கட்டுரை, கலாச்சாரம், கடிதம் 5 நிமிட வாசிப்பு

ஓர் ஆசிரியரின் மரண சாசனம்

ஆசிரியர்
31 Aug 2022, 5:00 am
2

தெ.சுந்தரமகாலிங்கம். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊரைச் சார்ந்தவர். தீவிரமான வாசகர். அரசுப் பள்ளி ஆசிரியராகப்  பணியாற்றியவர். அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட். மாணவர்களிடம் முற்போக்கு கருத்துகளை எடுத்துச் சொன்னவர். வத்திராயிருப்பைச் சார்ந்த மக்கள் மருத்துவர் பால்சாமியோடு இணைந்து இப்பகுதியில் தமுஎகச கிளைகள் உருவாகவும், தொடர் இலக்கியப் பணிகள் நடைபெறவும் முக்கியக் காரணியாக இருந்தவர். 'ஜனசக்தி', 'தீக்கதிர்' நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதிவந்திருக்கிறார். 'துரோகம் வெட்கமறியாது', 'காலத்தை வாசித்தல்' இவரது கட்டுரைத் தொகுப்புகள். கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நேர்காணல்களைத் தமிழில் மொழிபெயர்த்து இவர் கொண்டுவந்த 'ஆண்டுகள் பல கடந்தாலும்' நூல் குறிப்பிடத்தக்க ஒன்று.

அன்றாடம் தினசரிகள் முதல் தீவிர இலக்கிய மாத இதழ்கள் வரை வாசிப்பதோடு, தவறாமல் வாசகர் கடிதங்களும் எழுதிவந்தவர். எப்போதும் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும் அவருடைய வீடும், இடையறாத அவரது வாசிப்பும், அமைப்புப் பணிகளும் ஒரு முன்னுதாரண ஆசிரியருக்கு வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்பவை. 

தன் வாழ்வில் மட்டும் அல்லாது, மரணத்திலும் மக்களுக்குச் சில செய்திகளை விட்டுச் சென்றிருக்கிறார்  தெ.சுந்தரமகாலிங்கம். முக்கியத்துவம் கருதி அவருடைய மரண சாசனத்தை 'அருஞ்சொல்' இங்கே வெளியிடுகிறது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், வத்திராயிருப்பு கிராமம், 7வது வார்டு, பலகுடி வடக்குத் தெரு, 58வது எண்ணுள்ள வீட்டில் குடியிருந்துவரும் தெ.சுந்தரமகாலிங்கம் (வயது 73) என்னும் பணி நிறைவுபெற்ற ஆசிரியராகிய நான் (பெற்றோர் பெயர் திரு. க.அ.கு.தெய்வசிதாமணி – திருமதி. குருவுத்தாயம்மாள்) மனித வாழ்வில் மரணம் நிச்சயம் என்னும் கருத்துடன் என் சுய நினைவுடன் 27.01.2014 திங்கட்கிழமை அன்று மனப்பூர்வமாக எழுதி வைக்கும் மரண சாசனம். 

1) என் உடலைவிட்டு உயிர் பிரிந்த செய்தி அறிந்து சில நொடிகளுக்குள் என் கண்களைத் தானம் செய்வதற்குரிய எற்பாடுகளை மக்கள் மருத்துவர் அரிமா கா.பால்சாமி அவர்களும் அரிமா வே.சதாசிவம் அவர்களும் முன்னின்று செய்ய வேண்டும். என் மக்களில் எவரேனும் ஒருவரோ, என் துணைவியாரோ அல்லது அவர்கள் அனைவருமோ சம்மதக் கையெழுத்திடலாம். அவர்களில் எவரேனும் ஒருவர் மறுப்புத் தெரிவித்தால் அம்மறுப்பை ஏற்க  வேண்டியதில்லை.  

