கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு
தேசிய அடையாளங்களை ஏன் மாற்றுகிறார் மோடி?
சாரநாத் கல்வெட்டில் மாமன்னர் அசோகர் செதுக்கிய நான்கு சிங்கங்கள் தர்மசக்கரத்தின் மீது நின்ற கோலத்தில் இருக்கும். அவை தங்களுடைய வலிமையை தர்மம் என்கிற அறத்திலிருந்து பெறுகின்றன. பிரதமர் மோடி புதுதில்லியில் உருவாக்கிவரும் நாடாளுமன்ற மைய வளாகத்தின் கோபுர உச்சியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிங்கங்கள், தர்மசக்கரத்தின் மீது காலை ஊன்றி நிற்கின்றன. இவை அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதற்குச் சான்றாக இருக்கின்றன.
இந்தியாவின் முதலாவது குடியரசு, புதிதாக அனைத்தையும் மறுஉருவாக்கம் செய்ய முயல்வதால் அதன் அடையாளங்களும் இப்படி மாறுதல்களைச் சந்திக்கின்றன. இந்த மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் மாற்றங்கள் நேர்மையற்ற முறையில் - பின்வாசல் வழியாக - மேற்கொள்ளப்படுகின்றன. திரித்தல், சிதைத்தல், பழைய சுவடே தெரியாமல் துடைத்தெறிதல், இடைச் செருகல் என்று எல்லா உத்திகளும் கையாளப்படுகின்றன.
இந்தக் களவு வேலைகளுக்கெல்லாம் தெளிவான ஒரு கருத்துருவாக்கம் (தியரி) இருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த தேசிய உணர்வு, அரசமைப்புச் சட்டத்திலேயே பாதுகாப்பாக பொதிந்து வைக்கப்பட்ட விழுமியங்கள், இருபதாவது நூற்றாண்டின் வரலாற்று நினைவுகள் ஆகியவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்ற நோக்கம் இவற்றில் இருக்கிறது.
இவற்றை அகற்றிவிட்டால் ஏற்படக்கூடிய வெற்றிடத்தை இட்டு நிரப்ப மிகப் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், புதிய விழுமியங்கள், புதிய நினைவுகள் தயாராகின்றன. அடுத்து கொண்டாடப்படவிருக்கும் ‘அம்ருத் மகோத்சவ்’ – இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு – சுதந்திரத்தை நோக்கி நாம் நடத்திய போராட்டங்களை நினைவில் கொள்வதற்காக அல்ல, அவற்றையெல்லாம் மறப்பதற்காக! ‘விதியுடன் போராட வேண்டும்’ என்று முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருஜி விடுத்த அறைகூவலை விட்டு விலகி நடைபோடுவதற்குத்தான் ‘புதிய இந்தியா’.
அடையாளங்களை மாற்றுவதேன்?
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய சிங்க இலச்சினை, அடையாளங்களை மாற்றும் புதிய நடவடிக்கைகளின் ஓரங்கமே. புதிய சிங்க இலச்சினைக்கும் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகியுள்ள சாரநாத் ஸ்தூபியில் இடம்பெற்றுள்ள அசல் சிங்கங்களுக்கும் ‘கேமரா கோணம்’ மட்டுமல்ல வேறுபாடு, அதன் உருவாக்கத்திலும் அது உள்ளடங்கியிருக்கிறது. அசோகர் ஸ்தாபித்த தூணில் இடம்பெற்றுள்ள சிங்க இலச்சினை அறம் சார்ந்த இந்தியக் குடியரசைக் குறிப்பது.
அமைதியாகவும் கம்பீரமாகவும் உள்ள அந்த சிங்கங்கள் தர்மசக்கரத்தால் வழிநடத்தப்படுபவை. ‘இந்தியாவின் தேசிய அடையாளச் சின்னங்களின் தேர்வு’ என்ற நூலில் பேராசிரியர் பிக்கு பாரேக் இதை விவரித்துள்ளார். “தேசிய இலச்சினையில் இடம்பெற்றுள்ள நான்கு சிங்கங்களும் நான்கு திசைகளைப் பார்த்த வண்ணம், முதுகோடு முதுகு ஒட்டியமர்ந்துள்ளன. அறச் சக்கரத்தால் வழிநடத்தப்படும்வரைதான் நாட்டின் வலிமை உச்சத்தில் இருக்கும். ஆட்சி நிலையாகத் தொடரும், மக்களால் விரும்பப்படும் என்பதை அந்த இலச்சினை உணர்த்துகிறது”.
