கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு
சங்கரய்யா: நிறைவுறாப் போராட்டம்
தமிழக இடதுசாரிகள் மத்தியில், நெகிழ்வான தருணமாக என்.சங்கரய்யாவின் மறைவு மாறியிருந்ததைப் பார்க்க முடிந்தது. நூற்றாண்டு நிறைந்த வாழ்க்கை. முக்கால் நூற்றாண்டு இந்திய அரசியலின் சாட்சியம். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இன்று பலவாகப் பிரிந்திருந்தாலும், முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் கண்ணீர் சிந்தி போற்றும் மரணமாக அது அமைந்திருந்தது. “என்ன ஒரு தியாக வாழ்க்கை!” என்ற சொற்களைத் திரும்பத் திரும்பக் கேட்க முடிந்தது.
வசதியான குடும்பத்தில் பிறந்தவர் சங்கரய்யா. தூத்துக்குடி பக்கம் உள்ள ஆத்தூரைப் பின்புலமாகக் கொண்டது சங்கரய்யாவின் குடும்பம். சங்கரய்யாவின் தந்தை நரசிம்மலு பம்பாயில் பொறியியல் படித்தவர். கோவில்பட்டியில் அப்போது செயல்பட்டுவந்த ஜப்பானிய நிறுவனத்தில் வேலை கிடைத்து அவர் இங்கு வந்தார்; 1922 ஜூலை 15 அன்று சங்கரய்யா பிறந்தார். பிரதாபசந்திரன் என்றுதான் அவருக்குப் பெயர் இட்டிருந்தார்கள். அவருடைய தாத்தா தன்னுடைய பெயரைத்தான் பேரப் பிள்ளைக்கு வைக்க வேண்டும் என்று கோபித்துக்கொண்டு உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிட்டாராம். ஆக, பெயர் சங்கரய்யா என்றானது. இந்தப் பெயர் கதைதான் அவர் வாழ்வில் தாக்கத்தை உண்டாக்கியதோ என்னவோ, தன்னுடைய வாழ்க்கை ஒரு போராட்டக்காரரின் வாழ்க்கையாகவே வாழ்ந்தார் சங்கரய்யா.
இளவயதிலேயே அரசியலுணர்வு மிக்கவராக இருந்தார். அவருடைய தாத்தா ஒரு பெரியாரியராக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ‘குடிஅரசு’ பத்திரிகை தாத்தா வழியாகவே அறிமுகமானது என்றார். 1930இல் மதுரை நோக்கி குடும்பம் நகர்ந்தது; 1938இல், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, சங்கரய்யாவுக்கு 16 வயது; ராஜாஜி அரசுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி நின்றார். பகத் சிங் வாழ்க்கை அவருடைய இளம் வயதில் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருந்தது. பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திர உணர்வும், சமத்துவத்துக்கான போராட்ட உணர்வும் இணைந்த வடிவமாக பகத் சிங்கை அவர் கண்டிருக்கலாம். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நுழைந்த நாட்களில், கம்யூனிஸ சித்தாந்தம் அவரை இழுத்திருந்தது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கம் எழுச்சியடையலான காலகட்டத்தில் எழுந்தவர் சங்கரய்யா. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர். நன்றாகப் படிக்கும் மாணவர் என்பதோடு, நல்ல வாசிப்புப் பின்னணியையும் கொண்டிருந்தார். பேச்சில் உணர்ச்சி கொந்தளிக்கும். இவையெல்லாம் சேர்ந்து மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்குபவராக ஆக்கியிருந்தது. பல இடங்களில் மாணவர் சங்கங்கள் கட்டப்பட்டன.
சிதம்பரத்தில் 1941இல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சில மாணவர்கள் கைதுசெய்யப்பட்டபோது, அதைக் கண்டித்து மதுரையில் கூட்டம் நடத்தினார் சங்கரய்யா. இதையடுத்து, கைதுசெய்யப்பட்டார். அடுத்த 15 நாட்களில், பிஏ தேர்வு எழுத வேண்டியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டவரின் படிப்பு அதோடு முடிந்தது. இதற்குப் பிந்தைய ஆறு ஆண்டுகளும் சிறை, விடுதலை, போராட்டம், சிறை என்பதாகவே அவர் வாழ்க்கை கழிந்தது. 1947 ஆகஸ்ட் 14 இரவு இந்திய சுதந்திரத்தை ஒட்டி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, முழு சுதந்திரம் என்பது சமத்துவத்தைக் குறிப்பது; இனி தன்னுடைய போராட்டங்கள் அதற்கானதாக அமையும் என்று சங்கரய்யா சொன்னார். தன் வாழ்வில் பத்தாண்டுகளுக்கும் மேல் தலைமறைவு, சிறையில் கழித்தவர் அவர்.
இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு
இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி
20 Jun 2018
பேச்சுகேற்ற வாழ்க்கை முக்கியம் என்று எண்ணியவர் சங்கரய்யா. அந்த வகையில் அவர் ஒரு காந்தியர் என்று சொல்லலாம். ஒழுக்கம் முக்கியம். நள்ளிரவு எத்தனை மணிக்குப் படுத்தாலும், அதிகாலையில் எழுந்துவிடுவார். முக்கியமான நாளிதழ்களை வாசித்துவிடுவார். கடைசிக் காலத்திலும் முட்டை புரோட்டா சாப்பிடும் அளவுக்கு ஆரோக்கியத்தைப் பராமரித்தார்; எந்த உணவாக இருந்தாலும் அளவோடு நிறுத்திக்கொள்வார். சாப்பிட்ட தட்டை எந்த இடத்திலும் இன்னொருவர் கழுவ அனுமதிக்க மாட்டார். ஐந்து செட் சட்டை, வேட்டி, துண்டு. அவ்வளவுதான் உடை. தன் உடைகளை அவரே துவைப்பார். கட்சிப் பணிகள், போராட்டங்கள் என்று தமிழ்நாடு முழுவதும் பயணித்திருக்கிறார்; கட்சியினர் என்ன கொடுக்கிறார்களோ அதுவே உணவு; எங்கு தங்க இடம் காட்டுகிறார்களோ அதுவே விடுதி; பிற்காலத்திலும்கூட கட்சியினர் சைக்கிளில் அமர்ந்து அவர் பல சமயங்களில் பயணப்பட்டிருக்கிறார்.
சங்கரய்யாவைப் பொறுத்த அளவில், கட்சி என்பது பெரும் குடும்பம். எந்த நிகழ்ச்சியாயினும் அதை நடத்தும் வீட்டுக்காரரைப் போன்று, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே இருப்பார். தன்னைத் தேடி ஒருவர் வரும் முன் அவர் தேடிச் சென்று ஒவ்வொருவராக விசாரிப்பார். எவர் ஒருவரைச் சந்திக்கும்போதும் அவர்கள் குடும்பச் சூழலை ஒரு சொல்லேனும் விசாரிக்காமல் விட மாட்டார். சாதி, மத வேறுபாட்டை உடைக்க எதைவிடவும் இணைப்பு மணங்களே சிறந்த வழி என்றவர், தன் வாழ்விலும் அதையே கடைப்பிடித்தார்; சங்கரய்யாவின் மனைவி நவமணி கிறிஸ்தவர். தன் குடும்பத்தில் மட்டும் அல்லாது, நண்பர்களிடமும் இதை ஊக்குவித்தார். ஏராளமான சாதி, மத மறுப்புத் திருமணங்களைச் செய்து வைத்தவர் அவர். சின்ன வீடு அவருடையது. எப்போதும் யாராவது வருவதும் போவதுமாக இருப்பார்கள். குடும்பத்தின் பண்பை விசாலமாக வளர்த்தெடுத்திருந்தார்.
