தலையங்கம், அரசியல் 6 நிமிட வாசிப்பு

ஒரே தலைநகரம்.. அதுவே ஒற்றுமைக்கும் நல்லது

ஆசிரியர்
29 Nov 2021, 4:30 am
1

ந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் எனும் முடிவை முதல்வர் ஜெகன்மோகன் கைவிட்டிருப்பது நல்ல விஷயம். இந்தியப் பின்னணியில் பல வகைகளிலும் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கக் கூடிய திட்டம் அது. 

இந்தியாவில் இந்திக்கு அடுத்து, பெருவாரியான மக்களால் பேசப்படும் மொழியான தெலுங்கு மக்களின் மாநிலமான ஆந்திரமே தென் இந்தியாவின் பெரிய மாநிலமாகவும் இருந்துவந்தது. மொழிவாரி மாநிலங்கள் எனும் அமைப்புக்கு வித்திட்ட அந்த மாநிலமே,  இந்தி பேசாத மாநிலங்களில் முதல் பிரிவினையை எதிர்கொண்ட முதல் மாநிலமாகவும் உருவெடுத்தது வரலாற்று முரண். காலங்காலமாக பிராந்தியரீதியாக அழுத்தப்பட்ட தெலங்கானா மக்கள் தம்முடைய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஆந்திரத்திலிருந்து பிரிந்து தெலங்கானா மாநிலத்தை வென்றெடுத்தார்கள். அதுவரை ஆந்திரத்தின் தலைநகரமாக இருந்துவந்த ஹைதராபாத் இதற்குப் பின் தெலங்கானாவின் தலைநகரம் ஆனது. 

தமக்கென்று புதிய தலைநகரத்தை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆந்திரத்துக்கு உருவானது. அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அரசு 2015-ல் அமராவதியை தலைநகரமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதைக் கட்டியெழுப்பும் பணிகள் நடந்தேறிவந்தன. 

2019 சட்டமன்றத் தேர்தலில் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின், அமராவதி திட்டத்தில் கை வைத்தது. அமராவதிக்குப் பதிலாக ‘மூன்று தலைநகரங்கள்’ எனும் அறிவிப்பை வெளியிட்டார் ஜெகன்மோகன். இதன்படி, சட்டமன்றத்தைக் கொண்ட சட்டமன்றத் தலைநகராக அமராவதியும், தலைமைச் செயலகத்தைக் கொண்ட நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினமும், உயர் நீதிமன்றத்தைக் கொண்ட நீதித் துறைத் தலைநகராக கர்னூலும் அறிவிக்கப்பட்டன.

அதிகாரப்பரவலாக்கல் முனைப்பே இதற்கான காரணம் என்று சொன்னார் ஜெகன்மோகன். கூடவே,  தலைநகருக்கு நிலம் கையகப்படுத்தும்போதும் அதன் வளர்ச்சியைத் திட்டமிடும்போதும் சட்டங்களையும் நடைமுறைகளையும் சந்திரபாபு அரசு மீறியது; நிறைய ஊழல் நடந்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டி அதற்கான விசாரணைக்கும் உத்தரவிட்டார். இதையெல்லாம் தாண்டி அமராவதி தலைநகரத் திட்டம் சந்திரபாபுவின் கனவுத் திட்டமாக இருந்ததும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஜெகன்மோகன் அதில் கைவைத்தார் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆந்திர எல்லையைக் கடந்தும் இந்த விவகாரம் இந்திய மாநிலங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரங்கள் என்ற யோசனை பேசப்படலானது. ஏற்கெனவே மாநிலங்கள் எனும் அமைப்பைப் பலகீனப்படுத்தி, அவற்றைத் துண்டாடும் சக்திகள் பலம்பெற்று நிற்கும் காலகட்டத்தில், சுயமாக வைத்துக்கொள்ளும் சூனியம்போலத் தெரிந்தது இத்திட்டம். 

நிர்வாகரீதியாகவும் இது மோசமான யோசனை. வெவ்வேறு தொலைவில் உள்ள  பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதே இதன் முக்கியமான நோக்கம் என்றால், பிராந்தியங்களுக்கு இடையேயான தொலைவே இதன் முக்கியமான பலவீனமும் ஆகும். ஆந்திரத்தையே எடுத்துக்கொண்டால், அமராவதியிலிருந்து சுமார் 400 கிமீ தொலைவில் விசாகப்பட்டினமும், விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 700 கிமீ தொலைவில் கர்னூலும், கர்னூலிலிருந்து சுமார் 350 கிமீ தொலைவில் அமராவதியும் இருக்கின்றன. இத்தகு சூழலில், இப்படி மூன்று தலைநகரங்கள் அமைந்தால், அதிகாரிகள் தொடங்கி பொதுமக்கள் வரை எல்லோரும் பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாவார்கள். எல்லா விஷயங்களும் தாமதப்படும். பெரும் செலவு ஏற்படும். 