புதிய நாடாளுமன்ற வளாகத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் தோற்றத்தில் அச்சுறுத்துபவையாகவும், மூர்க்கமானவையாகவும், சீற்றம் கொண்டவையாகவும் இருக்கின்றன. அசோகர் ஸ்தூபியில் இருந்த சிங்கங்களைவிட இந்த சிங்கங்களின் மார்புகள் பெரியதாகவும், தசை கொழுத்தும் இருக்கின்றன. அசோகர் ஸ்தூபியில் இருக்கும் அசல் சிங்கங்களின் உயரம் 1.6 மீட்டர் மட்டுமே, புதிய சின்னத்திலோ 6.5 மீட்டர்கள்.
இவ்விரண்டின் புகைப்படங்களையும் அருகருகில் இடம்பெறச் செய்து மாநிலங்களவை உறுப்பினரும் கலாச்சார வரலாற்று அறிஞருமான ஜாவர் சர்க்கார் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்: “அசல், இடதுபுறத்தில் எழிலாகவும், மிகுந்த தன்னம்பிக்கையுள்ள தோற்றத்துடனும் இருக்கிறது. வலதுபுறத்தில் இருப்பது மோடியின் உருவாக்கம், உறுமுகிறது, தேவையில்லாமல் ஆக்ரோஷத்தைக் காட்டுகிறது, பாந்தமான அளவுக்கு இல்லாமல் மிகப் பெரிதாகத் தெரிகிறது”.
புதிய சிங்க இலச்சினை பழைய இலச்சினையை அவமதிக்கும் வகையில் இருக்கிறதா என்ற கலைநுட்பக் கண்ணோட்டத்துக்குள் புக நான் விரும்பவில்லை. இந்த இலச்சினைகளின் வடிவமைப்பு, அளவு, அதை நிறுவிய இடம் ஆகியவை உணர்த்தும் புதிய பொருள்தான் எனக்கு முக்கியமாகப்படுகிறது. அசோகர் உருவாக்கிய ஸ்தூபியில் இடம்பெற்ற சிங்கங்கள் தர்மசக்கரத்திலிருந்து தங்களுக்குத் தேவைப்பட்ட அற வலிமையைப் பெற்றன. மோடியின் சிங்கங்கள் அறச்சக்கரத்தின் மீதே ஏறி நிற்கின்றன, அதன் மூலம் அதிகாரமே நாங்கள்தான் என்று சொல்லாமல் சொல்கின்றன.
தேசியக் கொடி வழிகாட்டு நெறி
தேசிய அடையாளங்களில் செய்யப்படும் மாறுதல்களில் சமீபத்திய ஒன்று அதிகம் பேரால் கவனிக்கப்படாமலேயே இருக்கிறது. தேசியக் கொடிக்கான வழிகாட்டு நெறி 2002 மாற்றப்பட்டிருக்கிறது. இயந்திரத்தில் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் மூவர்ணக் கொடியையும் தேசியத் திருநாள்களில் ஏற்றலாம், பயன்படுத்தலாம் என்று அரசாணை அனுமதிக்கிறது. காந்தியுடன் தேசியக் கொடிக்கிருந்த கடைசி தொடர்பும் இதன் மூலம் துண்டிக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த தேசியக் கொடி மாதிரிகளையெல்லாம் பரிசீலித்துவிட்டு, இறுதியாக நாட்டுக்கு உகந்த வடிவில் தேசியக் கொடியை உருவாக்கினார் காந்தி. தேசியக் கொடியின் நடுவில் கை ராட்டையைப் பொறித்தார். இந்திய அரசமைப்புச் சட்ட தேசியப் பேரவை அதையே தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டது, ஆனால், ராட்டைக்குப் பதிலாக அசோகரின் சாரநாத் ஸ்தூபியில் உள்ள தர்மசக்கரத்தை நடுவில் பொறிக்கச் செய்தது. அதேசமயம் தேசியக் கொடியானது கைராட்டையால் தயாரானதாக இருக்க வேண்டும்; அதை பட்டு, கதர், உல்லன் என்று துணியாலும் தயாரிக்கலாம் என்று தேசியக் கொடி வழிகாட்டு நெறி அனுமதித்தது.
ஆனால், இந்த வழிகாட்டு நெறியும் பல ஆண்டுகளாக ஆங்காங்கே மீறப்பட்டும் வந்திருக்கிறது. இப்போது பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட கொடிகள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் சீனாவில் தயாராகின்றன. ஆலைத் துணிகளில் நெய்த கொடிகள்கூட ஏற்றப்படுகின்றன. இவை இயற்கையான பருத்தியால் அல்ல மரபணு மாற்றப்பட்ட பீட்டா காட்டன் ரகத்தால்கூட தயாராகின்றன. ஆனால், அரசும் அரசு அமைப்புகளும் கர்நாடக கதர் கிராம உத்யோக சம்யுக்த சங்கம் தயாரிக்கும் கதர் கொடிகளைத்தான் வாங்க வேண்டும் என்று இன்றளவும் அரசாணை வழிநடத்துகிறது.
