கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கல்வி, கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?
சென்னை மேயர் ஆர்.ப்ரியா விரைவில் ஒரு கல்விக் குழுமத்தின் தலைவர் ஆகவிருக்கிறார். தமிழ்நாடு அரசின் எண்ணம் காரியமானால் அடுத்தடுத்து கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று பல மாநகரங்களின் தலைவர்களும் ஒரு கல்வி அறக்கட்டளைகளின் தலைவர் ஆகலாம். “முதல்வர் ஸ்டாலின் முன்னெடுப்பில் சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் ஒரு மருத்துவக் கல்லூரியையும் பொறியியல் கல்லூரியையும் ஆரம்பிக்கவிருக்கிறோம்” எனும் அமைச்சர் கே.என்.நேருவின் அறிவிப்பானது, கல்வித் துறை சார்ந்து தமிழக அரசு எடுத்துவைத்திருக்கும் நல்ல முன்னகர்வுகளில் ஒன்று.
கடைசி மனிதருக்குமான அதிகாரத்தைக் குறிப்பது கூட்டாட்சி. அப்படியென்றால், கல்வி உள்பட சாத்தியமுள்ள துறைகள் அனைத்தின் அதிகாரங்களும் பகிரப்பட வேண்டும். இந்தப் பகிர்வு என்பது மத்தியிலிருந்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதோடு நின்றுவிடக் கூடாது. உள்ளாட்சிகள் வரை நீள வேண்டும்.
ஆட்சியாளர்களில் மக்களுக்கு மிக அருகில் இருப்பவர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள். மக்களால் அவர்களை நேரடியாகக் கேள்வி கேட்க முடியும். தங்களுக்குத் தேவையானதை அவர்கள் மூலம் கேட்டுப் பெற முடியும். அதனால்தான் பள்ளிகள் நிர்வாகத்தில் உள்ளாட்சிகளுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று பேசுகிறோம்.
¶
உலகம் எங்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்களுடைய பணிகளைத் தொடங்கும்போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளைக் கட்டமைப்பதை ஒரு பணியாகக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் பழமையான நகராட்சிகளில் குறைந்தது ஒரு நூற்றாண்டு, ஒன்றரை நூற்றாண்டு பள்ளிகள், மருத்துமனைகள் இருப்பதைக் காணலாம். அந்தந்த ஊரின் நகராட்சித் தலைவர்களுக்கு இவற்றின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கியமான பங்கு இருந்தது. படிப்படியாகக் கல்வியை மையப்படுத்தி இப்போது எல்லாவற்றையும் டெல்லியின் கைகளில் கொடுத்து நிற்கிறோம்.
இந்தியாவில் முதன்முதலில் இப்படி மருத்துவக் கல்வியை வழங்கும் பணியில் மும்பை காலடி எடுத்துவைத்தது. இன்று லோக்மான்ய திலகர் பெயரில் அமைந்திருக்கும் அந்தக் கல்லூரி (எல்டிஎம்எம்சி), மும்பை மாநகரத்தின் முன்வரிசையில் உள்ள கல்லூரிகளில் ஒன்று. மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் பங்களிப்பில் நடக்கும் கல்லூரி இது. மெல்ல வளர்ந்து இப்போது முதுநிலைப் படிப்புகளையும் கற்பிக்கும் கல்லூரியாக உருவெடுத்திருக்கிறது.
சுவாரஸ்யமாக, குஜராத்தின் அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் இப்படி ஒரு மருத்துவக் கல்லூரியை 2009இல் உருவாக்கியது. அகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்வி அறக்கட்டளை என்றே ஓர் அமைப்பை ஆரம்பித்து அது முன்னெடுத்த இந்த முயற்சிக்குப் பின்னே இருந்தவர் அன்றைய குஜராத் முதல்வர் மோடி. கல்லூரி அமைந்திருக்கும் மணி நகர் அவருடைய சொந்த தொகுதியும்கூட. இப்போது அந்தக் கல்லூரிக்கு அவர் பெயரையே சூட்டிவிட்டார்கள். நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி.
மும்பை, அகமதாபாத், சூரத் இப்படி மிகச் சில மாநகராட்சி நிர்வாகங்களே இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்ததற்கு அவற்றின் நிதியாதாரமும் ஒரு காரணம். வடகிழக்கில் உள்ள பல மாநிலங்களைவிடவும் அதிகமாக பட்ஜெட் போடும் மாநகரம் மும்பை. அகமதாபாத், சூரத்தை மும்பையோடு ஒப்பிட முடியாது என்றாலும், செழிப்பில் குறைந்தவை இல்லை. இந்த விஷயத்தில் தமிழ்நாடு எடுத்திருப்பது தாமதமான முடிவு என்றாலும், நல்ல முடிவு.
