கட்டுரை, சட்டம், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

தேர்தல் வாக்குறுதிகளில் ‘இலவசம்’ கூடாதா?

யோகேந்திர யாதவ்
02 Aug 2022, 5:00 am
0

ட்சிக்கு வந்தால் ‘இலவசம்’ (விலையில்லாத) என்று தேர்தல் வாக்குறுதிகளில் அரசியல் கட்சிகள் அறிவிப்பது தடுக்கப்பட வேண்டிய நோயா? இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்துவது, ஜனநாயகம் என்பதை ஏழை மக்கள் புரிந்துகொண்டிருக்கும் யதார்த்த நிலைமைக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது. 

நான் ‘இலவச மின்சாரம்’ என்பது தவறான கொள்கை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், சாமானிய மக்களுக்கு அளிக்கும் இலவசங்கள் குறித்து மட்டும் ஏன், பொருளாதார அடிப்படையில் கவலைப்படுகிறோம்? அரசுகள் அறிவிக்கும் வரிவிகிதக் குறைப்புகள், சலுகைகள், பெரும் பணக்காரர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையில் பெரும் பகுதியைத் தள்ளுபடி செய்யும் நடவடிக்கைகள் போன்றவை குறித்து ஏன் கவலைப்படுவதில்லை?

அசாமில் உள்ள மூத்த நண்பரிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. “ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தவிர்க்க தலையிடுமாறு நீதிமன்றங்களை நாம் அணுக முடியுமா?” என்று அதில் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை எங்கே முன்வைப்பது, அதன் மீதான எதிர்விளைவுகள் எப்படி இருக்கும் என்று எதுவுமே நிச்சயமில்லாமல்தான் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்.

என்னை அன்றாடம் அணுகும் வேறு சிலருக்கோ இப்படிப்பட்ட தயக்கமோ, சந்தேகமோ கிடையாது. ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களைச் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தில் மனு செய்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று கருதுகின்றனர்.

என்னிடம் முன்வைக்கப்படும் பல பிரச்சினைகள் மீது எனக்கும் கவலை உண்டுதான். ஆனால், எல்லாவற்றுக்கும் சட்டம் மூலமும், நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தும்தான் தீர்வு காண முடியும் என்று ஏன் கருதுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. பிரசாந்த் பூஷணுக்கு நண்பராக இருப்பதால் நான் கொடுத்தாக வேண்டிய விலை இது என்று எனக்குப் புரிகிறது. அவர்கள் அனுப்பும் சில கோரிக்கைகளை அவருடைய பரிசீலனைக்கு வாரந்தோறும் அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.

நீதித் துறைத் தலையீடு

இந்தக் கோரிக்கைகளில் ஒரு சிறப்பு வகையும் இருப்பதைக் கவனிக்கிறேன். இந்திய அரசியலை, நீதித் துறைத் தலையீட்டின் மூலம் சீர்திருத்த வேண்டும் என்ற வகை கோரிக்கைகள் அவை. 1960களில் தொடங்கி 1980கள் முழுக்க, ‘இப்போதுள்ள தேர்தல் நடைமுறையை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை தொடர்ந்து நீடித்தது. அதாவது, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்றவரையே வெற்றி பெற்றவராக அறிவிப்பது என்ற இப்போதைய முறையை மாற்ற வேண்டும் என்பது பலருடைய கோரிக்கை. அதை விடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தலில் கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் - நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றங்களில் - விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது மற்றொரு முக்கிய கோரிக்கை.

அவ்வப்போது இப்படி புதிது புதிதாக கோரிக்கைகள் இதில் சேர்ந்துகொண்டே வருகின்றன. தேர்தலில் சாதி – மதரீதியிலான அம்சங்களைத் தடைசெய்ய வேண்டும் என்பது மற்றொரு முக்கிய கோரிக்கை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று சட்டப்படி கட்டாயப்படுத்த வேண்டும் என்றுகூட சிலர் கோருகின்றனர்.