தமிழ்நாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவராக இருந்தார் என்பதோடு, அதோடு முரண்பட்டு 1964இல் மார்க்ஸிஸ்ட் கட்சியை உருவாக்கிய அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தவர் சங்கரய்யா. தன்னுடைய இருபதுகளிலேயே 1945இல், தாய்க் கட்சியில் மதுரை மாவட்டச் செயலராக இருந்த சங்கரய்யா, புதிய கட்சி தொடங்கப்பட்டபோதே மாநிலக் குழுவில் இருந்தவர் என்றாலும், அதன் மாநிலத் தலைமைக்கு வர மேலும் 50 ஆண்டுகள் ஆயின. இதற்குள் அவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்தார். தமிழ்நாடு மாநிலச் செயலர் பதவி 1995இல் சங்கரய்யாவை வந்தடைந்தது; அப்போது அவர் 73 வயதை எட்டியிருந்தார். 2002இல் கட்சியில் அடுத்தடுத்த தலைவர்கள் உருவாக வேண்டும் என்று சொல்லி, தன்னுடைய வயதைக் காரணம் காட்டி அவராகவே பதவி விலகினார். பதவி குறித்தெல்லாம் அவருக்குப் புகார் இருந்ததாகவே தெரியவில்லை; குடும்பத்தினர் உள்பட யாரிடமும் அப்படி எதையும் அவர் பகிர்ந்தது இல்லை என்கிறார்கள்.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
இடதுசாரி இயக்கங்கள் ஒண்ணா சேரணும்! - நல்லகண்ணு சிறப்பு பேட்டி
22 Dec 2014
கம்யூனிஸ இயக்கத்தை சங்கரய்யா வரித்துக்கொண்ட பிறகான முக்கால் நூற்றாண்டு காலகட்டத்தில், அந்த இயக்கம் எத்தனையோ பிளவுகளைக் கண்டது; புதிய பல கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தோன்றின. இந்தியச் சமூகப் பின்னணியில் சாதிதான் குறிவைக்கப்பட வேண்டிய முதன்மைக் காரணி என்பதையும் சமூகநீதிதான் முதன்மை இலக்கு என்பதையும் உள்வாங்க இந்திய கம்யூனிஸ்ட்டுகள் தவறிவிட்டனர் என்பதில் தொடங்கி மாறிவரும் நவீன பொருளாதார யுகத்துக்கேற்ப தங்கள் அரசியல் கப்பலின் லகானைத் திருப்பத் தவறிவிட்டனர் என்பது வரை எவ்வளவோ கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, மோடிக்குப் பின் இந்துத்துவ தேசிய அரசியல் அலை பேருரு கொண்ட காலகட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தேர்தல் அரசியல் களத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் சரிவைக் கண்டன. கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போதேனும் இணைய வேண்டும்; புதிய சிந்தனை மாற்றத்துக்கு இந்த இணைவு ஆரம்பமாக அமையலாம் என்று அரசியல் விமர்சகர்கள் பலர் எழுதினார்கள். இதுகுறித்தெல்லாம் சங்கரய்யா என்ன நினைத்தார்? தெரியாது. தன்னுடைய கடைசி நாட்கள் வரை அவர் ராணுவ ஒழுங்குக்கு இணையான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் கட்சிக்காரராகவே அவர் இருந்தார்.
நடத்தையின் வழியாகவே சில விஷயங்களைச் சூசகமாகத் தெரிவிக்கக் கூடியவர் சங்கரய்யா என்று அமைப்பு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். “இடதுசாரிகள் ஒருங்கிணைந்து நடத்திய கூட்டம் அது. மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தோம். நிகழ்ச்சி தொடங்கும் இடத்துக்கு முன்னரே வந்திருந்தனர் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள். அப்போது கட்சியின் பேச்சாளர் ஒருவர் கையில் வைத்திருந்த உரையை வாங்கிப் படித்தார் சங்கரய்யா. மார்க்ஸிஸ்ட் கட்சியை முன்னிலைப்படுத்தும் வாசகங்களை உரையில் கண்டவரின் முகம் சுருங்கியது. ‘இதை வாசிக்க வேண்டாம் தோழர். இதைக் கேட்கும் ஏனைய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் என்ன நினைப்பார்கள்? சமூகத்தில் ஒவ்வொருவருடனும் நம்முடைய கைகள் இணைய வேண்டும் என்றால், நம்மை நாமே உயர்த்திச் சிந்திப்பதைக் கைவிட வேண்டும் தோழர். நாம் யாருக்கும் மேலேயும் இல்லை; கீழேயும் இல்லை. தோழர் என்றால் சமம்; அப்படித்தானே?’ என்று கேட்டார். பேச்சாளர் உரையைக் கிழித்துப் போட்டார். இப்படித்தான் சங்கரய்யாவின் உணர்த்தல்கள் இருக்கும்!” என்றார்.
எனக்கென்னவோ சங்கரய்யா இன்னும் வெளிப்படையாக, நிறையப் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது. நூற்றாண்டு வாழ்க்கை… நிறைவுறாப் போராட்டம்!
-‘குமுதம்’, நவம்பர், 2023
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி
இடதுசாரி இயக்கங்கள் ஒண்ணா சேரணும்! - நல்லகண்ணு சிறப்பு பேட்டி

3






பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.