கட்டுரை 10 நிமிட வாசிப்பு
கறுப்புச் சட்டத்திற்குப் பச்சை விளக்கு காட்டுகிறதா தமிழக அரசு?
19.8.2021. அன்றைக்குத்தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரனுடைய பணி நிறைவு நாள். பிற்பகல் 3.30 மணிக்கு அவருக்குப் பிரிவு உபசார விழா நடைபெறவிருந்தது. காலையில் அவர் இரு நீதிபதிகள் அமர்வாக 6 வெவ்வேறு நீதிபதிகளுடன் காணொளி வழியாக வழக்குகளை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்குகளின் பட்டியல் பெரியதாக இருந்தது. இந்த வழக்குகளுக்கு அப்பாற்பட்டும், தனி நீதிபதியாக சில வழக்குகளை கிருபாகரன் விசாரிப்பார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்குப் பட்டியலில் நீதிபதிகள் என்.கிருபாகரனும், பி.வேல்முருகனும் இணைந்து விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த 12 வழக்குகளில், வரிசை எண்.9-ல் இருந்த வழக்கு நம்முடைய கவனத்துக்கு உரியது. தன்னைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கு அது. இந்த வழக்கு அன்று முடிவுற்றதாகக் கூறப்பட்டது என்றாலும், அதன் தீர்ப்பு ஏறத்தாழ 6 வாரங்களுக்குப் பிறகுதான் அதன் விவரம் ஊடகங்களுக்குக் கிடைத்து, செய்தியும் வெளியானது.
தீர்ப்பில் நீதிபதி கிருபாகரன் கூறியிருந்த விஷயங்கள்தான் இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பதன் மையம். “அரசுத் தரப்பில் 24.8.2020 உத்தரவுப்படி ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி, தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்கும் சட்ட வரைவு ஒன்று தயாராக இருக்கிறது. இது அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.”
இதுதான் அதன் சாராம்சம்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியதாகச் சொல்லி, தீர்ப்பில் இந்த விஷயத்தைப் பதிவுசெய்திருந்தார் நீதிபதி கிருபாகரன். அத்துடன் இப்படி ஒரு சட்ட மசோதாவைக் கொண்டுவருவதற்காக அரசைப் பாராட்டியதுடன், “இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் குற்றவாளிகளைக் காவல் துறை திறமையாக சமாளிக்க முடியும்” என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
சட்ட மன்ற மரபு மீறப்பட்டதா?
நிறையப் பிரச்சினைகள் இதில் இருக்கின்றன.
அடிப்படையானது என்னவென்றால், இப்படி நீதிபதி குறிப்பிட்ட தேதியில் (19.8.2021) தமிழ்நாடு சட்ட மன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பட்ஜெட் கூட்டத் தொடரின்போது கொள்கை முடிவை அவையில் மட்டும்தான் முதலில் அறிவிக்க வேண்டும் என்பது சட்ட மன்ற மரபு.
அரசு வழக்கறிஞர் கூறியதாக நீதிபதி சொன்ன தேதிக்கு ஆறு நாட்களுக்கு முன்பு (13.9.2021) காவல் துறை மானியத்தை ஒட்டி சட்ட மன்றத்தில் 60 அறிவிப்புகள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டன. அவற்றில், ‘குற்றங்கள் தடுப்புச் சட்டம் புதிதாகக் கொண்டுவரப்படும்’ என்று ஓர் அறிவிப்பு இல்லவே இல்லை; அதற்குப் பின்னரும் இந்தக் கூட்டத் தொடரில் அப்படி ஓர் அறிவிப்பு அரசால் வெளியிடப்படவில்லை.
அப்படியிருக்க, நீதிமன்றத்திடம் அரசு சார்பில் இத்தகைய உறுதிமொழியைக் கொடுப்பதற்கு அரசு வழக்கறிஞருக்கு ஆலோசனை வழங்கியது யார்? ஏனென்றால், ‘தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுப்பதற்குப் புதிய சட்டம் இயற்ற வேண்டும்’ என்றும், ‘மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட சட்டம்போல அது இருக்க வேண்டும்’ என்றும் உத்தரவிடுவதற்கு நீதிபதிகளுக்கோ, நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை.
எப்படி இந்த வழக்கு வந்தது?
இந்த இடத்தை நோக்கி நீதிமன்றம் எப்படிச் சென்றது என்று ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், முந்தைய கேள்வி உண்டாக்கும் அதிர்ச்சியைக் காட்டிலும் கூடுதலான அதிர்ச்சி ஏற்படும்.
2019 பிப்ரவரியில் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் தொடர்பிலான வழக்குகளை விசாரித்துவந்தது. அவற்றில் ஒரு வழக்குதான் வேப்பம்பட்டு வேலு தொடுத்தது ஆகும். 2018-லிருந்து இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும், ‘வேலுவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைப்பதற்கு முகாந்திரமில்லை’ என்றும், ‘வேலுவின் தடுப்புக் காவலுக்கு உத்தரவிட்ட சென்னை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவு தவறு’ என்றும், ‘வேலுவுடன் இருந்த சுரேஷ் மற்றும் லோகேஷ் ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதால், வேலுவையும் விடுவித்துவிடலாம்’ என்றும் உத்தரவிட்டனர்.
