கட்டுரை, சினிமா, கலாச்சாரம், சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 4 நிமிட வாசிப்பு

நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்?

சமஸ் | Samas
12 Dec 2013, 5:00 am
0

மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்கு அவர் அழுதார். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின் பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர். “உங்கள் கதாபாத்திரத்துக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று நிருபர் கேட்டபோது, “அமெரிக்கச் செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக் கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.

சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான். “நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்குக் கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.” நாயகர்களை உருவாக்கும் தொழிற்சாலையான சினிமா இதில் முன்னணி வகிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்!

நாயகர்கள் கொண்டாடப்படும் பின்னணியை நாம் பேசலாம். ஏனென்றால், ஒவ்வொரு நாயகன் உருவாக்கத்திலும் அந்தச் சமூகத்தின் குறிப்பிட்ட காலகட்ட மனநிலையும் பிரதிபலிக்கிறது.

எம்ஜிஆர் - ரஜினி

சுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்ட மாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது, திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப் போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய நாயகர்கள்’ மக்கள் தலைவர்களாகப் பார்க்கப்பட்டார்கள். அப்படித்தான் இதில் உச்சநிலை நோக்கித் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் சென்றார்.   

ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ்.

இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளைத் திரையில் அநாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியராக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனை செய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார்.

எம்ஜிஆருக்கு சினிமாவில் வெளிப்பட்ட தன்னுடைய பிம்பத்தைத் தனிப்பட்ட வாழ்விலும் பராமரிக்க வேண்டிய கட்டுப்பாடு இருந்தது.  ரஜினிக்கு அந்த நிர்ப்பந்தங்கள் ஏதும் இல்லை. சொந்த விஷயத்தில் பொதுபுத்தியின் மதிப்பீடுகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டாலும் வெற்றிகரமான நாயகனாகத் திகழ முடியும் என்று அவர் வெளிக்காட்டினார். ரஜினியின் ஆரம்ப கால, பாசாங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலு சேர்த்தன.

ரஜினி கோலோச்ச ஆரம்பித்த 1980கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்குப் பெண் மோகம் அதிகம் என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார். “ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.”

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

உதை விழும்

ரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியது. ரஜினி - லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடித்தவர், காலை 10 மணிக்கு எல்லாம் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.

திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, “குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க” என்றார்.

நிருபர்களில் ஒருவர் “மீறி வந்தா?” என்று கேட்டார். “உதைப்பேன்” என்று பதில் சொன்னார் ரஜினி. அருகில் இருந்த இன்னொரு நிருபர் “இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா, பின்னால அசிங்கமா போயிடும்” என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். “உங்களோட ஓப்பன் அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு. ஐ யாம் வெரி ஸாரி. ஆனா, இப்போ ஸாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை!”

மலராத முட்கள்

நம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில், ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது, தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார்.

தன்னுடைய படங்கள் தொடர்பாகப் போலியான மதிப்பீடுகள் ஏதும் ரஜினியிடம் இல்லை. “ஆயிரக் கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பிப் பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்க வைக்கிறாங்க… நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை!” 

மாபெரும் சுதந்திரம்

மோகன்லாலிடம் ஒரு பேட்டியில் கேட்டார்கள்: “ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா?” மோகன்லால் சொன்னார்: “ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.”

உண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம். ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இளமையாகப் பார்க்கவும் வில்லன்களை அவர் நொறுக்குவதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தை நாம் அவரிடம் கொடுத்திருக்கிறோம். ஏனென்றால், ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை!

- ‘தி இந்து’, 2013 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழ் நடனம்பாஸ்கர் சக்தி கட்டுரைகுழந்தை வளர்ப்புபரந்தூர் மக்கள்சாதியப் பாகுபாடுமதசார்பின்மைராதிகா மெர்ச்சன்ட்உறுதிமொழிஅயோத்திதாச பண்டிதர்பதில் - சமஸ்…சமூகப் பாதுகாப்புநிதிஷ் லாலுதேசியத் தலைநகர அதிகாரம் யாரிடம்?தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்பிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிஷிழ் சிங் பாடல்இலவச பயணம்மாற்றங்கள் செய்வது எப்படி?மனுதர்ம சாஸ்திரம்பிரம்ம முகூர்த்தம்இது சாதி ஒதுக்கீடு!மத்திய பிரதேச தேர்தல்ஆட்சிப் பணியும் மொழி ஆளுமையும்சுதந்திர தின விழாப் பேருரைமிகச் சிறிய மாவட்டங்கள் தேவையா?பேரினவாதம்எலும்பு மூட்டுபச்சுங்கா பல்கலைக்கழகம்மண்டல் அரசியல்டாக்டர் கு.கணேசன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!