கட்டுரை, எப்படிப் பேசுகிறது உலகம்? 5 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் உரக்கும் ஜனநாயகக் குரல்

டி.வி.பரத்வாஜ்
11 Nov 2021, 5:30 am
0

உலகின் பல்வேறு ஊடகங்கள் தத்தமது நாட்டின் பிரச்சினைகளையும், சர்வதேச அளவிலான விஷயங்களையும் எப்படிப் பார்க்கின்றன என்று பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

இந்தியாவில் உள்ள ஜனநாயகர்கள் நம்முடைய அரசின் கொள்கைகளை விமர்சித்தால், ‘பாகிஸ்தானுக்குப் போ!’ என்று கூப்பாடு போடுவது இன்றைய ஆளுங்கட்சியினரான பாஜகவினரின் வழக்கம். பாகிஸ்தானிலும், ஜனநாயகத்தை விரும்புபவர்கள் துணிச்சலாக தம் நாட்டு அரசை விமர்சிக்கிறார்கள், துணிவுபட பேசுகிறார்கள். இந்தக் குரல்கள் இன்று உரக்கின்றன. பாகிஸ்தானின் முக்கியமான பத்திரிகையான ‘தி டான்’ இதழில் ஜாவித் உசைன் எழுதி வெளிவந்திருக்கும் கட்டுரை இது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் பார்வை மாற வேண்டும் என்று எழுதியிருக்கிறார் ஜாவித் உசைன். இவர் முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறையில் தூதராகப் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு கொள்கை வலுவானதா, இல்லையா என்பதை அது அளிக்கும் பலன்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பாகிஸ்தானின் காஷ்மீர் கொள்கையை வெற்றிகரமானது என்று நாம் கருதிவிட முடியாது. பாகிஸ்தானுடைய வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்ததைவிட இப்போது, காஷ்மீர் தொடர்பான அதன் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. காஷ்மீர் தொடர்பாக 1940-களிலும் 1950-களிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையில், நம் நாடு திருப்திப்படும் வகையில் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது. ஆண்டுகள் செல்லச் செல்ல அப்படியொரு செயலையே மேற்கொள்வது கடினமாகிவருகிறது.

நிலைமை எந்த அளவுக்கு மோசமாகிவிட்டது என்றால், 2019 ஆகஸ்ட் 5-ல் இந்தியா மேற்கொண்ட மூர்க்கமான நடவடிக்கைக்குப் பிறகு, அதாவது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச்  சட்டப் பிரிவு ரத்துசெய்யப்பட்ட பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது நாம் அளித்த புகார்களை விசாரிக்க பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை மறுத்துவிட்டது. கண்டிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பேரவைத் தலைவரின் உரையில் அதுபற்றி ஒரு வரியைச் சேர்ப்பது குறித்துகூட சபை கவலைப்படவில்லை.

மனித உரிமைகள் பேரவையின் தலைவராக இந்தியாவை, ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாடுகள் ஆதரித்து தேர்ந்தெடுத்துள்ளன. ‘ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி’யில் இந்தியா மேற்கொண்டுள்ள பெயரளவு மனிதவுரிமை மீறல்களைப் பற்றிக்கூட,  சர்வதேச சமூகம் கவலையேபடவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பிலேயேகூட (ஓஐய்சி) இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவை இழந்துவருகிறோம். 2019 ஆகஸ்ட் 5-ல் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை குறித்து இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் அசாதாரணக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற நம்முடைய கோரிக்கைகூட ஏற்கப்படவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் நாம் தார்மிக, சட்டரீதியிலான வாதங்களையே அதிகம் நம்பியதும், உண்மையான சர்வதேச அரசியலுக்குத் தேவைப்படும் அம்சங்களை நாம் புறக்கணித்ததும்தான் இந்த நிலைக்குக் காரணம். நம்முடைய தேசத்துக்கு வலிமை அதிகமிருந்திருந்தால், காஷ்மீர் தொடர்பான பிடிவாத குணத்தை மறுபரிசீலிக்குமாறு இந்தியாவை வற்புறுத்தியிருக்க முடியும். ஆனால், உண்மையில் இதற்கு நேர்மாறானதுதான் நடந்தது. ஆண்டுகள் செல்லச் செல்ல பொருளாதார, ராணுவ வலிமைகளில் சமநிலைச் சூழல் மாறி, எல்லாம் இந்தியாவுக்குச் சாதகமாகவும் நமக்கு பாதகமாகவும் திரும்பியிருக்கிறது.

