கட்டுரை, ஆளுமைகள் 7 நிமிட வாசிப்பு

பத்திரிகை போராளி வினோத் துவா

வினோத் சர்மா
08 Dec 2021, 5:00 am
0

ழைய நினைவுகளால் நிரம்பிய விடை தரும் நிகழ்வு அது. ஊடகர் வினோத் துவாவின் இறுதிச் சடங்குக்கு முன், அவருடைய தில்லி வீட்டில் கூடிய அனைவருக்கும் அவரைப் பற்றி சொல்ல விஷயம் இருந்தது. எந்த ஒன்றையும் கேட்போர் மனங்களில் பதியச்செய்யும் விதத்தில் பேசுவார் துவா. அவருடைய பேச்சைக் கேட்காமல் தவிர்க்க முடியாது. உற்சாகமாக இருக்கும்போது பாடுவார். சாப்பாட்டுப் பிரியர். ஊடகத் தொழிலில் மட்டும், யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்.

இறுதி நிகழ்ச்சிக்காக அவருடைய வீட்டுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான ஊடகர்களில், ஒலி-ஒளிபரப்பு நுட்பத்தை அவரிடமிருந்து கற்ற இளவயதினர் அதிகம். அவர்களைத் தன்னுடைய காலடியில் உட்கார வைத்தல்ல - தனக்குப் பக்கத்தில் போடப்பட்ட இருக்கையில் அமர்த்தி சொல்லித்தருவார் துவா.

வளைந்துகொடுக்காத ஆளுமை

ஹாக்கி வர்ணனையில் தனக்கென்று தனியிடம் பிடித்த அமரர் ஜஸ்தேவ் சிங்கைப் போலவே, மொழியைத் தூய்மையாகப் பேசுவதில் கவனமாக இருப்பார் துவா. அது அவரே கற்ற சுயமான பாடம். ஒரு விஷயத்தைப் பற்றி, எழுதப்பட்ட குறிப்புகளை வைத்துக்கொள்ளாமல் அப்படியே சரளமாகப் பேசிவிடுவார். பார்வையாளர்களிடம் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று யாரும் தனக்குக் கட்டளையிடுவதை விரும்ப மாட்டார். ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதை ஏற்கவே மாட்டார்.

துவாவுடைய வாழ்நாளின் இறுதிகட்டத்தில் நீண்ட காலம் வேலையில்லாமல் இருந்தார். பிறகு ஒரு வேலை கிடைத்தது. நிறைய சம்பளம் தருவதாகவும் நிர்வாகம் கூறியது. ‘ஆளுங்கட்சியை உங்களுடைய நிகழ்ச்சிகளில் கடுமையாக விமர்சிக்காமல் இருங்கள்’ என்று மட்டும் நிர்வாகம் அறிவுரை கூறியது. அந்த வேலையே வேண்டாம் என்று உதறித்தள்ளிவிட்டு வெளியேறிவிட்டார்.

நான் யாருக்கும் ஊதுகுழல் இல்லை என்று என்னிடம் ஒரு முறை கூறினார். அரசாங்கத்தின் கடைக்கண் நம் மீது விழாதா, ஏதாவது பதவி அல்லது ஆதாயம் கிடைக்காதா என்று பத்திரிகையாளர்கள் போட்டி போட்டு பறக்கும் இந்நாளில், சமரசங்களுக்கு இடம் தராத உறுதியான உள்ளம் கொண்டவர் துவா.

சுதந்திரமே முக்கியம்

வடக்கு தில்லியில் அகதிகள் குடியிருப்பில் சிறு வயதில் வளர்ந்த துவா, நாடே திரும்பிப் பார்க்கும் பத்திரிகையாளராக உயர்ந்தார். துவாவுக்கு அவருடைய சுதந்திரம் மிகவும் முக்கியமானது. கை நிறைய சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களில்கூட முதலாளிகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க முடியாது என்று கூறி வெளியேறியவர் அவர்.

துவா பணிபுரிந்த ஓர் ஊடகத்தில், வணக்கம் சொல்வதற்கென்று தனிமுறையைக் கடைப்பிடித்தார்கள். அதை ஏற்க மறுத்து, தன்னுடைய பாணியில் ‘நமஸ்கார்’ என்று சொல்லித்தான் நிகழ்ச்சியைத் தொடங்குவார். பார்வையாளர்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டதால் அதைத் தூக்கி நிறுத்த அவரை வேலைக்குச் சேர்த்துக்கொண்ட அந்த நிறுவனம், சரி அவர் பாணியில் பேசட்டும் என்று அனுமதித்தது. ஆனால், அந்த சமரசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. துவா வெளியேறினார்.

