கட்டுரை, கலை, சினிமா 7 நிமிட வாசிப்பு

ஆயிரம் படங்கள் கண்ட ஆரூர் தாஸ்

அஜயன் பாலா
22 Nov 2022, 5:00 am
1

ண்களைக் காட்டிலும் காதுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்த சமூகம் என்று தமிழ்ச் சமூகத்தைச் சொல்லலாம். இல்லாவிட்டால் தமிழகத்தில் மூலை முடுக்குகளில்  கல்யாணம்  காதுகுத்து என எந்த விழா நடந்தாலும் ஒரு படத்தின் வசனத்தை ஊருக்கே அலறவிட்டு திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்திருப்பார்களா, நம் மக்கள்? 

தமிழ்த் திரைப்பட வசன வரலாற்றில் ‘பராசக்தி’யை மேலே வைத்து நாம் ஒரு பட்டியல் போட்டால், ‘விதி’க்கு அதில் நிச்சயம் ஓர் இடம் உண்டு. இத்தனைக்கும்  ‘பராசக்தி’போல அரசியல் முக்கியத்துவமோ, திரையுலகைப் பின்னாளில் புரட்டிப்போட்ட புதிய போக்கு ஒன்றின் தொடக்கமோ இல்லாத சராசரியான படம்தான் ‘விதி’. ஆனாலும், வீதிக்கு வீதி அந்தப் படத்தின் வசனங்கள் தமிழகத்தில் ஒலித்தன. வசனகர்த்தா ஆரூர் தாஸ்.

இரு நாட்களுக்கு முன் தன்னுடைய 91வது வயதில் தன் வாழ்வை பூரணமாக நிறைவு செய்துகொண்ட ஆரூர் தாஸுக்கு இறக்கும்போது எந்த நோயும் இல்லை. ஒரு வருடத்துக்கு முன் மனைவி இறந்த துக்கம் அவரை நிம்மதி இழக்கச்செய்தது.  அதுவரை சுறுசுறுப்பாக இயங்கிவந்த அவர் தன் மனைவி இறப்புக்குப் பின் மன அழுத்தம் மிகுந்து அனைவரிடமும் பேசுவதை நிறுத்திக்கொண்டார். ‘பேபிஎன அவர் அன்பாய் அழைக்கும் அவர் மனைவி எப்போதும் அமரும் அந்த நாற்காலியில் யாரையும் பயன்படுத்த அனுமதிக்காமல் அந்த வெற்று நார்காலியைப் பார்த்தபடியே இடைப்பட்ட நாட்களைப் படுக்கையில் கழித்தவர் இறுதியாய் மூச்சையும்  நிறுத்திக்கொண்டார்.

யார் இந்த ஆரூர் தாஸ்? 

ஆரூர் தாஸின் பெருமைகள் ஏராளம்.

ஆயிரம் படங்களுக்கு எழுதியவர் என்பது அவற்றில் மிக முக்கியமானது. இந்தத் துறையில் தமிழ் சினிமாவில் இனி வேறு எவரும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத சாதனை இது. போட்டியும் சூழ்ச்சியும் பொறாமையும் மிகுந்த திரைப்பட உலகில் இன்று ஒரு  எழுத்தாளனுக்கு ஒரு படம் எழுதி முடித்து வெளிவந்து டைட்டிலில் பேர் வாங்குவதற்குள்ளாகவே மூச்சுமுட்டி நாக்கு தள்ளிவிடும் சூழலில் ஆயிரம் படங்கள் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய எண்!

கடந்த பதினைந்து வருடங்களாக திரை எழுத்தாளனாக என்னால் ஒரு பத்து பதினைந்து படங்களில் பணியாற்ற முடிந்தது என்றால், அதற்கு ஆரூர் தாஸ் முக்கியமான காரணம். ஒவ்வொரு படத்திலும் உச்சகட்ட பிரச்சனைகள் தலையெடுத்து இனி எழுத்துத் துறையே வேண்டாம் என நான் முடிவெடுக்கும் சமயங்களில் எல்லாம் ஆரூர் தாஸ் அவர்களை எண்ணிப்பார்ப்பேன்.  மறுநாள் நான் மீண்டும் உற்சாகமாக என் பயணத்தைத் துவங்க அவருடைய  ஆயிரம் பட எண்ணிக்கையும் அயராத உழைப்பும் எல்லாவற்றையும் தூக்கி வீசி நடக்கும் குணமும் வந்து செல்லும் அந்த ஒரு கணம் போதும்; உற்சாகம் என் தோளைப் பற்றிக்கொண்டு உந்தித்தள்ளும்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்,  நாகப்பட்டினத்தில் 1931இல் சந்தியாகு நாடார் - ஆரோக்கிய மேரிக்கு மகனாகப் பிறந்தவர் பிற்பாடு ஆரூர் தாஸ் என அழைக்கப்பட்ட ஜேசுதாஸ். தஞ்சை,  திருவாரூரில் பள்ளிப் படிப்பு படிக்கும்போது கலைஞர் கருணாநிதியின் நாடகங்களால் ஈர்க்கப்பட்டு,  சிறுவயதிலேயே நாடகம் எழுதி அதைத் தானே மேடையேற்றம் செய்த தாஸ் தன் நாடகத்துக்கு தானே சுவர்களில் விளம்பரம் எழுதும் வேலையை செய்யும் அளவுக்கு கலையின் பால் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார். திருவாரூருக்கு வந்த கவிஞர் சுரதாவின் அறிமுகம் சினிமா நோக்கி அவரைத் தூண்டியது. சென்னைக்கு வந்து தஞ்சை இராமையாவிடம் வசன உதவியாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க அவர்தான் ஜேசுதாஸ் என்ற இவர் பெயரை ஆரூர்தாஸ் என மாற்றினார்.

