கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

தனி வரலாறு கொண்ட திருப்பதி லட்டு!

அனிருத் கானிசெட்டி
29 Sep 2024, 5:00 am
0

திருமலை ஸ்ரீ வேங்கடேசுவரர் ஆலயம் என்றாலே திருப்பதி லட்டு அனைவருக்கும் நினைவுக்கு வரும். திருப்பதிக்குச் சென்றால் லட்டு வாங்காமல் ஊர் திரும்ப முடியாது என்ற அளவுக்கு, வழிபாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்டது லட்டு. திருப்பதியில் இறைவனின் அருளாசியைப் பெற்ற இனிமையைத் தருவதில் லட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. யாத்திரை முடிந்து ஊர் திரும்பியவர்கள் ஏதும் சொல்லாமல் லட்டைக் கொடுத்த மாத்திரத்தில், உறவினர்களும் நண்பர்களும் கேட்கும் அடுத்த கேள்வி, ‘திருப்பதி போய்விட்டுவந்தீர்களா?’ என்பதுதான்.

திருமலையில் லட்டு முக்கியப் பிரசாதமான கதை, பல சுவாரசியமான கட்டங்களைக் கொண்டது. இந்தியாவின் வெவ்வேறு சமஸ்தானங்களுக்கு இடையிலான நாடு பிடிக்கும் போர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடர்களின் இறைபக்தியில் உருவான போட்டி, ஆன்மிகத்துடன் இணைந்துவிட்ட வர்த்தக நோக்கம் ஆகியவையும் திருப்பதி லட்டு பிரசாதத்துடன் இரண்டறக் கலந்தவை.

திருமலையில் வேங்கடவனை தரிசித்த பக்தர்களுக்கு குளிர் – கோடை என்ற இரண்டு பருவங்களுக்கும் ஏற்றதும் எளிதில் தயாரிக்க முடிந்ததும், எளிதில் செரிக்கக்கூடியதுமான வெண் பொங்கல்தான் பிரதான படையலாக தொடக்க காலத்தில் திகழ்ந்தது. பிற்காலத்தில்தான் லட்டு சேர்ந்துகொண்டது.

திருமலை – திருப்பதி தோற்றம்

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறுகொண்டது திருமலை. தமிழ்நாட்டின் எல்லையாக வட வேங்கடம் இலக்கியத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் சென்று வழிபட்டு பாடல்களைப் பாடிய திருத்தலம் திருமலை. பொது ஆண்டு 9 – 10 நூற்றாண்டுகளில் திருப்பதி ஆலயம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது. ஏழு மலைகள் மீது அமைந்த இத் திருத்தலத்தை எளிதில் சென்று வழிபட முடியாவிட்டாலும் மிகவும் விரும்பப்பட்ட தலமாக தொடக்கத்திலேயே அமைந்துவிட்டது.

திருமலை வேங்கடவனைப் பற்றிய பழமையான குறிப்புகள் திருச்சானூரில்தான் முதலில் கிடைத்தன. திருமலையின் அடிவாரத்தில் உள்ள இந்த ஊர் பத்மாவதித் தாயாரின் திருக்கோவில் உள்ள தலம். இந்த ஊர் தமிழ் வைணவர்களால் நிரம்பியிருந்தது. திருமலை வேங்கடநாதனுக்கு ஆட்டு நெய் கொண்டு தீபமேற்றியதாகவும் பக்தர்களுக்குத் தீர்த்த (ஜல) பிரசாதமே முக்கியமாக இருந்தது என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சோழர்கள் திருப்பணி

காவிரி பாயும் சமவெளியில் சோழர்கள் வலுமிக்க மன்னர்களாக உருவாகி, பக்கத்து நாடுகள் மீது போர் தொடுத்து அவற்றைக் கைப்பற்றத் தொடங்கியதும் திருமலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பதினோராவது நூற்றாண்டு முதல் வெவ்வேறு போர்களில் வெற்றிவாகை சூடிய சோழர்கள், ஆங்காங்கே இருந்த கோவில்களுக்கு மானியங்களையும் நிவந்தங்களையும் காணிக்கைகளையும் கணக்கின்றி வழங்கி அவற்றில் வழிபாட்டையும் திருவிழாக்களையும் விமர்சையாக நடத்தக் காரணமாக இருந்தனர்.

ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தினர். திருமலை ஆலயத்தில் பிரம்மோற்சவங்களையும் ஐம்பொன் சிலையாலான கடவுளர்களின் வீதி புறப்பாடுகளையும் ஊக்குவித்தனர். அதன் பிறகே அவற்றின் அளவும், எண்ணிக்கையும் பெருகத் தொடங்கியது. மன்னருடைய பெயர்களிலான கொடைகள் பெரிய கோவில்களுக்கு அதிகம் கிடைத்ததைப் போல அரசில் முக்கிய பதவி வகித்த மந்திரிகள், படைத் தலைவர்கள் போன்றோர் வழங்கிய கொடைகள் ஆங்காங்கே சிறு கோவில்களிலும் திருவிழாக்களை நடத்த உதவின.

பதினோராவது நூற்றாண்டில் திருமலையில் ஏழு நாள்களுக்குப் பிரம்மாற்சவம் (பெருந்திருவிழா) நடந்ததையும், கடவுளர்களின் சிலைகள் வெவ்வேறு வாகனங்கள் மீது பகல், இரவு என்று அனைத்து நாள்களும் எழுந்தருளச் செய்யப்பட்டதையும், ஏராளமான பக்தர்கள் அவற்றைக் காண்பதற்காகவே தென்னகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டதையும் ஆலயத்திலேயே சுவரில் பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மன்னர்கள், படைத் தலைவர்கள் மட்டுமின்றி யாத்திரை சென்ற பக்தர்களும் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் பெருகியதால் திருக்கோயிலில் பண்டிகைகள், வீதி புறப்பாடு, பிரசாதம், தங்குமிட சத்திர வசதிகள் என்று அனைத்துமே பெருகிக்கொண்டேவந்தன.

நிலங்கள் காணிக்கை

பன்னிரண்டாவது நூற்றாண்டில் சோழர்களின் செல்வாக்குக் குன்றிய காலத்தில், நில உடைமையாளர்கள் பலர் திருமலைக்குத் தேவைப்பட்ட நிதியைக் காணிக்கையாக வழங்கினர். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு நிலங்களையும் தங்க – வைர நகைகளையும், நாணயங்களையும் காணிக்கையாகச் செலுத்தினர். விவசாயப் பெருங்குடிகளும் யாதவர்களும் அரிசி, பருப்பு, நெய், தயிர் என்று தங்களுடைய பண்ணைகளிலிருந்து பெரும் அளவில் கொண்டுவந்து காணிக்கையாக அளித்தனர்.

ஸ்ரீ வைணவ பிராமணர்களும் தெலுங்கு யாதவர்களும் (மன்னர்கள்) இணைந்து ஆலயத்தின் நிர்வாகத்தையும் வருமானத்தையும் பெருக்கினர். தெலுங்கு யாதவர்கள் தேன், வெற்றிலை, மஞ்சள், கரும்பிலிருந்து எடுத்த நாட்டு சர்க்கரை, சந்தனம் போன்றவற்றுடன் ஏராளமாக காய்கறிகளையும் தினமும் கொண்டுவந்து குவித்தனர்.

திருமலையில் அரண்மனையையும் கட்டிய யாதவர்கள், தங்களுடைய போர் வெற்றிகளை அங்கே காட்சிப்படுத்தினர். 13வது நூற்றாண்டில் திருமலை ஆலயம் நல்ல நிலைக்கு வந்தது, ஆனாலும் இன்றைய கண்ணோட்டத்தின்படி பார்த்தால், அது சாதாரண வளர்ச்சியே பெற்றிருந்தது. பிறகு நிகழ்ந்த புவிசார் அரசியல் மாற்றங்கள், திருமலை ஆலயத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கும் வழிகோலியது.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கொலையில் பிறந்த கடவுள்கள்

ஆ.சிவசுப்பிரமணியன் 31 Jul 2022

விஜயநகரப் பேரரசின் எழுச்சி

பொது ஆண்டு பதிமூன்றாவது நூற்றாண்டு தொடக்கத்தில் டெல்லி சுல்தான்களின் படையெடுப்பாலும் தாக்குதல்களாலும் தென்னிந்திய அரச வம்சங்கள் பல வீழ்ந்தன. இதற்குப் பிறகு வட இந்தியாவில் பாமினி சுல்தான்களும் தக்காணத்தில் விஜயநகரப் பேரரசும் எழுச்சி கண்டன.

