தலையங்கம், அரசியல், கல்வி 5 நிமிட வாசிப்பு

டெல்லி பல்கலைக்கழகம் வெளிப்படுத்தும் அபாயகரமான பிரச்சினை

ஆசிரியர்
08 Oct 2021, 5:00 am
2

டெல்லியில் நடந்திருக்கும் விபரீதமான ஒரு போராட்டம் இந்தியாவில் மெல்ல தகிக்கும் ஒரு பிரச்சினையை நோக்கி நம் கவனத்தைக் கோருகிறது. அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களுக்கு எதிராக நடந்திருக்கும் போராட்டம்தான் அது. ‘மாநிலக் கல்வி வாரியங்கள் அதிகமான மதிப்பெண்களை வழங்குகின்றன; இதனால், மத்தியக் கல்வி வாரியத்தின் வழி படிக்கும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்’ என்பது போராட்டக்காரர்களின் முறைப்பாடு. 

போராட்டத்தை நடத்தியிருப்பவர்கள் பாஜகவின் மாணவ அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள். நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களும் டெல்லி பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு விண்ணப்பிக்கும் நிலையில் உண்டாகும் கடுமையான போட்டிச் சூழல் அவர்களை இந்தப் போராட்டத்தில் தள்ளியிருக்கிறது.

இந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டபோது பலரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். பத்துக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு, 'கட் ஆஃப் மார்க்' 100%’ எனும் வரையறையைத் தொட்டிருந்தது. பெரும்பாலான படிப்புகள் 99% எனும் வரையறையைத் தொட்டிருந்தன. 

டெல்லி பல்கலைக்கழகத்தின் 70,000 இடங்களுக்கான சேர்க்கை கடுமையான போட்டி நிலவும் களமாகவே எப்போதும் இருக்கிறது. இந்த ஆண்டும் 2.7 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 9,200 மாணவர்கள் 100% தகுதி பெற்றிருந்தார்கள். இவர்களில் மத்திய கல்வி வாரியத்தின் வழி தேர்வு எழுதி வந்தவர்களும் உள்ளடக்கம் என்றாலும், கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்தவர்கள்; அந்தந்த மாநிலக் கல்வி வாரியத் தேர்வுகளின் வழி வந்தவர்கள். டெல்லியையும், அதைச் சுற்றியுள்ள மாநிலங்களையும் சேர்ந்த மாணவர்கள் இவர்களை அந்நியமாகவும், அச்சுறுத்தலாகவும் காண்கிறார்கள். 

அடிப்படையில், கல்வித் துறைச் சீர்திருத்தம் சார்ந்த ஒரு பிரச்சினை இது. ஒவ்வொரு வருஷமும் பள்ளிப் படிப்பை முடித்து, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியே வரும் சூழலில், அவர்களுக்கு உயர்கல்வி கொடுப்பதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த கல்லூரிகள் போதுமான அளவுக்கு இந்தியாவில் இல்லை. விளைவாக உயர்கல்வியில் உருவாகும் போட்டியானது, தரமான கல்வி நிலையங்களில் இடம் பிடிப்பதைப் பெரும் அலைக்கழிப்பாக ஆக்கிவிட்டிருக்கிறது. 

அது மத்தியக் கல்வி வாரியமாக இருந்தாலும் சரி, மாநிலக் கல்வி வாரியமாக இருந்தாலும் சரி, மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நாம் கடைப்பிடித்துவரும் இன்றைய மதிப்பீட்டு முறை ஒரு முட்டுச்சந்தில் மோதி நிற்கிறது. கல்வியின் தரத்தை அது மேம்படுத்தவில்லை; அதேசமயம், மதிப்பெண்களைப் பெறுவதை அது தொழில்நுட்ப உத்திபோல ஆக்கிவிட்டிருக்கிறது. ஆக, அதிகமான கல்லூரிகளை ஆரம்பிப்பதுடன், புதியதோர் மதிப்பீட்டு முறைக்கும் இந்தியா தயாராக வேண்டும்.

துரதிருஷ்டவசமாக, டெல்லியில் போராடிய மாணவர்கள் இந்த விவகாரத்தை அப்படிப் பார்க்கவில்லை. உள்ளூரார் எதிர் வெளியூரார் பிரச்சினையாகவும்கூட அதை அவர்கள் வரையறுக்கவில்லை. அப்படி வரையறுத்திருந்தாலேனும், கல்வியில் உள்ளூராருக்கு முன்னுரிமை அளிப்பது, கல்வித் துறை முடிவுகளை மாநிலங்களிடம் ஒப்படைப்பது என்று கூட்டாட்சி  தொடர்பான ஆக்கபூர்வ விவாதத்தை வளர்த்தெடுப்பதாக அது அமைந்திருக்கும். குறுகியப் பார்வையுடன் மேட்டுக்குடி கண்ணோட்டத்தோடு இந்தப் பிரச்சினையை அவர்கள் அணுகியிருக்கிறார்கள். மாநிலக் கல்வி வாரிய மாணவர்களையும், மாநிலக் கல்வி வாரியங்களையும் மட்டமாகக் கருதும் பார்வையை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