பொதுவாக, இப்படியான வழக்கில் சம்பந்தப்பட்டவரை விடுவித்தவுடனேயே அந்த மனுவின் கோப்பு முடிக்கப்பட்டுவிடும். மாறாக இந்த வழக்கில், சில பொதுப் பிரச்சினைகளை முடிவுசெய்வதற்காக அவ்வழக்கைத் தக்கவைத்துக்கொள்ளப்போவதாக நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். அது மட்டுமின்றி முடிந்துபோன வழக்கு மீண்டும் 2019 ஜுன் மாதம் விசாரணைக்கு வரும் என்றும் அறிவித்திருந்தனர்.
திகைப்பூட்டும் நடைமுறைகள்
முடிந்து போன ஒரு வழக்கில் எந்த உத்தரவையும் நீதிபதிகள் பிறப்பிக்க முடியாது. தவிர, மேற்குறிப்பிட்ட வழக்கில் ‘குண்டர் தடுப்புச் சட்டக் கைதிலிருந்து விடுதலை’ என்பது மட்டுமே நிவாரணமாக நீதிமன்றத்திடம் கோரப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் முடிந்துபோன ஆட்கொணர்வு மனுவில், தனது சுய அதிகாரத்தைப் பயன்படுத்தி திடீரென்று ஒன்றிய அரசையும், தமிழ்நாடு காவல் துறைத் தலைவரையும் கட்சிக்காரர்களாக்கி உத்தரவிட்டிருந்தது.
இப்படிப்பட்ட முடிந்துபோன வழக்குகளைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு உத்தரவிடுவதற்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் சிறப்பு உத்தரவு தேவை. மேலும், அவ்வழக்கை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வையும் தலைமை நீதிபதி மட்டுமே முடிவுசெய்ய முடியும். இதற்கெல்லாம் மாறாக முடிந்துபோன வேலுவின் வழக்கு 24.8.2020 தேதியன்று நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் பட்டியலிடப்பட்டது.
அரசுக்கு அனுப்பப்பட்ட கேள்விகள்
இப்படியாக, முடிந்துபோன வேலுவின் வழக்கில் நீதிபதிகள் 14 பக்க உத்தரவைப் பிறப்பித்ததுடன், அதில் அரசுத் தரப்பில் பதில் கூற வேண்டி 25 கேள்விகளையும் பட்டியலிட்டிருந்தனர். இதுவரை அந்தக் கேள்விகளுக்கு எவ்விதப் பதிலையும் ஒன்றிய அரசோ, மாநில அரசோ தாக்கல் செய்யவில்லை.
நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளில் சில கேள்விகள் நம் கவனத்துக்கு உரியவை. அரசியல் கட்சிகள் தங்களது பொறுப்பாளர்களாகக் குண்டர்களை அமர்த்திக்கொள்வது தொடர்பிலானது 10-வது கேள்வி. அரசியல் கட்சிகளில் கிரிமினல் பின்னணிகளுடன் கூடிய பொறுப்பாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தொடர்பிலானது 11-வது கேள்வி. குற்றவாளிகளே அரசியல் கட்சிகளை ஆரம்பிப்பது தொடர்பிலானது 12-வது கேள்வி. இவற்றுக்கான பதில்களை மோடி அரசோ அன்றைய பழனிசாமி அரசோ நீதிமன்றத்திடம் தெரிவிக்கவில்லை.
நீதிபதிகள் 23-வது கேள்வியாக கேட்டிருந்தது, ‘ஏன் மகாராஷ்டிரா, கர்நாடகா போன்று ஏற்பாடு செய்யப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டத்தைப் போல, தமிழ்நாட்டிலும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பில் யோசிக்கவில்லை?’
இதற்கு அன்றைய பழனிசாமி அரசு தாக்கல் செய்திருந்த பதில், ‘இது போன்ற சட்டங்கள் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை!’
நீடித்த விசாரணை
நீதிபதிகள் தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும், தமிழக எல்லைப்புறத்தில் நக்ஸலைட் தொந்தரவு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசின் வழக்கறிஞர், ‘புதிய சட்டம் இயற்றுவது மாநில அரசுகளின் அதிகார வரையறைக்கு உட்பட்டது’ என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார். ஆயினும் நீதிபதிகள், ‘தமிழ்நாடு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்’ என்றும், ‘புதிய சட்டம் கொண்டுவரும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது’ என்றும் கூறியதுடன், வழக்கை மேலும் இரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர் (24.8.2020).
வழக்கு இப்படி ஒத்திவைக்கப்பட்ட பிறகு முந்தைய அதிமுக அரசோ, புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட திமுக அரசோ இதுபற்றி ஒரு கொள்கை முடிவை எடுக்கவில்லை. ஆனால், நீதிமன்றத்தில் ஒரு வருடத்திற்குப் பின் அந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்பட்டபோதுதான் இந்தக் கட்டுரையின் தொடக்கப் பத்திகளில் நீங்கள் படித்த திகைப்பூட்டும் அந்த விஷயம் நடந்தது.