விஜயநகரப் பேரரசு கன்னடம், தெலுங்கு, தமிழ்மொழி பேசும் பகுதிகளைக் கொண்டது. இப்பகுதி மக்களை இணைக்கும் கண்ணிகளாக ஆலயங்கள் இருந்ததால், விஜயநகரப் பேரரசு அவற்றை மேம்படுத்தி பராமரிப்பதற்கு மிகுந்த அக்கறை செலுத்தியது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ‘அஹோபிலம்’ என்று இப்போது அழைக்கப்படும் திருத்தலம் உள்ள இடங்களில் வாழும் ‘செஞ்சு’ பழங்குடிகள், அங்குள்ள நரசிம்ம மூர்த்தி தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் (செஞ்சு லட்சுமி) திருமணம் செய்துகொண்டார் என்பதால், அவர் தங்களுக்கு மாப்பிள்ளை உறவு என்று கூறி ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தில் தாங்களும் பங்கேற்று, மலைக்காட்டில் கிடைக்கும் காய்கறி, பழம், தேன் என்று அனைத்தையும் காணிக்கையாக வழங்கி வழிபடுகின்றனர். இதை முறைப்படுத்தி ஊக்கப்படுத்தியது விஜயநகர சாம்ராஜ்யம். திருமலையில் வேட்டுவக் குலப் பெண்ணை ஸ்ரீனிவாசர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி அந்தச் சமூகத்தவர்களும் தொடர்ந்து காணிக்கைகளைச் செலுத்தி விழாவில் பங்கேற்கின்றனர்.

விஜயநகர மன்னர்கள் இந்த ஆலயங்களுக்கு திருப்பணி செய்து பெரிதாக விரிவுபடுத்திக் கட்டினர். தங்களுடைய அரசு நிர்வாகத்துக்கான அலுவலகமாக, கலாச்சார நிகழ்விடமாக, கோட்டை கொத்தளமாக ஆலய வளாகத்தைப் பராமரித்தனர். மக்கள் கூடுகை அதிகமிருந்ததால் வணிக மையங்களாகவும் வளர்ந்தன. விஜயநகரப் பேரரசின் நிர்வாகிகள் தெலுங்கர்கள், அவர்களுக்கும் தமிழர்களுக்கும் அவ்வப்போது உரசல்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன, ஆனால் திருமலை ஆலயம் இருதரப்பிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியது.

பொது ஆண்டு 1400 தொடங்கி 1600 வரையில் வேகமாக வளர்ந்ததுடன் தென்னிந்தியாவிலேயே செல்வ வளம் மிக்க ஆலயமானது திருமலை. பொது ஆண்டு 1510 – 1570 காலத்தில் விஜய நகர மன்னர்கள் திருமலை ஆலயத்துக்கு மட்டும் 8,05,653 தங்கக் காசுகளையும் ஏராளமான நிலங்களையும் நூற்றுக்கணக்கான பசுக்களையும் காளைகளையும் காணிக்கையாக வழங்கினர். போரில் வேங்கடவருடைய துணை தங்களுக்கு இருந்ததாக மன்னர்கள் கருதினர். ஒடிஷா என்று இப்போது அழைக்கப்படும் கலிங்கத்தில் பிரதாப ருத்திரர் என்ற மன்னரைப் பெரும்போரில் வென்ற கிருஷ்ண தேவராயர், உடனடியாக திருமலை வந்து வழிபட்டதுடன் ஏராளமான செல்வத்தைக் காணிக்கையாக வழங்கினார்.