கதர் தேசியக் கொடி என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, இந்த நாட்டின் கோடிக்கணக்கான ஏழை நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற சுதேசி இயக்கம் பாடுபட்டதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வதற்கான சாட்சியுமாகும். செயற்கையான பொருள்களிலிருந்து தேசியக் கொடிகளைத் தயாரிக்கக் கூடாது என்று கைத்தறி நெசவாளர்களும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இங்கும் நாம் இது சட்டப்படி சரியா, பொருளாதாரத்துக்கு நல்லதா, காரிய சாத்தியமா என்பதையெல்லாம் விவாதிக்காமல் இதன் அடையாள அம்சத்தை மட்டும் பார்ப்போம். கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசானது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மிகவும் முக்கியமான இடங்களில் இதுவரை இருந்திராத உயரத்துக்கு பிரம்மாண்டமான கொடிக் கம்பங்களை நாட்டி, அதற்கேற்ற நீள - அகலத்தில் தேசியக் கொடிகளைக் கட்டி பறக்கவிடுவதை ஊக்குவிக்கிறது.
எப்படி தேசிய கீதத்தை அங்கீகரிக்கவில்லையோ, அப்படியே தேசியக் கொடியையும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் தேசிய கீதமாகவோ, கொடியாகவோ அனேக ஆண்டுகளுக்கு அங்கீகரித்ததே கிடையாது என்பது ஊர் அறிந்த ரகசியம். நாடு சுதந்திரம் அடைந்த முதல் ஐம்பதாண்டுகள் வரையில் நாகபுரியில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதே கிடையாது.
இப்போது அவர்கள் மூவண்ணக் கொடியின் தோற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள், ஆனால் அது தயாராகும் துணி வகையில் மாற்றம் செய்ய விரும்புகின்றனர். கதர் துணியின் அழகியல்தன்மைதான் தேசியக் கொடி மூலம் கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் தேசிய உணர்வைத் தூண்டியது. கதர் கொடியானது இந்திய ஏழைகளின் உடலைப் போலவே கரடுமுரடானது, வழுவழுப்பு தன்மையற்றது, தொட்டு உணரக்கூடியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போரிடாமல் மக்கள் தங்களுடைய உடலையும் உயிரையும் தந்து சாத்வீகமாகப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதை உணர்த்துவது.
தொழிலாளர்களின் உழைப்பின் மேன்மையை உணர்த்துவது கதர்க் கொடி. வழுவழுப்பாகவும் நீள - அகலத்தில் நேர்த்தியாகவும், கண்ணைப் பறிக்கும் மூவர்ணப் பளிச்சிடலுடன் கூடிய பாலியஸ்டர் கொடிகள், நவ தேசியத்தை முகத்தில் அறைந்தார்போலக் காட்டுகின்றன. பெங்களூருவில் ஐ.டி. தொழில் துறையில் வேலை பார்க்கும் நவயுக இளைஞன் எப்படி கிராமப்புற விவசாயத் தொழிலாளியான இளைஞனுக்கு ‘நெருக்கமோ’ அப்படித்தான் கதர்க் கொடியும் பாலியஸ்டர் கொடியும்!
அதிகார அடையாளத்துவம்
தில்லியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பிரதமர்களின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட ‘பிரின்ட்’ நாளிதழின் தலையங்கப் பக்க ஆசிரியர் ராம லட்சுமி அதைப் பின்வருமாறு வர்ணித்துள்ளார்: ‘மிகப் பிரம்மாண்டமானது, திகைப்பூட்டுவது, இன்னதென்று விவரிக்க முடியாத தன்மையுடையது!”
தேசியச் சின்னங்களுக்கு மோடி தரும் வடிவங்கள் அவருடைய அதிகாரத்தை மறைமுகமாக உணர்த்துபவை. தேசியப் போர் நினைவுச் சின்னத்தில் அவர் செய்துள்ள மாற்றமானது சுதந்திரப் போராட்ட காலத்துக்கு முந்தைய போர்களை மறந்து, சுதந்திரத்துக்குப் பிறகு சீனா – பாகிஸ்தானுடன் நடந்த போர்களை மட்டுமே அதிகம் நினைவுகொள்ள வைப்பவை, தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்துவதற்காக படேலுக்கு குஜராத்தில் அவர் அமைத்த நினைவுச் சின்னம், அம்பேத்கருக்கு எழுப்பிய நினைவகம் போன்றவை சுதந்திரத்துக்கு முந்தைய காலப் பெருமைகளிலிருந்து, தற்காலத் தலைவர்களும் உரிமை பாராட்டுவதற்கான கள்ள முயற்சிகளாகும்.