ஆக, அரசின் வழக்குரைஞர் எந்த அடிப்படையில் வரைவு மசோதா தயாராக இருப்பதாகவும், அதை அன்றைய தமிழ்நாடு காவல் தலைவர் (ஜே.கே.திரிபாதி) அமைத்த குழு தயார் செய்திருந்ததாகவும் கூறினார்? புரியவில்லை!
தமிழக அமைச்சரவைக்கு இது தெரியுமா?
அப்படியென்றால், தமிழ்நாடு அமைச்சரவைக்கும், உள்துறைக்கும் தெரியாமலேயே காவல் துறை அதிகாரியே இதுபோன்ற பிரச்சினைகளை முடிவுசெய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது இல்லையா? மேலும், 2020 ஆகஸ்ட் மாதத்திலேயே தமிழக அரசுத் தரப்பில், ‘புதிய சட்டம் தேவையில்லை’ என்று கூறப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தில் எப்படி இப்படி நடக்க முடியும்?
இத்தகவல்கள் நமக்கு அதிர்ச்சியைத் தருவதோடு, ‘நீதிமன்றம் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் உத்தரவிடலாமா?’ என்றும், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படும் சட்ட மன்றங்களுக்கே நீதிமன்றம் உத்தரவிடலாமா?’ என்றும் கேள்விகளை எழுப்புகின்றன. இதுகுறித்து உள்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், புதிதாக ஒரு கொடூரச் சட்டத்திற்கு அடிகோலிட்ட பழி அவர் மீது சுமத்தப்பட்டுவிடக் கூடும்.
முதல்வரின் நேரடிக் கவனம் தேவை
காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்று கூறி ஒரு கொடிய கருப்புச் சட்டத்தை உருவாக்க நீதிபதிகள் உத்திரவிடலாம். ஆனால், மக்கள் பிரதிநிதிகள் இசைவின்றி அப்படிப்பட்ட சட்டத்தை உருவாக்க முடியாது.
தமிழ்நாட்டின் இன்றைய முதல்வர் மிசா போன்ற ஒரு கறுப்புச் சட்டத்தின் கோர முகத்துக்கு நேரடி சாட்சியமாக இருந்தவர். மிசா சட்டம் ரத்துசெய்யப்பட்டது என்றாலும், இன்றைக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது. அது போதாதென்று எதிர்த் தரப்புகளின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்கு ‘பெகாசஸ்’ போன்ற உளவுச் சாதனங்கள் அரசால் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டுகளையும் நாம் கேட்கிறோம்.
இப்போது நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் ‘ஏற்பாடுசெய்யப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம்’ ஒன்று உருவாக்கப்படுமானால், தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதற்கு காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டாலே போதும். ஒட்டு கேட்கப்பட்ட தகவல்கள் நீதிமன்றத்தால் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். இதுபோன்ற குற்றங்களை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதோடு, குற்றப்பத்திரிகை பதிவுசெய்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலுள்ள காலக்கெடு நீட்டிக்கப்படும். இவ்வளவு மோசமான விஷயங்களும் அரங்கேறும்.
யார் இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுவார் என்று பார்த்தால் எவர் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனவோ, அவர்கள் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தால் சிறப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும். அதேபோல, ‘காவல் துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று சிறப்பு சட்டம் கூறுகிறது. அப்படித்தானே தடா சட்டத்திலும் கூறப்பட்டிருந்தது? இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கை விசாரித்தபோதுதானே நீதிபதி கே.ராமசாமி, ‘உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்படும் அதிகாரம் தவறாகத்தான் பயன்படுத்தப்படும்!’ என்று கூறியிருந்தார்?
ஆக, இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு திருத்தம் தேவை என்று பம்பாய் உயர் நீதிமன்றம் கூறியதோடு, மறு ஆய்வுக் குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிட்டது. இச்சட்டத்தை மகாராஷ்டிரத்தில் கொண்டுவந்த பாஜக - சிவசேனா அரசின் பிரதிநிதி - அன்றைய உள்துறை அமைச்சர் சக்கன் புஜ்பாலே இச்சட்டத்திற்கு திருத்தம் தேவை என்று கூறியிருந்தார்.
ஆக, இதையெல்லாம் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே இருக்கக் கூடிய சட்டங்கள் போதாது என்று புதிய கருப்புச் சட்டங்களை உருவாக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் துணை போகக்கூடாது. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசே சிவப்புக் கொடி காட்டிய சட்டத்திற்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பச்சைக் கொடி காட்டலாமா?
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Kannan Krishnamoorthy 3 years ago
ஒரு திகில் கதைப்படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அசாத்தியமான ஆய்வு இக்கட்டுரையின் தனிச்சறப்பு. முதல்வர் சட்டமன்றத்திலேயே இதற்கு பதில் வெளியிட வேண்டும்.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
K. Ramasami 3 years ago
ஸ்டாலின் செவி மடுப்பார் என நம்புவோம்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.