மிக இளவயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்தவர் ஆரூர் தாஸ். 1954இல் வெளியான ‘நாட்டிய தாரா' அவருடைய அறிமுகப் படம். தேவர் பிலிம்ஸ்  எடுத்த ‘வாழவைத்த தெய்வம்’ அவர் மீதான கவனத்தைக் குவித்தது. அந்தப் படத்தின்போது கிடைத்த சாவித்திரியின் அறிமுகம்தான் பிற்பாடு அவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்த ‘பாசமலர்’ படத்துக்கான வசனகர்த்தா வாய்ப்பையும் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு தாஸின் வாழ்க்கையில் உயரப்பறந்த கொடி கடைசியாக அவர் பணிபுரிந்த  நடிகர் வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ வரை இறங்கவே இல்லை. 

நேரடிப் படங்கள் காலத்தில் மட்டுமல்லாமல் மொழிமாற்றுப் படங்கள் பெருகி ‘வைஜயந்தி ஐபிஎஸ்’, ‘பூ ஒன்று புயலானது’ எனப் படையெடுத்தபோது அந்தப் போக்கின்  பிரமாண்ட வெற்றிகளுக்கும் ஆரூர் தாஸின் வசனங்கள் பெரும் தீயைப் பற்றவைத்தன. என்ன பிரச்சினை என்றால், தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத அவரது குணமும் அவரது சாதனைகள் அளவுக்கு அவர் பெயர் வெளியே தெரியாமல்போகக் காரணம் ஆனது.

பெரும் சாதனைக்குச் சொந்தக்காரர்! 

பொதுவாக, திரை எழுத்தாளன் ஆயுள் பத்து வருடங்கள்தான் என்பார்கள் தமிழ்த் திரை உலகில். பத்தாண்டுகளுக்குள் எவ்வளவோ மாற்றங்கள்; முக்கியமாக திரை மொழி மாறிவிடும். அதன் பிறகு அடுத்த தலைமுறை அந்த இடத்தை ஆக்கிரமிக்கும்.  ஆனால், 1950களில் தொடங்கி 1980களில் விஸ்வரூபம் பெற்று 2000களுக்குப் பிறகும் தொடர்ந்து அவர் களத்தில் இருந்தார். தன்னுடைய 70 வருடப் பயணத்தில் குறைந்தது அரை நூற்றாண்டு காலம் செல்வாக்கோடு இருந்தார்.

எழுத்துத் துறையில் இருப்பவர்களிடத்தில் உணர்ச்சிக்கொந்தளிப்பு அதிகம் வெளிப்படுவது இயல்பு. சினிமாவில் எது அவர்கள் படைப்புக்கு மூலதனமோ அதுவே அவர்களுக்குப் பிரச்சினையும் ஆகும். அப்படிப்பட்ட சூழலில் எளிதில் உணர்ச்சிவசப்படும் ஆரூர்தாஸ் இப்படி ஆயிரம் படங்களில் பணிபுரிந்த சாதனை என்னை பொறுத்தவரை எம்ஜிஆர், சிவாஜியின் சாதனைகளுக்கு நிகரானது.

நாம் இங்கே கவனம் அளிக்க வேண்டிய ஓர் அம்சம் உண்டு. இந்த இரு துருவங்களும் புகழ் உச்சியில் கொடிகட்டிப் பறந்த 1960களில் மொத்தத் திரை உலகமும் எம்ஜிஆர் - சிவாஜி என இரண்டு குழுவாக பிரிந்தும் கிடந்தது.  ஒருவருடைய குழுவைச் சேர்ந்தவர் இன்னொரு குழுவுக்குப் போய்விட்டால் துரோகப் பட்டம் விழுந்துவிடும். இதற்கு பயந்துகொண்டு  நடிகர் நடிகைகள் தவிர, பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் எவருமே அணிமாறாமல் விசுவாசிகளாகக் காலத்தை ஓட்டுவது அப்போதை சாதுர்ய பாதை. தாஸ் இருவராலும் தவிர்க்க முடியாத எழுத்தாளராக வலம் வந்தார். காரணம், இருவரும் தொடர் வெற்றிகள் பெற அவரும் ஒரு காரணமாகத் திகழ்ந்தார். 