துவாவை எல்லோருக்கும் ஏன் பிடிக்கும் என்றால் பளீரென்று சிரிக்க வைக்கும் அவருடைய நகைச்சுவையான பேச்சு. உருது கவிதைகளில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஞானம். சூஃபிகளின் பக்திப் பாடல்கள் அவருக்கு மனப்பாடம். மனமுருகிப் பாடிக்கொண்டே இருப்பார். தொலைக்காட்சிகளில் தோன்றிய ஆரம்பக் காலத்தில் அவர் அதற்காகவே நினைவில் வைக்கப்பட்டார். ‘பராக்’ என்ற அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில்தான் எனக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது. இஸ்லாமாபாதில் 'இந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகையில் வேலை செய்த நான் தில்லிக்கு ஒரு வேலையாக வந்தபோது அவரைச் சந்தித்தேன்.

இந்தியக் குடியரசே அவர்தான்

பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவதென்றால் அந்நாட்டு அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப்புடன், அதிபர் மாளிகையில் துவாவுக்கும் அவருக்கும் நடந்த உரையாடலை என்னால் மறக்கவே முடியாது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசார நிகழ்ச்சி 2003-ல் ஏற்பாடாகியிருந்தது. அதற்குப் பிறகு 2004-ல் அடல் பிஹாரி வாஜ்பாய், பாகிஸ்தான் அதிபருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அது முன்னோடியாக இருந்தது. பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகக் கூடாது என்பதுதான் அந்தப் புரிந்துணர்வு.

2003-ல் நடந்த நிகழ்ச்சிக்கு வருவோம். “மூவர்ணம் உங்கள் மீது படிந்திருப்பது மிகவும் அழகாக இருக்கிறது ஜெனரல்” என்று வினோத் துவா, பர்வேஸ் முஷாரப்பைப் பார்த்துக் கூறினார். முஷாரஃப் திடுக்கிட்டு தன்னையே பார்த்துக்கொண்டார். அவருக்குப் பிறந்த நாள் பரிசாக காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வா அந்த மூவர்ணக் கரை போட்ட அங்கவஸ்திரத்தை தோளில் அணிவித்திருந்தார். துவாவின் பேச்சு முஷாரஃபின் முகத்தில் சூடேற்றியது, பதிலுக்குப் பேச வார்த்தையின்றி மவுனமாக இருந்தார்.

தன்னுடைய சகாக்கள் பெரும்பாலானவர்களைப் போல அல்லாமல், துவாவால் எப்போதும் சுயமாக சிந்திக்க முடிந்தது. 2008-ல் பத்ம விருது பெறுவோரில் அவரும் ஒருவர் என்று தெரிந்தபோது நாங்கள் டெல்லியிலுள்ள ‘இந்திய சர்வதேச மைய’த்தில் இருந்தோம். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு தொலைக்காட்சிக் குழுவினர் அவரிடம் வந்து, ‘விருது கிடைத்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டனர். உடனே முன்தயாரிப்பு ஏதுமில்லாமல் சரளமாக தனது கருத்தைத் தெரிவித்தார் துவா. அடுத்து என்னைக் கருத்து கேட்டனர். ‘அந்த கௌரவம் பொருத்தமானதுதான், இந்தியத் தொலைக்காட்சிகளின் குடியரசே அவர்தான்.  ஊடகத்தோடேயே வளர்ந்தவர் அவர், மக்கள் எதையும் கேட்க உரிமை படைத்தவர்கள் என்ற எண்ணம்தான் அவரை வழிநடத்தியது, மக்களுக்கு உண்மையைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாது என்ற எண்ணம் உள்ளவர் துவா’ என்று கூறினேன்.

தான் வகுத்த கொள்கையை தன் வாழ்க்கையிலேயே கடைப்பிடித்தவர் அவர். ஒரு முறை மாடர்ன் பள்ளியில் நடக்கும் மாணவர்கள் பேச்சுப் போட்டியில் என்னை நடுவராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். நானும் ஒப்புக்கொண்டேன். சில நாள்களுக்குப் பிறகுத் தற்செயலாக மீண்டும் சந்தித்தோம். "பேச்சுப்போட்டி எப்படி நடந்தது?" என்று கேட்டார். "வகுள் என்ற மாணவி மற்ற எல்லோரையும்விட நன்றாகப் பேசினாள்" என்றேன். புன்னகைத்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு, "நான்தான் அவளுடைய அப்பா" என்றார். அவருடைய மகளை நான் பார்த்ததே இல்லை. அங்கு போட்டியாளர்களில் அவருடைய பெண்ணும் ஒருவர் என்று அவரும் என்னிடம் சொல்லவே இல்லை. போட்டியின் முடிவுகளில் அது செல்வாக்கு செலுத்தும் என்று எண்ணியே தவிர்த்திருப்பார் என்று புரிந்துகொண்டேன். 