திருமலை – திருப்பதி கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களில் உழுது பயிரிட்டு அந்த விளைச்சலை கோவிலுக்குக் கொடுத்தனர். நிதியாகக் கிடைத்த தங்கம் - வெள்ளியை லாபகரமான தொழில்களுக்குப் பயன்படுத்தி அந்த வட்டி வருமானத்தையும் காணிக்கையாக கணக்கில் சேர்த்தனர் நிர்வாகிகள். ஆலயத்துக்குக் கிடைத்த அரிசி, நெய், பருப்பு வகைகளைப் பயன்படுத்தி வெண் பொங்கல் செய்து அமுது படைத்தனர். நிதி சேர சேர பண்டிகைகளின் எண்ணிக்கையும் நாள்களும் உயர்ந்தன. ஆண்டில் எல்லா மாதங்களிலும் திருப்பதி கோவிலில் உற்சவங்கள் கொண்டாடப்பட்டன.

திருமலை – திருப்பதி பிராந்தியத்தில் கால் வைத்தாலேயே திருக்கோவில்கள், திருக்குளங்கள், மக்கள் சாப்பிடுவதற்கான போஜன சாலைகள், காணிக்கைப் பொருள்களை விற்கும் கேந்திரங்கள், பண்டக சாலைகள், பிரம்மாண்டமான மதில் சுவர்கள், கோட்டைவாசல் கதவுகள் என்று வளர்ச்சி ஏற்பட்டது. பெருமாளுக்குப் படையலாக வழங்கப்படும் அமுதுகளின் வகைகளும் அளவுகளும் பெரிதாயின.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

பிரசாத தொடக்கம்

திருமலை திருப்பதி கோவில்களின் பிரதான புரவலர்களாக விஜயநகர மன்னர்கள்தான் இருந்தனர். ஆனால், ஆலயத்துடன் தொடர்புடைய ஸ்ரீ வைணவர்களும் தங்கள் பங்குக்கு நிலங்களையும் தங்கம் உள்ளிட்டவற்றையும் காணிக்கையாக வழங்கினர். 1500களில் திருமலை கோவிலுக்குச் சொந்தமான 115 கிராமங்களில் 43% திருமலை கோவிலிலேயே பணியாற்றிய பண்டாரகர்கள், ஆலயத்துக்கு அரிசி, பருப்பு, நெய் போன்றவற்றை விற்பவர்கள், அதிகாரிகள், வேத பண்டிதர்கள் ஆகியோருடைய கொடைகளிலிருந்து பெறப்பட்டவை.

ஆலயத்துக்கு வரும் காணிக்கைகளை முறையாக கணக்கு வைத்து நிர்வகிக்கும் பொறுப்பை ஸ்ரீ பண்டாரம் என்று அழைக்கப்பட்ட நிர்வாக அலுவலகம் ஏற்றது. தொடக்க காலத்தில் கோவிலில் தயாரான அன்ன பிரசாதங்கள் உபயதாரர்களுக்கு (கொடையாளர்கள்) மட்டும்தான் வழங்கப்பட்டது. யாத்திரையாக வந்த சேவார்த்திகள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே தயாரித்துக்கொண்டார்கள் அல்லது மற்றவர்களிடம் விலைக்கு வாங்கினார்கள் அல்லது அன்ன சத்திரங்களில் இலவசமாகப் பெற்றார்கள்.

பதினேழாவது நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசும் வீழ்ச்சி அடைந்தது. முக்கிய புரவலர் செல்வாக்கிழந்தபோதிலும் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையோ உண்டியலில் சேர்ந்த காணிக்கையோ குறையவில்லை, மாறாக அதிகரித்தன. கர்நாடக பிரதேசத்தை ஆண்ட நவாபுகள் தொடக்க காலத்தில் திருமலையை மையமாக வைத்து வரிவிதித்து நிறைய சம்பாதித்தனர். இருபதாவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சாலை வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கூடிய பிறகு, யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியது. அப்படி நாட்டின் வடக்கு, மேற்கு மாநிலங்களிலிருந்து வந்த யாத்ரிகர்கள் பெருமாளை ‘பாலாஜி’ என்று அழைத்ததுடன், காணிக்கைகளையும் கணிசமாக வழங்கினர். அவர்கள் இனிப்பு - குறிப்பாக லட்டு - விரும்பி உண்கிறவர்கள் என்பதால், திருவேங்கடவருக்கும் லட்டு படைக்கப்பட்டது. பிறகு அதையே பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்க ஆரம்பித்தனர்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கடவுள் ஏன் சைவர் ஆனார்?