¶
சென்னையில் இன்று 279 மாநகராட்சிப் பள்ளிகள் இருக்கின்றன. 1.04 லட்சம் மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். இந்த மாணவர்களிலிருந்து மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை இன்று குறைவாகவே இருக்கிறது. மாநராட்சி ஆரம்பிக்கவிருக்கும் கல்லூரிகளின் மூலம் இந்த எண்ணிக்கையை உயர்த்தலாம் என்று எண்ணுகிறது தமிழ்நாடு அரசு. சென்னை மாநகராட்சியே நடத்தவிருப்பதால், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு என்று சிறப்பு ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தக் கூடும்.
நல்ல எண்ணம். நல்ல முடிவு. ஆனால், பிரச்சினையை உற்று நோக்கினால், இது மட்டுமே தீர்வாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழும்.
திரும்ப இந்த எண்ணிக்கைக்குள் செல்வோம். 279 பள்ளிகள், 1.04 லட்சம் மாணவர்கள். இவர்களில் எத்தனை பேர் அரசு மருத்துவக் கல்லூரிகள், பொறியியல், சட்டக் கல்லூரிகளில் – அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டைத் தாண்டி – பொது வரிசையில் இடம் பிடிக்கிறார்கள்? எத்தனை பேர் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேர்கிறார்கள்? ஒரு சதவீதம் பேர்கூட கிடையாது.
இந்த எண்ணிக்கையை உயர்த்தத் தமிழ்நாடு அரசு துடிக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடுகள், மாதிரிப் பள்ளிகள் போன்ற முயற்சிகள் எல்லாம் ஆட்சியாளர்களின் உணர்வைத் தெளிவாகவே வெளிப்படுத்துகின்றன. சரிதான், இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த அளவுக்கு இந்த விஷயத்துக்கு முகம் கொடுக்கிறார்கள்?
இந்திய அளவில் இன்று தமிழ்நாட்டின் சாதனைகளாக முன்னிறுத்தப்படுபவை எல்லாம் கடந்த காலச் செயல்பாடுகளின் அறுவடை. இன்றைக்கு வெகுவாகப் பள்ளிக்கல்வியின் தரம் கீழே போய்க்கொண்டிருக்கிறது. மாநிலத்திலேயே அதிகமான மாணவர்களைக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு இந்த வீழ்ச்சியில் முக்கியமான பங்கு உண்டு.
பலவீனமான அடிப்படைக் கட்டமைப்பு, போதிய வசதிகள் இன்மை, ஏராளமான காலிப் பணியிடங்கள், கற்பிக்கும் பணிக்கு அப்பாற்பட்டு திணிக்கப்படும் பணிகள் தரும் கூடுதல் சுமை என்று பல சங்கடங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருந்தாலும், ஒட்டுமொத்த நீரோட்டத்திலிருந்து அவர்கள் விலகி நிற்க முடியாது. நல்ல கல்விவாய்ப்புகள், வேலைவாய்ப்புகளைத் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் அள்ளிக்கொண்டு செல்ல, அரசுப் பள்ளி மாணவர்கள் வேடிக்கை பார்த்தபடி நிற்க முடியாது. அரசுப் பள்ளிகளின் சீரமைப்பில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆசிரியர்களின் மேம்பாடு. படிப்படியாகவேனும் தமிழக அரசு இந்த இடத்தில் கை வைக்க வேண்டும்.
ஏன் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து ஆரம்பிக்கக் கூடாது?
- ‘குமுதம்’, அக்டோபர், 2022
4
4
பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.