இப்படிப்பட்ட கோரிக்கைகள் வரும்போது, விளக்குக் கம்பத்துக்கு அடியில் சாவியைத் தேடிய ஒருவரைப் பற்றிய நகைச்சுவை நினைவுக்கு வரும். சாவியை எங்கே தவறவிட்டீர்கள் என்று இன்னொருவர் கேட்டபோது தொலைவில் இருந்த இருளான பகுதியைக் காட்டி, அங்கேதான் என்றாராம். அப்படியானால் இங்கே ஏன் தேடுகிறீர்கள் என்று கேட்டபோது, இங்கேதான் வெளிச்சம் இருக்கிறது என்று பதில் அளித்தாராம். நம் நாட்டு ஜனநாயகத்தில் உள்ள சட்டப்பூர்வ, நீதித் துறை சார்ந்த, நிறுவனமயம் சார்ந்த குறைகளுக்கெல்லாம் எங்கே, எப்படி தீர்வு காண்பது என்ற குழப்பம் காரணமாகத்தான் எல்லோருமே இப்படி வேறு துறைகளை தீர்வுக்காக அணுகுகின்றனர்.

ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்த நினைக்கும் சாமானிய – செல்வாக்கற்ற மக்களுடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, சமூகத்தின் செல்வாக்கு மிக்க மேட்டுக்குடிகளின் கோரிக்கைகள் உடனடியாகக் கவனம் பெற்றுவிடுகின்றன.

தேர்தல் சீர்திருத்தங்கள் மத்தியதர வர்க்கத்தினரின் கனவுகளுக்கு அப்பாற்பட்டவை என்று ‘செமினார்’ இதழில் 1996 ஏப்ரலில் (எண் 440) ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரை வெளியான பிறகு, தேர்தல் நடைமுறையில் எதுவுமே மாறவில்லை, அதைப் படித்த சில நண்பர்களின் நட்பைத்தான் இழந்தேன். சிறிது காலம் கழித்து மிதமான வேகத்தில், தேர்தல் சீர்திருத்தம் என்றால் என்ன, ஏன், எப்படி அவசியம் என்று மிக நீண்ட கட்டுரையை மீண்டும் எழுதினேன். இருந்தும், இந்திய அரசியல் தீமைகள் அனைத்துக்கும் சட்டத் துறை மூலமே தீர்வு கண்டுவிட வேண்டும் என்ற பலரின் ஆர்வத்தை எதுவுமே தணித்துவிடுவதில்லை.

மாயாஜால மாற்றத்தை நிகழ்த்திவிடக்கூடிய அபூர்வ கஷாயத்தை இந்த நாடு தேடிக்கொண்டிருக்கிறது. இந்த அவசரத்தில், நோய் ஏதும் இருக்கிறதா – அதற்கு நாம் தேடி அலையும் சிகிச்சைதான் பொருத்தமாக இருக்குமா என்றுகூட சிந்திப்பதில்லை. நமக்கிருக்கும் அவசரம் காரணமாக மருந்தைத் தரக்கூடிய மருத்துவர் யார், மருந்து எது என்பதைக்கூட ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க விரும்பாத நிலையில் இருக்கிறோம்!

நோயைவிட சிகிச்சை மோசம்?

இந்த வகையில் சமீபத்தியதுதான், தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் பகுத்தறிவுக்குப் பொருத்தமற்ற இலவசங்களை அறிவிக்கக் கூடாது என்று தடுத்து நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள். அல்லது இப்படி அறிவிக்கும் தேர்தல் கட்சிகளின் சின்னங்களைத் தேர்தல் ஆணையம் முடக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கை. இந்த மனுக்களின் தரம் அல்லது மனுதாரரின் பண்பு ஆகியவை குறித்து இந்தக் கட்டத்தில் நாம் கவலைப்படத் தேவை இல்லை. பாஜகவின் பரிவார தேவதைகளில் ஒருவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் தவறான செயல்களுக்காக செய்திகளில் இடம்பெறுகிறவர். மதரீதியிலான கசப்பை வளர்ப்பவர் அவர்.

தேர்தல் நன்கொடை பத்திரம் என்பது தேர்தல் சீர்திருத்தத்துடன் நேரடித் தொடர்புள்ளது என்றாலும் அதை ‘விசாரிக்க நேரமில்லை’ என்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், ‘இலவசங்கள் கூடாது’ என்ற மனுவை விசாரணைக்கு ஏற்றிருக்கும் தனித்தன்மை மீது நாம் கவனம் செலுத்த வேண்டாம்! தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, தேர்தல் அறிவிக்கைகளில் இலவசங்கள் இடம்பெறலாமா, கூடாதா என்பது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுவிட்டு, அடுத்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 3க்கு ஒத்திவைத்திருக்கிறது.