மு.இராமநாதன் 27 Jan 2022

ஆலய உற்சவங்களில் உபயதாரர்களாக இருந்த பலரும், படைக்கப்பட்ட முழு பிரசாதத்தையும் தங்களுடைய குடும்பத்தாரால் மட்டும் உண்ண முடியாது என்பதால் பிற யாத்ரிகர்களுக்கு விலைக்கு விற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தானத்தைக் கோரினர். பிரசாதம் வீணாகக் கூடாது என்பதால் நிர்வாகமும் அனுமதி தந்தது. இப்படித்தான் திருப்பதியில் லட்டு பிரசாதமானது, பிறகு பிரசாதங்கள் விற்கப்படலாயின. இந்த விற்பனையைப் பிறகு தேவஸ்தானமே நேரில் ஏற்றது. 1940க்குப் பிறகு ‘திருப்பதி’ என்றால் ‘லட்டு பிரசாதம்’ என்று புகழ் பரவியது.

திருப்பதி லட்டுக்கு இப்படிப் பண்பாட்டு வரலாறும் நெருங்கிய பிணைப்பும் ஏற்பட்டுவிட்டது. மன்னராட்சியின் நோக்கங்களும் பிராமணர்களின் நோக்கங்களும் ஒரே புள்ளியில் இணைந்ததால் திருமலை தேவஸ்தானம் வளர்ச்சியும் புகழும் பெற்றது. திருமலை இப்போது வெறும் பக்திக்கான வழிபாட்டுக் கேந்திரமாக மட்டும் இல்லாமல் மத, ஆன்மிக, கலாச்சார மையமாக உருவெடுத்துவிட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளை - மக்களை இணைக்கும் இடமாக, அனைவரும் வந்து உரிமையோடு வழிபடும் கோவிலாக திருமலை திகழ்கிறது. பல்வேறு மொழி, இன, மக்கள் திருமலைக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டுவிட்டதாகவும் அபச்சாரம் நிகழ்ந்துவிட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏராளமான பக்தர்களுக்கு மன உளைச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் அரசியல்ரீதியாக குளிர்காயும் முயற்சிகளும் இருக்கின்றன. எது எப்படியாக இருந்தாலும் இந்து மக்களுக்கு சர்வதேச அடையாளச் சின்னமாகவும், ஆன்மிக மையமாகவும், ஆண்டுதோறும் செல்லத்தக்க திருக்கோயிலாகவும் இடம்பெற்றுவிட்டது திருமலை வேங்கடேசுவரர் ஆலயம்.

© த பிரிண்ட்

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

தொடர்புடைய கட்டுரைகள்

கொலையில் பிறந்த கடவுள்கள்
கடவுள் ஏன் சைவர் ஆனார்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






தொழில்நுட்ப ஆலோசனைகள்குடும்ப விவரங்கள்மத அமைப்புகள்மேல்நிலைக் கல்விவேலை மாற்றம்தேச விடுதலைஇரு உலகங்கள்hindu samasஹோமோ சேப்பியன்ஸ்பார்ப்பனர்கள் பெரியார்ஜெயலலிதாஹரியாணா: ஒடுக்கப்படும் பட்டியலினத் தலைவர்கள்இந்திய உயர்கல்வி நிறுவனங்கள்கடவுளர்கள்ஸெரெங்கெட்டிசமஸ் காமராஜர்உணவுத் தன்னிறைவுமனச்சோர்வுசிவில் சமூக நிறுவனங்கள்அப்துல்லாசாவர்கர்பெஜவாடா வில்சன்அதிகாரத்தின் நிறம்தூசு வால்கறியாணம்கலாச்சாரச் சிக்கல்மதச்சார்பின்மைஅடையாள அரசியல் அழிவுக்கே விழிஞ்சம் திட்டம்!காதில் இரைச்சல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!