K.R.Athiyaman 2 years ago
1.சென்னை மாநகராட்சி மருத்துவக் கல்லூரி தொடங்கினால், அதற்கு ஆண்டு தோறும் பல பத்து கோடிகள் மானியமாக நிதி அளிக்க வேண்டியிருக்கும். இவை ’நஷ்டத்தில்’ இயங்கும் என்பதால் (அனைத்த் அரசு மருத்துவ கல்லூரிகளும் ’நஷ்டத்தில்’ இயங்குபவை தான்) அதை ஈடுக்கட்ட நிதி தேவை. ஆனால் சென்னை மாநகராட்சியின் நிதி நிலைமை அவ்வப்போது படுமோசமாகி, கடன் சுமை அதிகரித்து, செலவுகளை சமாளிக்க முடியாத நிலை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகிறது. எனவே மருத்துவ கல்லூரி திட்டம் தேவையில்லை. அரசு நேரடியாக நடத்துவதே சிறந்த வழி. பெருந்துறையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பின்னர் கடும் நிதி நெருக்கடியினால், அரசு எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவானதை மறக்கலாகாது. 2.நிரந்தர வேலை முறை இருப்பதால், அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களின் செயல் திறன் குறைவாகவே இருக்கும். இது structural issue. விதிவிலக்காக சிலர் இருக்கலாம். ஆனால் பொதுவாக செயல் திறன் குறைவாக தான் இருக்கும். ஒழுங்காக பணியாற்றவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படும் அபாயம் இருந்தால் தான் வேலை திறன் சீரடையும். இதைப் பற்றிய எனது முகநூல் பதிவு : 1.எந்த ஒரு நிறுவனத்திற்கும் முதலாளி, அதாவது உரிமையாளர் (owner) என்று ஒருவர் (அல்லது சிலர்) இருந்தால் தான் அதன் செயல் திறன், நிர்வாகம் சீராக, சிறப்பாக, ஒழுங்கான முறையில் நடக்கும். 'தன்னுடைய' நிறுவனம் என்ற பொறுப்புணர்வு, அக்கரை, கவனம் நிர்வாகத்திற்கு ஏற்படும். அரசு நிறுவனங்களில் இது குறைவாக இருக்க இது தான் காரணம். 2. நிரந்தர வேலை முறையில் செயல் திறன், ஒழுக்கம், பொறுப்புணர்வு, அர்ப்பணிப்பு உணர்வு குறைவாக இருக்கும். ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் வேலை போகும் அபாயம் (job insecurity) இருந்தால் தான் சராசரி நபர் ஒழுங்காக வேலை செய்வார். 3. அரசிடம் கல்வி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் (govt aided schools) இதில் முதல் அம்சம் மட்டும் உள்ளதால் கல்வித் தரம், செயல் திறன், கற்றல் திறன் சற்று அதிகமாக இருக்கிறது. அதாவது owners உண்டு. ஆனால் நிரந்தர வேலை முறையும் உள்ளது. 4. அரசு பள்ளிகளில் இவை இரண்டும் இல்லாததால், கற்றல் திறன், கல்வித் தரம் குறைவாக உள்ளது. இதை சீர் செய்ய, outsourcing முறையில் 'தனியார்மயமாக்கலை' முன்மொழிந்தேன். முந்தைய பதிவில். 5. ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியின் முதல்வர் (அவர் ஒரு இடதுசாரி, முற்போக்காளர்) கூறியது : எங்கள் பள்ளியில் வேலைக்கு சேரும் ஆசிரியர்கள் சிறப்பாக பணி புரிகின்றனர். அவர்களின் செயல் திறனை மேம்படுத்த வகை செய்கிறோம். ஆனால் அரசு பள்ளியில் வேலை கிடைத்து அங்கு மாறிய பின், இதே ஆசிரியரின் செயல் திறன் வெகுவாக குறைகிறது. Structural issue.
Reply 2 0
Banu 2 years ago
200 வார்டுகள் இருக்கும் சென்னை மாநகராட்சியும், 100 வார்டுகள் இருக்கும் கோவை மாநகராட்சியும் நிதி பற்றாக்குறையில் இயங்குகிறது என்றால் எந்த வசதியும் இல்லாத பிற உள்ளாட்சி அமைப்புகள் எங்கனம் சிறப்பாக இயங்க இயலும். மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் என்ன என்பதையும் குறிப்பிடுங்களேன். அரசாங்கத்திற்கு, அரசுப்பள்ளி ஆசிரியர்களை என்ன செய்யலாம் என்று மட்டும்தான் கருத்து சொல்வீர்களா? மாநகராட்சிகளின் வருமானம் உயரவும், மலிந்து கிடக்கும் பிற பிரச்சனைகளை களையவும் ஆலோசனை கூறலாமே. 2. ஒழுங்காக பணியாற்றாவிட்டால் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துவது முதிர்ச்சியில்லாத கருத்து. சரியாக பணியாற்றாதவர்களை பணிநீக்கம் செய்ய எதற்காக IAS போன்ற உயர்ந்த படிப்புகள்?! நீங்களும் நானும் போதாதா பள்ளிக்கல்வித் துறையை நிர்வகிக்க. அபாயம் என்றால்தான் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்ற அனுபவமில்லாத கருத்தை பதிவிடும் முன்பு தனியார் பள்ளிகளில் கைநிறைய சம்பளம் வாங்கியும் பணிப்பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கும் நிர்வாகத்திடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு நிம்மதியான பணிசூழல் இருக்கும் பள்ளிகளுக்கு மாறிய ஆசிரியர்கள் உள்ளனர் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். தனியார் துறையில் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இவ்வனுபவங்களை