இந்த விவகாரத்தில் மாணவர்களைவிட மோசமாக நடந்துகொண்டிருக்கிறார் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராகேஷ் பாண்டே. சமூக ஊடகங்களில் கருத்து என்கிற பெயரில் அப்பட்டமான பிராந்தியரீதி, இனரீதி, மதரீதி வெறுப்பை அவர் அள்ளிக் கொட்டியிருக்கிறார். டெல்லி கல்வி நிலையங்களை நோக்கி முன்னகரும் தென்னிந்திய மாணவர்களைக் குறிவைக்கும் வகையில், கேரள மாணவர்களை மையப்படுத்தி, ‘லவ் ஜிகாத்’, ‘நார்கோட்டிக்ஸ் ஜிகாத்’போல "இது ‘மார்க்ஸ் ஜிகாத்’, திட்டமிட்ட ஆக்கிரமிப்பு" என்று ராகேஷ் பாண்டே பேசியிருக்கிறார். "மாநிலக் கல்வி வாரியங்கள் அதிகமான மதிப்பெண்களை வழங்குகின்றன; குறிப்பாக, கேரள வாரியம் திட்டமிட்டு அதிக மதிப்பெண்களை வழங்குகிறது. ஏற்கெனவே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இடது சிந்தனைப் பார்வை கொண்டவர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள்; அடுத்து டெல்லி பல்கலைக்கழகத்தையும் ஆக்கிரமிக்கிறார்கள்" என்று அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இவரும் சங்கப் பரிவாரப் பின்னணியில் வந்தவர்.

மிக ஆபத்தான புரிதலும், அபாயகரமான  பிரச்சாரமும் இது. உயர்கல்வித் துறையை மேம்படுத்த இந்தியா தன்னுடைய உள்கட்டமைப்பு வசதிகளைப் பெரிய அளவில் விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் இல்லை என்றால், அது உண்டாக்கும் போட்டிச் சூழல் கடும் மன நெருக்கடியில் மாணவர்களைத் தள்ளும். கல்வியைத் தீவிரமான போட்டிக் களம் ஆக்குவது உருப்படியான ஆளுமைகளாக நம்முடைய பிள்ளைகளை உருவாக்கித் தராது. எல்லாவற்றுக்கும் மேல் உள்ளூர் மக்கள் புறக்கணிப்புக்குள்ளானால் ஏற்படும் விளைவுகள் காலத்துக்கும் பாதிப்புகளை உண்டாக்கும். 

புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்க இன்று பெரும் முதலீடு வேண்டும். உள்ளூர் மக்களின் பங்களிப்போடு மாநில அரசுகளால் இதை சாதிக்க முடியும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர்ச் சமூகங்களின் கொடையுடன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அரசுக் கலைக் கல்லூரிகளைச் சொல்லலாம். தமிழ்நாடு படிப்படியாகத் திட்டமிட்டு உருவாக்கிய ‘மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி மாதிரி’யைச் சொல்லலாம். புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது, அந்தப் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தேர்வுகளை வடிவமைப்பது, தான் உருவாக்கிய கல்லூரிகளுக்கான மாணவர்களைத் தானே தேர்ந்தெடுப்பது என்று தீர்வுகள் எல்லாமே மாநிலங்களை மையப்படுத்தியே இருக்கின்றன. 

டெல்லி மாணவர்களும், பேராசிரியரும் மட்டுமல்லாது, இந்திய பிரதமரும் அரசும் தமிழ்நாடு நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறது என்பதற்கான நியாயங்களைக் கண் திறந்து பார்க்க முற்பட வேண்டும். அப்படிப் பார்த்தால், டெல்லி பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினையானது இந்தியா இன்று கல்வித் துறையில் எதிர்கொள்ளும் தேசிய அளவிலான தீவிரமான பிரச்சினையின் ஓர் அங்கம் என்பதும், மிக மோசமான பின்விளைவுகளை இது உருவாக்கும் என்பதும் அவர்களுக்குப் புரியவரும்!

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 months ago

இட ஒதுக்கீட்டை தவிர வேறு வழிகள் இல்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   2 months ago

ராகேஷ் பாண்டே சொல்வது அதிர்ச்சியாக பார்வைக்குத் தெரியலாம். ஆனால் இதே குற்றச்சாட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கேரளப் பல்கலைக் கழகங்கள் மற்றும் அந்த மாநிலத்தின் பிற வகையான கல்வி நிறுவனங்கள் மீது இருந்து வருகிறது. அப்போது சங் பரிவார ராகேஷ் பாண்டேக்கள் இல்லை. தொண்ணூறுகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆங்கிலத்தில் 55 சதவிகித மதிப்பெண்கள் எடுப்பது என்பது கிட்டத்தட்ட முடியவே முடியாத காரியம். ஆனால் கேரளாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் அதே படிப்பில் 80-85 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் ஆய்வு படிப்புகளின் பெருவாரியான இடங்களை கேரள மாணவர்கள் பிடித்துக் கொள்வார்கள். ராகேஷ் பாண்டே சொல்வது நமக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அவரின் கூற்றில் உண்மையின் நிழல் படிந்திருக்கிறதா என்று பக்கச் சார்பு இன்றி தெரிந்து கொள்வது அவசியம்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

கேள்வி நீங்கள் - பதில் சமஸ்நிதான வாசிப்புThirunavukkarasar Arunchol Tamilnadu now Interviewமோடிபால்ராஜன் குறை பி.ஏ.கிருஷ்ணன்இந்தியாகாந்திய சோஸலிஷம்அண்ணா சமஸ்த.செ.ஞானவேல்ராமசந்திர குஹாஇந்திய ராணுவம்மாநிலத் தலைநகரம்இன்றைய காந்திகள்காவளம் மாதவன் பணிக்கர்வாசகர்கள்அபிஷேக் பானர்ஜிமாநில பிரிப்புஇல்லம் தேடிஅமித் ஷா காஷ்மீர் பயணம்சிறுநீரகக் கல்ஹார்மோனியம்பட்டிமன்றம்டாடாதலைமுறைபிஎஸ்எஃப்காலத்தின் கப்பல்திருமாவளவன் பேட்டிஇடைத்தேர்தல்மகேஸ் பொய்யாமொழி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!