பிரச்சினைகள் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, அதற்கு காரணமாக விளங்கும் மனித படைப்பியல்புகளைப் பற்றிப் பேசுங்கள். அதுவே தீர்வை நோக்கி நகர்த்தும். எது ஒன்றை மனிதர்கள் அறியவில்லையோ, அதுவே அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். ஆண் இனத்தை அறிந்துகொள்ளாத பெண் இனமும், பெண் இனத்தை அறிந்துகொள்ளாத ஆண் இனமும் எப்போதும் மன அழுத்தத்திலே காலம் கழிக்கும் என்று எழுதுகிறார் ஒரு வாசகர்.
@ சமந்தாவுக்கு ஏன் சைதன்யா தீர்ந்துபோனார்?
ஆண்களுக்கும் நீங்கள் சொன்ன எல்லாக் குழப்பங்களும் உண்டுதான். ஆண் பெண் உறவு மட்டுமல்ல, பொதுவாக மனித உறவுகளான நட்பு, சகோதரத்துவம் எல்லாவற்றிலும் இந்தப் பிரச்சினை உண்டு. என்ன, அந்த உறவுகளை நாம் நினைத்த விதத்தில் தள்ளி வைக்கவோ முறித்துக் கொள்ளவோ முடிகின்றது. திருமண பந்தத்தில் அது எளிதல்ல. விவாகரத்துகூட குழந்தைகள் இல்லாத பட்சத்தில் ஓரளவு சாத்தியம். இங்கு உறவு என்பது இயல்பாகவும் சுதந்திரமாகவும் பகிரக் கூடிய ஒன்றாக இல்லை. ஒருவரையொருவர் உடைமையாக்கிக் கொள்வதே இங்கு உறவாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. அதுதான் சிக்கல்.
- ஆர்.சுப்ரமணியன்
அருமையான துவக்கம். ஆண் பெண் உறவு குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் இன்றைய உலகின் தேவை.
- சுரேஷ் குமார்
அற்புதமான மொழியில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. மணத் தேர்வும் மண முறிவும் ஆண்களைவிடப் பெண்களை அதிகம் குழப்புவதைப் பார்க்கிறேன். அதற்கு முக்கியமான பங்கு சமூகக் கட்டமைப்புதான். சமந்தா-சைதன்யா இணையர் நடிகர்கள் என்பதால், இப்பிரச்சினை எல்லோராலும் பொதுவெளியில் பேசப்படுகிறது; மற்றவர்களுக்கு சொந்தங்களும் சுற்றத்தாரும்.
- விஜயகுமார்
நல்ல கட்டுரை. கோவையாக எழுதப்பட்ட விதம் அருமை. ஆனால், ஆழமாக எடுத்துச்செல்வதாக நினைத்து, சம்பவங்களையும் விதிவிலக்குகளையும் வைத்துக்கொண்டு அணுகப்பட்ட ஒரு மேலோட்டப் பார்வையாகவே தெரிகிறது. ஆண் - பெண் பற்றி அவர்களிடம் பேசாமல், அவர்களின் உறவுச் சிக்கலை மாய்ந்து மாய்ந்து பேசுவது நுண்ணறிவல்ல. ஆண், பெண் இனத்தின் படைப்பியல்புகளை மனிதர்கள் அறிந்திடாத வரையில், 10 ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்து மணந்தவர்களாக இருந்தாலும், குழந்தைப் பெற்ற அடுத்த வருடமே விவாகரத்தில்தான் முடியும். இவர்கள் எம்மாத்திரம்?
இந்தக் கட்டுரையில் ஆண் பெண்களின் படைப்பியல்புகளைப் பற்றி ஒரு வரிகூட பேசப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லாமும் சம்பவங்களையும், ஆதங்கங்களையும் முன்வைத்து எழுப்பப்பட்டக் கேள்வியாகவே இருக்கிறது. இங்கு சம்பவங்கள் என்பதே படைப்பு விதி எது என்று அறியாமல் நிகழும்போது, அதை முன் மாதிரியாகக் கொண்டு பிணையப்படும் எல்லாமும் சரியான தீர்வு என்றோ, சரியான அலசல் நோக்கு என்றோ எண்ணக் கூடாது.