மக்களில் ஒரு தரப்பினரிடமிருந்தும் - குறிப்பாக விவசாயிகளிடமிருந்து - கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, ஜெகன்மோகன் அரசின் இந்த முடிவுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன. இன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா ஆந்திரத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, ஜெகன்மோகன் அரசு நேரடியாகவும், தனிப்பட்ட வகையிலும் அவரோடு முரண்பாடுகளைக் கொண்டது. “சந்திரபாபுவுக்கு வேண்டியவர் ரமணா; அவர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆந்திர உயர் நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்துகிறார்; அரசுக்கு எதிராக சதி தீட்டுகிறார்” என்று ஜெகன்மோகன் கடிதம் எழுதும் அளவுக்கு இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு மோசமான நிலையில் இருக்கிறது.

இவை எல்லாமும் கூடி ஜெகன்மோகன் தன்னுடைய மூன்று தலைநகரங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கின்றன. இது முழுமையான கைவிடலா அல்லது சமயம் பார்த்து திரும்பக் கொண்டுவருவதற்கான உத்தேசமா என்பது உறுதிபட தெரியவில்லை. ஒருவேளை முழுமையான கைவிடல் என்றால், அது நல்ல முடிவு. அமராவதியைத் தலைநகரமாக்கும் பணியில் ஏற்கெனவே பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டிருக்கும் நிலையில், அதில் அரசு  தொடர்ந்து கவனம் செலுத்துவது மாநிலத்துக்கு நன்மை பயப்பதாக இருக்கும். 

ஆந்திரத்தின் ஜெகன்மோகன் மட்டும் அல்லாது, தமிழ்நாடு உள்ளிட்ட ஏனைய மாநில அரசியலர்களும் ஓர் அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரப்பரவலாக்கம் என்பது வளங்களை சமமாகப் பகிர்வதிலும், பிராந்திய - சமூகச் சமநிலையிலும் இருக்கிறது. அது, தலைநகரங்களைப் பெருக்கிக்கொண்டேபோவதில் இல்லை. ஒரே நகரம் அல்லது பிராந்தியத்தில் எல்லா வளங்களையும் குவிப்பதற்கு மாற்றாக, கல்வி நிறுவனங்கள் - தொழில் நிறுவனங்கள் - அடிப்படைக் கட்டுமானங்கள் - வாய்ப்புகள் இவற்றில் பேதம் இல்லாமல் பகிர்வு நடந்தாலே பாதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும். சென்னை உயர் நீதிமன்றக் கிளையானது மதுரையில் அமைக்கப்பட்டது போன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிடலையும் இதன் ஒரு பகுதியாகப் பார்க்கலாம்; மக்களுக்கு நன்மை பயக்கும். உள்ளாட்சிக்கு அதிகபட்ச அதிகாரங்களைப் பகிர்வது இதில் சிறந்த பலனை அளிக்கும். அதிகாரத்திலும், வளர்ச்சியிலும் ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படும்போதுதான் பாகுபாடுகளை மக்கள் உணருகிறார்கள்.

உலகில் பெரும்பான்மை நாடுகளும் மாநிலங்களும் ஒரே தலைநகரம் எனும் அமைப்பையே கொண்டிருக்கின்றன. ஆட்சிமன்றங்கள், நீதி, நிர்வாகம் மூன்றின் தலைமையிடங்களும் நிர்வாகக் கண்ணோட்டத்தில் ஒரே நகரத்தில் இருப்பதே அதிக பலன் தருவது என்பதே இதற்கான காரணம். சமகால சுயநல அரசியல் கணக்குகளுக்காக மாநிலம் எனும் அமைப்பையும் உணர்வையும் பிரித்தாளும் இத்தகைய யோசனைகள் மக்களை அலைக்கழிப்பானவை; நீண்ட நோக்கில் செலவு பிடிப்பவை; தொலைநோக்கற்றவை; அபாயகரமானவை.


1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

WfH கலாச்சாரம் பரவிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு தலைநகரமே அதிகம். மேலும் அரசு வருவாயில் பெருமளவு திட்டம் சாரா செலவினங்களே. இம்மாதிரியான முன்னெடுப்புகள் ஏழை, பணக்காரர் விகிதத்தை மேலும் அதிகரிக்கும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

மாய-யதார்த்தம்நல்ல எண்ணெய் எது?ஜெய் ஷாசிந்தனை வளம்டெல்லி வாழ்க்கைஇந்தியத் தாய்மொழிகளின் தகைமைமு.இராமநாதன் கட்டுரைபால்ய விவாகம்மனித உரிமைபுலம்பெயர்ந்தோர் விவகாரம்கருத்துரிமை காத்த கலைஞர் சமஸ் உரைசார்லி சாப்ளின் பேட்டிஜிகாதிநம் காலம்ரயத்துவாரி முறைஉத்தரப் பிரதேச வளர்ச்சிநவ்ஜோத் சிங் சித்துபாஜகவின் புலப்படாத சக்திபயன்பாடு மொழிஜி.குப்புசாமிராமாயணத்தை இலக்கியப் பிரதியாக வாசிக்க முடியாதா?சட்டப்பிரிவு 370தொழில்நுட்பம்கோணங்கி விவகாரம்தமிழ்ப் புத்தாண்டு அண்ணாஇஞ்சி(ரா) இடுப்பழகா!பாடத்திட்டம்சிறிய மாநிலம்டாக்டர் வெ.ஜீவானந்தம்அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!