இந்தியாவின் ஜிடிபி இப்போது 3.05 லட்சம் கோடி டாலர்கள், பாகிஸ்தானுடைய ஜிடிபி 28,600 கோடி டாலர்கள் மட்டுமே. நமது வாதங்கள் சர்வதேச அரங்கில் பிற நாடுகளின் காதுகளில் விழாமல் போவதற்குக் காரணம் இந்தியாவின் பொருளாதார வலிமைதான். அதுமட்டுமல்லாமல் நம்முடைய ராணுவ வியூகங்களும் கொள்கைகளும்கூட தொடர்ச்சியாகவும் தெளிவின்றியும்போனது நம்முடைய குறை.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கும் சீனத்துக்கும் இடையிலான அதிகாரப் போட்டி உச்சமடைந்துவருகிறது. இதனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கம் அதிகமாகிறது, நம்மை சீனாவின் பக்கம் அது மேலும் தள்ளுகிறது. இதனால் இந்தப் பிராந்தியத்தில் புதிய ராணுவக் கூட்டுகள் உருவாகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் நமக்கு ஏற்படக்கூடிய சவால்களைப் புறக்கணித்தாலும், இந்தியாவின் ஆதிக்க சிந்தனைகளால் நமக்கு நிரந்தரமாக ஆபத்து காத்திருக்கிறது. இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுதந்திரச் சிந்தனையாளர்களின் குரல்கள் கேட்டாலும், இந்துத்துவ சக்திகளின் அதிகரித்துவரும் செல்வாக்கு காஷ்மீர் விவகாரத்தில் நிச்சயம் எதிரொலிக்கும். எதிர்காலத்தில் இந்த நிலைமை வெகுவாக மாறிவிடும் என்று நம்புவதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஜம்மு – காஷ்மீரமானது, இந்து - முஸ்லிம் சமூகங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கிறது. பாலஸ்தீனம்போல இங்கும் நிலைமை முற்றினால் அதைத் தீர்க்க நூற்றாண்டுகள் பிடிக்காது என்றாலும், பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும். எனவே காஷ்மீர் விவகாரத்தில் குறுகியகால அணுகுமுறையைவிட, நீண்டகால அணுகுமுறையே நன்மை தரும்.

இதிலிருந்து ஒட்டுமொத்தமாக நாம் பெறும் பாடம் என்னவென்றால் நம்முடைய தேசிய சக்தியை அரசியல், பொருளாதார, ராணுவ நிலைகளில் வளர்க்க வேண்டும். அதைவிட முக்கியம், பாதுகாப்பான வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். அரசியலில் நிலைத்தன்மை ஏற்படுவதற்காக பாகிஸ்தானில் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும். அரசு நிறுவனங்கள், அரசியல் சட்டங்கள் வகுத்துள்ள எல்லைக்குள் செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்தவை போல (ஆட்சியை ராணுவமே மேற்கொள்வது) கூடாது.

பாகிஸ்தானின் ஜிடிபியைப் பல மடங்காக உயர்த்த அடித்தளக் கட்டமைப்புகளிலேயே சீர்திருத்தம் அவசியம். அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு இடம் தர வேண்டும். அரசு நிர்வாகத்தில் சிக்கனம் அவசியம், எல்லாத் துறைகளிலும் தற்சார்பை எட்ட வேண்டும், நம்முடைய ராணுவப் பாதுகாப்பு மெச்சத்தக்கதாக இருக்க வேண்டும். இவற்றை நாம் செய்யத் தவறினால் காஷ்மீர் மற்றும் இந்தியா தொடர்பான நம்முடைய செயல்களில் பலன்கள் மிக மோசமாகிவிடும்!”

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.








இந்துத்துவமா?நவீன இந்திய சமூகம் எக்காளம் கூடாதுமுடி மாற்று சிகிச்சைராஜ்ய சபாசந்திரயான்-3சோபர்ஸ்மகளிர் சுய உதவி நிறுவனங்கள்அவரவர் முன்னுரிமைமோசமான மேலாளர்ஆ.சிவசுப்பிரமணியன்சர்வோத்தமர்கள்செனட்மறைமுக வரிபணி மாற்றம்தண்ணீர்த் தாகம்கடவுள் கிறிஸ்தவர் அல்ல - இந்துவும் அல்ல!தனியார் நிறுவனம்பெரியார்திரைகள்ளச்சாராயம்அரசியல் எழுச்சிமனப் பதற்றம்தேசிய அடையாளங்களை மாற்றும் மோடிவிஜயநகர அரசுஹோட்டல் ருவாண்டா இந்துத்துவ நிராகரிப்பு அல்ல!பாலஸ்தீனம்: கடந்ததும் நடப்பதும்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இப்போது நரசிம்ம ராவ்: பாரத ரத்னங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!