சேர்ந்திருப்பவர்கள் அனைவரும் படைப்பியல்புகளை அறிந்தவர்களா என்றால் இல்லை. தாங்கள் படைப்பியல்புகளை உணர்ந்து எதிர் பாலினத்தைக் கையாள்கிறோம் என்று உணராதவர்கள். பெண் எப்போதுமே ஆணைவிட வலிமை மிக்கப் படைப்பு. காரணம் பெண் இனத்துக்குக் குற்ற உணர்ச்சி வராது. தந்திரத்தில் ஒரு சராசரிப் பெண், சராசரி ஆணைவிட 10 மடங்கு சிறந்தவள். குற்ற உணர்ச்சிக்கு அகப்படாத வகையில்தான் பெண் இனத்தை இயற்கை வடிவமைத்திருக்கிறது. அப்படியே வந்தாலும், அதைத் தனக்குள்ளேயே காய் நகர்த்தி நியாயப்படுத்திக்கொண்டு, சர்வ சாதரணமாய் கடந்துவிடுவார்கள். ஆனால், வெளியில் அப்படிக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆண் இனம் தான் செய்யாதவற்றைக்கும் சேர்த்துக் குற்ற உணர்ச்சி அடைந்துகொள்ளும். இது மனித படைப்பு விதி அல்லது படைப்பியல்பு. இது நாடு, வீடு, வளர்ப்பு விதம், பழக்கம் என்பதற்கேற்ப வெளிப்படும்விதம் மட்டுமே மாறுபடும்.
பெண் இனம் தனக்குத் துணையாக ஒரு ஆணை தேர்ந்தெடுப்பது இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல கடினமில்லை. பாதுகாப்புணர்வு, ஆளுமைத்திறன், பொருளாதாரம், உடல்திறன் இவை நான்கும் தன் துணையிடம் நிரம்பியிருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஆளுமைத்திறன் என்பது ஆதிக்கம் அல்ல. ஒரு செயலை, பிரச்சினைகளைக் கையாளும் விதத்தில் எப்படி ஆளுமை செலுத்துகிறார்கள் என்பது. பெண் விலங்கினங்களுக்கும் இதே படைப்பியல்புதான். மற்ற ஆண் விலங்குகளைவிட முன்னிலையில் இருக்கும் ஆண் விலங்கையே பெண் விலங்கு தேர்ந்தெடுக்கும். மனிதப் பெண் இனம் சற்று வித்தியாசமாய், ஆணிடம் ஏதேனும் ஒன்று அதீதமாய் குறையும்பட்சத்தில், மற்றவற்றை வைத்து அதைச் சரி செய்துவிடலாம் என்று நினைக்கும். அது வேலைக்காகாது என்னும் பட்சத்தில்தான் மற்றொரு ஆணைத் தேர்ந்தெடுக்கும். உதாரணமாக, உடல்திறன் மிகக் குறைந்த ஆண் பொருளாதாரத்தில் மிக உயரிய நிலையில் இருந்தால், அந்தப் பெண், அவன் உடற்திறனை நோக்கி கேள்வி எழுப்ப மாட்டாள். பொருளாதாரம் மிகக் குறைவான நிலையில் உள்ள ஆண், அந்த பெண்ணுக்கு முழுமையான பாதுகாப்பு உணர்வை வழங்கினால், அவனின் பொருளாதார நிலையைப் பொருட்படுத்த மாட்டாள். இது படைப்பு விதி. விதி என்றால் விதிவிலக்குக்கும் உட்பட விதி. இங்கு விடிய விடிய இரு இனங்களும் பேசிக்கொண்டாலும், அது அவரவர்களின் பழக்க இயல்பைப் பற்றி மட்டுமே இருக்கிறது. ஏனென்றால், படைப்பு இயல்பைப் பற்றி மனிதர்களுக்குத் தெரியவில்லை. அதை உணர்ந்த ஆண் பேசுவதில்லை. தெரிந்த பெண் ஏற்றுக்கொள்வதில்லை. இதுவும் படைப்பியல்புகளில் ஒன்றுதான்.
