடுப்பார்களேயானால் நாம் பொதுக்கல்வித் தர மேம்மபாட்டை பற்றிய கவலையை மறந்துவிடலாம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மு.இராமநாதன் அருஞ்சொல்சித்தப்பாவழுக்கைக்குச் சிகிச்சைவளர்ச்சிருவாண்டா தேசபக்த சக்திமுதல்வர் பிரேம் சிங் தமங்கல்விச் சீர்திருத்தம்ராகுல் காந்தியின் இந்திய ஒருங்கிணைப்பு நடைப்பயணம்!மறக்கப்பட்ட ஆளுமைகலோரிசோழன்சமஸ் அருஞ்சொல் ராகுல்முதல்வரை நீக்குவதுமைய நிலத்தில் ஒரு பயணம்கண் எனும் நுகர்வு உறுப்புவர்த்தகப் பற்றாக்குறைபன்மைத்துவம்எரிச்சல்சிங்களர்ஷிஃப்ட் கணக்குபுபேஷ் பெகல்புயல்கள்ஜாதிய சமூகம்சியாமா பிரசாத் முகர்ஜிashok vardhan shetty ias சந்தேகங்களும்!முதுகெலும்புள்ளதாக மாற வேண்டும் இதழியல்தமிழ் மரபில் கலக இலக்கியம்தமிழ் வம்சாவளிஆபாசம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!