இப்படி இலவசங்கள் அறிவிப்பது என்பது பெரிய நோய் போல எல்லா கட்சிகளையுமே பீடித்திருக்கிறது என்று ஒரு கணம் கற்பனை செய்வோம். அப்படிப்பட்ட நிலையில், ஒருவர் பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த நோய் எந்த அளவுக்குத் தீவிரமானது? என்னுடைய முன்னுரிமைகளில் இது முதலிடம் பெற வேண்டுமா? இதை குணப்படுத்திவிட முடியுமா? குணப்படுத்துவதற்கான செலவு கட்டுப்படியாகக் கூடியதா? இதைக் குணப்படுத்த வேண்டும் என்றால் அதை யார் செய்வது? எது சரியான மருந்து?

இப்படி இலவசங்களை அறிவித்ததற்காகவே ஒரு கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னத்தை ரத்துசெய்வது என்றால் அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பையே பறிப்பதுபோல ஆகிவிடும், அது நோயைவிட கடுமையான மருந்தாகிவிடும். ஜனநாயக அமைப்பில் அரசியல் கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்கும் அல்லது ரத்துசெய்யும் அதிகாரம் ஒரு பதவிக்கோ அல்லது நிறுவனத்துக்கோ வழங்கப்பட்டால், மற்றெல்லா அமைப்புகளையும்விட அவர் அல்லது அந்த அமைப்பு சக்திவாய்ந்ததாகிவிடும். தேர்தல் ஆணையத்தின் மதிப்பு ஏற்கெனவே சரிந்திருக்கிறது. அது மேலும் குலையாமல் இருக்க வேண்டும் என்றால் அத்தகைய அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்படக் கூடாது. ‘இது வாக்காளர்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம்’ என்று உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்துள்ள பதிலில் இந்தியத் தேர்தல் ஆணையம் மிகச் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறது.

இந்தப் பொறுப்பை நிதி ஆணையத்திடம் விடலாமா என்றுகூட தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு பரிசீலித்ததாக செய்திகள் கூறுகின்றன. எந்த நிறுவனமும் தங்களுடைய அதிகாரத்தை இப்படியெல்லாம் முறையற்ற வகையில் பயன்படுத்தி இதற்கு விடை கண்டுவிட முடியாது. ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வழிகளில் ஒன்று, ஏதாவது ஒரு காரணத்துக்காக அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்து - அதைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்துவிடுவதாகும். அப்படியொரு சாளரம் நம்முடைய ஜனநாயக அமைப்பில் இல்லவே இல்லை, புதிதாக ஒன்றை ஏற்படுத்தவும் கூடாது.

இலவசம் என்பது ‘நோய்’தானா?

இலவசம் என்பது நோய் என்றால், அதை எப்படிக் குணப்படுத்துவது? இந்தக் கேள்வியை மேலும் வலியுறுத்திக் கேட்டு இதற்கொரு தீர்வைக் காணும் முன்பாக, ஜனநாயகம் என்றால் என்ன என்று ஒரு நிமிஷம் சிந்திப்போம். ஜனநாயகத்தில் அரசியல் தொடர்பான எதற்கும் - அக நிர்வாகம் மூலம்தான் தீர்வு காண வேண்டும். ஒரு ஜனநாயகத்துக்கு வெளியிலிருந்து வரும் ஆபத்தைத் தடுக்கலாம், கண நேர கவன இழப்பைச் சரி செய்யலாம், தனி நபர்களின் ஆசாபாசங்களால் ஏற்படும் கோளாறுகளைச் சரிப்படுத்தலாம், பேரினவாதத்தின் மிதமிஞ்சிய நடவடிக்கைகளிலிருந்துகூட காப்பாற்றிவிடலாம், மக்களிடமிருந்து – மக்களின் விருப்பதுக்கு மாறாக – ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிட முடியாது. 

இலவசங்களை மக்கள் நாடுகிறார்கள் என்றால் அதனால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் குறித்து மக்களுக்கு நாம் விளக்கலாம். இலவசமாக ஒன்றைத் தருகிறோம் என்று ஒரு கட்சி கூறினால், அது எப்படி சாத்தியம், எவ்வளவு தருவார்கள், அதற்கு நிதியாதாரத்தை எங்கே திரட்டுவார்கள் என்றெல்லாம் கேட்டு - இது வெறும் தேர்தல் பிரச்சாரத்துக்கான வெற்று வாக்குறுதிதான் என்று மக்களிடம் அம்பலப்படுத்தலாம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவீசும் அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் கேள்வி கேட்டு பதில் பெறுமாறு ஊடகங்களுக்கு அதிகாரம் வழங்கலாம். ஒரு கட்டத்தில், மக்களே இந்த இலவசங்களை விரும்புகிறார்கள் - அதற்குத்தான் வாக்களிக்கிறார்கள் என்றால் நீங்கள் செய்வதற்கு எதுவுமே இல்லை. அப்படிச் செய்வது ஜனநாயகத்தையே தடுப்பது போன்றதாகிடும்.