2) என் உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்காகத் தானம் வழங்க நான் முன்வந்தபோது என் மூத்த மகன் தெ.சி.திலீபன் என்பவர் திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அவர்களிடம் மறுப்புத் தெரிவிக்க அவ்வம்மையாரும் அறியாமையின் காரணமாக நான் கோரிய வாரிசுச் சான்றிதழைத் தர மறுத்துவிட்டார். ஒருவேளை என் சிறப்புக்கு முன் மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்கு உயிரற்ற என் உடலைத் தானம் செய்யும் அனுமதியை நான் பெற்றுவிட்டால் நான் மரணம் அடைந்ததும் என் உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்கு ஒப்படைக்கும் பணியை மக்கள் மருந்துவர் கா.பால்சாமி, என்  இரண்டாவது மகன் தெ.சு.கோபிநாத், என் மூன்றாவது மகன் தொ.சு.கவுதமன், வழக்கறிஞர் கு.பால்ராஜ், ‘மீட்சி' இதழ் ஆசிரியர் திரு. குறிஞ்சிக் கபிலன் ஆகியோர் முன்னின்று நடந்த வேண்டும்.

3) உயிரற்ற என் உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்கு ஒப்படைப்பதில் ஏதேனும் சட்டச் சிக்கல் ஏற்படின் என் உடலை வத்தியாயிருப்பிலுள்ள சுடுகாட்டில் எரிப்பதற்குரிய ஏற்பாடுகளை நான் மேலே குறிப்பிட்டுள்ள அன்பர்கள் இணைந்து செய்ய வேண்டும்.

4) என் உடலைவிட்டு உயிர் நீங்கியதும் உடலின் மீது எத்தகைய சாதி, மத அடையாளக் குறிகளை இடக்கூடாது. நிறை மரக்கால், தேங்காய் உடைப்பது, சூடம் கொளுத்துவது, விளக்கு வைப்பது போன்ற எந்தவிதமான சடங்குகளையும் செய்யக் கூடாது. சவம் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சாம்பிராணி, பத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். 

5) வீட்டிலிருந்து சவத்தைக் கொண்டுசெல்லும் முன் என் குடும்ப ஆண்களும் பெண்களும் வீட்டின் முன்புள்ள குழாயில் குளிக்கலாம். அவர்களுக்கு எவ்வித மதச்சடங்கும் செய்யக் கூடாது. நீர்மாலை எடுக்கக் கூடாது.

6) என் பிள்ளைகள், பேரன்மார்கள் யாருக்கும் மொட்டை போடக் கூடாது.

7) சடலத்தைக் கொண்டு செல்லும்போது மேள, தாளம், ஆட்டம் பாட்டம் கூடாது.  வாய்ப்பிருந்தால் சவ வண்டியில் ஒலிபெருக்கி அமைத்துத் தந்தை பெரியாரின் உரையை ஒலிபரப்பிக்கொண்டு செல்லலாம். 

8) சடலத்தை எரிப்பதற்கு முன் மதச் சடங்குகள் எவையும் அறவே கூடாது.

9) எரித்த மறுநாள் சுடுகாட்டுக்குச் சென்று எந்தச் சடங்கும் செய்யக் கூடாது. 

10) இம்மரண சாசனத்தின் அசல் பிரதியொன்று மக்கள் மருத்துவர் க.பால்சாமியிடமும் மற்றோர் அசல் பிரதி ‘மீட்சி’ இதழாசிரியர் குறிஞ்சிக் கபிலனிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

என் வாழ்நாள் முடியத் துணை நின்ற அனைந்து இயக்கத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 

27.01.2014
வத்திராயிருப்பு


3

11


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Anna.Ravi   3 months ago

வீரவணக்கம்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Hejope   3 months ago

He teach by his action. Very few have the courage to do what he/she believes. "Inquilab zindabad".

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஸரமாகோ நாவல்களின் பயணம்வட்டாரவியம்டெசிபல் சத்தம்மேல் தொடை குடல் இறக்கம்முதல்வர் மு.க.ஸ்டாலின்பாண்டுரங்கன் - ருக்மணி சிலைதிமுக தலைவர் ஸ்டாலின்உம்பெர்த்தோ எகோநீதிபதி எம்.எம்.பூஞ்சிsub nationalism in tamilகுடியரசு கட்சிநீட்அதிக மழைலாலுதாய்மொழிவழிக் கல்விமா.சுப்பிரமணியம்மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: காற்றோடு போய்விட்டதுஅரசுப் பள்ளிக்கூடம்ஹீரோஜெயமோகன் பேட்டிபணப் பரிவர்த்தனைJai bhimவறுமை - பட்டினிமு.கருணாநிதிஃபின்லாந்துகொச்சிபாலசுப்ரமணியன் பொன்ராஜ் கட்டுரைஹிந்த் ஸ்வராஜ்முரசொலி 80வது ஆண்டு விழாக் கட்டுரைmids

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!