ஒரு முறை புதிதாக அவர் வாங்கிய மெர்சிடஸ் காரில் காலை நேரம் மயூர் விஹாரில் இருந்த என்னுடைய வீட்டுக்கு வந்து பழைய டில்லி பகுதியில் ஒரு சிற்றுண்டியகத்துக்கு அழைத்துச் சென்றார். திடீரென்று பழைய நினைவுகளில் மூழ்கினார். தன்னுடைய தந்தை உயிரோடு இருந்தபோது அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைவுகூர்ந்தார். “வாழ்க்கை என் மீது கருணையோடுதான் இருக்கிறது. சிறியவனாக இருந்தபோது என்னுடைய தந்தையார் பழையதாகி, கிழிந்து போன தன்னுடைய பேண்டில் எனக்கு டிராயர் தைத்துத் தருவார், அவ்வளவு வறுமையில் இருந்தோம்” என்றார். அப்போது அவருடைய கண்கள் பனித்திருந்தன.

பாகிஸ்தானின் டேரா இஸ்மாயீல் கான் என்ற பகுதியிலிருந்து தில்லிக்கு அகதிகளாக வந்தவர்கள் அவர்களுடைய பெற்றோர். அங்கே பேசப்படும் செராய்கி பாஷையைப் பெற்றோரிடமிருந்து அவரும் கற்றார். மனைவி சின்னாவுடன் (பத்மாவதி) 'மைன் பியார் கி ரஹீஹூம்' என்ற பாலிவுட் திரைப்பட பாடலை எப்படி அனாயசமாக சேர்ந்து பாடுவாரோ, அப்படியே சூஃபி பாடல்களையும் எளிதாகப் பாடுவார். ரேடியோலாஜிஸ்டாக இருந்த மனைவியும் துவாவும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழ்ந்தனர். மனைவி இறந்த சில வாரங்களுக்கெல்லாம் துவாவும் அவரோடு சேர்ந்துவிட்டார்.

சென்ற ஆண்டுதான் அவருடைய வாழ்வில் மிக மோசமானது, மிகவும் நல்லதும்கூட. வகுளுக்குக் குழந்தை பிறந்தபோது தாத்தா ஆகிவிட்டேன் என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவருக்கு எதிராக தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதற்காக அவர் வழக்கறிஞர் விகாஸ் சிங்குக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இப்போது மேல் உலகில் தன்னுடைய பெற்றோருடனும் மனைவியுடனும் சேர்ந்துவிட்டார் துவா. அங்கே அரசு என்று ஏதாவது இருந்தால், அது எச்சரிகையாக இருக்க வேண்டும்.

© தி வயர், www.thewire.in

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வினோத் சர்மா

வினோத் சர்மா, மூத்த பத்திரிகையாளர்.

தமிழில்: வ.ரங்காசாரி







பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

தமிழ் புலமைஇந்திய வரலாற்றை இனி தென்னிந்தியாவில் தொடங்கி எழுத தூக்குத்தண்டனைகாப்பீடுமலச்சிக்கல்எருதுகள்பற்கள் ஆட்டம்மனித உரிமை மீறல்கள்சிறை தண்டனைஉஷா மேத்தாடிஜிட்டல் ஆயுதம்அமித்ஷாபெகாசஸ்மையவியம்சீவக்கட்டைபொன்னிக் கரையில் பெண்கள் திருவிழாபணக்காரர்எப்படி தப்பிப் பிழைக்கிறது ஜனநாயகம்!multiple taxation policiesபல்கலைக்கழகங்களில் அதிகாரம்அஸ்ஸாம் கலவரம்சரத் பவார்ஹவுஸ் ஹஸ்பெண்ட்பின்லாந்துசெய்தித் தொலைக்காட்சிகள்நேரு கட்டுரைத் தொடர்டி.எஸ்.பட்டாபிராமன்நெல் கொள்முதலில் கவனம் தேவைகேஸ்ட்ரொனொம்பிரதமர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!