இறுதியாக இந்த நோயைப் பற்றியே ஒரு சிந்தனை. இலவசங்கள் என்றாலே பிரச்சினை என்று ஏன் முடிவுகட்டுகிறோம்? முதல் நோக்கில் - இப்படிப்பட்ட அறிவிப்புகள் பொறுப்பற்ற செயல், நாட்டின் அரிய பொருளாதார வளங்கள், இலவசம் என்ற பெயரில் வீணடிக்கப்படுகின்றன. இலவச மின்சாரம் என்பது தவறான கொள்கை என்பதை ஒப்புக்கொள்கிறேன். சாமானிய மக்களுக்காக பொறுப்பற்ற வகையில் அளிக்கப்படும் இலவச அறிவிப்புகளை மட்டும் ஏன் கண்டிக்கிறோம்? மிகப் பெரிய பணக்காரர்களுக்கு அறிவிக்கப்படும் வரிச் சலுகைகள், வரி விலக்குகள், கடன் தள்ளுபடிகள் குறித்து ஏன் அதிகம் கவலைப்படுவதில்லை?

சரியாக ஆராயாமல் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களுக்காக ஆதரிக்கும் ஏழைகளின் வாக்குகள் பகுத்தறிவற்றவை என்று கருதுகிறோமா? உண்மை என்னவென்றால், பொருளாதார அறிஞர்களைவிட ஜனநாயகத்தில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய நேரடியான – குறைந்தபட்ச பலன் என்ன என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பகுத்தறிவுள்ள – பொருளாதாரரீதியாக அதிக பலனுள்ள கொள்கைகளால் தங்களுக்கு எந்த நன்மையும் கிடையாது, அவற்றால் எந்த நிவாரணமும் தங்களுக்குக் கிடைத்துவிடாது என்பதை அனுபவப்பூர்வமாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே, தங்களுக்குக் கிடைக்கக்கூடியவற்றை இப்போதே, இங்கேயே எளிதாகக் கைப்பற்ற விரும்புகிறார்கள். மிதிவண்டி, மின்விசிறி, மின்சார ஆட்டுக்கல், கைப்பேசி போன்றவற்றை வாங்கி உடனே பயன்படுத்திவிடலாம் என்பதால் வாக்களிக்கிறார்கள். இப்படிப்பட்ட இலவசங்கள் குறித்து கவலைப்படுவோரை, பொருளாதார மேதை அமார்த்திய சென் கூறியதைப் போல – ‘பகுத்தறியும் முட்டாள்கள்’ என்று அழைக்கலாமா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






மருத்துவக் கட்டுரைகள்பல்கலைக்கழகங்களில் அதிகாரம்media housesஅலகாபாத்மாதிரிப் பள்ளிகள் திட்டம்ஃபின்னிஷ் மொழிஉளவியல்ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்மனிதச் சமூகம்வேளாண் நிதிநிலை அறிக்கைதனிப்பாடல் எனும் தூண்டில் புழுஇந்திய அரசியல் வரலாறுசத்தியமங்கலம் திருமூர்த்திசெல்வாக்கு பெறாத லலாய்தினேஷ் அகிரா கட்டுரைதென்னைமடங்கள்பீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் தமிழ்நாடு நவ்அரவிந்த் பனகாரியாசின்ன மருத்துவமனைகளைச் சிந்திக்கலாம்வங்கதேச வளர்ச்சிமலர்கள்அறந்தை அபுதாகிர்விவசாயிகளைத் தாக்காதீர்உமர் அப்துல்லா ஸ்டாலின் மாபெரும் பொறுப்புபீமா கோரேகான் வழக்குஇரக்கத்துடன் துடிக்கும் இந்திய மனச்சாட்சி நயன்தாராஅமெரிக்க ஆப்பிள் உற்பத்திநாம் தமிழர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!