அறிந்திருக்க முடியும். எந்தத் துறையாக இருந்தாலும் அது யாராக இருந்தாலும் திறன் குறைய நேர்ந்தாலோ அல்லது திறனை மேம்படுத்த கால அவகாசம் தேவைப்பட்டாலோ பணிநீக்கப்படுவார்கள் என்ற கருத்து நடைமுறையில் எத்தகைய விளைவுகளை அந்தத் துறைக்கு ஏற்படுத்தும் என்பதை அறிந்து வாருங்கள். நீங்கள் அணுகிக் கொண்டிருப்பது உயிரற்ற எந்திரங்களுடன் பணியாற்றும் ஊழியர்களில்லை. நாளைய சமுதாயத்தின் அங்கங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் பிரம்மாக்களை . சிக்கல்களுக்கானத் தீர்வுகள் ஆக்கப்பூர்வமாகவும், கண்ணியமாகவும் இருக்கவேண்டும் என்பதை மனதில் வையுங்கள். Reply 0 0
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Vidhya sankari 2 years ago
ஆசிரியர்களின் மேம்பாடு!! அவசியம் என்று குமுறலோடு சொல்கிற முன்னாள் மாணவர்கள் கோடிப்பேர் இருப்பார்கள்! அதற்கு Strategy எதையாவது கல்வித்துறை யோசிக்கிறதா? புகழ்பெற்ற தனியார் பள்ளிகள் இதற்கென என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்று பார்த்து முடிந்ததை அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிப் பாடங்களில் தேர்வுகளில் என்ன மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்பதில் child psychologists உதவியை அரசும் கல்வியாளர்களும் நாட வேண்டும். பாடங்கள் அசுரத்தனமாக update ஆகின்றன.. ஆனால் ஆசிரியர்கள்? இந்த ஒரு கேள்விக்கு பள்ளிகளை நிர்வகிக்கும் அரசு, தனியார் அமைப்புகள் முகம் கொடுக்க வேண்டும்
Reply 1 0
Banu 2 years ago
"மாணவர்கள் கோடிபேர் குமுறினர் " போன்ற தரவுகள் இல்லாத யூகங்களை தெரிவிப்பதை தவிர்க்கலாமே. புகழ் பெற்றத் தனியார் பள்ளிகள் கையாளும் யுத்திகள் என்னவென்று அறிந்து செயல்படுத்த வேண்டும் என்றால், அத்தகைய தனியார் பள்ளிகள் 1990 களுக்குப் பிறகு தமிழ் நாடு முழுவதும் மலிந்து கிடக்கிறன. எத்தனை ஆயிரம் மாணவர்கள் இந்த 30 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளனர். பிறகு ஏன் இன்னும் கல்வித் துறை உட்பட அனைத்துத் துறைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. அந்தத் தனியார் பள்ளியில் படித்தவர்கள் எங்கே? Child psychology படிக்காமல் ஆசிரியர்கள் இங்கு வேலைக்கு வரவில்லை. Adult psychology (பெற்றோர்கள்) எப்படி பிள்ளைகளை பாதிக்கிறது என்பதையும் அறிந்து பேசுங்கள். நல்ல பெற்றோர்களாக இருக்க இயலாத சூழ்நிலையை உண்டாக்கும் சமுதாய சீரழிவுகளை சாடுங்கள் . அசுரத்தனமாக update ஆகும் பாடத்திட்டங்கள் update ஆகாத ஆசிரியர்கள் என்பதை எப்படி ஏற்பது? 2006 ஆம் ஆண்டுமுதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒரே புத்தகத்தை (syllabus) NCERT cbse பயன்படுத்துகிறது என்பதை அறிவீர்களா? தமிழ்நாடு முழு முனைப்புடன் புதிய பாடநூல்களை அனைவருக்கும் முன்னோடியாக உருவாக்கியிருப்பதை புகழாமல் "ஆசிரியர்கள் update ஆகல" என்று குறை சொல்வதை தவிர்க்கலாமே. Update ஆகாமல் வகுப்பறைக்குள் தான் நுழைய முடியுமா?
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Banu 2 years ago
அத்தியாவசியமான முன்னெடுப்பு. மாநகராட்சிகளில் அரசு பொறியியல் கல்லூரி என்பது உண்மையில் வரவேற்கத் தக்கது. இரண்டாம் சுற்று பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் ( கவனிக்கவும் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அரசு பள்ளி மாணவி) கல்லூரித் தேர்ந்தெடுக்க முனைந்த போது பல மாவட்டங்கள் உதயமாகியும், பழைய மாவட்டங்களில் கூட அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் இல்லாதது வருத்தமளித்தது. இக்கட்டுரை புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் உருவாகும் என்பதற்கான நம்பிக்கையளிக்கிறது. பல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கடந்த ஆண்டுகளில் உதயமானது பல கிராமப்புற மாணவர்களின் கல்லூரிக் கனவை நிஜமாக்கியுள்ளது. நன்றிகள் பல. வழக்கம் போல "என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?" என்ற வினாவிற்கான விடை உண்டு. ஆனால் விடைக்குறிப்புகள் தவறாக உள்ளதால் மதிப்பெண் பெற முடியாத வினாவாகத் தொக்கி நிற்கிறது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Abi 2 years ago
Neet விலக்கு எப்போது?
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.