கட்டுரை, ஏன் எதற்கு எப்படி? 5 நிமிட வாசிப்பு

சிங்கப்பூரின் புதிய சட்டத்தைத் தமிழர்கள் அறிவது அவசியம், ஏன்?

டி.வி.பரத்வாஜ்
08 Oct 2021, 5:00 am
0

சிங்கப்பூர் அரசு அக்டோபர் 4 அன்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. சிங்கப்பூரில் வாழ்வோரும், சிங்கப்பூருக்கு வெளியே இருப்போரோடு உறவில் இருப்போரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டம் இது. குறிப்பாக, சிங்கப்பூரில் வாழும் வெளிச்சமூகங்களில் பெரியதான தமிழ்ச் சமூகம் இதுகுறித்து அறிந்துகொள்வது அவசியம். அந்த அடிப்படையில் இந்தச் சட்டத்தைப் பற்றிய விவரங்களை ‘அருஞ்சொல்’ இங்கே தருகிறது.

என்ன சட்டம் அது?

சிங்கப்பூர் அரசு கொண்டுவந்திருக்கும் இந்தப் புதிய சட்டத்துக்கு, ‘அந்நியர்கள் குறுக்கீடு (எதிர் நடவடிக்கை) சட்டம்’ என்று பெயர். இணையத் தகவல்தொடர்பு உட்பட மின்னணு ஊடகங்களின் வழியாக மேற்கொள்ளப்படும் அந்நியர்களின் தலையீட்டை எதிர்கொள்வதற்கு சிங்கப்பூர் அரசுக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் ‘வெறுப்புத் தகவல் பிரச்சாரங்கள்’ மூலமாகவோ, ‘தங்கள் சார்பாக உள்ளூரில் இருப்பவர்கள்’ மூலமாகவோ, சிங்கப்பூரின் உள்நாட்டு அரசியலில் குறுக்கீடு செய்வதைக் கண்டுபிடிக்கவும், அதைத் தடுக்கவும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது சிங்கப்பூர் அரசு.

சட்டத்துக்குத் தேவை என்ன?

வெளிநாட்டு நபர்களால் அல்லது அவர்களின் சார்பாகச் செயல்படுபவர்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்பைக் கடுமையாக பாதிக்கக் கூடும்; சிங்கப்பூரின் ராணுவத் திறன்களிலும் பாதுகாப்பு உறவுகளிலும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்; சிங்கப்பூரின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி சிங்கப்பூரின் அரசியல் இறையாண்மையையும் ஆட்சி முறையையும் வலுவிழக்கச் செய்யக் கூடும். ஆகவேதான் இந்தச் சட்டம் என்று சட்டத்துக்கான தேவையைச் சொல்கிறது சிங்கப்பூர் அரசு.

சட்டத்தால் என்ன அச்சுறுத்தல்?

சிங்கப்பூரில் உள்ள ஒரு நபரின் செயல்பாடுகள் வெளிநாட்டு சூத்திரதாரிகளால் இயக்கப்படும் விதத்தில் இருந்தால், அதன் அடிப்படையில் நாட்டின் அரசியல் இறையாண்மைக்கு எதிரான அச்சுறுத்தலை விளைவிக்கக் கூடியவர்களாக அவர்களை இந்தச் சட்டம் அடையாளம் காண்கிறது. ‘அரசியல்ரீதியாக முக்கியத்துவம் கொண்ட நபர்கள்’ வெளிநாடுகளிலிருந்து தலையீடுசெய்தால் அதை இந்தச் சட்டம் தடுக்கும்.

யாரெல்லாம் கண்காணிப்புக்குள் வருவார்கள்?

சமூக ஊடகக் கணக்குகள், இணையதளங்கள், பிற இணைய சேவைகள் ஆகியவற்றை விசாரித்தல், அவற்றைப் பயன்படுத்தத் தடை விதித்தல் அல்லது அவற்றை நீக்குதல் ஆகியவற்றுக்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு வழங்குகிறது. அரசியல் விவகாரங்களைப் பற்றிக் கட்டுரைகள் வெளியிடும் சிங்கப்பூர் செய்தித்தாள்களும், ஊடக நிறுவனங்களும், தங்கள் ஊடகங்களில் கட்டுரைகள் எழுதும் வெளிநாட்டுக் கட்டுரையாளர்கள் தொடர்பிலான முழுத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது. சிங்கப்பூரின் அரசியல் செயல்பாடுகளோடு தொடர்புடைய நபர்கள் ‘அரசியல்ரீதியாக முக்கியத்துவம் கொண்ட நபர்கள்’ என்று வகைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு எங்கிருந்து நிதியுதவி வருகிறது என்பதை அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தச் சட்டம் கூறுகிறது.  

கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்தா?