ஒவ்வொரு உயிருக்கும் படைப்புப்பண்புகள் உண்டு, அதில் ஆண் உயிரிகளுக்கு தனிப்பண்புகளும், பெண் உயிரிகளுக்குத் தனிப்பண்புகளும் உண்டு. வெட்டுக்கிளி, அணில், கழுதைப்புலி, குரங்கு, சிங்கம், யானை போன்ற யாவும் அதில் அடக்கம். ஆண் பெண்ணுக்கு தனித்தனி படைப்புப் பண்புகள் உண்டு. அதை அறியாத வரையில், ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் கையாள முடியாத புதிர்களாகவேத் தோன்றும். இயற்கையின் படைப்பு விதியில் பெண் உயிரினத்துக்குத்தான் தேர்ந்தெடுக்கும் உரிமை. ஒரு பெண் அனுமதித்தால் மட்டுமே, ஆணால் உறவில் சேரவோ, விடுபடவோ முடியும். விடுபடுவதுகூட பெண் படைப்புப் பண்புகளில் ஒன்றுதான். ஆண் இனம், பெண் இனத்துக்கு ஒரு பயன்பாட்டுப்பொருள் மட்டுமே. பெண் இனத்துக்கான அன்பு, அரவணைப்பு, பாதுகாப்புணர்வு, ஆளுமைத்திறன் எல்லாமும் இதில் அடக்கம். இவை அறியாத ஆண் இனம், தன்னை உள்ளும் புறமும் மெறுகேற்றிக்கொள்ளாமல் தான் நினைத்தபோதெல்லாம் பெண்ணைத் தன்வயப்படுத்த முடியாது என்ற படைப்பியல்பை உள்வாங்காமல், அதை இயலாமையாக நினைத்துக்கொண்டு, பெண் இனத்தின் மேல் தன் ஆதிக்கத்தை வன்முறையாகப் பாய்ச்சுகிறது. பெண் இனமும் வன்முறையை நிகழ்த்தும் என்பது வேறு கதை.
இப்படி மனிதர்களிடம் மனிதர்கள் பற்றி பேசாமல், அவர்கள் சார்ந்தவைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் இதே நிலையே தொடரும். பிரச்சினைகள் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, அதற்கு காரணமாக விளங்கும் மனித படைப்பியல்புகளைப் பற்றிப் பேசுங்கள். அதுவே தீர்வை நோக்கி நகர்த்தும். இல்லையேல் பிரச்சினையைப் பிரச்சினையாகவே அணுகி, அதிலிருந்து விடபடுவதை மட்டும் பேசிவிட்டு அதை முடித்துக்கொள்ள நேரும். "எது ஒன்றை மனிதர்கள் அறியவில்லையோ, அதுவே அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்." ஆண் இனத்தை அறிந்துகொள்ளாத பெண் இனமும், பெண் இனத்தை அறிந்துகொள்ளாத ஆண் இனமும் எப்போதும் மன அழுத்தத்திலே காலம் கழிக்கும். அது திருமணமோ, நட்போ, வேறு உறவுகளோ... எல்லாமும் அடக்கம். மனிதர்களின் மீதான மனிதர்களின் நிலைபாடுகளைப் பேசாமல், மனிதர்கள் எத்தகையானவர்கள் என்பதை மனிதர்களிடம் பேசுவதே எல்லாவற்றுக்கும் தீர்வு. அதைவிடுத்து ஒன்றின் மேல் ஆதங்கப்பட்டு, பரிதாபத்தின்பேரில் மறைமுகமாகப் புனிதப்படுத்தும்போது, அங்கே புனிதமுடைத்தலும் நடைபெறும். இது இயற்கையின் விதி. ஆண் பெண் படைப்பியல்புகளை பற்றி, விரிவாக எழுதினால் 200 பக்கங்களைத் தாண்டும். ஆனால் தங்களைப் பற்றி முழுமையாக ஏற்றுக்கொள்கிற பக்குவம் மனித இனத்துக்குப் பரவலாக்கப்படவில்லை என்பதே உண்மை. காலம் அதற்கு வகை செய்யட்டும்.. உண்மையை மழுப்பல் இல்லாமல் அணுகும்போது அது கடினமாகவே இருக்கும். அனுஷா நாராயண் மற்றும் ஆசிரியர் சமஸ் ஆகியோருக்கு நன்றி.