புதிய நாடாளுமன்ற வளாகம் இன்னும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படவில்லை, ஆனால் அதன் தோற்றம், அளவு, தன்மை மிகப் பிரம்மாண்டமாக இருக்கும், பார்ப்பவர்கள் வாயைப் பிளந்து வியக்கும் வகையில்தான் இருக்கும் என்று ஊகித்துவிடலாம். ‘அரசியலில் அழகியல்’ என்று வால்டர் பெஞ்சமின் இதைத்தான் குறிப்பிடுகிறார். மக்களுக்கு நேரடியான – உண்மையான பயன் என்று ஏதும் இல்லாவிட்டாலும், இத்தகைய அடையாளச் சின்னங்களைப் பார்த்தவுடன் வியப்பால் விழிகள் விரிந்து, தன்னை மறந்து திறந்த வாய் மூடாமல் பார்த்து தன்னையே மறக்கச் செய்யும் உத்தி என்கிறார். கலைதான் இந்த மாயத்தை நிகழ்த்துகிறது. தங்களுடைய துர்ப்பாக்கியமான வாழ்நிலையை மறக்க அவர்களுக்கு இந்த பிரம்மாண்டங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன.
அடையாளச் சின்னங்கள் எவ்வளவு முக்கியமானவை என்று மற்றவர்களைவிட மோடி நன்கு புரிந்துகொண்டிருக்கிறார். கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியங்கள், உரைவீச்சுகள் ஆகியவை மூலம் மக்களைப் பெருந்திரளாக வசியப்படுத்திவிடுகிறார். மிகப் பிரம்மாண்டமான கொடியையும் சிலையையும் நினைவகத்தையும் கட்டிடத்தையும் பார்க்கும் மனிதன் அன்றாடப்பாட்டுக்கு அலையும் தான், இந்த மகா மேருக்களுக்கு இடையில் சிறு கல் என்று உணர்ந்துகொள்கிறான். நவீனத் தொழில்நுட்பங்களால் நாட்டுக்கு ஏற்படும் முன்னேற்றங்கள் தன்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கு எப்படி உதவப்போகிறது என்று அவன் நினைப்பதில்லை.
செயற்கையான பிரம்மாண்ட தோற்றங்கள் - அன்றாட வாழ்க்கையில் முகத்தில் தோன்றிய சுருக்கங்களையெல்லாம் வியப்பால் விரியவைத்து வழுவழுப்பாக்கிவிடுகிறது! வெளித்தோற்றங்களில் வெளிப்படும் ஆக்ரோஷமானது, கூட்டாகத் தங்களுக்கிருக்கும் தாழ்மையுணர்ச்சிக்குத் திரை போட்டுவிடுகிறது. சாந்தமான சிங்க முகம், ரௌத்திரமான சிங்க முகமாக மாறுவது உள்ளிருந்து வெளியில் ஏற்படும் மாற்றம், புதிய அரசியல் சமுதாயத்துக்கான அரசின் அழைப்பாகும். இதையே ‘புதிய இந்தியா’ என்று அவர்கள் அழைக்கிறார்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி
2
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
தமிழ்வேள் 2 years ago
ஆக்ரோஷத்தோடு சீறி எழுவதுதான் சிங்கத்தின் இயல்பு...சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து, மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு- என்ற,அற்புத வரிகளை கேள்விப்பட்டதில்லையா? நேரு விரும்பிய சிங்கம், அவரது அரசைப்போல , காங்கிரஸைப்போல தொடை நடுங்கி சோப்ளாங்கியாக இருந்தது..இப்போது அது சிங்கம் போல கம்பீரமாக இருக்கிறது.....
Reply 0 1
Login / Create an account to add a comment / reply.
Shanmugasundaram Muthuvel 2 years ago
ஹிட்லரின் அனைத்து வழிமுறைகளையும் கையாள்கிறார்கள்... இங்கே ஆபத்து என்னவெனில் ஹிட்லர் என்ற தனிமனிதனுக்கு பின்னால் பாசிசம் நின்றது ஆனால் இங்கே பாசிசம் நிறைய மோடி போன்ற முகமூடிகளை கொண்டுள்ளது.... ஒன்று தோற்றால் இன்னொன்றென தன் முகமூடிகளை மாற்றிக்கொண்டே இருக்கும்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.