கருத்து மாறுபாட்டுக்கு எதிரானதாக இந்தச் சட்டம் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. சிங்கப்பூர் அரசு இதை மறுக்கிறது. “அரசியல் விவகாரங்களில் தங்கள் சொந்தக் கருத்துகளை வெளியிடும் சிங்கப்பூரார்களுக்கு இந்தச் சட்டக் கூறுகள் பொருந்தாது. அவர்கள் வெளிநாட்டு நபர்களின் கைப்பாவையாகச் செயல்படும்போதுதான் இந்தச் சட்டம் அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கும். அரசியலை விவாதிக்க சிங்கப்பூரார்களுக்கு உரிமை இருக்கிறது.  வெளிப்படையான, நேர்மையான விதத்தில் சிங்கப்பூர் அரசியலைப் பற்றி எழுதும் வெளிநாட்டினருக்கும் வெளிநாட்டு இதழ்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தாது, அவர்கள் சிங்கப்பூர் மீதோ அரசு மீதோ விமர்சனங்களை முன்வைத்தாலும்கூட” என்றெல்லாம் அரசு சொல்கிறது.  ஆனால், ஒரு தனிநபர் அல்லது அமைப்பு தொடர்பான தகவல்களைத் தருமாறு இணைய சேவைகளையும், சமூக ஊடகச் செயலிகளையும் கேட்கும் அதிகாரத்தை அரசு பெறுகிறது. ஒரு பதிவைத் தடுக்கவோ சமூக ஊடகக் கணக்குகளுக்கு முட்டுக்கட்டை போடவோ அவற்றை முடக்கவோ இணைய சேவையாளர்களிடம் கேட்கும் அதிகாரத்தை அரசு பெறுகிறது. அரசின் அறிவுறுத்தல்களை யாராவது இணைய சேவையாளர்கள் பின்பற்றவில்லை என்றால், அந்தச் சேவைகளை முடக்குவதற்கான அதிகாரத்தை அரசு பெறுகிறது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாகும் இந்தச் சட்டம் கருத்துரிமையை மேலும் ஒடுக்கும் என்ற விமர்சன குரல்கள் கேட்கின்றன.

ஏன் எதிர்க்கிறார்கள்?

இந்தச் சட்டத்தின்படி ஒருவர் கைதுசெய்யப்பட்டால், சுயேச்சையான மறுஆய்வுத் தீர்ப்பாயத்தில்தான் விசாரிக்கப்படுமே ஒழிய, சிங்கப்பூரின் நீதிமன்றங்களில் அல்ல. பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அந்தத் தீர்ப்பாயத்துக்குத் தலைவராக இருப்பார், கூடவே அரசுக்கு வெளியிலிருந்து இருவர் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுவார்கள். தீர்ப்பாயத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளே அறுதியானவை. “உளவுத்துறைரீதியிலும் தேசியப் பாதுகாப்புரீதியிலும் இந்த வழக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கலாம் என்பதால் இவை எல்லோருக்கும் தெரியும்படி நீதிமன்றத்தில் அல்லாமல் தீர்ப்பாயங்களில் மட்டுமே விசாரிக்கப்படும்” என்று சிங்கப்பூர் அரசு கூறுகிறது. இது வெளிப்படையான விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்ற அச்சம் இருக்கிறது. “தேசிய இறையாண்மையைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் இந்தச் சட்டமானது, அரசு - ஆளுங்கட்சி ஆகியவற்றின் கருத்துக்கு மாறாகச் செயல்படும் யாரையும், எதையும் தண்டிப்பதற்கு வழிவகுத்துவிடும். சுதந்திரமான எந்த ஊடக நிறுவனத்தையும், அரசியலரையும் ‘வெளிநாட்டு முகவர்’ என்று பழிசுமத்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்கிவிடக் கூடும்” என்ற அச்சமே இதை எதிர்ப்பவர்களிடமிருந்து வெளிப்படும் காரணமாக இருக்கிறது.

என்ன தீர்வு?

சிங்கப்பூர் அரசு இந்தச் சட்டத்தை மீளாய்வுசெய்ய வேண்டும். எந்த ஒரு சட்டமும் இன்றைய ஆட்சியாளர்களால் மட்டும் அல்லாது, பிற்பாடு ஆட்சிக்கு வருபவர்களாலும் செயல்படுத்தப்படும்; ஒருவேளை அவர்கள் தவறாகப் பிரயோகப்படுத்துபவர்களாக இருந்தால், அப்போதும் குடிமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் யோசித்து சட்டங்களை வகுப்பது முக்கியம் என்பதை சிங்கப்பூர் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் வாழும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடு தொடர்புடைய குடிமக்கள் கூடுதல் ஜாக்கிரதையுடன் இனி நடந்துகொள்ள வேண்டும். தங்களுடைய உரையாடல், நிதி பரிவர்த்தனை எல்லாவற்றையும் நேர்மையாக மட்டும் அல்லாது, இனி எவருடைய சந்தேகத்துக்கும் இடம் அளிக்காத வகையிலும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.

பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

சினிமாகாந்தியின் உடை அரசியல்கலைஞரின் முதல் பிள்ளைகாஷ்மீர் அரசியல்இடைத்தேர்தல்இந்தியாமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுசந்துரு பேட்டிஇந்திய பிரதமர்வாசிப்புஅருஞ்சொல்பத்ரி சேஷாத்ரிமருத்துவர் கணேசன்அமுல் 75கட்சித்தாவல் தடைச் சட்டம்பாஜக அரசுThirunavukkarasar Samas Interviewஎதிர்வினைவி.பி.மேனன்இந்தி ஆதிக்கவுணர்வுஅப்துல் ரஸாக் குர்னா பேட்டிசென்னை பதிப்புஊடகம்ஐபிசி 124 ஏஎழுத்தாளர் சமஸ்ஆஸ்துமாஅருஞ்சொல் யோகேந்திர யாதவ்சென்னை மழைசாரு நிவேதிதாமேற்கு வங்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!