உண்மையில்  சொல்லப்போனால் ஆரூர்தாஸின் பொற்காலம் அது. ஏனென்றால், சிவாஜியின் ‘பாசமலர்’, 'படித்தால் மட்டும் போதுமா’,  ‘பார் மகளே பார்’, ‘தெய்வ மகன்’ என 28 படங்களுக்கும், எம்ஜிஆரின் ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘வேட்டைக்காரன்’, ‘பரிசு’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’ என 24 படங்களுக்கும் என வசனம் எழுதியவர் தாஸ். தமிழ் நாடக மரபிலிருந்து தமிழ் சினிமா தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ளாத காலகட்டம் அது. வசனமொழி ஒருவித கவிதொனியைக் கொண்டிருக்க வேண்டும். அதேசமயம், எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும். எம்ஜிஆர் படங்கள் சமூகத்தை அதிகம் மையப்படுத்தியதாக அமையும் என்றால், சிவாஜி படங்கள் உறவுகளை அதிகம் மையப்படுத்தியதாக அமையும். இருவருக்கும் ஏற்றார்போல ஈடு கொடுத்திருப்பார் ஆரூர்  தாஸ்.

போட்டி நடிகர்களுக்கு ஒரே சமயத்தில் எழுதுவது மட்டுமல்லாமல் போட்டி தயாரிப்பு நிறுவனகளுக்கு ஒருவர் எழுதுவதும் அன்றைக்குப் பெரும் சவால். ஏனென்றால், அது ஸ்டுடியோக்கள் காலம். ஒவ்வொரு ஸ்டுடியோவும் ஒரு தனி நிறுவன கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. ஆரூர் தாஸ் இங்கும் சாதித்தார். பல போட்டி நிறுவனங்கள் மத்தியில் தொடர்ந்து வசன எழுத்தாளராகப் பணிபுரிந்தார். தேவர் பிலிஸ், ஏவிஎம், விஜயா வாஹினி என்று எல்லா நிறுவனங்களும் அவர் பெயரை மதித்தன.

சாகசப் பணி

இப்படி ஒரே சமயத்தில் அவர் எப்படி இத்தனை படங்களுக்குப் பணிபுரிந்தார், இத்தனை தயாரிப்பாளர்களை, இத்தனை இயக்குநர்களை, இத்தனை நடிகர்களை எப்படி அவர் திருப்திபடுத்தியிருப்பார் என்பதை யோசித்துப்பார்க்கும்போது அது உண்மையில்  சர்கஸ்களில் பார் விளையாடுவதைக் காட்டிலும் சாகசம் நிறைந்த காரியம் என்றே தோன்றும்.

ஆறு மாதங்களுக்கு முன்  தமிழக அரசு சார்பாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி ‘கலைத் துறை வித்தகர்’ விருதை அறிவித்ததோடு நில்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆரூர் தாஸ் வீட்டுக்கே சென்று படுக்கையில் இருந்த அவருக்கு தன் கைகளால் விருதை வழங்கியது ஒரு சிறந்த எழுத்தாளருக்கு அரசு செய்த தகுதியான கௌரவம். ஆனால், திரைத் துறை அவருடைய மறைவின்போது நேர் எதிரான தன் குணாதிசயத்தைக் காட்டியது. சிவக்குமார், வைரமுத்து,  பாக்யராஜ் தவிர சமகால நட்சத்திரங்கள் பலர் ஆரூர் தாஸ் மரணத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது வேதனைக்குரிய விஷயம்!

அஜயன் பாலா

அஜயன் பாலா, எழுத்தாளர், திரை வசனகர்த்தா, இயக்குநர். 'அஜயன்பாலா சிறுகதைகள்' உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ajayanbala@gmail.com


3

1
1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

R.Kamarasu   5 days ago

சிறப்பானதொரு கட்டுரை. அனைவரும் வாசிக்க வேண்டியது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ராஜேந்திர சோழன்தேர்தல் நன்கொடைஅந்தரங்க உரிமைஇரு தலைவர்கள் மரபுகுடியுரிமைச் சட்டம்எளியவர்களின் நலன் காக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டுஇந்திய விடுதலைமுகுந்த் பி.உன்னி கட்டுரைதலித்‘க்ரியா’ ராமகிருஷ்ணன்சமஸ் பார்வைதிருமாவளவன் பேட்டிஇந்துத்துவத்தின் இத்தாலியத் தொடர்புஅழகு நீலா பொன்னீலன் கட்டுரைபிளவுபட்ட இரண்டு ஜனநாயகங்கள்தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்இளைஞரை நம்புவோம்உணவுக் கட்டுப்பாடுமுசாஃபர்நகர்நிதி பற்றாக்குறைதுணைவேந்தர் நியமனம்இலவசமா? நலத் திட்டமா?சாதிரீதியிலான அவமதிப்புபச்சோந்தி கட்டுரைசுஷில் ஆரோன்விமானப் படைஎண்ணிக்கை குறைவுகல்கிபி.ஏ.கிருஷ்ணன் சாவர்க்கர்பஞ்சாப் தேர்தல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!