- சிபு
”நாகசைதன்யாவுக்கும் இதே பிரச்சினைக்கு இருக்குமா? ஆண்களும் இப்படியான மனநிலைக்குள்தான் சிக்கிப் போராடி வெளியே வருகிறார்களா?” என்று கேட்டிருக்கிறார் கட்டுரையாளர். நிச்சயம் இருக்கும். தனது கனவுப்பெண் என்று நினைத்து ஆண் தேர்வுசெய்யும் பெண்ணும் இப்படிப்பட்ட ’யார் யாரோ தூவும் வண்ணங்களால்’ உருவாக்கிக்கொள்ளும் உருவம்தான். அந்த பிம்பப் பெண்ணுக்கும் நிஜப் பெண்ணுக்குமான வேறுபாடுகள், உரசல்கள்தான் பிரச்சினையைக் கொண்டுவருகின்றன.
- பொன்.முத்துக்குமார்
ஆண், பெண் உரிமை, உறவு பற்றி நமது சமூகம் தெளிவு பெற வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமும்கூடத்தான். ஆயின், சமந்தா, நாகா இருவரும் பிரபலமானவர்களாக இருப்பதால் மட்டும், அவர்களின் உறவுகள், ஊடல்கள் பற்றி நாம் அலசி ஆராய்வது கொஞ்சம் நளினமில்லாத செயல் என்று கருதுகிறேன். அவர்களில் யாராவது பொதுவெளியில் ஆலோசனை கேட்காத பட்சத்தில் நாம் உள் நுழைய எந்த முகாந்திரமும் இல்லை. அவர்கள் இருவரையும் விலக்கி இந்த உறவுகளின் சிக்கல் பற்றிப் பேசுவது நல்லதுதான். காதலி/காதலன் மறுப்பதால், விலகுவதால் ஏற்படும் வருத்தங்கள், கோபங்கள், வலிகளை எப்படிக் கையாள்வது என்பதைத் தெளிவுபடுத்த மனிதாபிமானிகள், உளவியலார்கள் ஆலோசனை இக்கால இளசுகளுக்கு அவசியம் தேவை. திருமணத்திற்கு முன்னோ, பின்னோ மனமாற்றம் ஏற்படக்கூடாது என்று எந்தச் சட்டமும் போட முடியாது. உடனடித் தேவை புரிதல்! சிந்திப்போம்.
- குமார் கிருஷ்ணன்
இதுவரை தளத்தில் நிறையக் கருத்துகள் ஆண்களிடமிருந்து மட்டுமே வந்துள்ளன. யோசிக்க வேண்டிய விஷயம்.
- ராஜா ராஜாமணி
மறை நூல்கள் ஆண் பெண் கடமைகளைக் கூறியிருப்பதாகவே நம்புகிறேன். அதை மீறிய அனைத்து இஸங்களுமே (ism) வெற்று பிதற்றலாகவே தொடரும்.
- ராமச்சந்திரன்
தங்கள் கட்டுரையைப் படிக்கும்போது கமலா தாஸ் அவர்கள் எழுதிய 'என் கதை' புத்தகம் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் உரையாடல்.
- எம்.எஸ்.பி.ராஜசேகரன்
வரும் வாரங்களில் இரு உலகங்களோடு நிறுத்திவிடாமல், பிரபஞ்சத்தைப் பற்றியும் பேசுவீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பான் இந்தக் கிழவன்.
- கிழவன்
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.